29 அக்டோபர் 2016

எண்ணப்பறவை சிறகடித்து........!

நாங்கள் ஐந்து பெண்கள், ஒரு தம்பி! குடும்பம் பெருகிய பின் கஷ்ட ஜீவனம் தான்.வாடகையில்லாத வாடகை வீடு!
பண்டிகை காலத்தில் அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு மண்ணெண்ணை வாடையோடு வரும் சீத்தை துணி கல்முனைமார்க்கெட்டில் மொத்தமாக வாங்கி விடுவார்.
இரண்டு விதமான துணியில் கிறிஸ்மஸுக்கு ஒரு சட்டை புதுவருடத்துக்கு ஒரு சட்டை. ஐந்து பெண்களுக்கும் ஒரே துணி, டிசைன் மாறி இருக்கும், தம்பிக்கு மட்டும் ரெடிமேட் ரௌசரும், சேட்டும் அது அனேகமாய் தவிட்டு கலரில் பள்ளிக்கூட உடுப்பாயும் இருக்கும். வருடத்துக்கு அந்த இரண்டும் தான் எங்களுக்கு புது ஆடை.அப்பாவின் தங்கை கொழும்பில் இருந்து அவர் பெண்களின் சட்டைகளை கொடுத்து விடுவார். அந்த சட்டைகள் அளவுக்கேறப் எங்கள் அனைவருக்கும் மீதிக்காலத்துக்கு பகிரப்படும்.
அச்சு முறுக்கு சோகி என அந்த சூழலுக்கு ஏற்ப பலகாரமும் கட்லட்,அல்லது கூனி வடையோ செய்து அதை கொண்டு சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போனால் கைவிசேடம் தருவார்கள். ஒருரூபாய், மூன்று ரூபாய் என அவரவர் வசதிக்கு தகுந்த படி இருக்கும். அதனால் இந்த பலகாரம் காவி வேலைக்கு எங்களுக்குள் போட்டி இருக்கும். தம்பியை கூட்டிப்போனால் கொஞ்சம் கூடுதலாய் காசு தருவார்கள் என்பதனால் அன்று மட்டும் நான் நீ என அடிபடுவோம்! அவன் எங்கள் எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாய் இருந்தான்.
அம்மா இறைச்சி சமைத்தால் ஊருக்கே வாசனை வரும், அதிலும் மாமாவுக்கு அம்மாவின் கைச்சமையல் எனில் நிரம்ப பிடிக்கும், வீட்டில் விருந்துச்சாப்பாடு. அதான் ஆட்டுஇறைச்சிக்கறி சமைத்து மாமா வீட்டுக்கு கொண்டு போனால் மாமி ஐந்து ரூபா தருவார்! அதனால் அன்று மட்டும் உளவாரம் அதாங்க உபகாரம் எனும் கைவிசேடக்காசு சிரித்துக்கொண்டே மாமாவும் தருவார்!மற்ற நாளில் மாமா என்றாலே பயம் தான்!
அன்று இருட்டிய பின் கல்முனையிலிருந்து பாபூஜி ஐஸ்கிரிம் வண்டி ஸ்பீக்கர் சத்தத்தோட வரும். ஊர் எல்லையில் வரும் போதே அதன் சத்தம் கேட்கும், பாட்டும் லைட்டுமாய் வரும் வண்டிக்கு பின்னால் தெருவின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஓடுவோம்.
அப்பா வீட்டில் இருந்தால் தான் ஐஸ்கிரிம் கிடைக்கும்.அப்போதானே காசும் வீட்டில் இருக்கும்.அப்பா இல்லாத நாளில் ஐஸ்கிரிம் வண்டி வந்தால் வண்டியை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே நிற்போம்!
இன்றைக்கு மாதத்துக்கு நான்கு தடவை புதுத்துணி எடுத்தாலும் அக்காலத்தில் பண்டிகை எனில் அதிகாலையில் தலைக்கு குளித்து சீத்தைத்துணி சட்டையை மகிழ்ச்சியோடு அணிந்து சர்ச்சுக்கு போய் வந்து பலகாரங்கள் சாப்பிட்டதை போல் சுவையாய் இல்லை.
வயிறு நிறைய சாப்பிட தின்பண்டம் இருக்கின்றது.கப்பேர்ட் நிறைந்த துணிகள் இருக்கின்றது. ஆனாலும் எதையோ இழந்தது போல் உணர்வும் மனதில் ஆழத்தில் உறங்கிக்கொண்டே இருக்கின்றது!

