07 மே 2020

எங்க வீட்டு தோட்டம் ( 1984 - 1986 )

எங்க வீட்டு தோட்டம் ( 1984 - 1986 )
எனக்கு நன்கு நினைவு இருக்கின்றது 

பீர்க்கை, நாடங்காய், வத்தவகாய் தோடடத்தில் நல்லா காய்க்கும். கச்சாணும் ( நிலக்கடலை) நல்ல விளைச்சல்.

ஊர் அவரைக்காய் பந்தலில் காய்த்து கொட்டும்.மரவள்ளி பெரிய இடம் விதைத்து இருந்தார் அப்பா.

1987 - 1988  அப்பா இந்தியாவில் நிற்கும் காலத்தில் காசு இல்லாமல்  பசிக்கும் போது பிஞ்சு வெண்டைக்காய் அவரைக்காய் பிச்சு தின்போம்.கடலை அவித்தும் உண்போம்
மரவள்ளி  தினம் உணவில் இருக்கும். வளவில் நின்ற லாவுள் காயும் பழமும் பசிக்கு ருசிக்கும்.

அப்பெல்லாம் அரிசியும், தேங்காயும் வாங்கணும். கீரை மரக்கறி வீட்டு வளவில் கிடைக்கும்.( இதோட பச்ச மிளகாய் கன்று காய்க்க தொடங்கினால்  ஒரு பத்தை வெங்காயம் நட்டு விட்டால் மார்க்கெட் போகவே வேண்டாம் ) 

பீர்க்கை, நாடங்காய், வத்தவகாய் களுக்கு  நல்ல மணப்பு கருவாடு போட்டு தேங்காய்ப்பால் விட்டு  சொதி வைப்பாள் அம்மா.

நாடங்காய் தோல் சீவி துண்டுகளாக்கி 
தேங்காய் முதல் பாலை எடுத்து வைச்சிட்டு  இரண்டாம் மூண்டாம் பாலில் காய், சின்னவெங்காயம், பச்சமிளகாய் , மணப்புக்கருவாடு, மஞ்சள், உப்பு போட்டு அவிச்சி   முதல் கட்டி தேங்காப்பாலை விட்டு கொதி வர இறக்கி தேசிப்புளி விட்டு எடுத்தால்  சொதி நாலு ஊருக்கு வாசம் வரும்.

சுடச்சுட புழுங்கல் அரிசி சோறும் 
முதல்ல சுண்டலும் பொரியலும்
இரண்டாம் தடவை குழம்பும் பால்க்கறியும்
முண்டாம் தட்டில்  இப்படி ஏதேனும் காய் அல்லது இலைதழை சொதி
கடைசியாய் முட்டியில் வரும்  கட்டித்தயிர் அல்லது  சீசன் பழம் திண்டு  வளர்ந்த காலம்  அது.

ஒரு அகப்பை சோறு ரெண்டகப்பை இலைக்கறி சுண்டல் 
கீரி,சூடை மீன் போடடவிச்சு வேலியில் கிடைக்கும் முருங்கை, குறிஞ்சா, பொன்னாங்காணி, வல்லாரை, முளைக்கக்கீரை எதோ ஒரு கீரை கடடாயம் இருக்கும்.

அப்புறம் மீன் பொரியல்
அடுத்த அகப்பை சோத்துக்கு
குழம்பு இப்படித்தான்  நாலு கரண்டி   சோறும்  அதைவிட அதிக காய் கறியும் சாப்பிடுவோம்.

