22 மே 2020

எங்கள் ஊர் தொதல்

எங்கள் ஊர் தொதல் 

தேங்காயை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதில் இலகுவான  வழி முறையில் தொதல் எனும் இனிப்பு உணவுக்கு சிறப்பான இடம் உண்டு. 

• தொதல் எனும்  தேங்காய்ப்பால் அல்வாவுக்கு கிழக்கு மாகாணத்தில் சிறப்பு இடமுண்டு.1990 களிலும் அதுக்கு முன்னும் திருமணம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு, புது மனை குடி புகுதல் என்று எந்த  விஷேசம்  என்றாலும் தொதல் துண்டு இருக்கும்.( இக்கால மாற்றம் குறித்து எனக்கு தெரியவில்லை ) 

இப்போதெல்லாம் சாக்லேட் கேக் என நினைத்தால் போகும் வழில வாங்கிப்பது போல் அந்த நாள்களில் இல்லை. எங்கே பயணம் என்றாலும் ஒரு வாரம் முன் திட்டம்  போட்டு பயணத்துக்கு முதல் நாள் ஊர்ல தொதல் கிண்டும் ஆளுங்களுக்கு சொல்லி வைத்து  தேங்காய் துருவ நாலைந்து திருவிலை அயல் வீடுகளில் இரவல் வாங்கி தேங்காய் திருவி, உடன் அரிசி மா இடித்து என தொதல் கிண்டுவதே பண்டிகை நாள் போல் அமர்க்களப்படும். 

ஊரு விட்டு  சொந்த பந்தம் ஊருக்கு போகும் போது தொதல் பார்சல் தான் சிறப்பான  பரிசாக இருக்கும். ( ஏனைய பலகாரங்கள் போல் லேசில் பழுதாகாது என்பது காரணமாக இருக்கலாம் ) 

கிழக்கு மாகாணத்தில் மடடக்களப்பில்  எங்கள் ஊர் தொதல் ஸ்பெஷல். அதிலும் எங்க அம்மம்மாவின் தங்கை மகள் இலடசுமி ஆசம்மா  தான்  ஊருக்கே  தொதல் கிண்டுவதில் ஸ்பெஷலிஸ்ட். அவவின் தம்பி ( மாமா பெயர் மறந்து போய் விட்டேன் ) தொதல் கிண்ட உதவிக்கு வருவார். எல்லோரும் ஒண்டுக்குள் ஒன்று என்பதால் எங்க வீட்டு விசேங்களின் உணவு தயாரிப்பில் எப்போதும் ஸ்பெஷல் இருக்கும்.

எல்லா உணவு பதார்த்தமும் போல் தொதலுக்கும் ஊர்தண்ணீர், பதப்படுத்தும் விதம் ஆள், கைப்பக்குவம் என பல நுணுக்கம் இருக்கு.

வீட்டு  முன் பக்க வாசல் அல்லது பின்பக்கம் தான் இதற்கென விறகடுப்பு  இருக்கும். தொடர்ந்து மூணு நாலு மணி நேரம்  நிண்டு நெருப்பெரிய பெரிய துண்டு விறகு சொல்லி வாங்கி இருப்பாங்க.நல்லா காய்ந்த தென்னம்பாளை, பனை மட்டை தேடி குவித்து  வைத்து விடுவார் அம்மா. ஓரிடம் குவிச்சு வைச்சிருப்பதால்  அதுக்குள்ளால் தேளும் பூச்சியும் வெளி வரும் என்றால் பாருங்கோ. ரிஸ்க் எடுத்து தான் பலகாரம் சாப்பிடுவோம்🤣

தொதல் கிண்டுவதும் ஒரு கலை...! 

இரண்டு பக்கமும் புடி இருக்கும் பெரிய இரும்பு தாச்சி சட்டி ( வாணலி)  வைத்து அதற்கென இருக்கும்  உழவாரம்  எனும் பெரிய இரும்பு கரண்டியால் கிண்டுவார்கள். அம்மம்மாவிடம் இதுக்கென பெரிய இரும்பு தாச்சி, இரண்டு மூணு இரும்பு உழவாரம் இருந்திச்சி...! 

