19 டிசம்பர் 2015

புரியாத புதிர்!

நீ என்ன இறையென்றெனக்கு
இன்றுவரை புரியவில்ல்லை. 

இருப்போருக்கு இன்னும் கொடுக்கிறாய்,

இரப்போரிடம் இருப்பதை எடுக்கிறாய் 
இரப்போரைபார்த்து இரங்காது
இருப்போருக்கு இன்னும் இரங்குவதால் 
நீ என்ன இறை யென்றெனக்கு புரியவில்லை

நோயினால் நோகடிப்பதும் வாதையால் வதைப்பதும். 

செல்லும் பாதையில் தடைகல்லென அறிவாயோ?
நல்லது செய்வோர் அல்லல்களாலே 
துன்புறுவதும்.. தீயவரெல்லாம் தித்திக்கும் வாழ்வில் 
இன்புறுவதுவதும் உன் வஞ்சனைகள் 
ஏனென்றெனக்கென்றுமே புரிவதில்லை !

ஏன் என்ற கேள்விகள்  என்னுள் எழும் போதெல்லாம் 

நானுந்தன் தெய்வம் என்றே நீ சொன்னாலும் 
உன் சேயுறும் துயருன்னை  சேரவே இல்லையோ?
சொரிந்திடும் கண்ணீரை உண்ர்ந்திடாமலே
தூரமாய் நிறுத்தியே துயறுற செய்வதேனென 
எனக்கு புரியவே இல்லையே!

துயறுரும் மானிடன் துயர் துடைக்க 

துடிக்கும் கரங்களை  துயரிலாழ்த்துவதும் 
துஷ்டராய்  துணிகர துன்பம் தருவோரை 
தூணில் உயர்த்துவதுமாய் -உன் 
நியாயங்களும், நீதிகளும், நியாயத்தீர்ப்புக்களும் 
எனக்கு புரியவே இல்லை. 

உள்ளத்தில் உனை இருத்தி . 

உணர்விலே உன்னுடன் இயைந்து 
உச்சி வானை தொட்டிட வேண்டாம். 
உள்ளம்துடிக்க கலங்கிடாமல் 
காத்திடாமல் கலங்கடிப்பதேன் 
என்றெனக்கு புரியவே இல்லையே! 

புரியாமல் புரிந்திட, புரிந்ததை புரியாமல் 

புரிந்ததாய்  புகழ் பாடி உனை நம்பிடும் 
வித்தையே உன் சொத்தும் பத்துமாய் 
நித்தமும் பித்தனாய் உனை தேடிட செய்திடும்  
பகதனை பைத்தியம் என்பதேன் 
என்றெனக்கும் புரியவும் இல்லைத்தான்! 

புரியாதவை புரியாதைவையாகவே இருக்கட்டும். 

புரிந்தவை புரியாதவைகளாகட்டும். 
புரிதலும் பிரிதலும் உனை சேர்த்லாய் மாறட்டும் 
பிறப்பும் இறப்புமே பக்குவப்படுத்தட்டும்

10 டிசம்பர் 2015

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

சென்னை சீரழிவுக்குக் காரணம் யார் தெரியுமா? - அதிர வைக்கும் உண்மைகள்!எனும் தலைப்பிலான கவர் ஸ்டோரி படித்த பின் தோன்றியது 


என்ன செய்யப்போகின்றோம்? 

அரசு தரும் நிவாரணத்தினை வாங்கி டாஸ்மார்க்கில் கொண்டு போய் மீள கொடுத்து நன்றாக வயிறு முட்ட குடித்து விட்டு மதி கெட்டு மறுபடியும் என்ன இலவசங்கள் தருவார்கள் என அரசியல் கட்சிகள் தரப்போகும் எலும்புத்துண்டுகளுக்காக எச்சில் வடிய நன்றியுள்ள நாய்களாய் மாறி காத்திருக்க போகின்றோம். 