அது மட்டுமா? 
தூதுவளை துளிர்
முருங்கை துளிர்
கறிவேப்பிலை துளிர் 

சோத்தை கஞ்சி வடிச்சிட்டு அதுக்கு மேல வாழை இலை போட்டு கீரையை வைச்சு சருவ சட்டியால் மூடி அதுக்குள் நெருப்பு தணலை போட்டு விடடால் கீரை வெந்து வரும்

அதுக்கும் பச்சமிளகா, வெங்காயம், உப்பு புளி விட்டு அம்மியில் அரைக்கால் சூப்பர் சம்பல்
சுடுசோத்துக்கு வேற ஒண்டும் வேண்டாம்

 நம்மட ஊர்ல சுரைக்காய் எண்டால் பூசணிக்காய் அல்லோ?
அதுக்கு தேங்காய் மிளகு, உள்ளி அரைச்சு கறிவைப்பம்.
நாடங்காய் பீர்க்கங்காய் , வத்தவகாய் சொதிக்குதான்  பெஸ்ட்

எங்கள் வாடகை வீட்டின் கூரை ஓலையால் வேய்ந்திருந்தது. கிணறு இறைப்பது எனினும் கூரை வேய்வது எனினும் அன்று எங்கட வீடு திருவிழாக்கோலம் பூணும். அப்பாவின்  நண்பர்கள் ஏழெட்டு பேர் வருவார்கள். அம்மா முதல் நாளே புட்டுக்கு மா அவிச்சு வறுத்து வைப்பா. புட்டும் சம்பலும் காலைசாப்பாடுமாக அந்த மாதிரி தடபுடல் படும்.  வீட்டில் மேல்  கூரையில் வேய்ந்த பழைய கிடுகுகள் குசினிக்கு புது கூரையாகும்  ( அது தனிய  ஒரு குடிசையா கட்டி இருந்தார்கள். அதை வேய்வோம்) மழைக்காலத்தில் இரண்டில் ஒன்று ஒழுகினால் ஒன்று  நல்லா இருக்கும். அது ஒழுகினால் இது நல்லா இருக்கும், குடிசைக்குள் அடுப்பும் இருக்கும்,  அதில் நாலு கல் போட்டு  உயர்த்தி அதில் பலகை வைச்சு அம்மா உயர்த்தி வைச்சிருப்பாள். அதில் ஏறி படுப்போம் .
மழை காலத்தில் வீடு ஒழுகினால்  நாங்கள் ஆறு பிள்ளைகளும் அம்மா, அப்பாவும் ஓலை  குடிசையில் தூங்க இடம் போதாது 

பல நாள்  நாங்கள் தலைகாணியை தூக்கிட்டு பக்கத்து வீட்டு நகுலேஸன்ரி வீட்டு விறாந்தையில் போய் தூங்கி எழும்பி வருவம். வீடு வேய்ந்தால்  அங்கே போக 
தேவையில்லை.  எல்லாம் கொஞ்சம் காலம் தான். ( சித்தப்பா அவர் friends பேராதனை கம்பஸில் பிரச்சனை என ஊரிலும் ஆர்மி வந்து தேடி வீட்டில் இருக்க ஏலாது என வெளிநாட்டுக்கு அனுப்ப இந்தியா போக  அப்பாவையும் கூட்டி போய்  அனுப்பி பிறகு சித்தியை அனுப்ப போய் சித்தியின் மகனுக்காக அப்பாவும் சுவிஸ் வரும் வரை 1987 - 1989 ரெண்டு வருடம் இருண்ட காலம் ) 

நான் வறுமையையும் உணரணும் என கடவுள்  நினைச்சார் போல. அப்பா வெளி நாடு வரவென வெளிக்கிட்டு இந்தியாவில் நின்ற காலங்களில்  பசியும், உணர்த்தி தான் 1990  என்னை  சுவிஸ் வர வைச்சார் கடவுள். 

எத்தனை சோதனை வந்தாலும் எதிர்த்து போராடி உழைத்து பிழைத்தால் வாழ்க்கையில் உயரலாம் என எனக்கு கற்று தந்தவள் என் அம்மா சொந்த வீடு தோட்டம்  காணி என செல்வாக்கான குடும்பத்தில் முத்த பெண் பிள்ளையாக பிறந்து கஷ்டம் தெரியாமல் வளர்ந்து ஊருக்கு தானம் செய்த குடும்ப பாரம்பரியம் அவளுக்கு இருக்கின்றது. 

