09 ஜனவரி 2016

பயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு

போவோமா ஊர்க்கோலம்  பூலோகம் எங்கெங்கும்


பயணங்கள் முடிவதில்லை எனும் தலைப்பில்   மகிழ் நிறை -மைதிலி அவர்கள் ஆரம்பித்து வைத்திருக்கும் பதிவைத்தொடர்ந்து  தேன்மதுரத்தமிழ்- கிரேஸ்  பயணத்தினை தொடர  என்னை அழைத்திருக்கின்றார்!

பத்து முத்தான கேள்விகளோடு பத்துக்குள் எம் பதிலைகளையும்  தர கிடைத்த வாய்ப்பைத்தந்தமைக்காக இருவருக்கும் நன்றி!. பத்துக்கேள்விகளுக்கும் விரிவாக பதில் சொன்னால்  தனித்தனி பதிவே ஆகி விடும் எனினும் இயன்ற வரை  என் பயண அனுபவங்களை உங்களோடு பகிர முடிந்ததில் மகிழ்ச்சி.

1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
இலங்கையில்  ஏழு எட்டு வயதில் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ரயிலில் பயணம் சென்றதாய் ஒரு குட்டி நினைவு! ரயிலில் ஏறும் போது என் தங்கை அணிந்திருந்த செருப்பு தண்டவாளத்தில் விழுந்து விட மற்றயதையும் கழட்டி கீழே போடு என நான் சொன்னதும்... ஏன் அப்படி என கேட்டதற்கு நமக்கு அந்த செருப்பு திரும்ப கிடைக்காது எனும் போது ஒத்தையை வைத்து நமக்கும் அதை எடுப்பவருக்கும் பிரயோசனம் இராது  என்பதால் அங்கே ரயில்
நிலையம் கூட்டிக்கொண்டிருந்த  ஏழைஆண் தான்  எடுத்து பயன் பெறுவார் எனும் நிச்சயத்தில்  அவருக்கு பயன் படட்டுமே என சொன்னதாயும்....கூட இருந்த ஆண்டி என்னை பாராட்டியதும்  தெளிவில்லாமல்  கலங்கலாய் வரும் ப்ளாஸ்பேக்காய்..!

ஆனாலும்  என் நினைவில் நிற்பது.. பதினைந்து வயதில் இறுதியில் ஆஸ்திரியாவில்  பெல்கிரேட்டிலிருந்து சுவிஸ்  போர்டர் வரை புறப்பட்ட ரயில் பயணம். எங்களுக்கு முதல்  ஐரோப்பிய ரயில் அனுபவம், ஆறு பேர் அமரும் கூபேயில்  வெள்ளைக்காரர் ஒருவர் புகை பிடிக்கும் போது என் கூட வந்தவர்களும் அவரை பார்த்து புகை பிடிக்க.... டிக்கட் பரிசோதகர்  வருவதை அவதானித்து  அவர்  புகையை அணைத்து விட்டு அமைதலாயிருக்க இவர்கள் தெம்பாய் விரலிடுக்கில் சிகரட்டோடு  டிக்கட்டை நீட்ட ... செக்கர்  புகைத்தல் தடை எனும் குறியிட்டைக்காட்ட  இவர்கள் அவரை காட்ட..... மீதி என்ன பைன் தான்!

 2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
பெரும்பாலான பயணங்கள் மகிழ்ச்சிக்குரியதாய் தான் இருக்கும். மனதில் மகிழ்ச்சி இல்லை எனில் பயணத்தினை தவிர்த்து விடுவேன்!

சுவிஸிலிருந்து ஜேர்மனுக்கும் பிரான்ஸுக்கும்  ஆயிரம் கிலோ மீற்றர்கள் தூர பயணங்கள் பல தடவை பயணித்திருந்தாலும்  நாங்கள் நான்கு பேரும் ஆறு வருடம் முன்னால் எவ்வித திட்டமும் இல்லாமல் எங்கள் காரில் சுவிஸிலிருந்து போர்த்துகல் புறப்பட்டதை மறக்கவே முடியாது. 

சுவிஸ் டூ போர்த்துகல் 
சுவிஸ்,பிரான்ஸ், ஸ்பெயின் , போர்த்துகல் என  நான்கு நாடுகள் 
மொத்தம்  2500 கிலோ மீற்றர்கள்!

அதிகாலை நான்கு மணிக்கு புறப்பட வேண்டும் என திட்டமிட்டு ஐந்தரைக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு மறு நாள் அதிகாலை ஆறரைக்கு  போர்த்துகல்லில் செல்லுமிடம் சென்று சேர்ந்த சாகச பயணம். அத்தனை தூரமும் வண்டி ஓட்டியது என்னவர் என்பது கூடுதல் தகவல். அதிகாலைஐந்தரைக்கு புறப்பட்டு சுவிஸில் பிரேக் பாஸ்ட், பிரான்சில் லஞ்ச், ஸ்பெயினில் டின்னர் என ஒரே நாளில் மூன்று நாடுகள்! 

