14 நவம்பர் 2015

சொல்தலும் செய்தலும்.... செந்தணல் போன்றதே!

ஆம் ஒரே வார்த்தையாய் ... பேசாதே! பாராதே! செய்யாதே! இப்படி தே தே என தேவைக்கும் மேலேசொல்லும் போது சொல்லும் நமக்கு  நம் சொல் தேனாய் தான் இனிக்கின்றது. அதை நாமே செயல் படுத்தி பார்க்கும் போது தான் அதன் கஷ்ட நஷ்டம் புரிகின்றது...!

ஆனாலும்??

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி.என்பர்.அது எனக்கு இச்சூழலில் நன்கு பொருந்தும் எங்கேயோ எப்படியோ இருந்த நான் இந்தபக்கம் வந்து .. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல திக்குதெரியாமல்அலையும் படி ஆனதே என முதல் நாள் நொந்தே போனேன்! வலையும் வேண்டாம், மீனும் வேண்டாம் ஆளை விடுங்கப்பா என சம்ஸிடம் சொல்லியும் ஆனது! 

ஆனாலும் குமார்  விடுவதாயில்லையே! தளம் திறந்ததோடு தன் வேலை முடிந்தது என செல்லாமல் என்னை ஊக்கப்படுத்தி அதை போடுங்க அக்கா இப்படி எழுதுங்க அக்கா என பதிவும் போட வைத்து... அதுக்கு விளம்பரமும் செய்து... இன்னும் கடவுட்,பேனர் தான் பாக்கி...எனும்படிக்கு  என்னை பதிய வைக்க தன் சிந்தனை சிறகை விரித்து என் மனசெல்லாம் பரந்து பறக்கும் குமார் இருக்க என் மனதில் தோன்றுவதை பதிவதற்கு பயம் ஏன் எனும் தைரியத்தினையும் தந்து விட்டார். 

தம்பியுடையான் சண்டைக்கஞ்சானாம்.. நானும் அஞ்ச மாட்டேன்பா.. அதான் எங்க சேனைப்படை எனக்கு பாதுகாப்பா தினம் தினம்  திட்டி திட்டி, தட்டிக் கொட்டி .. அப்படி செய்யக்கா.. இப்படி செய்யக்கா உன் கூட யாமிருக்க பயமேனக்கா என வழி நடத்துகின்றதே! என் கைவிரலை பிடித்து வழி நடத்தி எழுத வைக்காதது தான் பாக்கி! 

நினைத்து பார்க்கின்றேன்.. இத்தனைக்கும்  நான் என்ன தவம் செய்தேன்? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து வாழ்ந்து... இது வரை முகம் பாராமலே... மனம் உணர்ந்து என்னை உயிர்ப்பிக்கும் இவர்கள் அன்புக்கு நான் என்ன செய்து விட்டேன்?அபிப்ராய பேதங்களும் புரிதலின்மையும்.... உடன் பிறந்தோரையேயே விரோதியாக்கும் இக்காலத்தில் நிஷா அக்கா என அழைத்து அன்னையைபோல் பாசம் காட்டி என்னுள் அடங்கி என்னை அடக்கும் அன்பை கொட்டும் இவர்கள் யார்?

சொல்லத்தானே வேண்டும்!

எங்கள் சேனையில் அன்பு மட்டும் தான் பேசும். மதமும்,இனமும் மொழியும் பேசுவது என்ன.. உரசக்கூடச்செய்யாது. எம் அன்பு புரியாதோருக்கு புதிர் தான். புரிந்தோரோ... எம் ஜோதியில் தாமும் ஒருவராகி என்னுள் உயிர்ப்பர்!

ஆம் உயிர்ப்புத்தான்... மனிதம் மறந்த இப்பூவுலகில் மனிதராய் வாழ நாம் ஒவ்வொரு நொடியும் உயிர்க்க வேண்டி இருக்கின்றதே! எனக்கு மட்டும் விதிவிலக்காகுமா? 