எல்லாமே இழந்த போதும் மனம் தளராமல் தான் பெற்ற பிள்ளைகளுக்காக உதிரத்தை உரமாக்கினாள். ( இன்னொரு பதிவில் சொல்வேன் ) 

வாழ்க்கையில் 
உயர்வும் , தாழ்வும் 
ஏற்றமும் இறக்கமும் எப்போதும் வரும்

கொரோனாவாலும் வரும் 😍

Coronavirus இழப்பை ஈடுகடட சுற்று சூழல் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றது அமெரிக்கா

🔸 உலகம் முடங்கியதால் வான்மண்டலம் சுத்தமானது.
🔸 ஓசோனின் ஓடடை அடைபட இனி வாய்ப்பே இல்லை எனும்  நாசாவின் அறிக்கையும் நாசமானது.
🔸 பூமியின் அன்டாடிக் கண்டத்தின் மேல் உருவான Ozon  ஓடடை தானாகவே மூடிக்கொள்கின்றதேனும் அறிவிப்புகளை கண்டு மகிழ்ந்து போகாதீர்கள்.

கொரோனாவின் இழப்புகளை ஈடு செய்ய
எனும் காரணங்களோடு அடுத்து அறிவிப்பு வந்து விட்ட்து 

நீர், காற்று மற்றும் அபாயகரமான-கழிவுகள் குறித்தான கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப் போவதில்லNoஎன்று  வாஷிங்டன் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்திருக்கின்றார்கள் 

மின் நிலையங்கள், தொழிற்சாலைகள்  காற்று மற்றும் நீர் மாசுபாட்டுக்கான கடுமையான சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்துவதாக யுனைடெட் ஸ்டேட்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (US EPA.) -  அறிவித்திருக்கின்றது

கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பான பிற சிக்கல்கள் , ​​பணிநீக்கங்கள், பணியாளர்களின் கட்டுப்பாடுகள் மற்றும்  விதிமுறைகளை
தளர்த்துவதற்கான வணிக நிறுவனங்களின்  கோரிக்கைகளின் மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது।

கோவிட் -19 இலிருந்து தொழிலாளர்களையும் பொதுமக்களையும் பாதுகாக்கும் முயற்சிகளின் விளைவாக ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள காற்றுக்கும்  நீருக்குமான பாதுகாப்புக்குறித்த கட்டுப்பாடு தளர்ந்துகின்றார்களாம். இனி நிறுவனங்கள் 
சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தால் போதுமாம்.

கட்டுப்பாடு உண்டு எனும் போதே சுத்தமான காற்றும் நீரும் எமக்கு சொந்தமில்லை.

“ ஆடுறா ராமா ஆடுறா ராமா ஆடு. எரிகின்ற தீயில் நீயும் எண்ணெயை ஊற்றி ஆடு  “ 


03 மே 2020

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 7

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 7

உணவுப்பொருள் பதப்படுத்தல்  சேமித்தல் 

பழங்கள்,காய்கறிகளை 
• வெயிலில் உலர்த்துதல் 
• சர்க்கரை,தேனில் பதப்படுத்துதல  
• உப்பு சேர்த்த  காடியில்
ஊறுகாய் ,அச்சாறு போடுதல் 
• குளிர்சாதனப்பெட்டி அல்லது குளிரூட்டும் வெப்பநிலை (0° C - 5°C)
• உறைந்த வெப்ப நிலையில் (FREEZING TEMPERATURE)

போன்ற வாய்ப்புகளில்  எங்களுக்கு  வசதியான முறைகளில் உணவுப்பொருட்களை பதப்படுத்திக் சேமிக்கலாம்.