பச்சை அரிசியை ஊறவைத்து உரலில் போட்டு இடித்து மாவாக்கி சல்லடையில் அரித்து  கட்டித்தேங்காப்பால் எடுத்து சர்க்கரை சேர்த்த மாவுடன் கரைத்து விறகடுப்பில் இறுகி வரும் வரை
கட்டியாகாமல் தொடர்ந்து ஆள் மாறி ஆள் கிண்டனும். 

நெருப்பும் தளதளவென எரியும். நெருப்பை  அணையாமல் கவனிக்க ஒராள் நிற்கும். நெருப்பின் வேகத்துக்கு தொதல் எரியாமல், கருகாமல்,  அடிபிடிக்காமல் கிண்டனும்.
( தேங்காப்பாலும், சர்க்கரையும் சட்னு அடிப்பிடிக்கும் தெரியுமோ? ) வெக்கையில் நிண்டு கிண்டனும் என்பதால் மாலை ஐந்து மணிக்கு பின் தான் வேலை ஆரம்பிப்பார்கள் லைட். இல்லாத காலத்தில் பெற்றோல் மாக்ஸ் விளக்கு, சிமிலி லம்போடு. நம்ம சந்திரனும்  வெளிச்சம் தருவார். 

மணித்தியாலக்கணக்கில் கிண்டி.. கடைசி ஒரு மணி நேரம் ரெண்டு மூன்று பேர் நிண்டு கிண்டி கொண்டிருப்பார்கள். மாவிலிருந்து எண்ணெய்  பிரிந்து உருகி வரும்.  எண்ணெயை வடித்து எடுத்து  விட்டு நெருப்பை குறைத்து தணலில் வீட்டு கொண்டே கிண்டுவார்கள்.

ரெண்டு மூணு போத்தல் எண்ணெயும் வரும்., எண்ணெய் பிரிந்து மாக்கலவை இறுகி சுருண்டு உழவார இரும்பு கரண்டியில் இறுக்கி பிடிக்க ஆரம்பிக்கும் பதத்தில் வறுத்து வைத்திருக்கும் பயறு தூவி வேகமாக கிளறி கொண்டே இருப்பார்கள்.பயறு அவிய விடமாடடார்கள். தொதல் சாப்பிடும் போது பயறு கடி படணும்.  

🔹 பதம் அல்வா போல்  கொழுக் மளுக் என்று இருக்க கூடாது, 
🔹 செங்கல் போல் இறுக்கவும் கூடாது
🔹 கையால் பிய்த்து எடுக்க கூடாது   

🔶 பதமாக இறுகி வந்ததும் இறக்கி தட்டில் கொட்டி ஆற வைத்து  
துண்டு போட்டு சுத்தமான துணியில் கட்டி வைத்தால்  அதிலிருக்கும் மீதமான எண்ணெயும் துணிக்கு போய் விடும். 

எங்க வீட்டில் தொதல் கிண்டும் போது

அந்த சட்டியை துடைச்சு வழிச்சி சாப்பிட நான் நீ என போட்டு போடுவோம். அடிப்பகுதி நல்லா  தேங்காய் எண்ணெயில் உருகி பதமா சூப்பர் சுவையாக இருக்கும். செக்கு  எண்ணெய் என்று சொல்வார்களே..அப்படி ஒரு ஸ்பெஷல் சுவை கிடைக்கும் .

இன்றும்  இலங்கைக்கு யார் போனாலும் மறக்காமல்  கொண்டு வரும்  உணவில்
தொதலுக்கு முதலிடம் உண்டு.  ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாய்  பதம் வந்தாலும் எங்களூர் தொதலுக்கு ஈடு இல்லையாக்கும்.

அப்புறம் முக்கியமான  விடயம் தொதல் கிண்டும் போது  நல்ல தாட்டியான ஆண்கள் தான்  கிண்டுவார்கள். அன்னிக்கு இரவுக்கு கை கால் உளைவு நிச்சயம் இருக்கும். அதுக்கு ஆளுக்கு காப்போத்தல் சாராயம்  வாங்கி கொடுக்கணும்.

நான் அறிந்து விருந்து விஷேஷம் என்றால் பெண்களுக்கு சமமா வீட்டு ஆண்களும் இணைந்து உதவி செய்து தான் பார்த்திருக்கின்றேன். 

அப்புறம் எப்படி அம்மா என்றால் சமைக்கணும்? 
அப்பா வேலைக்கு போகணும் tv பார்க்கணும் எனும் கோளாறு உருவானது? 