இடையிடையே குட்டி குட்டி பிரேக் எடுத்து பயணம் செய்து விடிகாலை போர்த்துக்கல் சென்றடைந்தோம். அருமையாய் இருந்தது. மீண்டும் ஒரு தடவை செல்ல வேண்டும் என விருப்பப்படும்  படி மறக்க முடியாத பயணம் அது!

எங்கள் பயணத்திட்டமிடல் ரெம்ப வித்தியாசமானதுப்பா.. இங்கே தான் தங்க வேண்டும் எனும் திட்டமிடல் இருக்காது. வண்டியில்  குட்டி ரைஸ்குக்கர், காஸ் ஸ்டவ், பால் காய்ச்ச ஒரு குட்டி சில்வர் பாத்திரம், பொரியல் செய்ய ஒரு நான்ஸ்டிக் பாத்திரம், குட்டி டப்பாக்களில் உப்பு முதல் தேவையான மசாலாக்கள், வெங்காயம், புளி முதல் சின்னகத்தியும் வெட்டுவதற்கு தயாராக சின்ன பலகையுடன் தரையில் விரிக்க  நம்மூர் பிரம்புப் பாய், ரப்பர் சீட்,போர்வை , வெயில் குடை எல்லாம் தயாராகி விடும். 

கடற்கரை பிரதேசம் எனும் இலக்கை வைத்து புறப்படுவோம். கடற்கரைக்கு 20 கிலோ மீற்றர் தூரமிருக்கும் போதே உள்ளூருக்குள்  நுழைந்து ஹோட்டல்களில் ரூம் இருக்கா என கேட்போம் அனேகமாக கிடைத்து விடும். பிரேக் பாஸ்ட் வித் ரூம்.காலையில் ஆறுதலாக எழும்பி  நல்லா பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு விட்டு,வண்டியில் ஏறினால் கடலோரமாய் வண்டியை பார்க் செய்து விட்டு  நாள் முழுக்க கடல் நீருக்குள் தான். மதிய உணவை சிந்திப்பதில்லை எனினும்  மதியத்துக்கு பின்  மாலையானதும் அங்கே என்ன கிடைக்குதோ அதை வாங்கி சமைக்க முடியும் எனில் குட்டி குக் ஆரம்பிப்பேன்!கடலோர நகர் என்பதால் பிரெஷ் மீன்கள் மலிவாக கிடைக்கும்.  உடனே வாங்கி சுத்தப்படுத்தி  பொரியல், குழம்புன்னு  கலக்கிருவோம். இப்படி சமைத்து சாப்பிடும் போது கிடைக்கும் சுவை எங்கேயும் கிடைக்காது என்பேன். 

காஸ் ஸ்டவ்வில்  பல காய்ச்சி மினரல் வாட்டர் சேர்த்து டீயும் குடித்துக்கொள்வோம். லாங்க் ட்ரைவ் போகும் போது ஹைவேக்களில் பார்க்கிங்கில் நிறுத்தி இந்த மாதிரி டீ  போட்டு குடிக்க  நிரம்ப பிடிக்கும்.

பெரும்பாலும் பயண நேரத்தில் ஹோட்டல்களில் பாஸ்ட் பூட் உணவுகளை தவிர்த்து விடுவோம். ஒரு நாள் பிள்ளைகளின்  விருப்பத்துக்கு கேட்டு அழைத்து சென்றாலும் மகன் பெரும்பாலும் தவிர்த்து விடுவார். காலை உணவு தவிர நாங்களே தயார் செய்து உண்பது தான் எமக்குப்பிடிக்கும். 

3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
ஐன்னலோரமா தலையை சாய்த்துகொண்டே தூங்கிட்டு  பயணம் 
செய்ய பிடிக்கும். இன்னும் கொஞ்சம் இந்த பயணம் நீளாதா என கேட்கவும் வைக்கும். ஹாஹா!

4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை 
உண்மை சொன்னால் பயண நேரம் இசை கேட்க பிடிக்காது!  கூட வருபவர்களுடன் அரட்டையாய் பேசிட்டு வரத்தான் பிடிக்கும்! அல்லது அமைதியாக  என்னை கடந்து போகும் மலைகள், மரங்கள், கட்டடங்கள் என பார்த்து ரசிக்க பிடிக்கும், இசைகளில் ரெம்ப அதிர வைக்காத அமைதியூட்டும் எந்த இசையானாலும்  தனியே இருக்கும் போது மட்டுமே கேட்க பிடிக்கும். ஆட்கள் இருக்குமிடங்களில் சத்தமாய் மியுசிக் போடுவதும் கேட்பதும், தொலைக்காட்சி பார்ப்பதும் எப்பொழுதுமே பிடிக்காது!அவர்களுடன் உரையாடத்தான் பிடிக்கும் 

5.விருப்பமான பயண நேரம்
அதிகாலையும் மாலை நேரமும் விருப்பமான பயண நேரம், நள்ளிரவும் நடுப்பகலும் பயணம் செய்வதை தவிர்த்து விடுவேன்!