உணவு பொருள் பதப்படுத்துவதற்க்கான 
முன்தயாரிப்பு முறைகள் பொதுவானவை :

சந்தைப்படுத்தலுக்கு : 
• பழங்கள், காய்கள் ஒரே மாதிரியான அளவுள்ள  பழங்களை தேர்ந்தெடுத்தல் வேண்டும். 
• பழங்கள் முதிர்ந்த மற்றும் முழுமையான பழங்களாகவும், 
• காய்கள் பிஞ்சாகவும் முற்றாமலும் தேர்ந்தெடுக்க வேண்டும். 

🔸 சுத்தமாக்கி கழுவி  நீர் இல்லாமல் துடைத்து உலர்த்தி, தோல் உரித்து . சிறு துண்டுகளாக, கீற்றுகளாக, கனசதுர வடிவங்களாக. வடடமாக வெட்டி கொள்ள வேண்டும்.

🔸 நீராவியில் அல்லது குறைந்த கொதிநீரில் சில நிமிடங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை மூழ்க வைத்து லேசாக வேக விட்டு, முழுமையாக வேக வைத்து அல்லது அப்படியே பதப்படுத்தலாம்.

உலர்த்துதல் : வற்றல்  வடாம் கருவாடு 

இலங்கை இந்தியா போன்ற அதிக வெப்பமான தட்பவெப்ப நிலை பகுதிகளிலும், உலர்ந்த வறண்ட சூழல் கொண்ட பகுதிகளிலும் சூரிய ஒளியில் உலர்த்துதல் மூலம் பல வருடங்களுக்கு தேவையான உணவை சேமிக்கலாம் 

தேவைக்கு போக மிகுதியாகும் உணவுப்பொருட்க்களை சூரிய ஒளி மற்றும் காற்றுபடுமாறு உலர வைப்பதன் மூலம் உணவில் உள்ள ஈரத்தன்மை அகற்றப்பட்டு, நீரின் அடர்வு குறிப்பிட்ட அளவிற்குக் கீழே கொண்டு வரப்படுகிறது உணவு பொருள்களை அழுகி போக வைக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, உணவு பாழாதல் தவிர்க்கப்படுகிறது।

தமிழர் உணவு பாரம்பரியத்தில் சூரிய ஒளியில் உலர வைக்கப்பட்டு
பதப்படுத்தப்படும் பப்படம்,  வடகம் , வத்தல்களுக்கு  தனி இடம் இருக்கின்றது 
பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், மீன், இறைச்சி போன்றவை வெயிலில் உலரவைத்தல் மூலம் வற்றலாக பதப்படுத்தப்படுகின்றன.

உலரவைத்தல் மூலம் வற்றல் ஆக கூடிய  காய்கறிகள் கீரைகள் பழங்கள் எவை ? 

🔸 பெரும்பாலான காய்கள்  கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சளும் , மிளகாய் தூள் உப்பும் சேர்த்து பிரட்டி வெயிலில் உலர்த்தி கொள்ளலாம். ( சுவை கூட்டவும் 
நீண்ட கால பயன் படுக்கும் வெந்நீரில் அவித்து உலர வைத்தால் நல்லது. ) 
🔹 குறிஞ்சா கீரை ( அரிந்து) 
🔹 திராய ( சுத்தமாக்கி) 
🔹 கறிவேப்பிலை ( கழுவி உதிர்த்து )
🔹 மாங்காய் ( துண்டங்கள் )
🔹 பப்பாசி காய் ( துண்டங்கள் )
     
🔸 சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சளும் உப்பும் சேர்த்து பிரட்டி வெயிலில் உலர்த்தி ஒரு நாள் வெயிலில் காயவைத்து. இதனுடன் புளி  உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து  கொஞ்ச நேரம் ( Slow cook )  கொதிக்கவிடவும். லேசாக வெந்ததும் நீரை வடித்து, திரும்பவும் 2 நாட்கள் வெயிலில் உலர வைத்து  உபயோகப்படுத்தலாம் 
      🔹 கத்தரிக்காய்
      🔹 பாவற்காய் 
      🔹 வாழைக்காய் 
      🔹 புடலங்காய் 
      🔹 ஈரபலாக்காய் 
      🔹 மணத்தக்காளி