நாங்கள் ஒரு வீட்டுக்கு போகும் போது அவங்களுக்கு அன்பும் ஆசையும் அக்கறையுமாக நேரம் செலவு செய்து  பக்குவமாக தயார் செய்து கொண்டு போகும் பொருளுக்கும் கடையில் காசை அள்ளி கொடுத்து வாங்கி ஏனோ தானோ என கொடுக்கும் பரிசுக்குமிடையில் ஏணி வைத்தாலும் எடடாத பாசம் இருக்கும் 

சிலதுக்கு பணம் பெறுமதி கணக்கிட முடியாது அல்லவா?


 தொதல் கிண்டும் தாச்சி இதை போல் இதை விட மூன்று மடங்கு பெரிய அளவில் இருக்கும்


                                          இப்படி தான் நெருப்பும் தளதளவென எரியும்


அரிசியை மாவாக்கும் உரலும் உலக்கையும்

தேங்காய் திருவும் துருவிலை

                                                        இது புல் வெட்டும் உழவாரம் 😂
தொதல் கிண்டும் உழவாரம் இப்படி தான் ஆனால்  முன் பக்கம் சுத்தி சுழற்றி
கிண்டுவதுக்கு ஏற்றபடி சின்னதா  தாச்சி சட்டிக்கு மேல் வரை வருவது போல் இரும்பு தகடு பொருத்தி அதுக்கு மேல் கைப்புடி ஒரு ஆள் அளவில் இருக்கும்

இணையத்தில் இருந்து கிடைத்த படங்களிலும் விளக்கம் எழுதி இருக்கின்றேன்.


Nisha 
22.05.2020





08 மே 2020

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 10

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 10

தென்னை வளம் கொண்ட  இலங்கை,இந்தியா போன்ற
பிரதேசங்களில் வாழும் மக்கள்

தென்னையை மூலதனமாக்கி கொள்வதோடு சிறு வீட்டு தோட்டம், ஆடு, மாடு,கோழி வளர்ப்பிலும் கவனம் செலுத்தலாம்

தென்னை அடி முதல் நுனி வரை ஒரு பிள்ளை போல் நூறு ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து பயன் தரக்கூடியது.

„ உன்னை பெத்ததுக்கு நாலு தென்னம்பிள்ளை நட்டிருந்தாலும் எனக்கு கடைசி காலத்தில் கஞ்சி ஊத்தி இருக்கும்“  என பொறுப்பில்லாமல் திரியும் பிள்ளையை பார்த்து பெற்றோர் சொல்லும் முது மொழி.

அன்றாட உணவு தயாரிப்பில் முக்கிய இடம் தேங்காய்க்கு உண்டு என்பதனால்
விலை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். அதிக விளைச்சல் அல்லது குறைந்த விளைச்சல் இரண்டிலுமே நஷ்டம் அடைவது அடிக்கடி நடப்பது தான்.

உற்பத்தியாளனும், நுகர்வோரும் தீர்வு இல்லை என தெரிந்தும் அரசின் நிர்வாகத்தை மாறி மாறி குறை சொல்வதை விட  அதிகமாக தேங்காய் உற்பத்தியாகி விலை குறையும் போது இரண்டு மூன்று மாத தேவைக்கு தேவையான தேங்காயை வாங்கி கோதுடைத்து மேல் தோல் தோல் சீவி அல்லது சீவாமல் துண்டுகளாக்கி  காற்று போகாமல் வாக்கும் செய்து  பிரிஷேர் இல் போட்டு விடுங்கள்

♦️ தேவைக்கு சில மணி நேரம் முன் பிரிஷெர்இலிருந்து எடுத்து வெளியே வைத்து  இளகியதும் கிரைண்டரில் போட்டு வெந்நீர் விடடு அடித்து வடித்து எடுத்தால் தேங்காய் பால் தயார்.

♦️அல்லது தேங்காய் துருவியில்  துருவி டப்பாவில் அல்லது வாக்கும் bag ல் போட்டு காற்று போகாமல் பாக்கெட் செய்து பிரிஸ்சர் செய்யலாம். தேங்காய் சம்பலிலிருந்து குரக்கன் மா அவித்து புட்டுக்கு பிரட்டுவது வரை இந்த தேங்காய்ப்பூவுக்கு பவர் அதிகம்

♦️ தேங்காய் துருவி நல்ல சூரிய வெயிலில் காய வைத்து உலர்த்தி டப்பாவில் போட்டால் சுண்டல், புட்டு, முதல் லட்டு திருபோஷா மா தேங்காய் சீனி  வறுத்து தின்பது வரை உதவும்.

