உள்ளதை உள்ள படி
நடந்ததை நடந்த படி
கடந்தவை கடந்த படி
உணர்ந்ததை உணர்ந்து படி
இன்று நடப்பவை யாருக்கோ எவருக்கோ தானே என கடந்தபடி செல்லும் நாம் அப்படிகளை தாண்டும் சூழலுக்குள் தள்ளப்படுவோம் என்பதை உணர்ந்தே கடப்போம்.
நாம் வாழும் காலத்தில் நம நலனில் அக்கறை காட்டி புத்திமதி சொல்பவர்களை தூரமாய் நிறுத்தி நமக்குத்தேவையில்லாதவர்களாகி ஒதுக்கி அவர்களின் திட்டலுக்கும் குட்டலுக்கும் பின்னிருக்கும் ஆழ்ந்த அன்பை உணராமல் சட்டென கோபம் கொண்டு விலகிச்சென்று விடுகின்றோம்.
குறைகள் சொல்லாத, போலித்தனமானவர்களை உண்மை நட்பென நம்பி உயர்த்தி மதிப்பளிக்கின்றோம்.
சூழ்நிலைகள் எங்கே எவருக்கு சாதக. பாதமாகும் என எவராலும் நிச்சயித்திட முடியாது.
விதியை மதியால் வெல்ல நினைப்பதும், எதிர்காலக்கனவுகளைக்குறித்த திட்டமிடலும், என்னாலே எல்லாம்முடியும் எனும் செருக்குடனும்,
நாமும் துன்பப்பட்டு, அடுத்தவரையும் துன்பப்படுத்தாமல் நல்லதை நினைப்போம், நல்லதை செய்வோம்.
நட்பெனப்படுவதும், உறவெனப்படுவதும் உள்ளதை உள்ளபடி உள்வாங்கி கண்டு கொள்ளாமல் செல்வது அல்ல. நன்மை, தீமை உணர்ந்தி வழி காட்டுவதே!
இவ்வுலக வாழ்வெனப்படுவது நீண்ட தூர ரயில் பயணமே! நிலையான தரிப்பிடம் நமக்கு இங்கே இல்லை. நிர்வாணியாய் வந்தோம், நிர்வாணியாய் செல்வோம், நாம் செல்லும் போது நாம் ஓடி ஓடி சேர்த்த பொன் பொருள் எதுவும் நம்முடன் வரப்போவதே இல்லை.
எத்தனையோ திட்டங்களை தீட்டுகின்றோமே.. மரித்தபின் என்னாவோம் என யோசித்திருக்கின்றோமா?
நான் எனும் அகந்தை அழிந்து அதுவானபின் என்னவாவோம்?
சுயமில்லாமல் உணர்வற்று உயிர் வற்றி போனபின்னரான சூழலை எதிர்கொள்ளும் படியாக நம்மை சார்ந்து நம்பியிருப்போரைக்குறித்து சிந்தித்திருக்கின்றோமா? .
- ஒரு மரணம், தாய், தாரமிருந்தும் அனாதைப்பிணமாக எரிக்க அரசு முடிவெடுத்ததாக அறிந்த தாயின் கதறலையும் தாய் மாமன் பதறலையும் அருகிலிருந்து உணர்ந்து இறுதிக்கிரியைகளை செய்யவேணும் அவன் உடலை பெற்றுக்கொடுங்களேன் எனும் இறைஞ்சி நின்ற போது மொழி புரியாமல் புலம்பெயர் எங்கள் இனம் படும் பாடுகள் கண்டு என் மனம் துடித்தது..சடலத்தினை வைத்து வேட்டையாடும் மனிதர் குணம் கண்டு அதிர்ந்தே அடங்கியது.
- இறுதிச்சடங்கை செய்ய அவன் உடலை பெற்று அவனை அதற்கான வாகனத்தில் அனுப்பும் வரை நாங்கள் அலைந்த அலைச்சலும் பாடுகளும் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தினை தந்திருக்கின்றது. என்ன தான் காசு பணம் சேர்த்து வைத்தாலும் கடைசி நேரம் துணை வரவும், துணாய் நிற்கவும் நான்கு மனிதரையேனும் நாம் சேர்த்து வைக்க வேண்டும்.
இந்த உணர்விலிருந்து சீக்கிரம் மீண்டு வர வேண்டும் என நினைத்தாலும் தொடரும் காரியங்கள் அது எளிதானதலல் என்றே உணர்த்தி நிற்கின்றது. பார்க்கலாம். யார் பதிவும் படிக்கவில்லை, மனசு சேன்ஞ் ஆக எதிர்பார்த்து அவ்வப்போது பேஸ்புக்கில் அமர்வதோடு சரி
மரணத்தின் பின் சடலத்தை வைத்து அலைந்த அலைச்சல்களின் தாக்கத்தினால் என் மன உணர்வுகளை அந்த நொடியே கண்ணீர் அஞ்சலி ஆக்கினேன்.