நாய்க்கு ஐந்தறிவு தான்! மனிதருக்கோ? ஒரு அறிவும் கிடையாது! அதிலும் தமிழனுக்கு கிடையவே கிடையாது!தமிழன் என்றாலே ஏமாளி என அவன் மூஞ்சியில் ஒட்டி இருக்குமோ என்னமோ!? 

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? 

குப்பை கூழம் பிளாஸ்டிக் என ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் இந்த பேரிட இழப்புக்கு முழுக்க முழுக்க காரணம் அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை! பிளாஸ்டிக் போட்டார்கள் குப்பை போட்டார்கள் வடிகான்களை அடைத்தார்கள் என ஆயிரம் சாக்குப்போக்கு சொன்னாலும் அவையெல்லாம் ஒரே நாளில் நடந்ததில்லை பல வருடங்களாக நடக்கும் ஒரு விடயத்தை வைத்து இதனால் அதனால் என சொல்லி விலகுதல் ஏற்புடையதல்ல. 

முதலில் டிசம்பர் முதல் வாரம் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி அறிவிப்பு செய்த பின்னும் நவம்பரிலிருந்து மழை பெய்து அந்த நீரே ஓடுவதற்கு சரியான வடிகான்கள் இல்லாத நிலையில்... தொடர்ந்தும் மழை பெய்தால் என்னாகும் என அறியவும் உணரவும் இதற்கென ஆராய்ச்சிப்படிப்பா படித்து வரவேண்டும்?

முதலாம் கிளாஸ் படிக்கும் பிள்ளையே சொல்லும்... இத்தனை நடந்தும் அணைகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததை கடைசி நிமிடம் வரை வேடிக்கை பார்த்து விட்டு.... கடைசி நிமிடத்தில் தான் உணர்ந்தார்கள் அல்லவா? 

இந்த நேரடி அனுபவத்தினை படித்து பாருங்கள். 

இராணுவம், காவல்துறை சேர்ந்து வாகனத்தில் வந்து அறிவிப்பு செய்த நேரம் நள்ளிரவு 11 மணிக்கும் மேலாம். எந்த ஊரில் இரவு ஒன்பது மணிக்கு பின் தெருவில் நடமாட்டம் இருக்கும். ஏற்கனவே பேரிடர் அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு கூட இந்த மாதிரி அறிவிப்பால் பயன் இராது. அப்படி இருக்கும் போது சாக்குப்போக்காய் ஒரு அறிவிப்பு... 

தன் கட்சிக்கு ஒரு பாதிப்பு எனில் தெருவில் செல்லும் பேருந்தை நிறுத்தி தீவைத்து கொழுத்த ஆயிரம் பேரை கூட்ட முடிந்தவர்களால் தன் மக்களுக்கு ஆபத்து எனும் போது செயல்பட முடியாமல் போனதேன்? ரயிலை நிறுத்தி, பேருந்தை எரித்து மரங்களை வெட்டி நாட்டை சுடுகாடாக்க ஒரே நொடியில் விரலசைவில் பல்லாயிரம் பேரை கூட்டி செயல் படுத்த முடிந்தவர்களால் அப்பாவிமக்களை வற்புறுத்தி அவசரகால பிரகடனம் செய்தாவது குறித்த நேரத்தில் மேடான பகுதிக்கு வர வேண்டும் என கட்டளை பிறப்பித்திருக்க முடியாதா? 

முடியாது என எவரேனும் சொன்னால் சொல்பவர்களுக்கு அறிவே இல்லை எனத்தான் நான் சொல்வேன்! ஒரு மணி நேரம் போதுமே! உடைமை போனாலும் உயிரிழப்புகள் குறைந்திருக்குமே! 

