16 மார்ச் 2019

ராஜாஜியின் அரை நாள் கல்வி இலங்கையில் வெற்றி பெற்றிருக்கின்றதா?

இப்பபடியான பதிவை சுருக்கமாக எழுத முடியாது. மன்னித்து விட்டு படியுங்கள். சேறிறைத்தாலும் சந்தனம் தெளித்தாலும் சிந்தனைகள் சிறகடிக்கட்டும். சுய விருப்பு, வெறுப்புக்களை களைந்து சமுதாய நலன் சார்ந்து சிந்திப்போம்.🙏
நான ஆரம்ப பள்ளிப்படிப்பை படிக்கும் காலத்தில் எங்கள் ஊரில் பலவிதமாக தொழில் செய்வோரை கவனித்திருக்கின்றேன்.
தொழில்களால் சாதி எனும் பிரிவினை இருக்கின்றதென்பதெல்லாம் அக்காலத்தில் எனக்கு தெரியாது. அம்மாவோடு சைவ கோயிலுக்கும் போவோம், அம்மா சொல்லி அப்பா வழி வேதப்பாடம் தான் பள்ளிப்பாடமாக எடுத்தோம். 
ஞாயிறு சர்ச் போவேன். மீதி நாளில் காலை ஐந்து மணிக்கு பக்கத்து பிள்ளையார் கோயில் சுப்ரபாதமும், மாலை ஐந்துக்கு கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன் பாடலும் கேட்டு இப்பவும் அது மனதில் அழுத்தமாக் பதிந்திருக்கின்றது.

எங்கள் பள்ளிகாலத்தில் அதாவது 30 வருடம் முன்பும் கல்வியை தவிர்த்து குலத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தோர் உண்டு. குலத்தொழில் எனும் வார்த்தையே இணையம் வந்த பின் தான் அறிந்தேன்.
நகைத்தொழில் செய்தவர்கள் வீட்டு ஆண்களை ஏழெட்டு வயதிலேயே பட்டறைகளில் வேலைக்கு அனுப்புவார்கள். நகைத்தொழிலில் மட்டுமலல் பல தொழில்களிலும் அப்படித்தான் இருந்தது. 
அப்படியானவர்கள் வீட்டு பெண்களும் வயதுக்கு வரும் வரை தான் ஆரம்ப பள்ளிக்கு வருவார்கள். அதன் பின் நகைத்தொழிலில் ஈடுபடுவார்கள். எங்கள் வீட்டுக்கு நேரெதிர் வீட்டில் இப்படி பலரை கண்டுள்ளேன். ஐந்தாம் வகுப்பு 10 /12 வயது வரை என்னுடன் ஆரம்ப பள்ளிகளில் படித்தோர் அதற்கடுத்த உயர் பள்ளிக்கு வந்ததில்லை.

