30 நவம்பர் 2016

உதயணனின் சிங்களத்துப்புயல்

சிங்களத்துப்புயல்!

உதயணன் அவர்களின் நாவல். 
பதிப்புரை 2012 ல் தான் எழுதப்பட்டிருக்கின்றது.

தலைப்பையும் முன்னுரையையும் வைத்து சுவாரஷ்யமாக ஏதேனும் இருக்கலாம் எனும் ஆர்வத்தோடு ஆரம்பித்து இறுதியில் தொங்கலில் முடித்து வைத்தார் எனும் கோபத்தில் இனிமேல் உதயணன் நாவலே படிப்பதில்லை என முடிவும் எடுக்க வைத்த நாவல்.
சேர,சோழ, பாண்டியர்கள் சிங்கள தேசத்தினை போரில் வென்று தமிழ் ஆட்சியை நிலை நாட்டினார்கள் என மட்டும் அறிந்தோருக்கு சிங்களவரும் தமிழ நாட்டை நோக்கி படையெடுத்து வந்து அக்கால பாண்டிய இராஜ்ஜியத்தில் ஒருபகுதியை எப்படி வென்றார்கள் எனச்சொல்லும் கதை.
கி.பி 1166 ல் பாண்டியர்களுக்குள் இருந்த பிரிவினையை பயன் படுத்தி அப்பகுதியை வென்ற கதை இது. தமிழர்களை கொண்டே தமிழர்களுக்கான் புதைகுழிகள் வெட்டப்பட்டதான ஆரம்ப கால வரலாற்றின் பதிவுகளை வைத்து எழுதப்பட்ட நாவல் என எழுத்தாளர் தன் முன்னுரை யில் சொல்லி செல்கின்றார்.
சாண்டில்யனின் கன்னிமாடம், சோழ நிலா நாவல்களின் சம்பவங்களையும் இதனுடன் ஒப்பிட்டு கி.பி 1166 முதல் 1191 வரையான 25 ஆண்டுகளை சோழர், சிங்களவர், பாண்டியர் அரசியலில் புயல் விசிய காலங்களை சிங்களத்துப்புயல். கன்னிமாடம், சோழ நிலா என வரலாற்று சம்பவங்களாக வகைப்படுத்தலாம் எனவும் முன்னுரைத்து ள்ளார்.
குலசேகர பாண்டியன், வீர பாண்டியன், விக்கிரம பாண்டியன், இராதிராஜன்,பராக்கிரமபாகு, இலங்காபுரன், மழவராயன், பல்லவராயர்கள் என குறிப்பிட்ட 25 ஆண்டுகளின் நிஜமான வரலாற்றுப்பாத்திரங்களை நாவலிலும் பயன் படுத்தி இருக்கின்றார்.
ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ள ரோகண நங்கை, கடலழகி எனும் கற்பனைக் கன்னியரும் உண்டு.
சிங்கள மன்னன் பராக்கிரமபாகுவின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியும் அவர்களின் நூலான மகா வம்சத்தில் வெற்றிவாகை சூடியவன் என பாராட்டுதலுக்குள்ளானவனுமான இலங்காபுரன் சோழ மண்டலம்,ராமேஸ்வரத்தில் வந்திறங்குவதிலிருந்து ஆரம்பிக்கின்றது.
பாண்டிய நாடு அரசன் எனும் ஒருவன் கீழ் பிரிக்கப்பட்ட வள நாடுகளாக, கோட்டயங்களாக, ஊர்களான தனித்தனி நிர்வாகத்துக்கு உட்பட்டிருப்பதனால் பாண்டிய மன்னனை வீழ்த்தினாலும் அவ்வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியாது என பாண்டியர்களின் நிர்வாகம் குறித்தும், பிரிந்திருக்கும் தமிழரில் ஒருவரை கைக்குள் போட்டே காரியம் சாதிக்க நினைப்பதும், தமிழருக்கிடையேயான கட்டுக்கோப்புக்கக்ளை சிதைத்தாலன்றி  வெற்றியை தக்க வைக்கும் வாய்ப்பு கிட்டாது எனும் புரிதலுமாய்
இக்கதையும் கதைக்கான களமும் எட்டப்பர்களும் நயவஞ்சகமும், காட்டிக்கொடுப்புக்களும், நம்பிக்கைத்துரோகங்களும் நம் விரல கொண்டே நம் விரலை குருடாக்கும் வித்தையையும் சிங்களவர்கள் வழி வழியாக தம் யுத்த தர்மமாக பயன் படுத்தி சூழ்ச்சிகளால் பெற்றவைகளை தக்கவைத்துக்கொள்ள 
தமிழனை பகடையாக்கி பாண்டியனை மாது, மாது என மதியை வென்று சகடையாக்கும் அக்காலக்கதை இக்காலத்திலும் பொருந்துவது தான் மாபெரும் வேடிக்கை.