🔸 இருபக்கமும்  நுனி நீக்கிவிட்டு அலசி உலர்த்தி அளவாக வெட்டி காய்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
காய்கள் நன்கு வெந்ததும் இறக்கி, நீரை நன்றாக வடித்துவிட்டு, வெயிலில் காயவிடவும். நன்கு  உடைத்து முறுக்கும் பதம் வரும் வரை காய வேண்டும் எடுத்து
பத்திரப்படுத்தவும்.
       🔹 அவரைக்காய் வகை 
       🔹 கொத்தவரங்காய்
       🔹  பயற்றங்காய்

🔹 வெண்டைக்காய் , தும்மட்டிக்காய்
        🔸பிஞ்சு வெண்டைக்காய்களை ஒரு அங்குலத் துண்டுகளாக வடடமாக வெட்டி வெயிலில்  ஒரு நாள் உலர விடவும்.பின் தயிரில் உப்பு சேர்த்து, உலர்ந்த இந்த
வெண்டைக்காய்களையும் போட்டுக் கலந்து 3, 4 நாட்கள் ஊறவைக்கவும். பின்னர் வெயிலில் உலரவைத்து பக்குவப்படுத்தினால் குழம்பு பொரியல் என  சமைக்கலாம்

🔹 மோர் மிளகாய்
        🔸 பச்சை மிளகாயைக் கழுவி, துடைத்து, நுனியில் சற்று கீறிவிடவும். கண்ணாடி பாத்திரத்தில்   தயிருடன் உப்பு சேர்த்துக் கடைந்து மிளகாய் மூழ்கும் அளவு ஊற்றி 3 நாட்கள் ஊற வைக்கணும்.மூன்றாம் நாள் தயிரிலிருந்து மிளகாயை  பிழிந்து எடுத்து தட்டு ஒன்றில்  பரப்பி, நல்ல வெயிலில்  ஒரு நாள் முழுதும் காய வைக்கவும். உலரும்  மிளகாயை பின்னேரம் எடுத்து திரும்பவும் தயிருடன் கலந்துவிடவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மிளகாயை இப்படி  வெயிலில் உலர விடல் மிளகாயும், தயிரும் மொறு மொறு என  காய்ந்துவிடும். காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து உபயோகப்படுத்தவும் (எண்ணெயில் பொரித்து சாப்பிட  வேண்டும்).

தெளிவு 
******
🔸தேவைக்கு மிஞ்சிய (Surplus) உணவுகளை சேமிப்பதன் மூலம் உணவு விரயமாவது  தடுக்க படுகின்றன.

🔸 சர்க்கரை மற்றும் உப்பு, உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்கு உதவுகின்றன. உப்பு ஒரு சிறந்த வீரியமான பதப்படுத்தும் பொருள்.

🔸 உணபு பொருள்களை கெட்டு போக வைக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு உப்பும் சக்கரையும் தடையாக இருக்கின்றன 

🔸 சூரிய ஒளியில் உலர்த்தி பதப்படுத்திடும் முறைகள்  வெப்பநிலை,  காற்றில் உள்ள + ஈரப்பதம். காற்றின் வேகத்தை பொறுத்து  உலர்த்துவதற்கு தேவைப்படும் நேரம் உணவிற்கு உணவு வேறுபடும் 

🔶 உலரவைக்கும் இயந்திரங்களைக் கொண்டு உலரவைத்தல் : அதிக அளவில் பதப்படுத்தி சந்தைப்படுத்தல் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளலாம்

🔸இந்த முறைகளில் பெரிய அளவுகளில் உணவு சேமிப்பு விவசாயிகளை தொழில் முனைவோர் ஆக்கி  சந்தைப்படுதலை இலகுவாக்கி அதிக இலாபம் பெற்று தரும்.

