22 மார்ச் 2019

ஒரு பிடிச்சோற்றின் முன் ...!

வண்டல் நிலமோ பாளம் போல் வெடிக்க
நெல்மணிக்கதிர்கள் தாகத்தில் தவிக்க
கரிசல் பூமியின் கதறல் கேட்டு 
இனித்திடும் கரும்பின் சுவையும் கசக்க
பருத்திச்செடியோ செம்மண்ணின் சூட்டால் 
சுழன்று வெடித்து சுக்கு நூறாக 

வளமான மண் தேடி விவசாயி அலைய
உயிரான நீர் வளம் உருக்குலைந்திட
விசமாக்கும் வித்தையை களமாக்க துடிக்கும்

அடப்பாவி மனிதா....!
ஒரு பிடிச்சோற்றின் முன் ....!
ஒரு கிலோ தங்கமோ, ஓராயிரம் கோடியோ 
உன் உயிர்க்கு உரமாகாதுணர்வாய்....!

மூவிரண்டாய் மூழ்கி இருந்தும் 
அடி முதல் முடி வரை விரவிப்பரந்தும் 
அங்குசமின்றி ஆளுமை செய்தும் 
அணைகளை உடைத்து தடைகளை கடந்தும் 
அலைகளால் அலைக்கழித்தும் 
பொங்கிப்பெருகி காட்டாறாய் ஓடி 
நாணிடும் நங்கை போல் கொஞ்சி நடந்து 
கங்கா, யமுனா, சரஸ்வதி என்றென போற்றி
காவேரிக்காக களப்பலி கொடுத்ததும் ஏனோ?

இயற்கை தன் வளங்களை காக்க போராடுவதை
புயலாகி, சுனாமியாகி, பூகம்பமாகி நம்மை எச்சரித்தாலும் மனிதன் அதன் வலிகளை உணராமல் போகின்றான்

எங்கோ எவருக்கோ எனும் வேடிக்கைதனை களைந்து 
எம் வளங்களை காக்கும் கடமைதனை உணராமல் கடந்தோமானால் 
படம் சொல்லும் சேதிகள் நம் சிந்தனைக்கே....!
எமது சந்ததிகளுக்கு நாம் விட்டு செல்ல போவது என்ன ....?

எதிர்காலத்தில் எம் வளங்களும்....!?



 
 
 
 
 
 
 
 
 
படங்கள் நன்றி இணையம். 
 

4 கருத்துகள்:

  1. மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். பதற வைக்கும் உண்மைகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகள்!

    ஆப்பிரிக்காவில் தண்ணீர் மிகவும் தட்டுப்பாடு என்றும் ரேஷன் செய்யப்படுகிறது என்றும் சமீபத்திய செய்தி பயமும் வேதனையும் ஏற்படுத்தியது.

    இங்கும் நம் நாடுகளிலும் வெகுவிரைவில் இப்படி ஆகிவிடுமோ என்ற அச்சமும் கூடவே. மழையே இல்லையே.

    கேரளத்திலும் கூடத் தண்ணீர் சேமிக்க வேண்டும் என்ற குரல் எழத் தொடங்கிவிட்டது.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  3. ஒரு பிடி சோற்றின் முன்....

    சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள் நிஷா. தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தை அனைவரும் புரிந்து கொள்வது நலம்.

    பதிலளிநீக்கு
  4. எங்கள் ஊரில் நாங்கள் படும்பாடு இருக்கே... ம்...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!