6. விருப்பமான பயணத்துணை.
வாழ்க்கையில் முழுமைக்கும் முடிந்த பின்னும்  என் கணவர் மகன் மகள் கொண்ட நான்கு பேரும் சேர்ந்தே இருக்கணும்.. தனித்து நெடுந்தூரம் பயணம் செய்யும் சூழல் வரவே கூடாது! 

7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?
காரில் பயணம் எனில்  எதையும் படிக்க மாட்டேன்! ரயிலில் எனில் தொடர்கதை அல்லாத வார இதழ்கள் எதுவானாலும்  கைப்பையில் சில புத்தகங்கள் வைத்திருப்பேன். நாவல்கள்  வீட்டில் இருக்கும் போது தான் படிப்பதுண்டு. 

8.  விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
அறிமுகமான யாருமில்லாத புதிய இடம், கடற்கரையோடு சூழ்ந்த சூழல். தேடி எந்த முன்னேற்பாடும் இல்லாமல் தீடிரென பயணம் செய்ய பிடிக்கும். 

 9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
அந்த நேரத்தில் எதை விரும்பி கேட்டிருக்கின்றேனோ அப்பாடலை முணுமுணுப்பேன்!பெரும்பாலும்......
ஒவ்வொரு பூக்களுமே சொல்கின்றதே!
நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே!
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா?



விண்ணில் செல்லத்தான் ஒரு சிறகுகள் தருவாயா?
இந்த பாடல் சுவிஸர்லாந்தில் எங்கள் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கின்றது என்பது கூடுதல் தகவல் 

10. கனவுப் பயணம் ஏதாவது ?
செவ்வாய்க்கிரகம் போக முடியல்லன்னாலும் நம்ம பக்கத்திலிருக்கும் மூன்னுக்கு ஒரு வாக் போய் வரணும் என நீண்ட நாள் ஆசை! எப்போது தான் நிறைவேறுமோ?

போவோமா ஊர்க்கோலம் பூலோகம் எங்கெங்கும்! 
பயணத்தில் என்னுடன் தொடர.........

பூவைப்பறிக்க கோடரி எதற்கு எனக்கேட்கும் கில்லர்ஜி!
வசந்த ஊஞ்சலாடும் மனசு குமார்  
காணாமல் போன கனவுகளுக்கு சொந்தக்காரியாம் ராஜி  



அவர்களிடம்  கேட்கவே இல்லை. ஆனால் பதில் சொல்லி விடுவார்கள் என நிச்சயம் நம்புகின்றேன். நம்பிக்கை தானே வாழ்க்கை!  என் நம்பிக்கையை காப்பாத்துங்க மக்களுக்கு மக்களே!

சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?



உலக வரை படத்தில் சுவிஸ்ஸர் லாந்த் 
படம் நன்றி  இணையம் 

பிறப்பால் இந்திய இலங்கை கலப்பிலும் வளர்ப்பால் முழு சுவிஸ் காரியாகவும்  கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக என்னுடைய வாழ்க்கையில் மூன்றில் இரண்டு பகுதியை சுவிஸ்லர்லாந்து தேசத்தில்  கழித்து  சுவிஸ் குடியுரிமையும் பெற்ற என்னிடம் உன் சொந்த நாடு எது என கேட்டால் தயக்கமில்லாமல் சொல்வேன்! என் நாடு சுவிஸ்லர்லாந்தென...!

எனக்குள் அத்தனை தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தந்து புலம்பெயர்ந்தவர்களென ஒதுக்கி வைக்காமல் எங்கள் திறமைக்கும், அறிவுக்கும் இடம் கொடுத்து எம்மை ஊக்கப்படுத்தும் அன்பான, பண்பான மக்களை கொண்ட தேசம் இது. சொந்த நாட்டில் கிடைக்காத சுதந்திரமும், நிமிர்ந்த நேர் கொண்ட பார்வையும், பாரதி சொன்ன புதுமைபெண்ணாய், எதற்கும் அஞ்சாத தைரியமும் இந்த நாடு எனக்கு தந்த அளப்பரிய பரிசில்கள்.

உன்னால் முடியும், உன்னாலும்முடியும், உன்னால் தான் முடியும் என என்னை எனக்குள் இருப்பதை வெளிக்கொணர்ந்து என்னை வானம் தொட வைத்த அன்பான நட்புக்களை கொண்ட நாடு இது.

