24 நவம்பர் 2016

நீதிமொழிகளும் நிஷாவும்

  நீதிமொழிகளும் நிஷாவும்
****************************** 

1.மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும்  வெளிப்படையான 
கடிந்துகொள்ளுதல்  நல்லது.
தன்நாவினால்  முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்து
 கொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். 
💃💃💃உண்மையான அன்பு கொண்டவர்கள் தாம் நேசிக்கும் மனிதர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாது செல்ல மாட்டார்கள். நல்லது கண்டால் தட்டிக்கொடுத்து பாராட்டுவது போல் தவறு கண்டு கண்டிப்பதும், செய்யும் பிழை உணர்த்துவதுமே நல்ல நட்பூக்கு அடிப்படை. நண்பன் செய்யும் தவறுகளை முகதாட்சன்யம் பார்த்து கண்டும் காணாது செல்வது நட்புக்கு நாம் செய்யும் துரோகமே! 
நல்ல நட்புக்கு நிஷா தான் பெஸ்டாம்!💙💙💙💙

2.முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான்.💃💃💃எத்தனை உண்மை!
முகத்துக்கு நேரே பாராட்டி முதுகில் குத்தும் நண்பர்களை இனம் கண்டு விலக வேண்டும், நண்பன் செல்வது தவறான பாதை என தெரிந்தும் அவன் செய்யும் தவறை உணர்த்தாமல் கவலைப்படுவான், கலங்குவான், கோபிப்பான் என நினைத்து கண்டுக்காணாமல் செல்பவரை இனம் கண்டு நாமே ஒதுங்கிச்செல்ல வேண்டும், அவர்கள் நமக்கு எதிரிகளும்,துரோகிகளும் ஆவார்கள்.

3.வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். 
💃💃💃துஷ்டரைக்கண்டால் தூர விலகு என்பார்கள். சமுதாயத்தில் நல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆரோக்கியமான் விவாதங்களை விதாண்டாவாதங்களாக்கி சண்டைகள் வைராக்கியங்கள் கோபங்கள் வருமானால் அவ்விடம் விட்டு அகல்வது நமக்கு மேன்மையே!

4.ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.💃💃💃நல்லது நடக்குமானால் நல் ஆலோசனை செய்து விவாதம் செய்வதும், தீமையை விட்டு விலக்கி நன்மையை விதைப்பதும் நல்லதே! உண்மையை உள்ளபடி பேச என்றுமே தயங்கக்கூடாது.
மூன்றாவது வசனத்துக்கும் நான்காவதுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகவனித்து பாருங்கள்.

5.மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். 
💃💃💃கருத்தாடலின் போது அக்கருத்தினை திசை திருப்புவோருக்கும், முயலுக்கு மூன்றே கால் என தான் சொல்வதே சரியென சொல்லி தங்கள்வாதங்களையே  தாறுமாறாக்கி பதிலளித்து விதண்டாவாதம்செய்வோருக்கும்அகக்கண்களை 
குருடாக்கி அந்தகார இருளில் இருப்போருக்கும் விதண்டாவாதமாய் சம்பந்தமில்லாமல்கேள்விகள்கேட்போருக்கும்நாம்பதில்சொல்லத்தேவையில்லை.

6.மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
💃💃💃ஐந்தாவதில் சொல்லப்பட்ட வசனத்தினை வாசித்து விட்டு ஆறாவதுக்கு வந்தால்!!!!!!!!!!!!!!! 
விவாதங்களுக்கு பதில் சொல்லாது விலகி மௌனமாய் செல்வோரும், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தராமல் அசட்டை செய்வோரும் மௌனம் சம்மதம் என்பதன் மூலம் நம் கருத்தினைஏற்றுக்கொள்கின்றார்கள் 
என புரிந்து கொள்ளவும் வேண்டும்.
குறிப்பிட்ட விவாதம் அல்லது கலந்துரையாடலை திசை திருப்புவது போல் அதற்கு சம்பந்தமில்லாமல் வரும் கருத்துக்களை த்தான் நாம் அசட்டை செய்ய வேண்டுமே தவிர ஒரு விவாதத்தில் ஈடுபட்டால் முடிவு வரை நம் கருத்தில் உறுதியாய் இருக்க வேண்டும்.
மாறி மாறி பேசுவதும், விவாதத்தை திசை திருப்புவதும் அவர்கள் கருத்துக்கு நமக்கு பதில் தெரியாது எனும் இயலாமையில் மொத்த வெளிப்பாடே அன்றி ஞானமான காரியமல்ல !
வேண்டாத விவாதம் என தோன்றி நாம் மௌனமாய் செல்வது தாம் சொல்லும் கருத்து சரிஎன நாம் ஏற்றுக்கொண்டதாய் அவனுக்கு புரிய வைத்து தன்னை மேதை என எண்ணும் படியும் செய்கின்றதே!
முட்டாள்தனமாக விவாதம் செய்பவர்களின் முன் நான் என் கருத்தில் உறுதியாய் இருந்து ஞானியாக இருக்கவே விரும்புகின்றேன்!