இன்றைய இலங்கை அரசியல் நிலவரத்தோடு ஒப்பிடாமல் இருக்க முடியவே இல்லை.
படிக்கலாம். 
முடிவைக்குறித்து பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வரலாறை அறிய படித்தும் பார்க்கலாம்,

25 நவம்பர் 2016

மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 4

நம் விடுதலை போரில் ஆரம்பம் மகத்துவமானது!.
அது மட்டும் தான் இன்றைய வரலாறாய் இருக்க வேண்டும், சுதந்திரம் கிடைத்து ஆங்கில அரசு இலங்கையை திருப்பி கையளிக்கும் போது நம் இன தலைவர்கள் விட்ட தவறுகள்?

அதனூடான போராட்ட விதைகள், மட்டும் பேசப்பட வேண்டும், இடையில் சில பல கசப்புக்கள் மறைக்கப்பட அல்லது மறக்கப்பட வேண்டும், இதிலும் இந்திய அரசின் பகடைக்காய்களாய் நம் கை கொண்டு நம் கண் குத்தி குருடாக்கப்ப்ட்ட அரசியல் கோமாளித்தனம் குறித்து பேசி.. இனியும் ஆவதென்ன? இலங்கை அரசுடன் முட்டி போதி பெறப்போதும் என்ன?

ஐ, நா முன் நின்று நம் நேரத்தினை வீணாய் செலவிடுவதை விட ஆக்கபூர்வமாய்   உறங்கிக்கொண்டிருக்கும்  உள்ளங்களை தட்டி எழுப்ப... சிந்திக்க வைக்க எது அவசியமோ அதை மட்டும் நாம் இலக்காக்குவோம்.அறிவால் ஈழத்தை கட்டி எழுப்ப வேண்டிய எம் சமுதாயம் அறிவை மழுங்கடித்து வரலாற்றினை அறியாது உணர்வுகளால் மட்டும் உயிர்த்தெழுவதனால் ஆகப்போவது என்ன?

பள்ளி, கல்லூரி மாணவர்களின் உணர்வுகளை தூண்டி கல்லூரி பாடங்களை பகிஷ்கரித்து தெருவில் நிறுத்தி படிக்கும் காலங்களை அதிகமாக்கி பொருட்செலவும், உடல், உளரிதியான உளைச்சல்களையும் உருவாக்கி ஈற்றில் போராளியாக்கி, முழுக்குடும்பத்துக்கும் பாதிப்பை உருவாக்கி, படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கும் சொத்து, நகை நட்டை வித்து வட்டிக்கு கடன் வாங்கி... நாட்டை விட்டு நாடோடியாய் துரத்தப்பட்டு, பட்ட கடன் அடைக்க நாற்பது வயது வரை நாயாய் உழைத்து.... மாரடைப்பிலும் விபத்திலும் மாண்டு சாவில் கூட உண்மையாய் கண்ணீர் விட எவரும் இல்லா அனாதை கள் ஆவதற்கா அனைத்தையும் இழந்தோம்?

எங்கே அடித்தால் எங்கு வலிக்கும் என அரசியல் வாதிகளுக்கு நன்கு தெரிந்திருக்கின்றது. அதற்கு நாமும் பலியாகிக்கொண்டிருக்கின்றோம்.
இன்றைய சூழலில் இலங்கையில் கத்தி இன்றி இரத்தமின்றி ஒரு மாபெரும் யுத்தம் நடக்கின்றதென்பதை எப்போது புரிந்து கொள்ள போகின்றீர்கள்?
ஒரு இனத்தை வெற்றி பெற அவன் அறிவை மழுங்கடிக்க வேண்டும் என சரியாக புரிந்தவர்களாய் அரசியல் வாதிகள் இருக்க... அதற்கு நாம் இடம்கொடுக்கலாமா?
இஸ்ரேல்...? 
நமக்கு கற்றுத்தரும் பெரிய பாடம் ஒன்றுண்டு!

மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3

 தீர்வு  என்ன? 

 நம் சந்ததிக்கேனும்   உள்ளதை உள்ளபடி உணர்த்தி வளர்த்தெடுப்போம் என  உணர்வு பூர்வமாக அணுகாமல் உள்ளப்பூர்வமாக சிந்தித்தாலே பாதி விடுதலை கிடைத்து விடும்.