நிறைகள் போல் குறைகளும் இருந்தாலும்  நிறைவானது வரும் போது குறைவானது மறைந்தே போகும் படியாய்  நாட்டுப்பற்றுக்கொண்ட மக்களை கொண்ட நாடு இது! 

இயல்பிலேயே அன்பில் ஊறிய இம்மக்கள் வந்தாரை வாழவைக்கும் தர்மப்பிரபுக்கள் என்றாலும் மிகையில்லை.புலம்பெயர்ந்து அகதியாய் வரும் ஒருவருக்கு உலகில் எங்குமே கிடைக்காத வசதிகளையும், வாய்ப்பையும், பாதுகாப்பையும் தரும் அருமையான தேசம் இது,

இந்த நாட்டைக்குறித்தும் இதன் சிறப்புக்கள் குறித்தும் எனக்கு தெரிந்த வரை சிறு தொடராய் இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன்!

 நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் உறவுகளே!

இப்பதிவை படிப்பவர்கள் இந்த நாட்டை குறித்து அறியும் ஆர்வத்தோடு படித்து கருத்துக்களை இட்டால் மகிழ்வேன்.

 சுவிஸ்ஸர்லாந்த் 
Switzerland

சுவிட்சர்லாந்து (Switzerland) அல்லது சுவிஸ் கூட்டமைப்பு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

சுவிஸ் நாட்டின் எல்லைகளாக வடக்கே ஜேர்மனி, மேற்கே பிரான்ஸ், தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள்உள்ளன.


                                   சுவிஸர் லாந்தை சுற்றி இருக்கும் தேசங்கள்... 
                                                       படம் நன்றி  இணையம் 
சுவிட்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு .ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.

41,285 சதுர கிமீ பரப்பளவில் தோராயமாக 8,014,000 மக்கள் தொகை (2012) கொண்ட நாடு.1,853,400 மொத்த மக்கள் தொகையில் (23 %) வெளி நாட்டவர்களை கொண்ட நாடு!

சுவிஸ் நாடு 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசு ஆகும்.

கூட்டமைப்பின் அதிகாரத் தலைமையிடமாக பெர்ன் நகரமும் நாட்டின் பொருளாதார மையங்களாக இரண்டு உலகளாவிய நகரங்களான ஜெனீவாவும் சூரிச்சும் திகழ்கின்றன!

ஆட்சி மொழிகளாக ஜேர்மன், பிரெஞ்ச், இத்தாலி, உரோமன் போன்ற மொழிகள் உள்ளன!

சுவிஸ் நாடு அதன் மொழிகளுக்கு ஏற்பவே ஆழைக்கப்படுகின்றது.

Schweiz..ஜேர்மன் 
Suisse.. பிரெஞ்சு
Svizzera.. இத்தாலி 
Svizra.. உரோமன்
Switzerland.. ஆங்கிலம் 

ரோமன் கத்தோலிக்க, புரொடஸ்டான் கிறிஸ்த்தவர்களை அதிகம் கொண்ட நாடு இது!எனினும் மதவிடயத்தில் அவரவருக்காக தனிப்பட்ட சுய நிர்ணய உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடும் இதுவே!

கிறிஸ்தவ நாடென சொன்னாலும் கிறிஸ்தவர்கள் என்பதனால் சட்டங்கள் இளகுவதுமில்லை அன்னிய மதத்தார் என்பதனால் இறுக்குவதும் இல்லை.!

தனி மனித சுதந்திரம் பொது நன்மைக்கும் சட்டத்துக்கும் உறுத்தலாய் ஆகாத வரை மதங்களை மதிக்கும் மக்களை கொண்ட தேசமும் இதுவே!

சுவிஸ்ஸர் லாந்த் என்றால் சட்டென நினைவுக்கு வருவது வங்கியும் கறுப்புப்பணமும்,ஹனிமூன்  ஜோடிகளும் தான்!

அதையும் தாண்டினால் மாட்டின் கழுத்தில் கட்டும் மணி, சாக்லேட், வாட்ச் என   நினைவில் வந்து மறையும்.

தொடர்வேன்!

05 ஜனவரி 2016

கனவது கலைந்தது, நிதர்சனம் புரிந்தது!

படம் நன்றி இணையம் 

வா வா என்ற போது வராதே ஒளிந்து கொண்டாய் 
போய் வா என்ற போதும் திடமாய் பொழிந்தே தீர்த்தாய்
போதும் போதும் என்றோம், பொங்கிப்புலம்பித்தீர்த்தாய் 
வான்மகள் உன் சீற்றம் கண்டு பூமகளே கலங்கி நின்றாள்!