தொடர்வேன்!
அனைவருக்கும் 
இனிய தீபத்திருநாள் 
நல் வாழ்த்துகள்! 

19 அக்டோபர் 2016

மாலு பான் ரெடி!

மாலுபாண்
**************
இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வார்கள், சமைத்த கறியை வைத்து செய்யும் பன்!

பன்னுக்குள்  மீன், இறைச்சி, முட்டை மரக்கறி என எதைவேண்டுமானாலும் பிரட்டல் கறியாக செய்து  பேக் செய்து எடுப்பதே மாலு பான் எனப்படும், 

பாண் செய்ய தேவையான பொருட்கள்; 
*******************************************
கோதுமை மா 500கிராம். பத்து பன் செய்யலாம் 
ஈஸ்ட்-.20 கிராம்
சீனி 1 தே.கரண்டி
உப்பு ஒரு தே. கரண்டி 
வெதுவெத்ப்பான நீர் 250 மி.ல்லீ
பாண் செய்யும் முறை;
*************************

சீனி ஈஸ்ட்-. வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து வைக்கவும்
கோதுமை மாவை பாத்திரத்தில் போட்டு உப்பு ஈஸ்ட் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
சப்பாத்தி மாவுக்கு பிசைவது போல் கைகளில் ஒட்டாத பதம் வந்ததும் காற்றுப்போகாமல் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
கறி செய்ய தேவையான பொருட்கள்
*****************************************

மீன் (ப்ரெஷ் மீன் அல்லது ரின்னில் அடைக்கப்பட்டது.)
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் பூண்டு, இஞ்சி, சீரகம் கடுகு கறிவேப்பிலை மிளகாய் தூள் சுவைக்கேற்ப
கறிசெய் யும் முறை;
***********************

ப்ரெஷ் மீன் என்றால்:சுத்தம் செய்யப்பட்ட மீன், மஞ்சள் துள், உப்பு சேர்த்து அவித்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு,வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு, வெங்காயம் வதக்கி உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்.
அடிப்பிடிக்காதபடி அடிக்கடி கிளறி கிழங்கு பாதிவெந்ததும் பிசைந்த மீன், சில்லி பவுடர் அல்லது கறிமிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்..
கறி நன்றாக அவிந்து சேர்ந்த்தும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
பிசைந்து வைத்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கைகளில் வைத்து தட்டையாக தட்டி நடுவில் கறி வைத்து மூடி உருண்டைகளாக்கவும்.
கடைசியாக முட்டை மஞ்சள் கருவை நன்றாக அடித்து பூசி ஒவனில் 200_220 டிகிரி சூட்டில் 25-- 30 நிமிடங்கள் வைத்து பேக் பண்ணி கோல்ட் கலரில் வந்ததும் வெளியே எடுக்கவும்.
*பாண் நன்றாக ஊதி வர ஒவனை அடிக்கடி திறக்கக்கூடாது
**மரக்கறி பான் தேவை என்பவர்கள் மீன் போடாமல் துருவிய கேரட், லீக்ஸ் போட்டு கிழங்குடன் பிரட்டி எடுங்கள். அப்படியே முட்டைக்கு பதில் கொஞ்சம் ஓவனில் வைக்கும் முன் பாலை பூசி விடுங்கள், பான் மெதுமையாக இருக்கும், 
***அவசரமாகவும், இலகுவாகவும்  செய்ய வேண்டும் எனில் முழுக்கிழங்கை அவிய விட்டு தோலுரித்து பிசைந்து வெங்காயம் மசாலாவை தாளித்ததும் அவித்த கிழங்குத்துண்டங்களை போட்டு பிரட்டி எடுக்கலாம்,
****முட்டையை அவித்து கோதுடைத்து  பன்னுக்குள் அப்படியே வைத்தும் பேக் செய்யலாம்.

மாலு பான் ரெடி! ஆனால் யாருக்கும் கிடையாது!அனைத்தினையும் நாங்களே சாப்பிட்டு முடித்து விட்டோமாக்கும்!
******************************************

15 அக்டோபர் 2016

கேள்விக்குள் ஒளிந்திருப்பது என்ன?