விளைச்சல் அதிகமாகி விரயம் ஆகாமல் உற்பத்தியாளனும் நஷ்டம் அடையாமல்,நுகர்வோரும் இலாபம் பெறும் சிறந்த வழி இது என்பது என் அனுபவம்தே ங்காய்.

தேங்காய்
           🔹 இளநீர்
           🔹 தேங்காய்
           🔹 முற்றிய தேங்காய்
           🔹 தேங்காய் பூ வற்றல்
           🔹 தேங்காய் பூ இனிப்புகள்
           🔹 தேங்காய் துருவி பிரிஸர்
           🔹 தேங்காய் எண்ணெய்
           🔹 புண்ணாக்கு
           🔹 தேங்காய் பால்
           🔹 தேங்காய் பால் பவுடர்
           🔹 நீரா பானம் / கள்
           🔹 தென்னை நார் கயிறு
           🔹 வீட்டுத்தோட்டத்திற்கு எரு
            (கோகோ பீட்)

🇵🇭 பிலிப்பைன்ஸின் விவசாய ஏற்றுமதி துறையில் அதிக வருமானம்





அதன் மதிப்பு கூட்டிய தயாரிப்புகளில்
🔹தேங்காய் எண்ணெய்,
🔹கோகோ நீர்
🔹ஆர்கானிக் தேங்காய்
🔹தேங்காய் சர்க்கரை
🔹தேங்காய் மாவு ஆகியவை அடங்கும்.

தேங்காயை எப்படி மதிப்பு கூட்டி சேமிக்கலாம்?  சந்தைப்படுத்தலாம்?
பெரும் தொழில் வாய்ப்பு ஆலோசனைக்கு வீடியோ லிங்க் பாருங்கள்

🇮🇩 இந்தோனேசியாவில் தேங்காய் 👇
Indonesia : vedio

இதையும் வாசியுங்கள்
👇👇

🔷 கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 8
கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 8

🔷 கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 9
கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 9

ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதால் 8.9.10 பதிவுகளை ஒரே நேரம் பகிர்ந்தேன்

பதிவினை குறித்த உங்கள் கருத்துகளே இத்தொடரை இனியும் தொடர வேண்டுமா எனும் முடிவெடுக்க வைக்கும்

புகைப்படம் : இணையத்தில் இருந்து

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 10

தொடர்வோம்

நன்றி
Nisha

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 9


தற்சார்பு வாழ்க்கை க்கு தயாராகுவோம் என்றதும் பலர் வீட்டுதோடடத்தை மைய படுத்தியே தற்சார்பு வாழ்க்கை வெற்றி பெறும் என புரிந்து கொண்டிருப்பதாக தொடரும் பதிவுகள் மூலம் உணர முடிகின்றது.

இந்த புரிதலின் ஊடாக பின்வரும் காலத்தில் ஏற்பட கூடிய குழப்பங்கள், சோர்வுகளை ஆரம்ப நிலையிலேயே  உணர்த்த சரியான வழி காட்டலை தர வேண்டியது முக்கியம். 

எல்லோரையும்  வீட்டு தோட்டம் எனும் ஒரே திக்கினுள் ஊக்குவிப்பதை விடவும் 
அவரவர் வாழும் பிரதேசங்களில் கிடைக்கும் வளங்கள், பொருட்களை  குறித்து தெளிவாக ஆராய்ந்து பின்பே எந்த முயற்சிக்கும் முதலீடு செய்யனும் என்று நான் நினைக்கின்றேன் 

தற்சார்பு வாழ்க்கைக்கு வீட்டு தோட்டம், மந்தை வளர்ப்பு, மீன்பிடித்தொழில், விவசாயம், கைப்பணி மற்றும் உணவு சேமிப்பு, பாதுகாப்பு அலங்கரிப்பு என பல்வேறு பட்ட  யுக்திகளை அவரவர் திறமைக்கு ஏற்றபடி தேர்வு செய்யலாம். 
எல்லோராலும் எல்லாமும் முடியாது  அல்லவா? 