🙏 முதல் தடவை முயற்சி சிறிய அளவில் தொடங்குங்கள்.
எப்போதும் ஆரம்பம் சொதப்பும் 🤣

இந்த தொடர் பதிவின் ஊடாக நாங்கள் எங்கள் அன்றாட தேவைக்கு போக மிகுதியாக கிடைக்கும் உணவு பொருள் விரயமாகமல்  எப்படி பதப்படுத்தலாம் 
என்பதை என்  உணவுத்துறையின் ( 15  வருட  ஈவண்ட்ஸ் ஹோட்டல் ) அனுபவங்களின் ஊடாக உங்களுக்கு எழுதுகின்றேன்.

ஆர்வமுள்ளோர் பயன் படுத்துங்கள்.
கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.
இன்னும் தொடர்வேன்


Nisha 🙏
03.05.2020

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 6

தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடலில்... 4 

எமக்கு தேவையானதை நாமே உற்பத்தி செய்வதோடு அதை பதப்படுத்தி பாதுகாப்பதும் சேமிப்பதும் இனி வரும் காலங்களில் எமக்கு அவசியமாகின்றன. 

எல்லோரும் வீட்டு தோட்டங்களில் ஈடுபட்டால், இதை 
தொழிலாக  செய்வோருக்குரிய விவசாய உற்பத்தி பொருட்களின் விலை வீழ்ச்சியடையம் என கலங்கி எதிர் வினையாற்றி கொண்டிருக்காமல்  விவசாயிகள் விவசாய பொருட்களை உள்ளூர் நுகர்வுக்காகவென மட்டும் உற்பத்தி செய்யாது மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் நோக்கி நகர்த்த வேண்டும். 

இனி வரும் காலங்களின் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ளும் முயற்சிகள் வேகமாக்க வேண்டும்.
தனி மனிதர் தற்சார்பில் முழுமையடையும் போது சமூக தானாக எழுச்சியடையும். 


மதிப்பு கூட்டல்  (Value addition) என்றால் என்ன? 


நீண்ட கால தேவைக்கு ஏற்ற படி ஒன்றை பலதாக்கி பதப்படுத்தி, உருமாற்றி சேமிக்கும் கொள்ளும் யுக்தி மதிப்பு கூட்டல் எனப்படும்.

உதாரணமாக..!
🔻 ஓரிரு நாளில் அழுகி போகும் பழங்களில் இருந்து  பழக்கலவை பழச்சாறு, பழப்பாகு,  
பழவற்றல் 

🔻 பச்சை மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயி  விளைச்சல் அதிகமாகும் போது தேவைக்கு போக மீதி அழுகி வீணாகின்றதே என கலங்குவதை விட அதை பழுக்கும் வரை விட்டு  வெய்யிலில் காய வைத்தால்  காய்ந்த மிளகாய். 

காய்ந்த மிளகாயை 
• உரலில் இடித்தால் சம்பல்தூள். 
• மிக்சியில் அடித்து அரித்தால் தனி மிளகாய் தூள்.
• மல்லி சீரகம் மிளகு சேர்த்து வறுத்து அரைத்தால் யாழ் கறித்தூள் 

🔻 சில மணி நேரங்களில் கெட்டுபோகும் பாலை  சீஸ், பன்னீர், பால் பவுடர், கிரீம், என ஒவ்வொரு தொழிலிலும் ஒன்றை பத்தாக மாற்ற கற்றுக் கொள்வதே காலத்துக்கேற்ற மாற்றம்.