என்னை சுற்றி ஒரு வட்டம் என்னை உயிர்ப்பிக்க.... இரவும் பகலும் இருபத்தி நான்கு மணி நேரமும் பாதுகாப்பாய் இருக்கின்றார்கள் என்பதே என்னை வானுயரும் உயரத்தில் கொண்டு போய் விட்டிருக்கின்றது என சொல்வேன்..! 

நாடோடியாய் புகலிடம் தேடி வந்த நாட்டில். நாலு பேர் பார்த்து ஆச்சரியப்பட நான் ஏதேனும் சாதித்தேன் எனில் அதற்கு முதல் காரணம் நான் கொண்ட இறை நம்பிக்கை எனில் இறையின் வழிகாட்டலாய் என்னை வழி நடத்தியதெல்லாம் என் சுரேஷ் அண்ணா,சுதா அண்ணா,முஸம்மில், சம்ஸ், ஹாசிம்,, குமார், பானு, ஜானி எனும்பெரும்படையணி தரும் உந்து சக்தி தான். இவர்களின் உற்சாகம் தரும் வார்த்தைகள் தான் என்னை இத்தனை நாளும் இயக்கியது என்பேன். 

பூஜ்ஜியமாயிருந்த என்னை... உன்னால் முடியும்மா.. நீ சாதிப்பே என என்னை உயர்த்திய ஒவ்வொருவர் பற்றீயும் அவர்கள் எனக்காக செய்தவை பற்றியும் தான் நான் முதலில் உங்களுடன் பகிரபோகின்றேன்.. 

நானும் பிறந்தேன், வாழ்ந்தேன், மறைந்தேன் என்றில்லாமல் எதையேனும் செய்தேன் என எவரேனும் சொன்னால் அதன் பின்னால் இறைவனின் கருணையோடு.. என் மேல் நான் கொண்ட நம்பிக்கையோடு ,என்னவர்,என் மகன், மகள்  துணை மட்டுமல்ல... என்னை சுற்று பூச்சரமாய் சூழ்ந்து நிற்கும் என் அன்பு பாசமலர்களும் தான் காரணம்..! 

எதையும் சொல்தல் எளிது தான்..அதை செய்தல் செந்தணலை கடப்பது  போலிருந்தாலும்... என் பாதம் படும் இடமெல்லாம் குளுமையாயிருக்க வேண்டுமே என எனக்காக பாடு படும் என் உடன் பிற்வாமல் என்னுடன் பிறப்பாய் ஆனோருக்கு இந்த வலைப்பூவும் பதிவுகளும் சமர்ப்பணம்!

இப்பட்டியலில் இனிமேல் இதை படிக்கும் நீங்களும் சேரலாம்.

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

13 நவம்பர் 2015

முயலாமை வெல்லாது!

முயன்றால் முடியாதது என்றொன்றில்லையென்று 
என்றோ ஒருவர் சொல்லிச்சென்றான். 
சென்றவன் வென்றான்..

வென்றவன் எம் மனதையும் வென்று  

இயலாமையெனும் இருளை கொன்றான். 
கொன்றபின் நிமிர்ந்து நின்றான்.

தூரத்தில் வருவதை துணிவுடன் எதிர்கொண்டால் 

துயரங்கள் கடந்திடும் துன்பங்கள் நீங்கிடும்
துணிந்த பின் மனமே உனக்கென்னெ துயருண்டு!

இல்லாமை சொல்லாமை  தள்ளாமை கல்லாமை 

வல்லமை  தனைக்கொண்டு  விண்ணையும் 
தொடலாமே.. உணர்ந்தபின் உனக்கென தடையிங்கே?

கையில்லை. காலில்லை  காசில்லை 

துணையில்லை என சொல்லி 
துணிவையே இழந்திடுவோரை நீர் கேளீரோ!

கலைந்து போகும் கனவுகள்.