போகும் வழியெல்லாம்  உனதெனும் உரிமையினால் 
மடை திறந்தவளாய் தடைகளை தகர்த்தெறிந்தாய்! 
சென்ற வழிகளிலெல்லாம் தடுமாற்றம் தள்ளாட்டும்,
தடம் புரண்ட தேராட்டமாய சைந்தே தவிக்க வைத்தாய்! 

அகங்களில் கலக்கங்கள் அடைசலாய் நிறைத்திடவே 
ஏளியவர், ஏழைகள்,பணம் கொண்ட செல்வந்தர் 
பேதங்கள் மறைய,பசியெனும் கொடியோன் முன் 
அனைவரும் சமமென உணரச்செய்தாய்!

பாலுக்கும் பருப்புக்கும்  பாலகன் உணவுக்கும் 
பதறித்தவித்தே பல கை ஏந்த வைத்தாய் 
தண்ணீரால் எம்மை தனிமைச்சிறையிலிட்டாய் 
தாகம் தாகம் என்றே  நீருக்காய் தவிக்க வைத்தாய்!
 
சொந்தங்கள், பந்தங்கள் படை சூழ் வாழ்விலே 
கவலை எமக்கில்லை  கடனும் இனியில்லை 
பத்திரமாய் நாமிருக்கின்றோமெனும் பகற்கனவுக்கும் 
இடியாய் இறங்கி வந்தே அடி மேல் அடி அடித்தாய்!

இரத்தத்தில் ஊறிய உறவெனும் பந்தம் 
உள்ளத்தால் உரிமையாய் பதறியே துடித்திட
பிரமைகள்  மறைந்தே உணர்வுகள் எரிந்திட
மன்னிப்பின் மகிமையை மகத்துவமாக்கிட்டாய்!

வெள்ளமாய் வந்தே கசடுகள் களைந்து சென்றாய்! 
வெல்லமாய் இனித்த தீயோரை இனம் காட்டினாய்!
நல்லோர் யாரென்றே நலமாய் புரிய வைத்தாய்!
நாளைய தேவையதை நச்சென உணர்த்தி சென்றாய்!

தன்னலம் கருதாத  தன்னார்வத்தொண்டர்களின் 
எழுச்சிப்படையெடுப்பில் இளையோரை இனம் காட்டினாய்!
அகமதில் இகழ்ந்தவர்கள் மனக்குன்றில் உயர வைத்தே 
நாளைய  தலைவர்களை நயமாய் எடுத்துரைத்தாய்!
 
பணம் பொருள், நகை நட்டு, வீடு வாசல், பாத்திரம் பண்டமெனும்
பகட்டான வாழ்க்கையெல்லாம், பட்டென பறந்தோட
மந்தம் பிடித்தாட்டும் மதமும் மறைந்து போக
மனிதம் தளைத்ததனால் மனங்களை குளிர செய்தாய் !

மதங்களை மறைத்து,மனிதம் ஒளிர்ந்திடவே
மனங்கள் இணைந்ததால் சடுதியில் மாற்றங்கள்
இது தான் நிஜமெனும் உண்மை தனை உணர்த்தி
கனவுகளை கலைத்து,  நிதர்சனம் புரிய வைத்தாய்!

நான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4

 
கிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை  ரெம்ப பிசியாகி விட்டேன்! அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை!

எங்க ஊரில் ஜனவரி ஆறாம் திகதி முடிவதுக்கிடையில் அனைவருக்கும் வாழ்த்துகள் பரிசில்கள் சொல்லி விடலாம் என்பதனால் இதோ உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துகளை சொல்லி விட்டேன். கடந்ததில் நடந்தவை என பல பதிவுகள் படித்தாலும்  நானும் அவ்வாறு ஒரு பதிவு எழுத வேண்டும் என தோன்றும் போது உங்கள் ஜோதியில் ஐக்கியமாகி விடுவேனாம்!

இந்த நிமிடம் பதிவு ஒன்று போடலாம் என மனதில் உணர்வுகள் தூண்டினாலும்  காரமான, உணர்வுகளை எழுச்சிக்குரியதாக்கும் பதிவு போடாமல் இனிய நினைவுகளை மீட்டுப்பார்க்கும்  என் சிறுவயது நினைவுகள் தொடரையே இவ்வருட முதல் பதிவாய் ஆரம்பிக்கலாம் என தோன்றுகின்றது! புதுவருட வாழ்த்தோடு என் பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டு  என்னை உற்சாகப்படுத்தி  ஊக்கம் தரும் அனைத்து அன்புள்ளங்களும் இவ்வருடமும் தொடர்ந்தும் அதே உற்சாகத்தினை தருவீர்கள் எனும் நம்பிக்கையோடு தொடர்கின்றேன்!