அடுத்தாண்டுகளில் காலம் மாற ஆரம்பித்தது.
அக்காலத்தில் என் பள்ளி அதிபராக இருந்தவர். ஜெயானந்தம் சேர் இம்மாதிரி பிள்ளைகளை இனம் கண்டு காலையில் பள்ளிக்கு வந்தால் மதிய உணவு, பள்ளி யூனிவோர்ம் முதல் பாட நூல்கள் வரைவாங்கி கொடுத்து பள்ளிக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் என சொல்லி பள்ளிக்கு வர வைத்ததை நான் அறிவேன்.பள்ளி நோட்டுகளுக்கு அட்டை போடகூட வீட்டில் உதவி இல்லை என தன் வீட்டுக்கு அழைத்து தன் பிள்ளைகளின் ஆடைகளை கொடுத்து படிப்பு உதவிகள் தொடர்ந்து செய்ததை நேரில் கண்டுணர்ந்திருக்கின்றேன்.
செருப்பு தைத்தவர் மகன் அத்தொழிலோடு கல்வியையும் கற்க ஆரம்பித்தான், கள் இறக்கியவர் மகன் கள்ளும் இறக்கினால் படிப்பிலும் ஆர்வம் காட்டினான்,சலவை தொழில் செய்தோர் பிள்ளைகள் எம்முடன் இணைந்து படித்தார்கள். தோழிகள் ஆனார்கள். மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் அவர்கள் அப்பாவோடு அழுக்கு துணி மூட்டை எடுக்க எங்கள் வீடுகளுக்கு வந்தால், சந்தோஷமாக வீட்டுப்பாட நோட்டோடு பள்ளி கதை பேசியதும் நினைவில் இருக்கின்றது.
மீன்வர் மகன் விடுமுறை நாட்களில் கடலுக்கு போவான்.பள்ளி நாட்களில் பள்ளிக்கும் வருவான். கோயில் பூசாரி மகனும் இப்படித்தான் வாழ்ந்தான். பள்ளி நாளில் பள்ளி. வெள்ளி மாலை வேட்டி கட்டி ருத்ராட்சம் அணிந்து மேலாடை இல்லாமல் கோயிலுக்கு போவான், நாங்கள் சிரிப்போம், வெட்கப்பட்டு ஓடுவான்.
மற்றவர்கள் எப்படி வாழ்ந்தார்கள். ஒதுங்கினார்கள், ஒதுக்கினார்கள் என்பது எனக்கு தெரியாது. என் அப்பா,அம்மா வேதம் சைவம் என இரு மதம் உண்டு இயேசு பிள்ளையார், முருகன் என விரும்பியவரை கும்பிடலாம். கோயிலுக்கு போகலாம் சர்ச்சுக்கும் போகலாம் என வளர்த்தார்கள். மனிதர்களுக்குள் இருக்கும் ஏற்ற தாழ்வை சொல்லி தரவில்லை.
அப்பாவின் நட்பு களிள் பக்கத்தூர் கல்முனையிலிருந்து இஸ்லாமிய தாத்தா, மாமாக்கள் , அப்பாவின் பள்ளி தோழர்கள் என சிங்களவர்கள் வீட்டுக்கு வரபோக இருந்தார்கள். மனசில எந்த கசடும் சிறுவயதில் நுழைக்கப்படவில்லை.

