05 ஏப்ரல் 2019

எதிர்கால சமூதாயமும் சிறுவர் எதிர் நோக்கும் பிரச்சனைகளும். ........!?

தடம்மாறி,தடுமாறும் குடும்பங்களும்,
கேள்விக்குறியாகும், குழந்தைகளின் எதிர்காலமும் ........!? 

தொன்மை மிக்க தமிழ் மொழியும்,தமிழ்க்கலாச்சாரமும், தமிழர் வாழ்வியலும் உலகத்தாரால் ஊன்றிக்கவனிப்பட்ட 
ஒருவனுக்கு ஒருத்தி எனும் சமூகக்கட்டுப்பாடும்
எமது மககளிடையே உடைய ஆரம்பித்திருக்கின்றன.

சமூகத்தை கட்டியெழுப்புவதில் பெரும்பங்காற்றும் குடும்பம் எனும் கட்டுமானம் சிதறுவதனால் எதிர்கால சமூகமாக உருவாகப்போகும், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றார்கள்.
பெற்றோரின் அன்பு முழுமையாக கிடைக்காத குழந்தைகள் நாளடைவில் சமூகத்தின் தீங்கை விதைப்போராக உருவாக்கப்படுகின்றார்கள்.
உறவுகளும், சமூகமும் தங்களை ஒதுக்குவதாக நினைத்து தம் வாழ்க்கையை அழித்து சமூகத்தை பழிவாங்கி தம்மை தாமே ஆற்றுப்படுத்தி கொள்கின்றார்கள்.

வன்மம் கொண்ட மனங்கள் அதிகரிப்பதனால் சிறுவர் துன்புறுத்தல்களும், பாலியல் ரிதியான தாக்குதல்களையும், உயிரிழப்புக்களையும், பாதுகாப்பற்ற வாழ்க்கையையும் எமது எதிர்கால சிறுவர்கள் எதிர் நோக்குகின்றார்கள்.
சுற்றுப்புற,புறக்காரணிகளை கடந்தும் பிள்ளைகளின் எதிர்காலத்தை பெற்றோர்கள் தீர்மானிக்கின்றார்கள். 
இணைகளில் பிரிதலால் குழந்தைகள் எதிர்காலமானது மிகவும் கவலைக்குரியதாக மாறிக்கொண்டே இருக்கின்றது.

🔘 ஈகோ
🔘பக்குவமற்ற வயதும், துணை தேடலும்
🔘பாரபட்சம் காட்டி,சங்கடம் தரும் உறவுகள்
🔘புரிந்து கொள்ளாத துணை
🔘ஆறுதலாய் சாய்ந்து கொள்ள மனம் விட்டு பேச முடியா இயந்திரத்தனமான வாழ்க்கை
🔘சலனப்படுத்தும் நவீனத்துவம்
🔘உறவுகளுக்கிடையிலான சந்தேகம்,
அவ நம்பிக்கை
🔘சகிப்புத்தன்மை வற்றிப்போதல் 
🔘கட்டுப்பாடில்லாத வாழ்க்கைமுறைத் தேடல்
🔘பொருளாதார தேவைக்கான நிர்ப்பந்தம் 
🔘 வாழ்வியலை போதிக்காத கல்வி
🔘அதீத எதிர்பார்ப்பு, ஆடம்பர மோகம்