எங்கள் வீட்டில் ஐந்து பெண்கள், ஒரு ஆண், அனைவருக்கும் மூத்தவளாய் நான் என்பதால் தங்கை மாருக்கும் தம்பிக்கும் அனைத்து வழியிலும் வழிகாட்டி நான் என சொல்லியே சின்ன வயதிலிருந்து வளர்த்தார்கள். அதனால் அதிகமாய் வெளியில் போகவெல்லாம் விடாமல்  பாடசாலை, டீயூசன் வீடு எனத்தான் என் பொழுதுகள்  போகும். கோயில் செல்லும் போது தங்கையோ தம்பியோ கூட துணையாய் வந்ததாய் நினைவு.

வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவியாய் இருந்தாலும் சின்ன வயதில் மிகவும் பொறுப்புடன் இருந்ததாலும் தானாய் ஏறியதை விட  நானாய் ஏற்ற சுமைகள் அதிகமே...!

அதிருக்க....... சின்ன வயதில் எங்கள் வீட்டு சமையலறைக்கும் கிணற்றடிக்கும் இடையில்  நீண்டதாய் முற்றம்! அது தான் எங்கள் மாலை நேரத்து விளையாட்டு திடல்...!பக்கத்து வீட்டு நண்பர்கள், நண்பிகள் என  ஓரிரு வயது வித்தியாசத்தில் பத்து பதினைந்து பேர் மதிய உணவுக்கு பின் வெயில் சற்று இறங்கியதும் கூடி விடுவோம்.

படம் நன்றி இணையம் 

அதிலும் நாங்கள்   நான்கைந்து தோழியருடன் என் சகோதரிகளையும் இணைத்து எங்கள் வீட்டில் இருந்த லாவுள் மரத்தின் கீழ் கூடுவோம்!

அதே மரத்தில் கயிறு ஊஞ்சல், பலகை ஊஞ்சல் என  ஆளுக்கொரு கிளையில் கட்டி  ஊஞ்சல் ஆடுவதும். மரத்தின் கீழ் உரலை கவிழ்த்தி போட்டு விட்டு மரத்தின் மேலே ஏறி குரங்குகள் போல் தொங்குவதும் தாவுவதும்,இன்னும் மறகக் இயலாத இனிய அனுபவம் தான்.

படம் நன்றி இணையம் 

அந்த லாவுட் மரத்தின் பழம் இனிக்கும் எனில்  பழத்துக்கும் பிஞ்சுக்கும் இடைப்பட்ட பருவம் துவர்ப்பாயும் சுவையாயும் இருக்கும் பால்  ஒட்டும். அந்த பருவத்தில் இருக்கும் காயை  நல்ல புளி மாங்காயோடு  பச்சை மிளகாயும் உப்பும் சேர்த்து உரலில் இட்டு துவையல் போல் இடித்து எடுத்தால்  உப்பும் உறைப்புமாய் அது தான் எங்கள் மாலை நேர டிபன்.
லாவுள் பழம் என நாங்கள் சொல்லும் பழம் இது தான்!

கிணற்றினை ஒட்டி... பரவி விரித்து  கிளைகளோடு வருடம் முழுதும் காயும் பழமுமாய்  அம்மரம்  இருந்ததாகவே என் நினைவு.  எங்கள் பசிக்குசோறாகியதும் அம்மரத்தின் கனிகளே! நீண்ட நெடிய  20 வருடங்களின் பின் 2010 ம் ஆண்டில்  அவ்விடம் சென்று பார்த்த போது மரம் இருந்த இடம் குப்பை மேடாக காட்சி தந்தது மனதுக்கு வேதனையை தரும் ஒன்றாகவே இருக்கின்றது!

அந்த நாட்களில்  மாலை நேர விளையாட்டாக நொண்டியடித்தல், கிட்டிபுள்ளு, ஊஞ்சல் ஆடுதல்,,சிலை போல் நிற்றல், கள்ளன் பொலிஸ் விளையாடுவதும்
மழைக்காலங்களில் வெளியில் சேறும் சக்தியுமாய் இருக்கும் என்பதால் வீட்டின் தாள்வாரத்தில்   அமர்ந்து தாயம் விளையாடுவதும் மறக்க முடியாத நினைவலைகள்.

அக்கா வீட்ட போனேன்
முத்துச்சிப்பி தந்தாள்
கொண்டோடி வந்தேன் 
வழியெல்லாம் பாம்பு
பாம்படிக்கத்தடிக்குப் போனேன் 
தடியெல்லாம் ஊத்தை 
ஊத்தை கழுவ ஆத்துக்கு போனேன் 
ஆறெல்லாம் மீன்
மீ்ன் பிடிக்க வலைக்கு போனேன் 
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்கு போனேன் 
ஊசியெல்லாம் வெள்ளி 
வெள்ளியடி வெள்ளி 
வானத்தில் வெள்ளி 
போயிலைக்காம்பை நுள்ளி
போட்டு வாடி வள்ளி!