மழையால் மட்டும் வெள்ளப்பாதிப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்... அணைகள் திறக்கப்ட்டதால் தான் இத்தனை அழிவும் என்பதும் நிஜமே!அணையை திறந்து தான் விட்டீர்கள்.. கன மழை பெய்து அணை நிரம்பும் போது அடையாறு நதி கடலில் சேரும்மிடத்தில் ஆழமாக்கப்பட்டு விரிவாக்கபட்டு முகத்துவாரம் வெட்டப்படணுமாம். இம்முறை முகத்துவாரம் வெட்டப்படவில்லையாம். ஏன் முகத்துவாரம் வெட்டவில்லை. இதை செயல் படுத்த வேண்டியவர் யார்? 

அரசு தான் செய்யவில்ல எனில் வெள்ளம் வரும் போது நடைமுறை இதுவென பொதுமக்களேனும் கூடி பேசி முகத்துவாரம் வெட்டி நதி நீர் கடலில் போய் கலக்க வழி செய்திருக்கலாமே! 

அரசு செய்யட்டும் என மக்களும் பதவி மட்டும் தான் முக்கியம் என அந்த நேரத்துக்கு குழைக் கும்புடு போட்டு வரும் அரசியல் வாதிகளும், லஞ்ச லாவண்யங்களில் புரையோடிய அதிகாரிகளும்.... அத்தனை பேரும் தான் இத்தனை இழப்புக்கும் காரணம். 

அணை நீர் பெருக்கெடுத்து வரும் போது பாலங்கள் உடைகின்றது. அந்த நொடியிலாவது வரும் ஆபத்தினை உணர்ந்து கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு ஓடி இருக்கலாமே! விடியோ எடுப்பதும் அதை பகிர்வதுமா முக்கியம். வேடிக்கை பார்ப்பதும் அனைத்திலும் அசட்டையாய் இருப்பதும் தான் அனைத்து இழப்புகளுக்கும் காரணம்! 

இனிமேல் அம்மா என்றால் ஆகுமா? ஐயா என்றால் ஆகுமா? இந்த இழப்பிலிருந்து மீண்டு வரவேனும் அரசு ஓடோடி வந்ததா என்றால் அது தானும் இல்லை.ஆற அமர போட்டி கொடுக்கின்றார்களாம். 

சென்னை மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்கள். எஙகள் தங்கத்தலைவி இராணுவ வேகத்தில் செயல்பட்டு மக்களை தாலாட்டினார் என போட்டி கொடுக்க முன் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களோ? 

அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் உதவிக்கு செல்லும் போதும் போருக்கு செல்வது போல் முன்னும் பின்னும் படையணி சூழ போட்டோக்கிராபரும் வீடியோகிராபருமாய் முழங்கால அளவு நீரில் நின்று மாடல் செய்த விதம் கண்டு சத்தியமாய் சிரித்தேன். இது தானா மீட்புப்பணி செய்யும் அழகென எனக்குள் கேள்வி எழுந்ததென்னமே நிஜம். 

அப்படியும் செய்து விட்டு... எம் தலைவன் உங்களுக்காக அதை செய்தான், இதை செய்தான் இனியும் உங்களுக்கு பாதுகாவலன் யார், என பெண்கள் புடை சூழ போட்டோஷாப் திருவிளையாடல்கள் வேறு...!

மோடி வெள்ளத்தினை பார்க்க போனேன் என போட்டோ ஷாப் செய்தார் என பி.பிசி ஒரு அசைபடம் வெளியிட்டு கிண்டல் செய்யும் படியும் அரசு மெத்தனம், வேகம் காட்டவில்லை, நூறு வருடங்களில் இல்லாத வரலாறு காணாத அழிவு. சென்னை வெள்ளம் என வெளி நாடுகளே தலைப்பிட்டு செய்தி இடும் படித்தானே அரசின் செயல் இருந்தது. 