சமீபத்தில் ஒரு திருமண விருந்துபசாரம் எமது Hegas Catering Services ஊடாக இரவு விருந்துக்கு ஆர்டர் வந்திருந்தது.
என் நிர்வாகத்தின் கீழ் ஆறு உதவியாளர்களும் ஒரு வாகன சாரதியுமாக சரியான நேரத்துக்கு போய் சேர்ந்தாலும் சில பல காரணங்களால் பவ்வே மேசையை தயார் செய்வதில் சின்ன சின்ன சங்கடங்கள்
அன்றைய மெனுவாக கொத்துரொட்டி, பூரி, பிரைட் நூடில்ஸ், சோறு அதற்குரிய கறிகள், கூட்டுக்கள், பொரியல்கள் என... அனைத்தும் தயாராய் சென்றாலும் மெயின் உணவான பூரி, நூடில்ஸ், பரோட்டாக்கொத்து எப்போதுமே உடனடியாக மண்டபத்தில் இருக்கும் சமையலறையை பயன் படுத்தி தான் செய்வோம், உடனடியாக செய்து பரிமாறுவது தான் எமது சிறப்பே! 
சுவிஸில் எப்பக்கத்தில் இருந்தாலும் விருந்து மண்டபத்து சமையலறை யில் அடுப்பு வசதிகள் இல்லை எனில் அதற்கேற்ப காஸ் அடுப்பு ஒழுங்குகளோடு செல்வோம்.
அன்றைய நாள் விருந்தில் மேலே குறிப்பிட்ட் உணவுகளை ஆயத்தம் செய்ய எமக்கு ஒரு மணி நேரம் தேவை என்பதனால் மூன்று உதவியாளர்கள் அதற்கான ஆயத்தங்களிலும் ஒருவர் பாத்திரங்களை கழுவுவதிலும் இருவர் பவ்வே மேசைக்குரிய ஆயத்தங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அனைத்தும் என் மேற்பார்வையில் நடைபெறும் என்பதனால் பெண் என்பதனால் பலரின் பார்வை என்னை ஆச்சரியமாய் பார்ப்பது சாதரணமானது. நீங்களா இதை முன் நின்று செய்கின்றீர்கள் என கேட்பவர்கள் சிலர்?
****எங்கள் வீட்டுப்பெண்கள் இப்படி செய்யமாட்டார்கள் நீங்கள் கிரேட் அக்கா என என்னை விட பெரியவர்களும் அக்கா என அழைத்து என் பணியின் கனம் உணர்ந்து மனமார்ந்து பாராட்டி தொடர்ந்தும் எம்மை ஊக்குவிப்பவர்கள் பலர்!
*என்னிடம் பணி செய்வோரை நான் என்றுமே வேலையாட்களாய் பார்த்ததில்லை என்பதனால் அவர்களும் எம்மை வேறு படுத்தி பார்ப்பதில்லை.
அன்றைய விருந்தின் முடிவில் அனைத்தினையும் நான் சொன்னபடி ஒதுக்கி வாகனத்தில் ஏற்றுவதற்காக பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த ஒரு தம்பியிடம் சென்று ஒருவர் தம்பி சாப்பாடு எல்லாம் நலல் ரேஸ்டாக இருக்குது! யார் இதை ஒழுங்கு செய்தது? யாரிடம் ஆர்டர் விடயமாக பேச வேண்டும் என கேட்கவும். அவர் என்னை காட்டி அக்காவிடம் பேசுங்கள் என்றார்.
உடனே பெண்பிள்ளையா நடத்துவது என்பது போல் என்னை நட்பில்லாமல் ஒரு மாதிரி பார்த்து விட்டு.... அப்ப நீ எடுபிடியோ தம்பி? 
கேள்விக்குள் ஒளிந்திருப்பது என்ன?

04 அக்டோபர் 2016

அனைவருக்கும் வணக்கம்!

அன்புள்ளங்கள் அனைவரும் நலமா?
விருந்துக்கு வருவோருக்கு வாசலில் வைத்து பரிமாறப்படும் குளிர்பானங்கள் வரிசையில்  ஆரஞ்சுயூஸ், விட்டமின் யூஸ், ஒய்ட் வைன், மினரல் வாட்டர், கூடவே டீ காப்பியும் உண்டு  

நான் வரவில்லை எனினும் பேஸ்புக்கில் காணும் போதெல்லாம் நலம் விசாரித்து பதிவுகள் இடுங்கள் என வேண்டுவதோடு என் வாசிக்கும், எழுதும் ஆர்வத்தினையும் விட்டு விலகி விடாமல்  இருக்க  என்னை ஊக்கப்படுத்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி! 