„ இதை செய் என்பதை விட 
எதை செய்ய உன்னால் முடியுமோ அதை தேர்ந்து எடு“ என்பது சிறப்பு. எதோ ஒன்றை தேர்ந்து எடுக்கணும் என்பது முக்கியம் 😍

🔸 விவசாயம், தோட்டம் எனும் போது அதனுள் பல பயிர் செய்கைகள் 
🔸 மந்தை வளர்ப்பினுள் பல தெரிவுகள் இருக்கின்றன 

குறிப்பிடட பிரதேச மக்களை ஒன்றிணைத்து ஒவ்வொருவரும் அவரவர்க்கு பிடித்த எதோ ஒன்றை உற்பத்தி செய்வதே இலங்கை போன்ற சிறு தேசத்தினுள் சமூகம் சார்ந்த தற்சார்பு வாழ்க்கைக்கு சிறந்த வழி காட்டலாகும்.

ஆர்வம் இல்லாத ஒன்றை செய் என திணிப்பதை விட அவரவர் ஆர்வம் காட்டும் துறையில் ஊக்கம் கொடுத்து  அனைத்து வளங்களையும் நிறைவு செய்யும் போது தான் தற்சார்பு வாழ்க்கைக்கு பயன் கிடைக்கும். இலக்கும் முற்று பெறும் 

உதாரணமாக 
🔶 பெரும் தோட்டம் செய்யும் பிரதேசங்களுக்கு அருகில் வாழ்வோர் வீட்டு தோட்டம் உணவு உற்பத்தி சார்ந்து  வழி காடடபடுவதை விட உணவு பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் நகரங்கள் நோக்கிய  சந்தைப்படுத்தல் முயற்சிகளில் நுழையலாம்.

🔶 அல்லது அவர்கள் பகுதியில் கிடைக்காத பொருளை உற்பத்தி செய்யலாம்.

நிச்சயமாக இன்னொருவர் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் ஒரு தொழிலை ( அவரே தடுமாறுவதை அறிந்தும் ) எத்தனை இலாப நோக்கம் இருந்தாலும் தொடங்க கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். 

„ கீரைக்கடை போட்டாலும் அதுக்கு எதிராக இன்னொரு கடை போட்டு“ தானும் வாழாமல் அடுத்தவரையும் வாழ விடாமல் எங்கள் தமிழ் சமூகம் அழிந்து கொண்டிருக்கின்றது எனும் உண்மையை நாங்களும் புரிந்து கொள்ளணும்.

தற்சார்பு வாழ்வின் வெற்றிக்கு ஒருவரிலொருவர் சார்ந்தும் உதவி செய்தும், ஊக்கம் கொடுத்தும் தானும் தான் சார்ந்த சமூகமும்  முன்னேறணும் எனும் சிந்தனை மாற்றம் தேவை. ( யூதர்கள் வெற்றி இந்த பார்முலாவுக்குள்ளும் இருக்கின்றது ) 

♦️ பழ தோட்டங்கள், காய்கறி கீரை தோட்ட விவசாயிககள் தங்கள் உற்பத்தி பொருட்களை  இருந்த இடத்திலிருந்தே  மொத்த குத்தகைக்கு இடைத்தரகர் மூலம் விற்பதை தவிர்த்து மக்களை தோட்டத்துக்கு நேரடியாக வர வைத்து அவர்களுக்கு தேவையானதை அவர்கள் பறித்து கொள்ளும் படி அல்லது உடனே பறித்து கொடுத்து பணம் பெறலாம்.

இதற்கு தோட்டக்காரர்  உடன் ஒரு உதவியாளர் போதும்.அல்லது குடும்ப உறுப்பினர்களே உதவலாம்.

🔹 இதன் மூலம் விவசாயிக்கு வேலையாள் கூலி மொத்தமாக வெளியே போகாது.

🔹 விவசாயி,நுகர்வோருக்கும் இடையில் மூன்று நான்கு மடங்கு  தரகு கூலி கணிசமாக குறைந்து இருவருமே பயனடைவார்கள்.