என பல காரணங்களினால் தமக்கான துணையை விட்டு விலகி இன்னொரு துணையை தேடும் ஆண்களும்,பெண்களும் அதிகரித்து வருகின்றார்கள்.
நமது சமூகத்தில் மேலை நாடுகள் போல் இன்னொருவர் குழந்தையை தன் குழந்தையாக ஏற்று வளர்க்கும் மனப்பக்குவம் இல்லாததனால் பிரிந்து விட முடிவெடுக்கும் தம்பதிகளின் குழந்தைகளின் எதிர்காலமானது கேள்விக்குறியாகின்றது.
தாயா? தகப்பனா?எனும் விவாதத்தில் குழந்தைகள் வாழ்க்கை இருபக்கமும் அடிபடும் மத்தளமாகின்றன.
அன்பும்,அக்கறையும், பாதுகாப்பும் இல்லாத அலைபாயும் அனாதைக்குழந்தைகளாக எல்லாரும், எல்லாமும் இருந்தும் தனித்தவர்களாக வளர்கின்றார்கள்.
சமீப காலங்களில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் அதிகரித்திருப்பது உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாக இருக்கின்றது.
⚫️இப்பதிவில் முதல் பின்னூட்டத்தில் காணொளி ஒன்றை இணைத்துள்ளேன்.
அம்மாவின் அம்மா அம்மம்மாவினால் வளர்க்கப்பட்ட சிறுமியின் அழுகுரலையே நீங்கள் காணொளியில் காண்கின்றீர்கள்.
இலங்கை, கிழக்கில் மட்டக்களப்பு,கிரான்குளம் 9 ஆம் கட்டை வீதியில் வசிக்கும் தமிழ்ப்பெண் தனது பெண் குழந்தையுடன் முதல் கணவரைப் பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்த பின் மகளை பராமரிக்கும் பொறுப்பை தன் தாயிடம் விட்டு சென்றுள்ளார்.
மகளின் மகளை தேவதை போல் பாதுகாக்க வேண்டிய அம்மம்மா எனும் தாய் அக்குழந்தையை சரியாக பராமரிக்காமல், உணவு கொடுக்காமல் வீட்டு வேலைகள் செய்யும் பணியாளராக நடத்தி இருக்கின்றாராம்,
பள்ளி செல்லும் வயதில் பள்ளிக்கும் அனுப்பாமல் பிள்ளை மீது ஆத்திரப்பட்டு திட்டுவதாகவும், தன்னால் தாங்க முடியவில்லை எனவும், அயல்வீட்டாரிடம் சொல்லி அழுத போது,அதற்கும் அச்சிறுமியை அடுத்து துன்புறுத்தி, வீட்டின் உள்ளறைக்குள் பூட்டி வைத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அயலவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்ததனால் அச்சிறுமியின் மீதான வன்மம் அதிகமாகி அடிப்பதோடு, பிள்ளையின் தாயாரும் இணைந்து சிறுமியை துன்புறுத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சில வருடங்கள் முன் காத்தான் குடியில் இளவயது சிறுமி தகப்பனின் இரண்டாம் மனைவியால் துன்புறுத்தப்பட்டபோது முஸ்லிம் அரசியல் வாதிகள், ஆர்வலர்கள் திரண்டு அப்பிள்ளையை பெற்றோரிடமிருந்து பிரித்து சட்ட ரிதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தியதை நம்மில் சிலர் அறிந்திருக்கலாம்.
எமது சமூகத்துக்கான மீட்பு என்பது நில வளங்கள், கல்வியை மீட்பதுடன் மட்டுமல்ல, எமது எதிர்கால சந்ததியை சரியாக கட்டமைப்பதிலும் இருக்கின்றது.
எமது சிறுவர்களுக்கான உடல்,உளவியல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வயது வரைக்கேனும் குழந்தைகளுக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைக்க வேண்டும் எனும் உணர்தலையும் எம் பெண்களுக்குள் கொடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும்,தண்டிப்பதும் அக்குழந்தைக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எமது உடனடிகடமையாக இருந்தாலும், இம்மாதிரி செயல்பாடுகள் தொடர்வதன் பின்னனிக்காரணங்களையும் ஆராய்ந்து தீர்வை தேட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
நாம் நமது திசை எதுவென தட்டுத்தடுமாறி, அங்குமிங்கும், எங்கும் குறைகள் கண்டு சுட்டிக்காட்டி கொண்டே இருக்காமல்,எமக்குள் இந்த குறைபாடுகள் உருவாக்கப்படும் காரணிகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பதே சிறப்பாக இருக்கும்,
என்ன செய்ய வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் எனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை இங்கே கொடுங்கள். பேசிக்கொண்டிருக்காமல் செயல்pபடுவோம்.
முழுப்படிகளை கண்டு கலங்காமல் முதல் படியில் காலெடுத்து வைப்போம் வாருங்கள் உறவுகளே..😍

அமெரிக்கன் சொன்னால் சரியா தானிருக்கும்...!?