உணவு உற்பத்தி  செய்யும் விவசாயி இவ்வாறான முயற்சிகள் மூலம் தொழில் முனைவோனாக வெற்றி பெறுவதோடு  அதிக லாபங்களையும் பெறுகின்றான்.விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை  கிடைக்கவில்லை என கவலை பட்டு கொண்டிருக்காமல்  மாற்றுத்தீர்வுகளை யோசித்தால் மதிப்புக் கூட்டி விற்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

உணவு பொருள் சேமிப்புக்கும் மதிப்பு கூட்டி பயன் படுத்தவும்  பெரும் தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்பது இல்லை 

நான் வாழும் சுவிஸ் தேசம் வருடத்தில் 9 மாதங்கள் குளிரும் 3  மாதங்கள் மட்டுமே வெயிலும் கொண்டதான நாடு என்பதால். 3  மாதங்களில் விளையும் வீட்டு  தோட்ட உற்பத்திகளை பக்குவமாக  சேமித்து குளிர் காலங்களில் பயன் படுத்துவார்கள்.

வீட்டு தோட்டங்களினுடான மக்கள் தற்சார்பை நோக்கிய வழி காட்டலில்  மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தேவைப்படும் ஆலோசனைகள்  சில இங்கே பகிர்கின்றேன்.

• இஞ்சி உள்ளி இரண்டும் எம்மவர் சமையலில் இன்றியமையாதவை.

இஞ்சிக்கும் உள்ளிக்கும் தினசரி உணவு தயாரிப்பில் இருக்கும் முக்கியத்துவம் உடல் நலன் ஆரோக்கியம் சார்ந்தது. தினசரி தேவைக்கு பயன் படுத்தும் இஞ்சியும் உள்ளியையும் தினம் தேவைக்கு வாங்கி உரித்து பயன் படுத்துவோம்.

அவ்வாறான வசதி இல்லாத கொரோனா வைரஸ் போன்ற நெருக்கடியான  சூழலிலும் விளைச்சல் அதிகமாகி விலை மலிவாக கிடைக்கும் காலத்திலும் உள்ளி வாங்கி உரித்து  நீர் தன்மை இல்லாத  போத்தலில் போட்டு மூடி பிரிட்ஜ் ல் வைத்தால் ஒரு வாரம் வரை இருக்கும் ( உரித்த உள்ளி கழுவ கூடாது)  

உரித்த உள்ளி sun Fellower  அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு  காற்று போகாமல் மூடி வைத்தால்  ஒரு மாதம் இருக்கும்.

உள்ளியை எண்ணெய் விட்டு  மிகவியில்மை  போல் அரைத்து ஐஸ் க்யுப் களில் போட்டு பிரீஷர் ல் வைத்து கட்டியானதும் ஒரு டப்பாவில் போட்டு மூடி மீண்டும் பிரிஸ்ர் ல் வைத்து  தேவைக்கு ஏற்ற படி எடுத்து பயன் படுத்தலாம் 

உணவு விடுதிகளுக்கு சேமிப்போர் இஞ்சி  பூண்டு பேஸ்ட் தனித்தனியே அரைத்து  பெரிய டப்பாக்களில் மூன்று நான்கு மாதம் வைத்து கொள்ளலாம். 

பிரிஸ்சர் ல் இருந்து வெளியே எடுத்து பயன் படுத்தியபின் ஒரு Tea ஸ்பூன் எண்ணெய் விட்டு  மீண்டும் பிரிஜ் ல் மூன்று நான்கு நாள் வைத்து பயன் படுத்தலாம். 

• மரவெள்ளி  மாவாக்கி பொதியிட்டால்        சந்தை வாய்ப்பு  இலகுவாக இருக்கும். 

• ஈரப் பலாக்காயை சீவி துண்டு போட்டு வெயிலில் காய வைத்து பதப் படுத்தலாம்..

பெரும்பாலான உணவு பொருட்கள்  போத்தலிலும் ரின்னிலும் அடைத்து  வெளி நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை அரச அதிகாரிகள் உருவாக்கி கொடுக்க முயற்சிக்கலாம் 

மேலும் என்ன பொருட்களை எப்படி மதிப்பு கூட்டலாம் ?

தொடர்வோம்...! 


Nisha