24 செப்டம்பர் 2018

பிரச்சனைகளுக்கு கொலைகளும் தற்கொலைகளும் தான் தீர்வா?

இலங்கையின் வடகிழக்குப்பகுதிகளில் நாள் தோறும் அரங்கேறும் குற்றச்செயல்கள், கொலைகள், தற்கொலைகளுக்கு பின்னனியில் இருக்கும் காரணங்கள் என்ன?
பிரச்சனைகளுக்கு கொலைகளும் தற்கொலைகளும் தான் தீர்வா?
மரணம் என்பது இலகுவாக செய்யக்கூடியதெனும் உணர்வுகள் உருவாக்கப்படுவது ஆரோக்கியமான சூழலை விதைக்கப்போவதில்லை.
பிரச்சினை உருவாகுவதற்கான காரணங்களை கண்டறியாமல் தீர்வுகளை தேட முடியாது.
நீண்டகால யுத்தம்,அதைத்தொடர்ந்த பொருளாராத்தடை,வறுமை என பல காரணங்கள் தங்கள் சுய பிரச்சனைகளுக்கு தீர்வு காணபதிலும், தமக்கான தேவைகளை உணர்வதிலும் ஆண், பெண் இருசாராருக்கும் உளவியல் ரிதியிலாக பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை நடக்கும் சம்பவங்கள் உணர வைக்கின்றன.
பிரச்சனைகளுக்கான தீர்வாக உயிரிழப்புக்கள் தான் என முடிவெடுத்து விடும் படியான மன அழுத்தமானது எமது சமூகத்தில் எதிர்கால வளர்ச்சிக்கு பாரிய பின்னடைவை தரும் ஒன்றாகவே இருக்க போகின்றது.
மனித உயிரானது மதிப்பற்றுப்போயிருக்கின்றது. 
உயிரிழப்புக்களையே அதிகமாக கண்டு வந்த சமூகம் உயிரின் மதிப்பை உணராதிருக்கும் நிலை ஏன்?

கடந்து வந்த கசப்புக்கள் மனதின் ஆழமாய் மறைந்திருக்கும் வெறுப்பின் குரூர மனப்பான்மையை வெளிப்படுகின்றதா?
90% ஆன தற்கொலைகள் பாலியல் பிரச்சினைகளாலயே நடந்துள்ளது. முக்கியமாக பெண்கள் மீதான் பாலியல் வன்முறைச்சம்பவங்கள், கொலைகள், தற்கொலைக்கு தூண்டும் படியாய் அழுத்தத்தை பிரயோகித்தல், சிறுவர் துஷ்பிரயோகம் முதல் சிறுவர் மீதான வன்முறை நாள் தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பது போல் எல்லோரும் தீர்ப்பெழுத புறப்பட்டிருப்பதும்
அவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணமானவர்கள் மீது அரசின் சட்டங்கள் கண்டு கொள்ளாதிருப்பதும். 
குற்றச்செயல்களுக்கு துணைபோகும் அதிகாரிகளின் அசட்டைப்போக்கும் எமது சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையே ஏற்படுத்துகின்றது.

குற்றவாளிகளை இனம் கண்டும் அவர்கள் குற்றங்கள் நிருபிக்கப்படாமல் செல்வாக்குள்ளவர்கள் முன் ஏழைமக்களின் சொல்வாக்குகள் தரமிழந்து போகின்றன.
குற்றமிழைத்தோர் சமூகத்தில் பயமின்றி கட்டாக்காவாலிகளாக உலாவ விடும் செயலானது இன்னும் பலரை குற்றத்துஷ்பிரயோக செயல்களை செய்யும் படி தூண்டுவிப்பதை தினமும் நடந்து கொண்டிருக்கும் குற்றச்செயல்கள் உணர்த்துகின்றன.
குற்றச்செயல்களை தடுத்து நிறுத்தும் படியான ஏக போக அதிகாரங்களை தன் வசம் வைத்திருக்கும் அரசு நிர்வாகம் குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டனை வழங்காமலும் நீதி விசாரணை செய்யாமலும் அசமந்த போக்கை கடைப்பிடிப்பதும்
சட்டங்கள் மீதும், நீதி விசாரணைகள் மீதுமான நம்பிக்கைகளை அகன்று போக வைக்கின்றது.

தமிழ மக்கள் தங்கள் இருப்பை தக்க வைத்து கொள்ள முன் உயிரை பாதுகாக்க மீண்டும் பின்னோக்கும் நிலை உருவாகுமோ?
பாதிக்கப்பட்ட மக்களை உளவியல் ரிதியாக அணுகி உயிரின் மதிப்பை உணர வைத்தலுக்கு குற்றவாளிகளை இனம் கண்டு களை எடுத்தல் அவசியமாகின்றது.
எங்கள் மக்களின் தேவைகள் புரிந்துணர்வுடன் அணுகப்பட்டு, பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், நிம்மதியாக அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவும் அரசு எவ்வகை நடவடிக்கைகளை மேற்கொள்ள போகின்றது?
அரசுக்கு மட்டுமல்ல நமக்கும் கடமை உண்டு. ஒவ்வொரு தனி மனிதருக்கும் கடமை உண்டு.
என்ன செய்யப்போகின்றோம்?
ஒவ்வொரு கொலை,தற்கொலைக்கு பின்னரும் நீதி,நியாயம் கேட்டு புலம்பிக்கவிதை எழுதி, ஆவேசமாக கருத்திட்டு கடந்து செல்லும் படி தொடரும் நிகழ்வுகள் சாதாரணமானதல்ல.
எமது ஸ்திரத்தன்மையையே ஆட்டம் காண வைத்து, மனிதர்கள் மீதான நம்பிக்கையை தகர்த்து போடும் விஷக்கிருமியாய் இப்பிரச்சனை எம் சமுகத்தை ஆட்டிப்படைக்க போகின்றதா?
இதுவும் இன அழிப்பென்றால் அதை தடுக்க நாம் என்ன செய்யப்போகின்றோம்?
எம்மை அழிக்க இனி ஹிடலர்கள் வேண்டாம்.
நம் கை விரல் கொண்டே நம் கண் குருடாக்கப்படும் அவலத்தை எப்படி உணர்த்தப்போகின்றோம்?
ஆல்ப்ஸ் தென்றல் 
நிஷா

1 கருத்து:

  1. கண்டிப்பாக ஒவ்வொரு மனிதர்க்கும் கடமை உண்டு... பொறுப்பும் உண்டு...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!