விடுதலைப்போராட்டம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?
பள்ளிகளில் தரப்படுத்தல் என்றொன்றில்லா விட்டால் இந்த விடுதலைப்போராட்டம் அவசியமாகி இருக்குமா?
எதற்காக இத்தனை உயிர்களை நாம் இழந்தோம்?
நாம் இழந்தது உயிர்கள் மட்டும் தானா?
அக்காலத்தில்  யாழ்ப்பாணத்தில் பிறந்த சான்றோர்கள் உலகத்தமிழர்கல் தலை நிமிர்ந்து வணங்கும் இடத்தில் இருந்தார்கள். தமிழ்மொழி என்றாலே யாழ்ப்பாணம் நினைவுக்கு வரும்படி தம்மை உயர்த்திக்கொண்டார்கள். சாதனையாளர்களாக, செல்வத்தில் சிறந்தோராக போற்றுமிடத்தில் இருந்தார்கள்.

இன்றைய நிலை என்ன?
90கள்வரை இலங்கையின் பெரும்பான்மையான வைத்திய சாலைகளில் எம்மின வைத்தியர்கள் தான் அதிகமாய் கடமையாற்றினார்கள் கடமை உணர்வும், ஆர்வமும், விருந்தோம்பும் மாண்பும் கல்ந்து செல்லுமிடமெல்லாம் எம் கற்றோர் தம்மை உயர்த்தினார்கள். கொழும்பு போன்ற பெரிய வைத்திய சாலைகளிலேயே பத்து தமிழ் வைத்தியருக்கு ஒரு சிங்கள வைத்தியர் எனும் நிலை இருந்த காலம் அது,
இலங்கையில் பல பகுதிகளிலும் பல உயர் பதவிகளை வகித்தார்கள்.
தமிழன் அறிவில் மேலோங்குவதை கண்டு பொறாமைப்பட்ட சிங்கள அரசு அவனை குட்டிக்குனிய வைக்க ஆரம்பித்தது தான் தரப்படுத்தல்...!
இந்த தரப்படுத்தல் என்பதே என்ன என இன்றைய தலைமுறைக்கு தெரியுமோ என்னமோ?
இன்றைக்கு என்ன நடக்கின்றது?
இலங்கை அரசு எதை நினைத்ததோ.அது நன்றாகவே நடக்கின்றது.
அறிவை அகற்றி அகந்தையை புகுத்தி சிந்தனையை தாறுமாறாக்கி நாடு விட்டு நாடு கடத்தி,, எஞ்சியோர் சிந்தனையையும் எச்சில் இலைக்கு பறக்கவைத்து...எடுத்ததுக்கெல்லாம் பலகலைக்கழக மாணவர்கள் போராட்டம் என கல்வியை நிறுத்தி தெருவுக்கு போராட இறங்கு முன் கொஞ்சமேனும் சிந்தியுங்களேன்பா!
உங்கள்கல்வியை பகிஷ்கரித்து உங்கள் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கி அனாதிகளாய் அல்லலுற்று எங்கோ ஒரு நாட்டில் டாய்லட் கிளின் செய்ய, பாத்திரங்கள் கழுவவா இத்தனையையும் நாம் இழந்தோம்?
என்ன தான் செய்யலாம்? எங்கே செல்லும் இந்த ப்பாதை?

மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 2


ஈழப்போராட்டம் குறித்த வரலாற்று சம்பவங்கள்பலர் எழுதி இருக்கின்றார்கள்!

அவரவர் பார்வையில் அவர்களுக்கு சாதகமானபடி எழுதி  ஒருவரை உயர்த்தி இன்னொருவரை தாழ்த்தி...அவர்கள் செயதது சரி, மற்றவர்கள் தேசத்துரோகிகள் இப்படி பல குழுக்களை குறித்தும் அதன் வரலாறு குறித்தும்... அவர்களுக்குள்ளான போட்டுக்கொடுத்தல் காட்டிக்கொடுத்தல் குறித்தும் எழுதுவது தான் வரலாறென நினைத்து தாமும் குழம்பி வாசிப்போரையும் குழப்பிகொண்டிருக்கின்றார்கள்..
அனைத்திலும் அடிப்படையாக தமிழின அழிப்பெனும் பெயரில்விதைக்கப்பட்ட அறிவை மழுங்கடிக்கும் பணிக்கு இந்த கருத்து வேற்றுமைகள் தான் அடித்தளம், நம் கை கொண்டே நம் கண் குத்தப்படும் அழகியல் யுத்த தர்மம், எது புரிய வைக்க ப்பட வேண்டும் என்பது தான் இப்போதைய முக்கியம். நம் இலக்கு எதுவாயிருக்க வேண்டும் என்பது தான் நம் கவனம் செல்ல வேண்டும், நடந்தவை கடந்தே போகட்டும், நல்லதை நினைப்போம்.