ஆனாலும் நான் பெருமைப்படுகின்றேன். எம் எதிர்கால சந்ததியை நினைத்து....ஹாட்ஸ் அப் என் சந்ததியே! கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் சுய நலவாதிகளாக இருக்கின்றார்களே என எம் இளைய தலைமுறையை திட்டிய ஒவ்வொருவரும் வெட்கித்தலை குனியுங்கள். சுய நலமாய் சிந்தித்ததான சொன்ன இளைஞர் படையணிதான் பொங்கி பெருகி பதறித்துடித்து புறப்பட்டது.

மதம்,ஜாதி,இனம், மொழி மறந்து பேதமை மறந்து எம் மக்கள் எனும் தேசிய உணர்வோடு பசி தூக்கம் மறந்து செயலாற்றினார்கள். என் எதிர்கால சந்ததி சுயநலமானதென இனியும் சொல்வோமா...? 

இனியும் என்ன செய்ய போகின்றீர்கள்? 

மதவாதம் பூசி வரும் அரசியல் வியாதிகளை ஓடோட விரட்டுங்கள். முகப்பூச்சு போட்டு வேடிக்கை காட்டுவோரை உணருங்கள்! 

நிச்சயம் இனி செயல் படும் நேரம் தான் தமிழ் மக்களே! 
தூங்கியது போதும் விழித்தெழுங்கள்! 
ஏமாந்ததும் போதும் எழுச்சி பெறுங்கள்!

06 டிசம்பர் 2015

தேவைகள் இனிமேல் தான் அதிகமாகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேவைகள் மட்டும்அல்ல!அவர்களின் தேடலின் போதான நமது கரம் கொடுத்தலும் இனிமேல் தான் அதிகமாகின்றது.

உணர்ச்சி வேகத்தில் இப்போதைக்கு அனைவரும் அள்ளிக்கொடுக்கலாம்.
நிஜமான வாழ்வாதார போராட்டமும்தேவைகளும் இனிமேல் தான் அதிகமாகின்றது.தூரத்தில் இருந்தாலும் அறிந்த செய்திகளை வைத்து பார்க்கும் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை பொருட்களை இழந்து நிர்க்கதி ஆகி இருக்கின்றார்கள்.

இன்றையை வெள்ளச்சூழலில் திறந்து விடப்பட்ட மண்டபங்கள், வீடுகள், 
மசூதிகள், பாடசாலைகள் ஒரு வாரமோ ஒரு மாதமோ தற்காலிக தங்குமிடம் தான் அதன் பின் வானமே கூரை எனும் கையறு நிலையில் மக்கள்! மழை முடிந்து வெள்ளம் வடிந்ததும் தான் தேவைகள் அதிகம் இருக்கும் 

இலட்சக்கணக்கான மக்கள் முக்கியமாக குடிசை மக்கள் அனைத்தினையும் இழந்து பூஜ்ஜியத்திலிருந்து தம் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியநிலையில் இருப்பார்கள்.

காப்புறுதிக்காரர்களும் நிச்சயம் திணறித்தான் போவார்கள். அரசு அனைவருக்கும் இழப்பிடு தரமுடியுமா என்பதே கேள்விக்குறிதான் எனும் போது அரசை நம்புவதும் முட்டுசுவரில் முட்டிக்கொள்வதும் ஒன்றுதான். நான்காயிரமோ ஐந்தாயிரமோ தலைக்கு இவ்வளவு என இழப்பீடு கொடுத்து விட்டு ஒதுங்கினாலும் ஆச்சரிய்ப்படுவதற்கில்லை.அதில் பாதியோ முழுவதுமோ டாஸ்மாஸ் மூலம் அவர்களுக்கே சென்று விடும் எனும் நம்பிக்கையோடு தான் கொடுப்பார்கள் என்பது என்னவோ நிச்சயம் தான்.

