06 டிசம்பர் 2015

தொற்று நோய் அபாயம்! தற்பாதுகாப்பும் முன் எச்சரிக்கையும்!

இயற்கையின் சீற்றம் அதன்  கோபத்தினை காட்டி சென்று விட்டது. அதன் பாதிப்புக்களோ நம் முன் மிக நீண்டதாய்   இருக்கின்றது.

இதுவரை அல்ல! இனிமேல் தான்  பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டிய நிலையில்  மனம் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களாய்  மிகக்கடினமான தொரு சூழலை நாம் எதிர் கொள்ள போகின்றோம்.

மிக முக்கியமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் கழிவு நீர், இறந்த மிருகங்கள், மற்றும்  அழுகிய பொருட்கள் என அனைத்தும் கலந்து விட்டதனால் நோய் தொற்று அபாயம் அதிகமாக இருக்கின்றது.

குடி நீர் குழாய்களில் நீர் வரத்து இருந்தாலும் அவைகளும் உடைந்து சேதமடைந்து உள்ளதால் குடிக்கும் நீரிலும் தொற்று  நோய் அபாயம் அதிகமாகின்றது என்பதனால்  அந்த நீரை குடிப்பதை தவிருங்கள். அப்படியும் வழி இல்லை எனில் மழை நீரையே சேமித்து  நீரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி  குடியுங்கள்.

வெள்ளம் வடிய ஆரம்பித்ததும் அழுகிய குப்பைகள் மிருகங்களின் உடல்களஅனைத்தினையும்  எரித்து சாம்பலாக்குங்கள். எங்கோ எவர் வீட்டின் முன்னோ தானே என இருக்காமல் அது உங்களையும் பாதிக்கும் என்பதால் எப்படியேனும்  அவைகளை அப்புறப்படுத்த முயற்சியேனும் செய்யுங்கள்.

உங்கள் பாதிப்பு அதிகம் என்பதையும் வார்த்தைகளால் ஆறுதல், ஆலோசனை சொல்லி தீர்வு கிடைக்காது என்பதையும்  நானும் அறிவேன். எனினும்  மழை  வரும் வெள்ளம் வரும் என  முன்கூட்டியே தெரிந்தும் ஆயத்தமின்றி அசட்டையாய் இருந்தது போல் இனியும் இருக்காதீர்கள் உறவுகளே!

நிதர்சனம் இதுவென புரிந்து  உங்கள் சூழலில் கிருமி நாசினிகளை தெளித்தல், கொசு ஒழிக்கும் புகை தெளித்தல், திறந்திருக்கும் நீர் தேக்கங்கள் மட்டும் அல்ல உங்கள் குடி நீர் தொட்டிகளிலும் குளோரின் தெளித்தல் என அவசர கால முறையில் செயல் படுங்கள்.

வசதியும் வாய்ப்பும் இருப்பின் உங்கள் பகுதிக்கு மருத்துவ குழுக்களை வரச்செய்து மருத்துவ முகாம்களை நடாத்தி தர வேண்டுங்கள்.மன
நிலையில் பாதிக்கப்ட்டிருப்போரை இன்ம் கண்டு ஆறுதலாய் இருங்கள்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் மட்டும் அல்ல வெள்ள நிவாரன உதவியில் ஈடுபடும் அனைவருமே தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். தொற்று நோய்கள் பரவும் அபாயத்தில் இருப்பதனால் டெட்டனஸ் தடுப்பு ஊசி போட முடிந்தவர்கள் முன் கூட்டியே போட்டு தற்பாதுகாத்து கொள்ளுங்கள்.

நிலவேம்பு கசாயம் குடிப்பதும் கூட நல்ல தற்பாதுகாப்பு முன்னேற்பாடு தான். 
பொதுமக்கள் தாங்களாகவே அரசு மருத்துவமனைகளை அணுகி நில வேம்பு வாங்கி குடித்து  பயன் பெறுங்கள். 