7.தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்
💃💃💃ஆமாம், தனக்கு இலாபமும் நன்மையும் கிடைக்க தன்னை நம்புபவர்களுக்கு தவறான பாதை காட்டி உணர்வுகளை உசுப்பேற்றி காரியம் சாதிக்க நினைப்போரை நாம் இனம் காண வேண்டும்.
தன் காரியம் முடிந்தபின் நான் சும்மா பகடிக்கு செய்தேன் என சொல்லி கையை தட்டிக்கொண்டே செல்பவர்கள் தான் அனேகர்.

8. கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். 
💃💃💃இப்படியானவர்கள் ஈரைப்போனாக்கி பேனைப் பெருமாளாக்கி ஊரென்ன உலகத்தையே உருட்டி உரலுக்குள் போட்டு இடிப்பார்கள். வதந்தியை தந்தியாக்கி எரியும் நெருப்பை இன்னும் திகு திகு என எரியை வைப்பார்கள்.
தங்கள் ரேட்டிங்க எகிறி வியாபாரம் பெருக கடைப்பிடிக்கும் பத்திரிகை, மற்றும் செய்திச்சேனல்களை நடத்துவோருக்கு இதை விட வேறென்ன வேலை?

9.விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
💃💃💃கோள் மூட்டுகின்றவர்கள் நல்லதை சொல்ல மாட்டார்கள்! நல்லவர்கள் ஒருவர் சொன்னதை ஒன்பதாக்கி அடுத்தவரிடம் சொல்ல மாட்டார்கள். ஒன்றைப்பத்தாக்கி சின்ன விடயத்தையும் பெரிய சண்டை யாக்கும் திறமையை இந்த கோள் மூட்டுவோர் கொண்டிருப்பதனாலும் அவர்கள் வார்த்தைகள் சட்டென இதயத்தினுள் புகுந்து மனதை கலங்கடித்து காயப்படுத்துவதனால் உண்ர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுப்பதனாலும் விரோதங்கள் அதிகமாகும். அப்படியானவர்களிடம் நாம் நம் இரகசியங்களை பகிரவும் கூடாது. நம்மை நம்பி அடுத்தவர் சொல்லும் விடயங்களை நாம் இன்னொருவருக்கும் சொல்லவும் கூடாது.
நம்பிக்கை தான் எமது தும்பிக்கை!

10.நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்
பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
பகையை வஞ்சகமாய் மறைத்துவைக்கிறவனெவனோ அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். 
 💃💃💃அன்பாய், ஆதரவாய், பாசமாய், அக்கறையாய் இருப்பது போல் நடித்து பாசம் காட்டி காரியம் சாதிப்போரை இனம் காண்பது மிகக்கடினம் தான். அவர்கள் உள்ளத்தில் உள்ளதை மறைத்து கபட வேடம் போடுவதில் வல்லவர்கள்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போலவே 
தனக்குள் இருக்கும் பகை உணர்வை மறைத்து பாசமாய் நடிப்பவர்கள்வேசம் ஒரு நாள் வெளிப்படும்,

அடுத்தவனுக்கு தீங்கு செய்ய நினைத்து குழியை வெட்டி காத்திருப்பவன் கடைசியில் அவனே விழும் நிலையும் உருவாகும்,
********************************************************************************************************
மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?
💃💃💃எனக்குப்புரியவே இல்லை! உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்! 
ஊரைச்சுற்றிப்பார்த்தேன் .......மாயை
உலகைச்சுற்றிப்பார்த்தேன்.... மாயை
வானத்தை பார்த்தேன்...... மாயை
பூமியில் நான் காண்பதெல்லாமே மாயையாகத்தான்  இருக்கின்றது!

நீதிமொழிகள் என்பது பைபிளின் இருக்கும் வேதமொழிகளாகும்! அதனோடு என் மொழிகளையும் கலந்தேன்.

21 நவம்பர் 2016

எங்கே செல்லும் இந்தப்பாதை....?