இந்த இக்கட்டான நேரத்தில் வெளிநாட்டில் இருப்போர் பொறுத்திருந்து எங்கே தேவை என ஆராய்ந்து தனியாகவோ குழுவாகவோ உதவலாம்.
வானமே எல்லை என நிற்கபோகும் மக்களுக்கு தற்காலிக கூடாரம் அடிக்க கூட வசதி இருக்காதே! அப்போது தான் நம் அனைவரின் பங்களிப்பும் அவசியமாகின்றது. உதவும் உள்ளங்கள் தம்மால் இயன்றபடி ஒரு கிராமத்தினையோ.தெருவினையோ,
குடும்பத்தினையோ முழுமையாக பொறுப்பெடுத்து தற்காலிக குடிசை போட தகரம் பாய், ஒலைகள், போர்வை கூடவே அரிசி பருப்பு போன்ற மளிகை மட்டுமல்ல பாத்திரம் பண்டங்கள்,பாடசாலை உபகரணங்கள் என பல தேவைகளை நிறைவாக்கலாம்.

யாருக்கு தேவை அதிகமோ அவர்களை தேர்ந்தெடுத்து நேரடியாக உதவலாம். அதிலும் பணமாக கொடுக்காமல் பொருட்களாக கொடுத்தால் அவைகள்  டாஸ்மாக் க்கு செல்லாமல் இருக்கும். இந்த மழையிலும், வெள்ளத்திலும் கூட டாஸ்மாக் திறந்திருந்ததே இதற்குசாட்சியாய் இருக்கின்றதே!

எனவே உறவுகளே உங்கள் உதவிகளை உணர்வு பூர்வமாக அணுகாமல் அறிவு பூர்வமாக அணுக வேண்டுகின்றேன்.

இனியும் அடுத்தடுத்த வாரங்களில் ....!
மழை ஓய்ந்தாலும்...... தேடல்களுடனானதேவைகள் ஓயாது!
உணவுப்பொருட்கள்
பாத்திரம்பண்டங்கள். 
பாடசாலை உபகரணங்கள்
குடிசைபோடதேவையான தகரங்கள், சீட்கள், ஓலைகள், போர்வைகள், 
பாய்கள், பிளாஸ்டிக் வாளிகள், துணிமணிகள் என ஒரு குடும்பம் தொடங்க நம்மால் என்ன செய்ய இயலுமோ அவைகளை குறித்து சிந்தித்து எங்கே எவருக்கு நம் தேவை அவசியமோ அங்கே நம் கவனம் செல்லட்டும்.  

ஆயிரம் இலட்சங்களில் உதவ முடியாவிட்டாலும்  ஐம்பது நூறு என நீங்கள் குழுவாக இணைந்து கூட செய்யலாம். தனித்தனியே செயல் படாமல் குழுவாக இணைந்து ஒரு குடும்பத்தையேனும் தத்தெடுங்கள்.

அங்கொன்றும் இங்கென்றுமாய் எங்கணும் அலைந்து எதையும் முழுமையாக செய்யாமல் ஏதோ செய்தோம் என பெயருக்கு உதவாமல் நம் செயல்பாடுகள் நிச்சயம் ஒருவருக்கேனும் பயன் பட்டது என மனத்திருப்திஅடையும் படி செயல் படுங்கள். தேவையறிந்து உதவுங்கள்.நேரத்தினையும் பணத்தினையும் சேமியுங்கள்,! பணத்தையோ பொருளையோ, உணவையோ வீண் விரயம் செய்யாமலும் தகுதியற்றவர்களுக்கு நம் உதவி சேராமலும் இருக்கும்படி நிதானமாக செயல்படுங்கள். குழுக்களை இணைக்கும் பொழுது கணக்கு வழக்குகள் அனைத்தையும் பொதுவாக பேசி வெளிப்படையாக கையாள்வது இனியொரு பொழுதில் இக்கட்டு நேரம் உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்பட உதவும். 

டிப்ஸ்
எவர் உதவுவதானாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமாக கொடுக்காதீர்கள் சிரமமாயிருந்தாலும் பொருளாக கொடுங்கள். அவை நீண்ட காலம் உங்கள் பெயர் சொல்லி வாழ்த்தி வணங்கும்.