 நீரில் சேவை செய்ய இறங்கும் தன்னார்வலர்களே நீங்கள் மிக முக்கியமாக இவைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

டெட்டனஸ் ஊசி போட முடிந்தவர்கள் முன் கூட்டியே போட்டு தற்பாதுகாத்து கொள்ளுங்கள்.திறந்தநிலையில்  காயங்கள் இருந்தால் கவனமாக கையாளுங்கள், அசட்டையாய் இருக்காதீர்கள். தோல் நோய் பரவும் வாய்ப்பும் கிருமித்தொற்றுக்களால் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு. நீரழிவு நோயாளிகள் தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். கிருமி நாசினிகளை கைவசம்  தயாராக வைத்திருங்கள்.

வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட நோயாளர்களை தூக்கும் போது  கவனமாக கையாளுங்கள். நீங்கள் மருத்துவம் கற்றவர்கள் இல்லை என்பதை நினைவில் வைத்திருங்கள்” பேரிடர் பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்பதையும் மறக்காதிருங்கள்  உங்கள் ஆர்வ வேகம் உங்களுக்கு ஆபத்தாகாத படி
 பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொடர்ந்து  செய்ய வேண்டும் எனில் முதலில் நீங்கள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்!



30 நவம்பர் 2015

விடை தருவார் யாரோ?

 துளித்துளியாய் துளிர்த்திடும் சிந்தை
மொட்டு விரிதே மலர்ந்திடும் மனதில்
கிடு கிடுவென தோன்றிடும் வார்த்தை
படபடவென்றே எழுதிடத்தோன்றும்!

விடுதலை தேடிய விழிகளில் ஏக்கம்
விரைந்தழிந்து ஒழிந்திடுமோ?
தமதுயிர் மண்ணில் விதைத்தவர் உணர்வு
சடுதியில் கனவாய் அழிந்திடுமோ?

இடிந்தது கோட்டை முடிந்தது வாழ்வென
அனைத்துமே ஒருபிடி சாம்பலாய் மாறிடுமா?
சிலிர்ப்புடன் எழுந்திட்ட இலட்சிய பேரணி
இடை நடுவில் துவண்டு இறந்திடுமோ?

எமதுயிர்ப்பான இளைஞர்கள் உயிரது
மண்ணோடு மண்ணாய் போய் விடுமோ?
ஈழத்தாயவள் என்றொரு சொல்லுக்கு
ஈமக்கிரியைகள் நடந்திடுமோ?

மரணத்தை நேசித்த மாவீரர் விதைத்தவை
வீணாய் மண்ணில் போய் விடுமோ?
விலை மதிப்பில்லா உயிரின் மதிப்பது
வீம்பாய் போரிட்டு அழிந்திடுமோ?

துளித்துளியாய் துளிர்த்திடும் சிந்தை
மொட்டு விரிதே மலர்ந்திடும் மனதில்
கிடு கிடுவென தோன்றிடும் வார்த்தை
படபடவென்றே எழுதிடத்தோன்றும் !

கனவுகள் சிதைந்து காற்றிலே மிதந்து
சடுதியில் மறைந்தே போனாலும்
பனி மலை உருகிடும் வேகம்
பல கவிதைகள் படைத்திடத்தோன்றும்!

பறவைக்கு கூட சொந்தமாய் கூடு
பாரினில் உண்டாம் அறிந்தோம்
ஈழத்தமிழருக்கென்றோ ஆறடி நிலமும்
வாடகை வீடாம் அறிவோம்!

விழிகளில் ஈரம் காய்ந்திடுமுன்னே
விடுதலை உணர்வை தொலைத்தோம்
வழிகளிலெல்லாம் முட்புதரென்றே
விலகியே தூரமாய் நடந்தோம்!

எதிரியின் முன்னே ஏமாளியென்றே
இருப்பிடம் விட்டே அகன்றோம்
அகதியென் பட்டம் கலாசாலை
சென்று கற்றிடாமலே பெற்றோம்!