எதை பகிர்ந்தாலும், அமெரிக்காவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் என தொடங்குகின்றோம். அமெரிக்கர், ஐரோப்பியர்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் எமது சமூகத்தின் பிரச்சனைகளை அணுகுவது சரியானதா?
மாறுபட்ட காலநிலை,கலாச்சாரம், பண்பாடு, சமூகக்கட்டுப்பாடுகளை கொண்ட தேசங்களில் , கல்வியறிவு, பொருளாதாரத்தில் தனி நபர் தன்னிறைவை அடைந்திருக்கும் மக்களை வைத்து செய்யப்படும் ஆய்வுகளின் முடிவுகளை நாங்கள் எங்கள் சமூகம் சார்ந்து ஒப்பீடு செய்வது சரியானதா?
இது வரை நாங்கள் எமக்கான தேடல்களின் தீர்வாக அமெரிக்க ஆய்வுக்கட்டுரைகளை பின்பற்றி கொண்டிருக்கின்றோம்.
எமக்கென தனி கலாச்சாரப்பண்பாட்டு சூழல் இருக்கும் போது நாம் ஏன் நமது மக்களுக்குள் தனி ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை?
அடுத்தவன் முதுகில் சவாரி செய்யும் நிலையும் , நமது தவறுகளை உணராத சுபாவமும் தொடர்வதனால் நாம் எமக்கான சிறப்பம்சங்களை இழந்து கொண்டிருக்கின்றோமா ?
அணியும் ஆடை,உண்ணும் உடை முதல் அனைத்தும் அவரவர் நாட்டு கால நிலைச்சூழலுக்கு அமைவாக உருவாக்கப்பட்டிருக்க நாங்கள் எங்களுக்கான தேடல்களையும் தீர்வுகளையும் எமக்கு வெளியே தேடலாமா?

குளிர்ப்பிரதேச மக்களுக்கான செயல்பாடுகளை வெப்பப்பிரதேச மக்கள் பின் பற்றுவதும், அதுவே நாகரீக வளர்ச்சி,நவீனத்துவம்,முன்னேற்றம் என்கின்றோம்.


எமது வரலாற்றின் சிறப்பம்சங்களை மறைத்து அன்னியர் பெருமை பேணலில் விளைவுகளே இன்றைய சமூகச்சீர்கேடுகள் என்றாலும் மறுப்பதற்கில்லை. எமது கண்களை குருடாக்கி சித்திரம் வாங்குவது அவசியம் தானா? 
எமது சமூக ஆண்,பெண்கள் ஒவ்வொரு வயதிலும் எதிர் கொள்ளும் உடல் உளவியல் மாற்றங்கள், அதனால் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கலகள் குறித்து எந்த ஆய்வும் எம்மிடம் இல்லை. ஒவ்வொருவரும் தம் சூழல் சார்ந்து எழுதப்பட்டபதிவுகளை தான் பொதுப்புரிதலாக அனைவருக்கும் எடுத்துக்காட்டுகின்றோம் தவிர ஆராய்ச்சி செய்து எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை.
சமீப காலமாக எமது பெண்கள் பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொள்கின்றார்கள். அது ஒட்டு மொத்த சமூக சீர்கேட்டுக்கும் விதையாகின்றதென நாம் உணர்கின்றோமா?
5 தொடக்கம் 60 வரை எமது பெண்களுக்கான பிரச்சனைகளில் 40+ வயதுகளில் பெண்கள் எதிர் நோக்கும் உடல், உளவியல் குழப்பங்களை மெனோபாஸ் என ஒற்றை சொல்லின் கீழ் முடித்து கொள்கின்றோம். அதை அவள் தலை விதி என்பதும் சக பெண்களாலேயே புரிந்து கொள்ளப்படாமல் இருப்பதும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
என்ன பிரச்சனை வந்தாலும் ஆண்கள் பெண்கள் மாறனும் என பிரச்சனையின் தன்மைக்கேற்ப விவாதங்கள் தூள் பறக்கின்றது. எம்மிடம் எந்த தீர்வுகளும் இல்லை.
ஏன் இந்த நிலை?
மேலை நாடுகள் பெண்கள் பிரச்சனைகளை நிதானமாக கையாள்கின்றார்கள். 
ஆவதும் அழிவது பெண்ணாலே தான் என்பதை நன்கறிந்தவர்களாக பெண்கள் பிரச்சனைகளை அவர்கள் மேம்போக்காக அணுகுவதில்லை. பெண்ணிடமிருந்து வரும் சிறு மாற்றமும் கவனிப்புக்குள்ளாகின்றது. பெண் என்றொரு வார்த்தைக்குள் ஒட்டு மொத்த சமூகமுமே அடங்கி விடுகின்றது என்பதனால் பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் அலட்சியப்படுத்தப்படுவதில்லை.