இலங்கையில்சுனாமி,புயல்,வெள்ளம், யுத்தம் என பாதிப்பு தொடர்ந்த 
போதெல்லாம் எம்மால் இயன்றதை செய்திருக்கும் அனுபவத்தில் எழுதிய பதிவு இது. 

யுத்தம்..சுனாமி மீண்டும் வெள்ளம் என இலங்கையில் கடலோர மக்கள் பாதிக்கப்பட்டபோது உணர்ச்சி வேகத்தில் உடனடி உதவிகள் பல கிடைத்தது. ஆனால் நாட்கள் சென்றபோதோ.... தற்காலிகமாக தங்க அனுமதித்த பாடசாலைகள்,கோயில்களை விட்டு உடனடியாக இரு நாட்களில்மக்களை வெளியேற சொன்ன போதுதான் தவித்து போனார்கள். எங்கே செல்வோம், என்ன செய்வோம் என நடுத்தெருவில் நின்ற சூழலில் நாங்கள் செயல்பட்டோம். அதற்கு முன் சுவிஸிலிருந்து ஆறு கண்டெய்னர்களில் துணிகள் அனுப்பி ஊருக்கே பகிர்ந்தளித்திருந்தாலும் பணமாக கொடுப்பதை தவிர்த்து தேயிலை,சீனி, உலர் பால்மா, பிஸ்கட்,அரிசி பருப்பு, எண்ணெய்,ஷோப், தீப்பெட்டி, மெழுகுதிரி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்ட 100 பைகளுடன் பிளாஸ்டிக் பாஸ்கெட்,கூடாரம் போட தேவையாக் சீட்கள், தகரங்கள், ஓலைகள், பாய்கள், போர்வைகள் என மிக முக்கியமாக வீடிழந்தோரை கவனத்தில் கொண்டோம். எங்களால் ஆயிரம் பேருக்கு செய்ய முடியவில்லை தான். பத்து பேருக்கு தங்குமிட உதவி செய்தோம் எனும் மன் திருப்தியும்100 குடும்பம் ஒருவாரமாவது உயிர் வாழ உதவினோம் எனும் நிறைவும் இன்று வரை என்னுள் இருக்கின்றது. கூடவே மருத்துவ முகாம்களை நடத்தி தன்னார்வ சேவையாளனான் என் தம்பி டாக்டர் புஷ்பகாந்தன் செயல் பட்டான் என்பதை இந்த நேரத்தில் நான் நன்றியோடு நினைவு கூருகின்றேன். வயதில் சிறியவனாயிருந்தாலும் அனைத்தினையும் என் கவனத்தில் கொண்டு வந்து என் சிந்தனைகளை செயலாக்கியவன்! அவனும் அவனுடனிணைந்த நட்புக்களும்.என்னுடன் இணைந்து  உதவியவர்கள் முத்தமிழ் மன்ற அன்புறவுகள்! அனைவருக்கும் நன்றி!