ஒரு நொடிப்பொழுதில் அனைத்தையும்
இழந்த அவஸ்தை எங்கே புரியும்
அகதியின் துயரதை கூறுவதென்றால்
ஆயிரம் வார்த்தைகள் பிறக்கும்!

துளித்துளியாய் துளிர்த்திடும் சிந்தை
மொட்டு விரிதே மலர்ந்திடும் மனதில்
கிடு கிடுவென தோன்றிடும் வார்த்தை
படபடவென்றே எழுதிடத்தோன்றும்!

25 நவம்பர் 2015

நெஞ்சம் மறப்பதில்லை!

உயிருடலில் இருக்கும் வரை
உணர்விருக்கும்.
உணர்வென்னில் உள்ளவரை
உறவிருக்கும்
உறவில்லையென்றானால்
உணர்வாய் நானில்லை.
உணர்வுடனே  சொல்லிடலாம்
உரிமையாய் கேட்டிடலாம்
உள்ளமது சொன்னபடி
உண்மைதனை மறந்திடலாம்..!

தேவைகள் தேவதைகளாய்
உருப்பெறும் போது
தேடலுடன் நாடுகின்றோம்
பேசாத ஒரு நொடியில்
அசைவற்று போனதென
அன்பு வார்த்தை பல சொல்லி
அச்சமுகம் தோன்றுவதை
நெஞ்சமதில் விதைக்கின்றோம்.
வஞ்சமில்லா அன்புணர்ந்து
விதைப்பதுவே விளைவாகும்.

விளைவதெல்லாம் கனிதரும் தான்
விலைகளில்லா அன்பாயிருந்தால்..!
விலகல் சொல்ல ஆயிரம்
காரணங்கள்  நமக்கிருந்தாலும்..
விளைந்து விட்ட  விதையதிலே
காரணங்கள் வெந்நீராய் தாம் பொழியும்
அறியாது செய்து விட்டோம்
சொல்லித்தப்ப மூவைந்து
வயதும் நமக்கில்லை
பட்ட விதை பட்டதுதான்!

பட்ட மரம்  முளை விடலாம்
பட்டவைகள் மறந்திடுமா?
சொன்ன வார்த்தை தடம்மாறி
தந்த காயம் அழிந்திடுமா?
விதைகளெல்லாம் விளைவதில்லை
என்ற உண்மை புரிந்திடுமா?
இறைவனிடம் சரணடந்தாலும்
வாக்கு தனை மறந்து மனம்
மாறிட்டதை உணர்ந்திடுமா!
இழந்ததென்ன புரிந்திடுமா?


ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க!



23 நவம்பர் 2015

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

பெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்?

அன்றையகாலகட்டத்தில்அதாவதுபாரதியார்வாழ்ந்தகாலகட்டத்தில் பெண்கள்அடக்கியாளப்பட்டார்கள்.அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். வீட்டுக்குள் அடக்கி வைக்கப்பட்டார்கள். உடன்கட்டை ஏற கட்டாயப் படுத்தப்பட்டார்கள், பால்ய விவாகத்துக்குட்படுத்தபட்டார்கள், அப்படிப்பட்ட சூழலில் அவர்களை தட்டியெழுப்ப பாரதியார் பல புரட்சிகர பாடல்களை இயற்றியதோடன்றி அவர் மகள் தங்கம்மா தைரியமான வீரமகளாக வாழவேண்டும் என்றே விரும்பினார்,அதையே தன் மனவெளிப்பாடாக அவர் வெளிப்படுத்தி இருப்பதினை கீழே வரும் பாடல்களை உணர்ந்து, கருத்தோடு படித்து பார்த்தால் புரிந்திடலாம் 

இன்றைய பெண்கள் அவர் விரும்பிய இலக்கினை அடைந்தோமா என தம்மைத்தாமே ஆராய்ந்திடலாம் 

அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு எனும் நாற்குணம் கொண்டு பெண்களை அடக்கி ஆள முன் இந்த நான்கு குணங்கள் குறித்தும் பாரதியாய் சொன்னதென்ன என பார்ப்போமா?