சமூக வலைத்தளத்தில் அறியும் வரை இரட்டை ரம்ளர் முறை எனில் என்னவென தெரியாது. ஆனால் அதை அம்மம்மா வீட்டில் நான் கண்டுணர்ந்துள்ளேன். கூலித்தொழில், சலவை தொழில் இன்னும் பலருக்கு அம்மம்மா தனி கிளாஸ் வைத்து அவர்களை கொண்டே கழுவியும் வைப்பா, எங்களை தொடவும் விட மாட்டார். அப்போது எனக்கு இதுவெல்லாம் தெரியாது. அம்மம்மா ஏன் அப்படி செய்தார் என கேட்டதில்லை. அவ அப்படித்தான், நிரம்ப விரதம் இருப்பா. செவ்வாய், வெள்ளி , ஞாயிறு மரக்கறி சாப்பாடு, காலையில் தலைக்கு முழுகினால் அவவை நாங்க தொடக்கூடாது தொட்டால் திட்டுவா, திரும்ப குளிப்பா. திட்டி திட்டி குளிப்பா🤣 அதனால் அவ வோட அதிகம பேச்சு வைப்பதில்லை. ஆனால் நல்ல சுவையா சமைப்பா. அவவும் சாதி பற்றி பேசி நினைவில் இல்லை.
தினமும் வாளிகளோடு டாய்லட் எடுக்க வரும் வரும் மாமாக்களிலிருந்து வாராவாரம் அழுக்கு துணி எடுக்க வருவோரெல்லாம் மாமாக்கள் தான். விஷேச நாட்களின் வந்தால் கைவிஷேடம் அமமம்மா கொடுப்பா, அப்பா அவங்களுக்கு என வேட்டி சேலை கொடுப்பார், காசு கொடுப்பார். எங்களுக்கு கஷ்டம் என்றாலும் இதில் குறை வைக்க மாட்டார். யார் வந்தாலும் கைவிசேடம் என் கையால் கொடுக்க சொல்வார்கள். ராசியாம். இப்ப இவர்கள் யாரும் இல்லை. தொழிலும் இல்லை. அவர்கள் உயர்ந்த பதவிகளில் செல்வாக்கோடு வாழ்கின்றார்கள். இப்படியெல்லாம் தொழில் ரிதியாக மக்கள் ஒடுக்கபட்டார்கள் என்பதை அறியாத தலைமுறையும் எங்களுக்குள் உருவாகி விட்டது.
கடந்த மாதம் தமிழ்மக்கள் கல்வி குறித்த பதிவொன்றை பகிர்ந்து விவாதமாக்கிய போது ஒருவர் ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை தேடி வாசிங்க என்றார். அன்று வரை ராஜாஜி அக்கால சூழலுக்கு ஏற்றபடி எல்லோருக்கும் கல்வி எனும் திட்டத்தில் அரை நாள் பள்ளிக்கு எல்லோரும் கட்டாயம் வர வேண்டும் ஒரு திட்டம் கொண்டு வர முயன்றதோ, அதை எதிர்த்ததோ எனக்கு தெரியாது. காமராஜரால் இலவசக்கல்வி என இன்று வரை பாராட்டப்படும் திட்டத்துக்கு முன் இப்படி ஒரு திட்டம் இருந்திருக்கும் என்பதெல்லாம் தெரியாது.
ஆனால் காலையில் பள்ளிக்கூடம் மாலையில் அம்மா, அப்பாவுக்கு உதவி எனும் திட்டத்தை இலங்கையில் படித்த தமிழர்கள் அனுபவித்திருப்பீர்கள். எட்டு முதல் ஒரு மணி வரைக்குமே பாடசாலை இயங்கிய காலமும் உண்டு.
இன்று எங்கள் கிராமங்கள் 100 வித கல்வி தேர்ச்சியடைந்திருக்கின்றது. எந்த போராட்டமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த அரை நாள் கல்வி திட்டத்தால் குலத்தொழில்களை ஒழித்திருக்கின்றோம். அது அரை நாள் கல்வி திட்டம் என்றே தெரியாமல் காலையில் பள்ளி மதியத்துக்கு பின் பெற்றோருக்கு உதவி என படித்தே கடந்த 20 வருடங்களில் எங்கள் ஊரில் சலவைதொழிலாளர்கள் முதல் பல தொழில்களுக்கு ஆட்கள் இல்லை.அவ்வீட்டு பிள்ளைகள் டாக்டர் எஞ்ஞினியர்களாக இருக்கின்றார்கள். ஆசிரியர்களாக பதவிகளை பெற்று தாங்கள் குலத்தொழிலை முற்றாக அழித்திருக்கின்றார்கள். 
பொருளதாரத்தில் தம்மை உயர்த்தி இருக்கின்றார்கள். அதிகாரங்கள், பதவிகளை பெற்றிருக்கின்றார்கள்.

இதற்கு எதிர்மறையாக தாம் உயர்வெனும் குலப்பெருமை, குடிப்பெருமை பேசியோர் தலைமுறையில் சிலர் கட்டாக்காலிகளாகி சமூகத்துக்கும் தமக்கும் பாரமாகவும் மாறி இருக்கின்றார்கள்.தம்மால் ஒதுக்கபபட்டவர்களில் கீழ் பணி புரியும் நிலையிலும் இருக்கின்றார்கள். 
.
எந்த போராட்டம்,ஆர்ப்பார்ட்டமும் இல்லாமல், அமைதியாக,அவர்கள் அறியாமலே அவர்கள் உயர இந்த அரை நாள் கல்வி திட்டம் உதவி இருக்கின்றது. 
வேண்டாம், கூடாது, நல்லதில்லை என
மறுக்கப்பட்டு,ஒதுக்கப்பட்ட ஒரு சட்டம் வெற்றியடைந்திருக்கின்றது என்பதை நன்கு சிந்திக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இது மட்டுமா? 
இலவசக்கல்வி,பாடப்புத்தகம், மதிய உணவு என காமராஜரால் கொண்டு வரப்பட்ட திட்டமும் இன்று வரை இலங்கையில் தொடர்கின்றன.