கடந்த  பத்து வருடமாய்  சுவிஸ் நாட்டில் ஈவன்ஸ் களுக்கு உணவு மற்றும் மேடை, மேசை சோடனை முதல் இதர அனைத்து ஒழுங்குகளையும் செய்து வந்தாலும் ஐந்து வருடம் முன்னால் தான் எமக்கென நிலையாக  ஹோட்டல் ஒன்றோடு இணைந்த  விழா மணடபஙக்ள் இரண்டினையும்  திறந்ந்திருந்து படிப்படி்யாய் வளர்ந்து சுவிஸிலிருக்கும் எம்மக்கள் மத்தியில் எமக்கென நிலையான நல்லதொரு இடத்தினை பெற்றிருக்கின்றோம். 


 உள் நுழைந்ததும்  சிற்றுண்டிகள்,
 நான்கு வகையான பிரெட் சாண்ட் விச் 
மட்டன் மற்றும் உருளைக்கிழந்து சேர்த்த ரோல்ஸ் 
வெஜ் சமோசா, மீன் சேர்த்த கட்லெட் 
ஸ்விட் சில்லி சாஸ்
 மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்,  மிக்சர்
தக்காளி, வெள்ளரி, மெசெரெல்லா ஸ்ரிக் 

இந்த வருடத்தில் வந்த ஆர்டர்களும், பொறுப்புக்களும் எமக்கான வளர்ச்சியை மட்டுமல்ல எமது நிர்வாகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் புரிந்திடும் படி   இருந்தது.    கடந்த பங்குனி மாதத்தில் ஆரம்பித்த ஓட்டம் கடந்த வாரத்தில் தான் சற்று ஓய்வைத்தந்தது. இந்த ஒரு வாரமும் சற்று ரிலாக்ஸாய் ..........! 
இங்கே பாடசாலைகளுக்கு  யூலை முதல் ஆகஸ்ட் முதலிரு வாரங்களுமாய் ஆறுவாரங்கள் கோடைகாலவிடுமுறை ஆகவும்,செப்டம்பர் கடைசியிலிருந்
து அக்ரோபர் நடுப்பகுதி வரையான மூன்று வாரங்கள் இலை உதிர் கால விடுமுறையாகவும்  இருபப்தனால் கோசை விடுமுறையில் இந்தியா, இலங்கைக்கு செல்லலாம் என திட்டமிட்டு  முடியாமல் போனது.

சொந்த தொழில் என்பது புலிவாலை பிடித்த கதையாய்.... பணம் கொட்டினாலும் அதை பெற நாம் நம் சுயத்தினை இழக்க வேண்டி இருக்கின்றது. தொழில் வளர்ச்சி என்பது மட்டுமே கண்முன் இலக்காக தெரிகின்றது. ஏனையவை களை பின்னர் பார்க்கலாம் என தட்டிக்கழிக்கும் படியும் செய்கின்றது. 

சுடச்சுட பூரி, பிரைட் ரைஸ், 
சிவப்புக்குத்தரிசி சாதம் 

மட்டன் குழம்பு, 
இறாலுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்த பொரியல்  தந்தூரி சிக்கன்


வெள்ளரி சேர்த்த தயிர் ரைதா
கத்தரிக்காய் வத்தக்குழம்பு
பருப்பு
உருளைக்கிழங்கு பிரட்டல் 
அப்பளம்,மோர் மிளகாய் 

ஹோட்டல் நிர்வாகமும், ஈவன்ஸ் ஓழுங்குகளும் எனது தலைமையின் கீழ் மட்டுமே என்பதனால் நான் இல்லாத சூழலில் எந்த விருந்து ஒழுங்குகளையும் ஒழுங்காய் செய்ய முடியாது என்பதனால் பயணத்திட்டம் இட முடியவில்லை.  பல நட்புக்கள் என் வருகையை எதிர்பார்த்து இன்னும்ஆர்வமுடன் இருப்பதை நான் அறிந்தாலும்  நாம் சந்திக்கும் காலம் நிச்சயம் வரும் எனும் கடவுள் நம்பிக்கையில் இருக்கின்றேன்.


ஊஞ்சலாடும் கேக்
கடந்த வாரத்தில் எம்மால் நடத்தப்பட்ட விருந்துகளிலிருந்து உங்கள் பார்வைக்காக சில படங்களை இடையிடையே பகிர்ந்துள்ளேன். 

மேசை அலங்காரம் 


மேலும் படங்கள் பார்க்க...
.https://www.facebook.com/hegas.prabha/media_set?set=a.1085077021528497.1073741839.100000786292216&type=3