பெண் என்பவள் தான் அனைத்தையும் நிச்சயிக்கின்றாள்.பெண் தான் உலகத்தை சீராக இயக்கும் சக்கரம்,பெண் தான் எல்லாமே. பெண் சரியாக இருந்தால் எல்லாமே அதனதன் போக்கில் இயங்கும் என்பதை நன்குணர்ந்தவர்கள் என பெருமை பேசும் நாம் நம் சமூக மக்கள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளாததும், மாறிவரும் சூழல்களை குறித்து அக்கறைப்படாததும் எமது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல.

நாம் இதை குறித்து இன்னமும் சிந்திக்காமல் இருக்கின்றோமா? சிந்திப்போம்.


29 மார்ச் 2019

சதா ரணமாகும் தேர்வுகள்

சாதாரணம்
சதா ரணமெனும் 
சகல கலா ரணமாகுவதாக
சத்தமில்லா யுத்தமொன்று

சங்கடம் தருவதாய் சிலரும்
சங்கெடுத்து ஊதுவதாக பலரும், 
என்னைப் பார் 
என் பெண்ணைபபார்
உன்னை போல் என் 
உறவில்லை என்போரும்

கற்றலை,குற்றமாக்கி
தேர்வின் புள்ளிகள்
வாழ்வின் கரும்புள்ளிகளாய்
வடுக்களாய் தங்க வைப்போரும்
தாம் கடந்த முட் பாதை அறியாதோராய்...!?

சாதாரணமாக கடந்தவைகளெல்லாம் 
சாதனைப்பட்டியலில் இடம் பிடிப்பதும்
சாதனைகள் செய்வோரை சகதியில் எறிவதும் 
சாத்தானின் போதனைகளாய் கடப்போம்.

நீ நானாகவும்,
நான நீயாகவும் 
அவன் அவளாகவும்
அவள் அவனாகவும்
ஒப்பீடு தப்பீடாய் 
பட்டறிவும்,படிப்பறிவும்
பட்டம் போல் வானம் தொடும், 
காலமது அதை உணர்த்தும்

தேர்வென்பதன் வெற்றிகளால் கொக்கரிப்போர் 
வாழ்க்கை தேரென்பதை இழுக்க
முடியாதோராய்..... ?

கற்றறிந்தோர் முயலாமையினால் 
முடங்கி விட............!?
பட்டறிவால் வென்றோர் உயர்ந்து நிற்க 
முயல் ஆமை கதை இங்கே நினைவில் வரும்,

தோற்றவர்கள் வீழ்ந்ததில்லை
வென்றவர்கள் எல்லோரும் வாழ்ந்ததும் இல்லை.

வாழ்க்கை என்பது ஒரு வட்டம், 
காலம் மாறும் காட்சிகள் கலையும், 
கலைந்த கனவுகள் 
தொலைந்த இரவுகள
கனவாகிப்போகும்,

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.. 
நம்பிக்கை எங்கள் தும்பிக்கை!

அவரவர் அறிவும், ஆற்றலும் அவரவர்க்கே உரிமை.
மனித ஆற்றல் சக்தி வாய்ந்தது, 
தினம் மலர்வதும் உதிர்வதனாலும் பூக்கள் சினப்பதில்லை. 
நீங்கள் நாள் தோறும் புதிதாக மலருங்கள்
வாழ்க்கை உங்கள் வசப்படும்........!

#சதா_ரணமாகும்_தேர்வு


27 மார்ச் 2019

பெண்ணியமும் எமது பெண்களும் ........!?

ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் குட்டை முடியை தவிர்த்து நீண்ட முடிகளை வளர்க்கவும், இந்திய கலாச்சார சல்வார், குர்தா போன்ற உடலை மூடி அங்கங்களை மறைக்கும் ஆடைகளை அணியவும் ஆர்வம் காட்டுகின்றார்கள். கோடை வெயில் காலத்திலும் அவர்கள் அணியும் ஆடைகளில் ஆபாசம் இருப்பதில்லை. நீச்சலுடையில் நீந்துமிடங்களில் கிடந்தாலும் ஆண்கள் கண்களில் கண்ணியம் தவறுவதில்லை அங்கங்களை மேய்வதிலை. அங்கங்கே அலைவாரும் இல்லை. / அரிதாக சிலர் விதிவிலக்காகலாம்.
ஆண், பெண் நட்புக்களை தரம் பிரித்து காமம், காதல் எனவெல்லாம் ஒதுக்குவதில்லை. பெண்ணுக்கு பெண் தோழிகள் போல் தான் ஆண் தோழர்களும் ஒரே சம கோணத்தில் அணுக கற்பிக்கப்படுகின்றார்கள். ஆண்களை காமமெனும் கடைக்கண் பார்வைகளில் வீழ்த்தும் செயல்பாடுகளில் பெண்கள் ஈடுபடுவதில்லை.
டேட்டிங்க,காதல் என சென்றாலும் ஒருவனுடன் தம் உறவை தொடரும் போது அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதில்லை. திருமணம் எனும் சட்ட பூர்வ பந்தத்தை தவிர்த்தாலும்,ஒருவரோடொருவர் சேர்ந்து வாழும் காலத்தில் தம் பாட்னரின் அன்புக்கு அடங்குவார்கள்,உண்மையாக வாழ்வார்கள். புரிதல் இல்லாத போது மனமொத்து பேசி பிரிந்தாலும் எதிரிகள் ஆகாமல் நட்புடன் நண்பர்களாக் தொடர்வார்கள்.
30 வயது வரை சுதந்திரமாக தமக்கென கல்வி, பெருளாதாரம் என தன்னிறைவை தேடி வாழ்ந்து விட்டு 30 வயதின் பின் தம் எதிர்காலத்தை திட்டமிடுவார்கள். சட்டத்தை மதித்து திருமணம் செய்த பின் குழந்தைகள் குறித்து சிந்தித்து, குழந்தை பிறந்ததும் தாம் செய்யும் வேலைகளை விட்டு விலகி பிள்ளைகளை சரியாக வளர்க்க அக்கறை காட்டுவார்கள். கணவன், மனைவிக்கு மட்டுமலல் குழந்தைகளுக்கும் உண்மையாக வாழ்வார்கள்.
40 வயதுக்கு பின் தமக்கான வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு குழந்தைகளை சமூகத்தின் அக்கறையானவர்களாக வளர்த்து 16 வயது வரை அவர்களின் மீதாக பாதுகாப்பு, கண்காணிப்பை தொடர்ந்து, அரசின் சட்டங்களுக்குட்பட்டு கல்வியை வழங்கியும், பொருளாதார தேவைகளை நிறைவேற்றவும் செய்கின்றார்கள்.அன்பெனும் பெயரில் அடக்குமுறையும், அதீத செல்லமும், அளவு மீறிய கண்டிப்பும் இருப்பதில்லை. நள்ளிரவு பார்ட்டிகளில் தடையும் இல்லை,அவரவர் எல்லைக்கோடுகளை அவ்ர்கள் விருப்பம் இன்றி மீறப்படுவதும் இல்லை.
வன்முறை,வற்புறுத்தல்கள் காதலிலும், காமத்திலும் வெளிப்படுத்தப்படுவதில்லை. .
ஐரோப்பிய நாடுகள் பல நமது கலாச்சாரங்களை பின்பற்ற ஆரம்பித்து வெகுகாலமாகி விட்டது.
அதற்கு நேர் மாறாக தமிழ்ப்பெண்களின் வழிகாட்டிகளாக தம்மை வெளிக்காட்டிக்கொள்வோர், நீண்ட தலைமுடிகளை வெட்டி குட்டைஆக்குவது, ஜீன்ஸ்,டீசர்ட் போன்றவை அணிவதுமே பெண் விடுதலை தரும் எண்ணத்தினை திணிக்கின்றர்கள். 
ஆண் நட்புக்களோடு வெளியில் சுற்றுவதும், அவர்களுக்கு இணையாக புகைத்தல்,குடித்தல் தான் பெண்ணுக்கான விடுதலை என நம்ப வைக்கப்படுகின்றார்கள். ஆண் நண்பர்களுடன் கூடி கும்மாளமிடுவதும், அவர்களுடன் கவர்ச்சி, காமம் பேசுவதும் பெண்ணியம் என்றாகி போயிருக்கின்றது.