என்னுடன் கடந்த பல வருடங்களாக இணைந்து  நான் உதவுகள் என கேட்கும் போதெல்லாம் இல்லையே என சொல்லாது எவ்வளவு எதிர்பார்க்கின்றீர்கள் நிஷா என கேட்டு சொன்னபடியே செயலிலும் காட்டும் நைஜிரியாவிலிருக்கும் அன்பு ஜெய்சங்கர் அண்ணா, எங்கே எது நடந்தாலும் தங்கச்சி நாமும் ஏதேனும் செய்யணுமே என துடிக்கும் பரஞ்சோதிஎனப்படும் என்பாசமான சுரேஷ் அண்ணா,இவர்களுடன் தான் பட்ட கஷ்டம் தன் சந்ததி படக்கூடாது என வருடா வருடம் நூற்றுக்கணக்காக பள்ளிக்குழந்தைகளுக்கு 
அவ்வாண்டுத்தேவைக்கான பாடசாலை உபகரணங்கள் வாங்கி கொடுப்பதோடு ஏழைப்பெண்களுக்கு திருமண உதவிகள் செய்யும் என் அன்பின் தம்பி அட்டாளைச்சேனையை சேர்ந்த கட்டாரில் வசிக்கும் முஸம்மில் எனும் நண்பன்,அபுதாபியில் இருக்கும் முஹைதீன் விஞ்ஞானி இலமூரியன் ஐயா, குவைத்திலிருக்கும் மஞ்சுசுபாஷினிஅக்கா,சிவஹரி, பிரான்சிலிருக்கும் றெனிநிமல் இவர்களுடன் என் உயிர் நட்புக்கள், அப்போது நான் வேலை பார்த்த நிறுவனத்தின் டைரக்டரும்,உடன்பணி செய்வோரும், என்அயலில் இருக்கும் சுவிஸ் நட்புக்கள் என அனைவரையும் நன்றியோடு நினைவு கூருகின்றேன்.அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் செலுத்துகின்றேன்.

பாதிப்பு என அறிந்திட்ட அந்த நொடியிலிருந்து பணம் மட்டுமல்ல துணீகளாக, பொருட்களாக, மருந்துகளாக கொண்டு வந்து குவித்தார்கள்.அத்தனையையும் ஒருங்கிணைத்து கார்கோவில் போட்டது என் சொந்த பணத்தில் நிவாரணத்துக்கு என வந்த தொகையில் எதையும்போக்குவரத்து மற்றும் தொலைபேசிதொடர்புகள் சம்பநதமான செலவுக்கு என கணக்கில் காட்டாமல் யாருக்கெல்லாம் உதவினோமோ அவர்களிடம் கடிதங்கள் பெற்று போட்டோவும் எடுத்து உங்கள் பணம் இந்த நபருக்கு கொண்டு சேர்க்கப்ட்டது நன்றி என என் தம்பியும் பெற்றுகொண்டவர்களும்  ஒரு நன்றியுரை காட் அனுப்பி அதையும் உதவியவர்களிடமே சேர்ப்பித்தேன்.

மிகக்கடினமான பணி தான். அனைவருக்கும் அனைத்தினையும் என்னால் தனித்து செய்ய இயலாததால் எங்கே தேவைகள் உண்டோ அத்தேவை குறித்து யாரால் உதவ முடியும் என விசாரித்து உதவி செய்பவருக்கும் உதவியை பெறுபவருக்கும் பாலமாக இருப்பதில் மனம் நிறைகின்றது.

தொற்று நோய் அபாயம்! தற்பாதுகாப்பும் முன் எச்சரிக்கையும்!

இயற்கையின் சீற்றம் அதன்  கோபத்தினை காட்டி சென்று விட்டது. அதன் பாதிப்புக்களோ நம் முன் மிக நீண்டதாய்   இருக்கின்றது.

இதுவரை அல்ல! இனிமேல் தான்  பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டிய நிலையில்  மனம் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களாய்  மிகக்கடினமான தொரு சூழலை நாம் எதிர் கொள்ள போகின்றோம்.

மிக முக்கியமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் கழிவு நீர், இறந்த மிருகங்கள், மற்றும்  அழுகிய பொருட்கள் என அனைத்தும் கலந்து விட்டதனால் நோய் தொற்று அபாயம் அதிகமாக இருக்கின்றது.

குடி நீர் குழாய்களில் நீர் வரத்து இருந்தாலும் அவைகளும் உடைந்து சேதமடைந்து உள்ளதால் குடிக்கும் நீரிலும் தொற்று  நோய் அபாயம் அதிகமாகின்றது என்பதனால்  அந்த நீரை குடிப்பதை தவிருங்கள். அப்படியும் வழி இல்லை எனில் மழை நீரையே சேமித்து  நீரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி  குடியுங்கள்.