விளையாடும் போது வார்த்தை மனனமாக தவறில்லாமல் இம்மாதிரி பாடலை பாடி விட்டால் நாம்  கெட்டிக்காரர் தான்.

மருத்துவரிதியாக மனித உடலில்அக்குப்பிரசர் முறையில் அந்தந்த பாகங்களுக்கான ஆற்றல் தரு புள்ளி அங்காங்கே இருந்தாலும் பொதுவாக  அனைத்து பகுதிகளுக்குமான ஆற்றல் தரும் புள்ளிகள் உள்ளங்கைகளிலும், கால்பாதங்களின் நடுவிலும் அமைத்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன!  அப்புள்ளிகளை கண்டு விரல் நுனிகளையும் உள்ளங்கைகளையும் மெதுவாக அழுத்தி விடும் போது  முழு உடலுக்குமான  ஆற்றல்தரும் உந்து சக்தி கிடைப்பதோடு உடல்,உள,அறிவு ரிதியாக  ஆரோக்கியமும் கிடைக்கின்றது. 

அவ்வகையில் அக்கால நண்டூரி நரியூரு எனும்  பாடலுடன் கூடிய விளையாட்டும் இன்னும் பல பாடல்களும் குழந்தைகளுக்கு உடல், உள், அறிவு ரிதியான வளர்ச்சிக்கு உதவிய ஒன்றென்றால் ஆச்சரியப்படுவீர்கள்!

ஆனாலும் அது தான் நிஜம்!

விளையாட்டை  நன்கு கவனித்து பாருங்கள். சின்ன வயதில்’அழும் குழந்தைகளை சிரிக்க வைக்க அவர்கள் கையை நீட்ட சொல்லி விட்டு  கைவிரல்கள் ஐந்தினையும் விரல் நுனிகளை மெதுவாக தொட்டு ஒவ்வொன்றாக மடக்கி இது அம்மாவுக்கு, இது அப்பாவுக்கு ஏன உறவின் அழைப்பையோ,  அல்லது  இது சோறு , இது பருப்பு, இது பொரியல் என உணவுவகைகளில் பெயரையோ சொல்லி  விரல் நுனிகளை பிடித்து மடித்து விடுவார்கள். அதன் பின் மீண்டும் விரல்களை நிமிர்த்தி உள்ளங்கையில்  நமது முழங்கைகளால் பால் கடைவது போல் ஆடைக்கடை, மோடைக்கடை என சொல்லி கடைந்து விட்டு உடனேயே நடுவிரலிலிருந்து நண்டு ஊருவது போல் நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...அக்குளு கிளு கிளு......விரல்களால் ஊர ஆரம்பித்து  அவர்கள் தோள் பட்டை வரை சென்று அக்குளுக்குள் விட்டு கிளுகிளுப்பு ஊட்டி சிரிக்க செய்வார்கள்.அழும் குழந்தை சிரிக்கும் போது நம் மனமும் மகிழும்.

மனித விரல் நுனியோடு உடலிலிருக்கும் அனைத்து நரம்பின் பாகங்களும் தொடர்பு படுவதனால் விரல் நுனியை தொடுவதனால் முழு உடலுக்குமான ஆரோக்கியமும் பேணப்படுகின்றது எனும் போது குழந்தைகளுக்கு சிறு தொடுகை மூலமான இப்பயிற்சி தாய் சேய் அன்புடன் உடல், உள, ஆரோக்கியத்துக்கும் வித்திட்டது என்றால் அதில் தவறில்லை!

இத்தகையை புள்ளிகளை கண்டு தொடுகை மூலம்குணப்
படுத்தலைத்தான்  முற்காலத்தில் நம்ம்சித்தர்களின் வர்மக்கலை எனும் குணப்படுத்தல் இருந்தது. அதைத்தான் அக்குப்பிரசர் என சீனர்கள்  கொண்டு வந்து  இக்காலத்தில் வியாபாராமாக்கி கொண்டிருக்கின்றார்கள்.

சின்ன சின்ன விளையாட்டுக்களில் கூட எத்தனை அறிவியல் சிந்தனையோடு நம் முன் சென்றவர்கள்   நமக்காக பல அரிய விளையாட்டுக்களை கற்று தந்தார்கள் என நினைக்கும் போது மலைப்புதான் தோன்றும். அவைகளையெல்லாம் விட்டு நாம் விலகி வந்ததனால் நாம் கண்ட நன்மை என்ன?