எங்கே செல்லும் இந்தப்பாதை....?
பொதுத்தளத்தில் நாம் ஒரு பதிவை எழுதும் போது அப்பதிவானது தனி நபர் பதிவென்பதிலிருந்து அவர்கள் பகிரும் விதத்தில் பப்ளிக், நட்பு என பொதுப்பதிவாக பலரின் விமர்சனத்துக்காகவே முன் வைக்கப்படுகின்றது.
இதில் பலர் ஒரு கருத்தை பகிர்ந்து விட்டு அவர்கள் எழுதும் கருத்தை படிக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பதும், நிர்ப்பந்திப்பதும், லைக் செய்யவே பதிவு என நினைத்து தேவையற்றவைகளை பகிர்வதும், எதிர்க்கருத்து வந்தால் இது என்னிடம் என் இஷ்டப்படி தான் எழுதுவேன்.. என்னை கேட்க நீ யார்? உனக்கு பிடிக்காவிட்டால் அன்பிரெண்டு செய், பிளாக் செய்து விட்டு கண் காணாமல் போய் விடு என சொல்வதுடன் தனிப்பட்ட ரிதியில் அதுவரை நம்பிக்கையோடு பகிரப்பட்ட இன்பாக்ஸ் சொந்த தகவல்களையும் வெளிப்படுத்தி நீ அப்படி பட்டவன். இப்படிப்பட்டவன் என சொல்வதோடு நீ உருப்படுவியா உன் குடும்பம் உருப்படுமா என்பதிலிருந்து அவர் வீட்டு பெண்களையும் சந்திக்கு இழுத்து சாபங்கள் இட்டு எரிதணலாய் வார்த்தைகளை அள்ளி வீசுவதும் தான் நம் தமிழரின் சகிப்புத்தன்மையில் எல்லையோ?
அது வரை நல்லவனாய் நட்பில் இருந்தவன் ஒரே ஒரு எதிர்க்கருத்தில் துரோகியாய், விரோதியாய் ஆகுவதெப்படி ?
எதிர் விமர்சனத்தினையும் ஏற்று அணுவளவு கூட சிந்திக்க மறுப்போராய் அதிமேதாவிகள் என தம்மை சொல்லிக்கொள்ளும் கற்றோர் சமூகம் விட்டுக்கொடுத்தலையும், பொறுமையையும் அடுத்தவர்களுக்கு போதிக்க முன் தம்மைத்தாம் நிதானித்து பார்க்க மாட்டார்களோ?
மது குடித்து மதி மயங்கி நடுத்தெருவில் நின்று தன் மனைவியையும் பிள்ளையையும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டி அடித்து மானத்தை வாங்கும் படிக்காத பாமரன் கூட நிதானத்தில் இருந்தால் தன் பிழையை ஒப்புக்கொண்டு இனிமேல் குடிக்க மாட்டேன் என சுயமாய் சிந்தித்து பொய்ச்சத்தியம் ஏனும் செய்வான்.
பலகலையும் கற்றோம் என தம்மை தாம் மார்தட்டிக்கொள்பவர்களோ மதிமயங்கி அறிவை அடகு வைத்தது போல் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என மனக்கண்ணை மூடிக்கொண்டே நம்புவதோடு சுயமாய் சிந்திக்கும் திராணி இன்றி மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாய் ............... ?
எங்கே செல்லும் இந்தப்பாதை....?
விமர்சனம் என்பது நல்லதை மட்டுமல்ல நல்லதல்லதையும் எடுத்துரைப்பதாய் இருந்தால் தானே நம் அறிவும், புரிதலும் விசாலமாகும்,பதிவு செய்யும் அத்தனையையும் ஆகா, ஓகோ, அருமை, எருமை, சூப்பர் என சொல்ல வேண்டும் எனில் எதற்காக பொதுத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும் ?
ஒரு பதிவுக்கு எதிர்க்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனவிசாலமற்றவர்களாய் மாறுபட்ட கருத்தை சொல்லி விட்டால் 20 வருடம் முன் நாட்டை விட்டு வந்த உனக்கென்ன தெரியும் என்பதும், நாட்டுக்குள்: வந்து இதையெல்லாம் எழுது என்பதும், உள்ளதை உள்ளபடி சிந்திக்க மறுப்பதுமாய்.......?
உண்மைகள் கண் மூடி உறங்க பொய்கள் கூடாரமடித்து நாட்டியமாடி நம் கண்களை ஏமாற்ற உதவும் உள்ளம் கொண்டோரும் நியாயம் தெரிந்தோரும் நமக்கென்ன என ஒதுங்கிச்செல்ல இம்மாதிரி வீண் வைராக்கியங்கள் காரணமாகின்றன என்பதை நாம் என்று தான் உணரப்போகின்றோம்?

19 நவம்பர் 2016

நீங்க நல்லா இருக்கோணும்

19/11/2016 சர்வதேச ஆண்கள் தினம்

இந்த வாழ்க்கை எனும் நீண்ட நெடும் பயணத்தில் என்னைப்புரிந்து, என்னை வளப்படுத்த்தியவர்களுள் முதன்மையாய் ஆண்கள்இருக்கின்றார்கள்.