தோட்டத்தில் விளைச்சல் அதிகமாக கிடைக்கும் காய்கள், பழங்களை உற்பத்தி செலவுக்கும்  உழைப்புக்கும் கணக்கிட்டு கொஞ்சம் கட்டுப்படியாகும் விலைக்கு பொது மக்களுக்கு விற்றாலும் இருவருக்கும் சந்தைக்கு போய் விற்கும், வாங்கும் விலையை விட  இலாபம் கிடைக்கும்.

உற்பத்தி செய்யும் விவசாயியிடம் ஒரு கிலோ கத்தரிக்காயை 20 ரூபாவுக்கு வாங்கி அதை சந்தையில் மும்மடங்கு விலை வைத்து 60  ரூபாவுக்கு நுகர்வோர் வாங்குவதை விட நேரடியாக தோட்டதுக்கு போய்  40  ரூபாவுக்கு வாங்கும் போது  இருவருக்கும் 20  ரூபாய் இலாபம் கிடைக்குமா இல்லையா? 

செல்வந்த நாடு சுவிஸில் நான் வாழுமிடங்களில் காணும் சிறந்த வழி காட்டல் இது.பெரும் பழ தோட்டங்கள், காய்கறி பண்ணை, பூந்தோட்ட்ங்களில் இந்த நடைமுறை உள்ளது.

தேவை : 
தீயதை நினைப்பதும், தீ என தெரிந்தே அதை தொடுவதையும் தவிர்த்து நல்லதை, நன்மைகளை வெற்றி பெற்றோர்களின் அடிச்சுவடுகளை தொடர்ந்து நாமும் அதே வெற்றி கொடியை தொடரனும் எனும் சிந்தனை மாற்றம்..!😍

Nisha

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 8

தற்சார்பு வாழ்க்கையின் வெற்றி ...! 

🔹 எங்கள் பிரதேசத்தில் விளையும் உற்பத்தி பொருட்களை பயன் படுத்துவது
🔹 எமக்கு தேவையானதை நாமே உருவாக்கி கொள்ளும் போது  தற்சார்பு வாழ்க்கைக்கான தேவைகள் நிறைவேறும்!

✖️ வெளியிலிருந்து வரும் இறக்குமதி பொருட்களை குறைத்து அல்லது தவிர்த்து கொள்ளும் போது நாங்கள் தற்சார்பு வாழ்க்கைக்குரிய இலக்கை நோக்கி நகர்த்த படுவோம்! 

எங்கள் அத்தியாவசிய தேவைகளாக மாறி விடட மீன்டின், மைசூர்ப்பருப்பு, கோதுமை, உலர் பால் மா ரின்களை தவிர்க்க கூடியவற்றுக்கு  உதாரணமாக சொல்லலாம். 




▪️ பருப்பை உற்பத்தி செய்யும் இந்தியா,கனடா, துருக்கி மக்கள் உண்பதை விட இலங்கையர் பருப்பில்லாத விருந்தில்லை என திணிக்கப்பட்டிருக்கின்றோம். 

▪️ கடலும், நதியும், குளமுமாக சுற்றி வர  நீர் சூழ வாழும் நாங்கள் மீன் ரின்வெளிநாட்டிலிருந்து இறக்குகின்றோம்.

▪️ மந்தை வளர்ப்புக்கு சாதகமான நிலவளங்கள் கொண்ட எங்கள் தேசத்தில்  பசுவும் கன்றுமாக வளர்த்து பிரெஷ் பால் குடித்து வாழ கூடிய வாய்ப்பு பெற்றவர்கள்
சத்தில்லாத இனிப்பு நிறைந்த ஆரோக்கியமற்ற உலர்ந்த பால் மா ரின்களை இறக்குமதி செய்வதோடு அதிக விலை கொடுத்தும் வாங்குகின்றோம்.

▪️எங்கள் நாட்டில் கோதுமை உற்பத்தி இல்லை.ஆனால் பிரட் இல்லாமல் எங்களுக்கு விடியாது.

அவசர அவசியத்துக்கு பயன் படுத்துவதும் அதுவே அத்தியாவசியம் என கொரோனா வைரஸ் lockdown பொருளாதார நெருக்கடி காலத்திலும் இனியும் தொடர முடியுமா? 

இயற்கை  வளம் எங்கள் நாட்டினுள் இருக்க நாட்டுக்குள் உற்பத்தி செய்யாத உணவு பொருளுக்கு அடிமைப்பட்டு எங்கள் விவசாயிகளின் உற்பத்தியை புறம் தள்ள உருவாக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை இனி என்றாலும் உணரணுமா இல்லையா? 