அத்துடன் இன்னொரு விளையாட்டாய் கைகளை விரித்து உள்ளங்கையில் கிள்ளி எடுத்த படியே 
கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ....
என கேட்கும் போது சொல்லும் பூவை வைத்து விரல்களை மடக்கி  கொண்டு வருவார்கள்.
முருங்கைப்பூ) என சொன்னால் 
முருங்கைப்பூவைத் திண்டவளே
முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
பாதி விளாங்காய் திண்டவளே
பாவட்டங் கையை ம-ட-க்-கு
என ஒவ்வொரு விரலாய் மடக்கி வருவார்கள், முழு விரல்களும் மடங்கி விட்டால் கைகள் இரண்டையும் சேர்த்து குவித்து பாதி விட்டமாய் பிடித்தபடி
பாட்டன் குத்து 
பறையன் குத்து 
பிள்ளையார் குத்து 
பிடித்து பார் குத்து 
என சொல்லி குத்துவார்கள். அப்படி குத்தும் போது பிடித்து பார் குத்து  என வரும் போது கைகளை குவித்து குத்தும் கையை பிடித்து விட்டால்  நாம் எதிராளியின்  இரு கையையும்  சேர்த்து  கும்பிடுவது போல் ஒட்டி பிடித்த படியே  கூப்ப வேண்டும் கள்ளப்பூனை நான் எங்க செல்லத்துக்கு சமைத்து வைத்த சோத்தை களவெடுத்து தின்ன வந்தியா? என் செல்லத்தோட சாக்லெட்டை பறிக்க வந்தியா என கேட்டு கேட்டு  கூப்பியபடி இருக்கும் கரங்களில் வெளிப்பக்கமாக செல்லமாய் அடிக்க வேண்டும். அடிக்கும் அடிபடாதவாறு கைகளை எடுத்து விட்டால் விளையாட்டு முடிந்து விடும்.  கைகளில் அடி பட்டு விட்டால்  அடி தொடரும்.

விளையாடும் போது மிகவும் சுவாரஷ்யமாக இருப்பதால் குழந்தைகள் வாய்விட்டு சிரித்து நம்மையும் சிரிக்க வைப்பார்கள்.

இந்த மாதிரி விளையாட்டுக்கள் விரல்களுடனும் கைகளில் முழுப்பாகத்துடனும் தொடர்பு படுத்தி  தொடுகை உணர்வோடு அக்குப்பிரசர் ஆற்றல் தரும் புள்ளிகளையும் தொட்டு செல்வதால் உடல், உள வளர்ச்சி ஆரோக்கியம் பேணப்படுகின்றது  இம்மாதிரி விளையாட்டுக்களை நமக்கென விட்டு சென்ற முன்னோர்களை நாம் அதன் அருமைபெருமை அறியாமல் அதெல்லாம் பழங்காலம் என கிண்டல் செய்யும் நிலையில் இருக்கின்றோம். 

அன்று உறவின் பெயர்கள், உணவின் பெயர்கள், பூக்கள், பழங்கள், காய்களின் பெயர்கள்,விலங்குகளின் பெயர்கள் எல்லாம்  மனனம் எனும் பெயரில்திணீக்காமல்  குட்டிக்குட்டி பாடல்கள் மூலம் இயல்பாகவே சொல்லிக்கொடுக்கப்பட்டது! இன்று அவையனைத்தையும் மனப்பாடம் எனும் பெயரில் திணிக்கின்றோம். 

சிந்திப்போம்!!!!!!!!!

நான் சின்னவளாய் இருந்தபோது.- 3 பதிவின் தொடர்ச்சியாக
எமது சின்னசிறார்கள் எண்களை இலகுவாக கற்கபாவலர் துரை மூர்த்தி அவர்களின் பாட ல் ஒன்றையும் இங்கே பகிர்கின்றேன்! இம்மாதிரி பாடல்களை  சொல்லி கொடுக்கும் போது நம் வீட்டு குழந்தைகள் எண்களோடு பல புதிய விடயங்களையும் கற்பதை காண முடியும்

ஒன்று - எண்ணின் தொடக்கம் ஒன்று
இரண்டு – விழிகள் நமக்கு இரண்டு
மூன்று – முத்துத் தமிழ் மூன்று
நான்கு – விலங்கின் கால் நான்கு
ஐந்து – உலோக வகை ஐந்து
ஆறு - சுவையின் வகை ஆறு
ஏழு – இசையின் வகை ஏழு
எட்டு – சிலந்திக்குக் கால் எட்டு
ஒன்பது - மணியின் வகை ஒன்பது
பத்து – தமிழின் பாட்டு பத்து!

எனது பதிவுகளில் நினைவில் இருப்பதை தட்டச்சிட்டு பகிர்வதனால் பாடல் வரிகளில் தவறுகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. பாடல் வரிகளில் மாறுதல்கள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்.  

தொடர்வேன்!