சட்டங்களை மீறுவதும், தடைகளை கடப்பதுமே பெண்ணுக்கானது என பயிற்றுவிக்கபப்டுகின்றார்கள்.
ஆண் பெண் உறுப்புக்களை சொல்லி விமர்சிப்பதும், 
பெண் உறுப்பில் விடுதலை கிடைக்குமென நம்பிக்கையோடு, மறைக்க வேண்டியதை குறித்து பேசுவதும், அரைகுறை ஆடைகள்:,பப்புகள், டிஸ்கோத்தேக்களில் தான் பெண்ணுக்கு சுதந்திரம் கிடைக்கும் எனும் மாயை உலகம் ஒன்றை சிருஷ்டித்து அவள் வாழ்க்கையை திசை திருப்புகின்றார்கள்.

இல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப வைப்பதும், இருப்பதை இல்லை என்பதும் தமிழர் பண்பாடாகிப்போனது. அதை நம்பவும் ஒரு கூட்டமுண்டு.அதுவே சரியெனும் பெரும் கூட்டமும் உண்டு.
பெண் ஆக்கவும்,அழிக்கவும் சக்தி வாய்ந்தவள். அவள் படைப்பே அது தான்.
உலகத்து பெண்கள் உலகாளும் உரிமைகளுக்கு உரியவராக தம்மை கட்டமைத்து கொள்ள போராடும் போது,எங்கள் பெண்களோ உடலாளம் தேடி பயணிப்பதே தம் விடுதலை என்கின்றார்கள்.
உலகம் எதை கொண்டு தமிழர் கலாச்சாரம், பண்பாடு என மேன்மை படுத்துகின்றதோ, 
எதனால் நாம் உயர்ந்து நின்றோமோ 
அதுவே சீரழிக்கப்படுகின்றது.
சின்னாபின்னமாக்கப்படுகின்றது.

தமிழ்ப்பெண்கள் பெண் விடுதலை எனும் பெயரில் தம்மை மட்டுமலல் தமிழ் சமுகத்தையே அழித்து கொண்டிருக்கின்றார்கள்.
எது உண்மையான பெண் விடுதலை என்பதை தமிழ்ப்பெண்களுக்கு உணர்த்தும் எல்லைக்கோட்டில் நாம் நிற்கின்றோம்.
உலகத்தில் சகல பெண்களுக்கும் தேவையானது . 
நிமிர்ந்த நன்னடை 
நேர்கொண்ட பார்வை 
எதற்கு அஞ்சா திண்மை
தெளிந்த சிந்தனை.
கல்வி
பொருளாதாரம் 
பணிவும்,பண்பும்
அன்பும்,அறனுமே.

நாம் தேட வேண்டியதும், எடுத்து கொள்ள வே\ண்டிய உரிமையும் இதுவே.
ஆனால்..............!?
நாம் வாழ்வோமா? வீழ்வோமா?❤️
❤️உலகப்பெண்களில,தமிழ்ப்பெண்களுக்கான நிர்வாகம், உரிமை சார்ந்த ஆளுமை, அறிவு போல் வேறெந்த பெண்களிடமும் காண முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் நிர்வாகம் என்பது பெண்களிடம் என்பதில் ஈழத்து தமிழ் பெண்கள் மேம்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
🔴👁‍🗨குறிப்பு* எனது பதிவு பெண்களை குற்றம் சாட்டி, அவர்களை கூனிக்குறுக வைக்கும் நோக்கத்தில் எழுதப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும். பெண்ணியம் எனும் இலக்கில் மேலை நாட்டு பெண்கள்,ஆண்களை பழிவாங்க, ஆணுக்கு பெண் நிகரென நிருபிக்க கடைப்பிடித்த பல விடயங்களை அவர்களின் தவறான அணுகுமுறையென உணர்ந்து கொள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்டு சரியான இலக்கினுள் வரும் போது அவர்கள் வேண்டாம் என விடுபட்டு வரும் பழக்கங்களை நமது பெண்கள் தமக்கான விடுதலைப்பாதையின் இலக்கென திசை மாற்றம் செய்வது நலல்தல்ல என்பதை உணர சொல்வதே இப்பதிவின் நோக்கம்.