தற்சார்பு வாழ்க்கையில் நாங்கள் முன்னேறணும் என்றால் நாடு முன்னேறணும். நாடு முன்னேறணும் என்றால் நாங்கள் மாறனும். 

அதை தான் ஒளவையார்

• வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்“ 

அதாவது  ஆளும் அரசனின் பணி மக்கள் பசிப்பிணி போக்குவதே! 

ஒரு நாட்டு மன்னனின் பெருமை வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே இருக்கிறது என்றும் உணர்த்துகின்றார்.

விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். விவசாயம் நல்ல முறையில் நிகழ்ந்தால், நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.  நாடும் சுபிக்ஷமாக இருக்கும் என்று ஒரே வார்த்தையாக 'வரப்புயர' என ஒரு சொல்லுக்குள் அடக்குகின்றார்..!

ஒளவையார் சொல்லியும் உணராதவர்களாக நாங்களும்.......? 

ஒளவையார்  சொல்லாமலே  
தானாக  இதை உணர்ந்த நாடுகள் வளங்கள் ஏதும் இல்லாமலேயே முன்னேறியும்  இருக்கின்றன. 

🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 🇨🇭 
நான் வாழும் நாட்டில் மட்டும் அல்ல முழு ஐரோப்பாவுக்குள்ளும் யூன் தொடக்கம் செப்டம்பர் வரை காய்கறி, பழங்கள் மும்மடங்கு விலை எகிறும்.

அது ஏன் என்பது எங்களவர் பலருக்கே தெரியாது!

வின்டரில் ஒரு கிலோ 1 Euro அல்லது 2 Frக்கு மேல் போகாத கத்தரிக்காய் சம்மரில் ஆறு ஏழு  பிராங்க் வரை எகிறும்.

🔶 கோடையில் நாட்டுக்குள் விளையும் உற்பத்தி பொருளுக்கு சந்தை வாய்ப்பை பெருக்கி வெளி நாட்டு உற்பத்தி பொருளை தடை செய்து அல்லது மும்மடங்கு வரி என குறைத்து இறக்கு மதி செய்ய அரசாங்கம் நிர்பந்திக்கும், அதிக வரிக்கு ஏற்ப பொருளை விலையேற்ற கட்டுபடியாகாது என இறக்குமதி குறையும்.

( எம்மவர் சின்ன வெங்காயம் தான் வேண்டும் என கிலோ 15 Fr / 2500 Rs கொடுத்ததும் வாங்குவார்கள்.) இப்போது சின்னவெங்காயமும் சம்மரில்  இங்கேயே உற்பத்தி செய்து விற்கின்றார்கள்.

🔸 பசு,மாடு,ஆடு,கோழி என மந்தை வளர்ப்பில்  ஈடுபடும் பண்ணையாளர்களை ஊக்குவித்து தன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் Swiss அரசு அண்டை நாட்டு எல்லைகள் ஊடாக பால் மற்றும்  பால் சார்ந்த உணவு பொருட்கள், இறைச்சி போன்றவை  நாட்டுக்குள் கொண்டு வர பொருள் விலையை விட நான்கைந்து மடங்கு வரி , தண்டப்பணம் அல்லது அபராத தொகை என பல வழிகளில் கடுமையாக கட்டுப்படுத்துகின்றார்கள்.இதன் மூலம் உள் நாட்டின் உற்பத்தி விரயமாகாமல் விலை போகின்றது.  

எங்கள் நாட்டில் என்ன வளம் இல்லை என்று சொல்லுங்கள்.....!? 

நாம் எதை செய்ய வேண்டும் என்பதை களமும் காலமும் தான் முடிவெடுக்க வேண்டும் என்பதை அரச அதிகாரிகளும் இதை தெளிவாக உணர்ந்து மக்களுக்கு வழி காட்டிட வேண்டும்.மேம் போக்கில் வீட்டு தோட்டம்  என எல்லோருக்கும் விதையும், மானியமும் அறிவிப்பது சிறந்த தெரிவாக இருக்கின்றதா? 

கூறுங்கள்।


அடுத்த பதிவில் தொடர்வேன் 

Nisha 🙏