ஆசியாவில் கல்வியில் " தெற்கு ஆசிய வலயத்தில் உள்ள நாடுகளின் மத்தியில் இலங்கையின் கல்வி முக்கிய இடத்தை வகிக்கின்றது என யுனெஸ்கோ அறிவித்திருக்கின்றது. இலங்கை, யுத்த சூழலிலும் கல்வியை தக்க வைத்திருக்கின்றது
என்பதன் எவ்வித பக்க சார்புமில்லாமல் சிந்திப்பீர்கள் எனில் புரிந்து கொள்வீர்கள்.

வெளி நாடுகளில் பிள்ளைகள் தங்கள் பெற்றோர் செய்யும் தொழிலை, ஹோட்டலை, கடைகளை வணிகஸ்தலங்கலை, தொடர்ந்து நடத்த மேற்படிப்பை படிப்போரும் உண்டு. தொழிலில் பாகுபாடு பார்க்காமல் அனைத்து தொழிலும் வாழ்வியலோடு கலந்ததெனும் உள்ளத்து உணர்வை பெறுவதே முக்கியம்.
தமிழ் நாட்டில் இந்த சூழலை எப்படி எதிர்கொண்டார்கள் என எனக்கு தெரியாது. இந்த திட்டம் ஏன் வெற்றி பெறமுடியாது போனது என்பதும் தெரியாது.
அரசியல் சதுரங்கத்தில் மக்கள் பகடைகளாகி தமக்கான வாய்ப்புக்களை தவற விடுகின்றார்கள் எனும் கவலை மட்டுமே எஞ்சி நிற்கின்றது.
ஒரே நாளில் மாற்றங்களை எதிர்பார்க்கின்றார்கள். சட்டங்களால் அனைத்தும் சாத்தியம் என நம்புகின்றார்கள்.
மாற்றங்கள் என்பது படிப்படியாகவே நுழைக்கப்பட வேண்டும் என்பதை மறுதலிக்கின்றார்கள்.
இன்னொர் வகையில் யோசித்தால். ஐம்பது வருடம் முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழ் நாட்டில் கையெழுத்து கூட இட தெரியாதவகையில் எவரும் இருந்திருக்க மாட்டார்கள்.அரை நாள் கட்டாயக்கல்வி இன்னும் பலருக்கு கல்வி வாய்ப்பை தந்திருக்கும், குலத்தொழில்களும் மறைந்திருக்கும், அவர்களும் ஓரளவு ஆரம்ப கல்வியறிவை அடைந்திருப்பார்கள் எனும் உண்மையும் உறைக்கும்.
அரசியல் தவிர்த்து சமூகம் சார்ந்து மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் விவாதிப்போம்.
மற்றப்படி சிந்திக்கலாம். நிரம்ப சிந்திக்கணும்.

1 கருத்து:

  1. நல்ல பதிவு நிஷா...எந்த ஒரு நல்ல கருத்தும், திட்டமும் அதனை யார் கொண்டு வந்தாலும் நன்றாகச்சிந்தித்துப் பார்த்து சமுதாயம் சார்ந்த நோக்கில் பார்க்கப்பட்டால் நல்ல மாற்றங்கள் விளையும். அரசியலாக்கப்பட்டால், சுய வெறுப்புகளைத் திணித்தால் எதுவும் சொல்வதற்கில்லை...இலங்கையில் உங்கள் பகுதியில் நல்லது நடந்திருப்பதும் நடப்பதும் மிகவும் மகிழ்வான விஷயம், பாராட்டப்பட வேண்டியதும் ஆகும்.

    கீதா

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!