மாதர்க்கு ண்டு சுதந்திரம் என்று
நின் வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல் 
நாதந் தானது நாரதர் வீணையோ? 
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே 
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ? 
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே! 

அறிவு கொண்ட மனித வுயிர்களை 
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்; 
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை 
கொண்டுயர் தேவர்க ளாதற்கே, 
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தீயிலிட்டுப் 
பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் 
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம் 
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்; 
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ! 

நாணமும் அச்சமும் என்று சொல்லியிருக்கிறாரா அல்லது நாணும் அச்சமும் என்று சொல்லியிருக்கிறாரா?இதன் முழுமையான அர்த்தத்தினை நாம் புரிந்திருக்கின்றோமா?

நாணுமா?நாணமா? இவ்வரிகள் மூலம் என்ன சொல்ல வருகின்றார் பாரதியார்?நாணம் எனில்வெட்கம் என இப்பாடல் சொல்கின்றதா? 

நாணம் என்றால் என்னவென குறள் சொல்வதை பார்த்தோமானால்... 

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்

தனக்கான கடமையை செய்யாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

நாணும் என்பது இங்கே மரியாதைக்குரிய பாரட்டத்தக்க விதத்தில் சொல்லப்படாமல் தலைகுனிய வேண்டிய ஒரு சொல்லாக கணிக்கப்படுவதைக்கவனித்தால் நாணும் அதாவது தலைகுனிந்து நிற்கத்தக்க செயலும் அச்சமும் பெண்களுக்கு வேண்டியதல்ல நாய்களுக்குரியதே என பாரதியார் சொன்னதாக கொள்ளலாம்

அப்படியெனில் பெண்களுக்கு வெட்கம் வேண்டியதில்லை என பாரதியார் சொல்கின்றார் என எடுத்து கொள்ளலாமா?

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்; 
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய் தலத்தில் 
மாண்புயர் மக்களைப் பெற்றிடல் சாலவே யரி 
தாவதொர் செய்தியாம்; 

குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்; 
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந் நலத்தைக் 
காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ! 

ஞான நல்லறம் என தன் ஞானத்தினால் தன் வீட்டை நடத்தி தன் பிள்ளைகளை நற்பழக்கவழக்களுடையவர்களாய் கற்பித்து எதிர்கால சந்ததியை திறம்பட உருவாக்கும் நல்ல குடிப்பெண்ணாய் இருப்பவளிடம் நாணமும் இருக்கும்.ஆனாலும் அவள் நாணும் படியாய் இருக்காது!

தெருவுக்கு தெரு மாதர் சங்கங்களை உருவாக்கி நாட்டை மாற்றுகின்றோம் சமூக சேவை செய்கின்றோம் என தம் சொந்த குடும்பத்தினை கவனிக்காது  ஊருக்கும் உலகுக்கும் சேவையாற்றுதல் பெண் சுதந்திரமாகுமா? நம் பிள்ளைகளை காவாலிகளாக விட்டு விட்டு ஊரை திருத்த புறப்படுதல் பெண் சுதந்திரமாகுமா? 

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் 
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி 
மாந்தர் இருந்தநாள் தன்னி லேபொது வான் வழக்கமாம்; 
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர் 
மாத வப்பெரி யோருட னொப்புற்றே 
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை
மாறிடக் கேடு விளைந்ததாம். 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், 
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், 
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் 
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; 

புதுமைபெண்கள் என கூறிக்கொண்டு வீட்டையும் குடும்பத்தினையும் கவனிக்காது  பொய் பேசித்திரிவதெல்லாம் பெண் சுதந்திரமாகுமா? ஆணவமும், செருக்கும்,  யாருக்கும் பயப்படாத தன்மையும் என்றுமே பெண் சுதந்திரமாகாது என எத்தனை அழகாக சொல்கின்றார். 

அப்படி எனில் எது தான் பெண் சுதந்திரம்? 

பெண் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என பாரதியார் சொல்வதை கேளுங்கள்!
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் 
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை 
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் 
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும், 
ஓது பற்பல நூல்வகை கற்கவும், 
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் 
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் 
பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்; 
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை 
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம். 

சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்; 
சவுரி யங்கள் பலபல செய்வராம்; 
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்; 
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்; 
காத்து மானிடர் செய்கை யனைத்தையும் 
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்; 
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்; 

இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ?

பெண் சுதந்திரம் என்றால் என்ன என இதை விடயாராலும்விளக்கிட இயலுமா என எனக்கு தெரியவில்லை. ஆனால் தன் வாழ்க்கையை சரியாக புரிந்து இதன்படி தம்மை தம் அறிவை வளர்த்து கொண்டோராய் இருக்கும் பெண்களை விரல் விட்டே எண்ணி விடலாம்.

கற்றல் என்பதை வெறும் பள்ளிப்படமாகவும்,தம்எதிர்கால
சம்பாத்தியத்துக் குரியதாகவும் மட்டும் நினைத்து கற்போராய் இருக்கின்றோம். உலக அறிவில் இன்னும் இன்னும் வளர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கல்பனாசாவ்லாவையும்,பி.டிஉஷாவையும், சானியாவையும் சாதனைப்பெண்ணாக காட்டும் நாம் நம்மை அததனை உயரத்துக்கு வளர்த்திட முடியாவிட்டாலும் மூட நம்பிக்கைகளில் மூழ்கிடாமல் அனைத்தினையும் அறிவியல் நோக்கோடு ஆராய்ந்தறிந்து  நம் அறியாமையை நீக்கி அறிவில்சிறந்து நம்மையும் நம் சந்ததியையும் உயர்த்திட முடியாதது ஏன்?

இணையத்திலும் பல பெண்கள் எழுதுகின்றோம், அதிலும் பல கட்டுப்பாடுகள் வைத்து சமையலும், அழகுக்கலையும், அரட்டைக்கும், கவிதைகள் எழுதவும் தான் பெண்களால் முடியும் பெண் என்றால் இப்படித்தான் எனும் வரையைறையை வகுத்து அதனுள் நடக்கும் படி நம்மை நாம் ஏன் அடிமைப்படுத்த வேண்டும்.  நமக்கான் உலகம் விசாலமாய் நம் அறிவை வளர்ப்பதற்கு ஏதுவாய்  இருக்கும் போது   நம்மையே நாம் ஏன் ஒரு பொந்தினுள் அடக்கிட வேண்டும். 

இங்கே நான் பல பெண்களைபார்க்கின்றேன்,அழகாகஇருப்பார்கள், காலேஜ் முடித்து பட்டம் பெற்றிருப்பார்கள், தம்மை அழகு படுத்திட காட்டும் ஆர்வத்தினை  அறிவை வளர்த்திட காட்டுவதில்லை. கிணற்று தவளைகளாக வேலைக்கு போனாலும் தம் வேலை சார் துறை தவிர்த்து வேறேதும் அறியாதோராக இருக்கின்றார்கள். கணவரை சார்ந்தே வாழ்வதால் கணவருக்கு தீடிர் உடல் நலமின்மை  அல்லது இழப்புகள் ஏற்படும் போது கையறு நிலைக்கு தள்ளப்பட்டு தவிர்த்து போகின்றார்கள். தம் அன்றாட வீட்டு நிர்வாகம்,வரவு செலவு  குறித்து கூட அறியாதோராய் இருக்கின்றார்கள். 

 நான் அனைவரையும் சொல்லவில்லை.  பெரும்பாலானோர் இப்படி இருப்பதை காணும் போது  வருந்துகின்றேன் உலகம் இத்தனை மாறினால் என்ன?சுதந்திரம் எஞும் போர்வையில் தடம் மாறாமல் பெண்ணானவள் வாழ்க்கையில் செல்ல வேண்டிய தூரம் அதிகம் தான். 

சிந்திப்போம் செயல் படுவோம்!

உங்கள் குட்டுக்களையும் தட்டுக்களையும் தயங்காது பதிவாக்குங்கள் நட்பூக்களே!