வெள்ளம் வடிய ஆரம்பித்ததும் அழுகிய குப்பைகள் மிருகங்களின் உடல்களஅனைத்தினையும்  எரித்து சாம்பலாக்குங்கள். எங்கோ எவர் வீட்டின் முன்னோ தானே என இருக்காமல் அது உங்களையும் பாதிக்கும் என்பதால் எப்படியேனும்  அவைகளை அப்புறப்படுத்த முயற்சியேனும் செய்யுங்கள்.

உங்கள் பாதிப்பு அதிகம் என்பதையும் வார்த்தைகளால் ஆறுதல், ஆலோசனை சொல்லி தீர்வு கிடைக்காது என்பதையும்  நானும் அறிவேன். எனினும்  மழை  வரும் வெள்ளம் வரும் என  முன்கூட்டியே தெரிந்தும் ஆயத்தமின்றி அசட்டையாய் இருந்தது போல் இனியும் இருக்காதீர்கள் உறவுகளே!

நிதர்சனம் இதுவென புரிந்து  உங்கள் சூழலில் கிருமி நாசினிகளை தெளித்தல், கொசு ஒழிக்கும் புகை தெளித்தல், திறந்திருக்கும் நீர் தேக்கங்கள் மட்டும் அல்ல உங்கள் குடி நீர் தொட்டிகளிலும் குளோரின் தெளித்தல் என அவசர கால முறையில் செயல் படுங்கள்.

வசதியும் வாய்ப்பும் இருப்பின் உங்கள் பகுதிக்கு மருத்துவ குழுக்களை வரச்செய்து மருத்துவ முகாம்களை நடாத்தி தர வேண்டுங்கள்.மன
நிலையில் பாதிக்கப்ட்டிருப்போரை இன்ம் கண்டு ஆறுதலாய் இருங்கள்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் மட்டும் அல்ல வெள்ள நிவாரன உதவியில் ஈடுபடும் அனைவருமே தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். தொற்று நோய்கள் பரவும் அபாயத்தில் இருப்பதனால் டெட்டனஸ் தடுப்பு ஊசி போட முடிந்தவர்கள் முன் கூட்டியே போட்டு தற்பாதுகாத்து கொள்ளுங்கள்.

நிலவேம்பு கசாயம் குடிப்பதும் கூட நல்ல தற்பாதுகாப்பு முன்னேற்பாடு தான். 
பொதுமக்கள் தாங்களாகவே அரசு மருத்துவமனைகளை அணுகி நில வேம்பு வாங்கி குடித்து  பயன் பெறுங்கள். 

 நீரில் சேவை செய்ய இறங்கும் தன்னார்வலர்களே நீங்கள் மிக முக்கியமாக இவைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

டெட்டனஸ் ஊசி போட முடிந்தவர்கள் முன் கூட்டியே போட்டு தற்பாதுகாத்து கொள்ளுங்கள்.திறந்தநிலையில்  காயங்கள் இருந்தால் கவனமாக கையாளுங்கள், அசட்டையாய் இருக்காதீர்கள். தோல் நோய் பரவும் வாய்ப்பும் கிருமித்தொற்றுக்களால் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு. நீரழிவு நோயாளிகள் தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். கிருமி நாசினிகளை கைவசம்  தயாராக வைத்திருங்கள்.

வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட நோயாளர்களை தூக்கும் போது  கவனமாக கையாளுங்கள். நீங்கள் மருத்துவம் கற்றவர்கள் இல்லை என்பதை நினைவில் வைத்திருங்கள்” பேரிடர் பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்பதையும் மறக்காதிருங்கள்  உங்கள் ஆர்வ வேகம் உங்களுக்கு ஆபத்தாகாத படி
 பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொடர்ந்து  செய்ய வேண்டும் எனில் முதலில் நீங்கள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்!