அப்பா எனும் ஆண் என் ரோல் மாடலாய் இருந்தாரெனில் நான் பிறந்து நான்கு வயது வரை என் பாதம் மண்ணில் படாமல் தூக்கிச்சுமந்தவர்களாய் மாமாக்களும், ஏழ்மையிலும் எளிமையாய் என் பசியுணர்ந்து தன் கையில் இருக்கும் கடைசி ஒரு ரூபாயில் தின்பணடம் வாங்கித்தந்து விட்டு பொடி நடையாய் பல மணி நேரம் நடந்தே வீடு அழைத்து வரும் தாத்தாவும், என்னுள் மறைந்திருக்கும் திறமைகளை கண்டுணர்ந்து பாராட்டிச்சீராட்டி ஊக்கம் தந்த பள்ளிக்கால அதிபர், ஆசிரியர்களும், நான் துவண்ட நேரம் என்னுள் உயிர்ப்பாகி எனை பெலப்படுத்திய அண்ணாக்களும், கலங்கும் நேரம் கண்ணீர் துடைக்கும் தம்பிகளும், நண்பர்களுமாய்
அப்பா, மாமா, தாத்தா, ஆசிரியர், அண்ணா, தம்பி என என்முன் வடிவெடுத்து எனை ஆள்வோருக்கும், துணையாய் தூணாய் என் செயல்களில் கரம் கொடுக்கும் என்னவர்க்கும், எனை அதட்டி உருட்டி ஆட்டம் காட்ட வைக்கும் என் அன்பு மகனுக்கும் இன்று மட்டும் அல்ல.... என் ஆயுள் உள்ள வரை நன்றிகளும், பாராட்டுகளும், வாழ்த்துகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். 


என்னுள் நுழைந்து என்னை உயிர்ப்பித்து 

மண்ணான என்னை விண்ணுக்கும் உயர்த்தி 
ஒடிந்து விழும் போதில் ஊன்று கோலுமாகி 
தாயாய், சேயாய், தந்தையாய், தமையனாய்
பொறுமையாய் தோள் தந்து சுமை தாங்கி
தரணியில் அனைத்துமாய் தரத்தினில் சிகரமாய் 
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உணர்த்தி 
உரிமையாய் திட்டி, உண்மையாய் பாராட்டி 
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா 
வஞ்சனை யற்ற நல் உள்ளங்களாயென்னுள் 
உறங்கிடும் உணர்வை உயிர்ப்பிக்கும் 
உத்தமராயென்னகம் தங்கிடும்
வேந்தர் குலமே நீர் வாழ்க!

17 நவம்பர் 2016

இப்படியும் சிலர் அல்ல, இப்படித்தான் பலர்

கனி இனிமை என்பதனால் கனிதரும் மரத்தினை வேரோடு பிடுங்குதல் சரியோ ?
இனிமை தரும் கனிமரமானாலும் விதையிட்டபின் சரியாக பராமரிக்காவிட்டால்  பலன் தருமோ?
கனி பறித்த பின் பூக்களையும் சேர்த்தே உதிர்த்து விட்டால் அம்மரம் மீண்டும் கனி தருமோ?
உறவு, நட்பெனும் விதையூன்றி அக்கறை, பாசம், நம்பிக்கை,விட்டுக்கொடுத்தல், பொறுமை தனை பசளையாக்கி,அன்பெனும் நீரையும் அடிக்கடி ஊற்றாமல் நம் தேவையின் நேரம் வாடி பட்டுப்போன மரத்தில் கனிகளை மட்டும்  எதிர்பார்ப்பது போல் ............. ?

 உச்சி வெயிலின் உக்கிரம் தாங்கி 
பல்லினப்பறவைகள் கூடிக்களிக்க 
பூவும்,பிஞ்சும்,காயும் கனியுமாய் 
பயன் தந்த பொழுதினில்
ஊஞ்சல் கட்டி உல்லாசம் கண்டு
ஏறி மகிழ்ந்தோர் எட்டி உதைக்க
இதம் தரும் தென்றலென
நிழல் நாடி நின்றோர் ஒதுங்கிச்செல்ல
கல்லெறிகளினால் காயங்கள் வலிக்க
நீரின்றி வேரும் உடலும் காய்ந்து
கிளைகளை உடைத்து ஒடித்த பின்னும்
பாதைகள் எங்கும் முட்செடி விதைத்து
வாதைகள் தனையே விசமாய் ஊற்றி
வேசம் கட்டி பாசம் காட்டி
தேவைகள் நேரம் தேடுவாரிங்கே!

இப்படியும் சிலர் அல்ல,இப்படித்தான் பலர்!