நீயும் நானும் நாமாகும் போது
தீதும் நன்றும் தானாயுணர்வோம்
தாயும் சேயும் நாமானாலும்
காலம் போடும் கோலம் வேறே
காதல் கொண்ட மனமது துள்ளும்
காண்பதுவெல்லாம் அவளென சொல்லும்
உணர்வுகளெல்லாம் அவளாகி போகும்
தேகமோ தவித்து உண்ர்வதை கொல்லும்
சகலமும் நீயென சரணாக செய்தே
கவிதைகள் எல்லாம் சரமாய் பறக்கும்.
காதலும், காமமும் மனமதை வெல்லும்,
சடுதியில் ஒரு நாள் நிதர்சனம் புரியும்.
கானல் நீரா இதுவென புரிபடுமுன்னே
கனவாய் அனைத்தும் கலைந்தே போகும்.
நீயும் நானும் நாமாகி இருப்போம்.

09 நவம்பர் 2015

ஆல்ப்ஸ் மலைத் தென்றலாய் வருகிறேன்.

வணக்கம் நண்பர்களே! 

ஆல்ப்ஸ்மலைத்தென்றல் எனும் வலைப்பூ மூலம் இன்று முதல் உங்களுடன் உறவாட வந்திருக்கும் தென்றலாய் நான்! ஆல்ப்ஸ் அடிவாரத்தில் வளர்ந்ததும்,வளர்வதுமாய்..!

தமிழை கற்றதனால் அல்ல.. என்னை தமிழ் தொட்டதனால் தொட்டும் தொடாமலும் தொடரும் என் தமிழுறவு...!

அகிலனின் குறிஞ்சிப்பாட்டின் நாயகியை போல் கண்டதையும் கற்று பண்டிதனாக முயற்சிக்கும் என்னுள் இருப்பது அணுவளவே! பதினாறு வயதிலிருந்து அன்னிய நாட்டில் அன்னிய மொழி பேசும் நிர்பந்தத்துடன் தமிழை என் மூச்சாக கொண்டதனால் தமிழும் தமிழ் உறவுகளும் என்னுள் உயிர்ப்பை தந்து கொண்டே இருக்கின்றார்கள். 


முத்தமிழ் மன்றமெனும் முத்தில் கற்றவைகளும் பெற்றவைகளும் அனேகமே!

எனக்கேதெரியாமல்என்னுள்இருப்பதைவிளையச்செய்பவர்களில்.சேனைத்தமிழ்உலாநட்புக்கள்...நண்பன்,சம்ஸ்,ஹாசிம்முப்படையணியும்..சிறகை விரிக்கும் சிந்தனைவாசியான மனசு குமாரும் முக்கிய பங்காற்றுகின்றார்கள். 

வலைப்பூ வேண்டும் அக்கா என ஆர்வத்தினை ஏற்படுத்த்தி எனக்கென வலைப்பூவை திறந்து கொடுத்த குமார்... நிஷாக்கா உங்க வலைப்பூ இப்படில்லாம் அழகா இருக்கணும் என சண்டை போட்டு தன் நண்பனுடன் பேசி அழகாய் லோகோ வடிவமைத்த முஸம்மில் .. நண்பனுக்காக அல்லாது இந்த தோழிக்காகவும் தானாய் முன்வந்து அழகான வடிவமைப்பை உருவாக்கிட முயற்சிக்கும் சம்ஸ்.... இன்னும் இன்னும்... கடந்த காலத்தில் என்னுடன் இணைந்தோர்... இருந்தோர். இருப்போர்...இனிவரும்காலத்தில் என்னுடன்பிறப்பாய் ஆக போகின்றவர்கள் 
அனைவருக்கும் நன்றி நன்றி.


நண்பா உனக்குள் நட்பாயிருப்பேன்!

தப்பாயிருந்தால் திட்டித்தீர்ப்பேன்! 
அப்பா உனக்கு துப்பாய் நானிருப்பேன்!
வெண்பா தெரியா பெண்பாவை நானப்பா.!


ஆல்ப்ஸ் தென்றலாய் 
உங்கள் நிஷா