ஈழ மக்களுக்கான் விடுதலை யுத்தத்தில் விடுதலைப்புலிகளுக்கான பங்கும் மேதகு பிரபாகரன் அவர்களின் வழி நடத்தலும் மகத்துவமானது.
பிரபாகரன் அவர்களை போல் ஒருவர் இனி எமக்குள் பிறக்க போவதும் இல்லை, பிறந்ததும் இல்லை, ஆரம்ப காலத்தில் அவரால் சில பல தவறுகள் நடத்தப்பட்டிருக்கலாம். அப்படியான தவறுகளை நடத்த அவர் வழி நடத்தப்பட்டிருக்கலாம்.
எம்மை அடிமைப்படுத்த நினைத்தவர்களை அலற வைத்து தன்னை மட்டுமல்ல தன் முழு குடும்பத்தினையும் எமக்காக அர்ப்பணித்தவர் அவர்!
நம்மால் இன விரோதிகள் என சொல்லப்படும் சிங்கள் மக்களின் ரியல் ஹீரோ அவர், அவர்களாலும் நேசிக்கப்பட்டவர், என்னுடைய பல சிங்கள் நட்பூக்கள் அவரை நேசிப்பவர்கள். பகைவனையும் அந்தரங்கத்தில் நண்பனாக்கிடும் மாண்பு அவரிடம் இருந்தது.
ஈழத்தமிழன் எனும் இன உணர்வில் எம்மை முழு உலகுக்குள் அடையாளம் காட்டி தலை நிமிரச்செய்து பலருக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் அவர். விடுதலைப்போருக்காக தன்னை மட்டுமலல் தன் குடும்பத்தையே அர்ப்பணித்த அவரின் தனிப்பட்ட குணாதியங்களை, ஆரம்ப கால தவறுகளை பேசுவது நம் கை கொண்டு நமது கண்ணையே குத்துவதற்கு நிகரானது!
விடுதலை போராட்டத்தில் ஆரம்ப கால தவறுகளை சுட்டிக்காட்டி நமக்குள் நாமே நம்மை தாழ்த்தி கொள்வதை நிறுத்தினாலே விடுதலை அடைந்து விடுவோம்.
நாளை நாம் விடுதலையை அறுவடை செய்வோம் என நம்பிக்கையோடு தம் உயிரை விதைத்தோரை நாம் போற்றும் அதே நேரம் நம் சின்னத்தனமான செய்கைகள், பேச்சுக்களினால் அவர்கள் நமக்கென உருவாக்கிச்சென்ற வரலாற்றின் மகத்துவத்தினை திசை திருப்பி நம் வரலாற்றை கேலிக்கூத்தாகாதிருந்தாலே விடுதலை தான்.
நாம் விடுதலை பெற வேண்டியது சிங்கள அரசிடமிருந்தல்ல நம்மிலிருக்கும் பெருமை, பொறாமை, ஈகோ போன்றவற்றிலிருந்தும் ஜாதி, மதம்,பிரதேசவாதம் யார் பெரியவன் , அனைத்திலும் நானே இப்படியான பல சிந்தனைகளிலிருந்து விடுபட்டு நம் சமுதாயத்தை கட்டு எழுப்ப வேண்டும் எனும் ஒரே பொது நோக்கம் வந்தாலே நமக்குள் விடுதலை சாத்தியமாகும்.
இஸ்லாமிய மக்கள் தமக்குள் பலவாறு அடி படுவார்கள். பொது விடயம் என வரும் போது மார்க்கம் எனும் விடயத்தில் கட்டுப்பட்டு ஒன்றாகுவார்கள்.
அவர்களை பார்த்தேனும் நாம் நமக்குள் ஒன்று பட்டு விடுதலை வேண்டி எம் மக்கள் செய்த தியாகத்தினை போற்றுவோம், கடந்து போன காலத்தில் அவர்கள் செய்த தவறுகளை பேசி பேசி நம்மை நாம் தாழ்த்திக்கொள்ளாது, ஈழ மக்கள் எனும் ஒரே சிந்தையில் மட்டும் சிந்திக்கும் போது தான் நமக்கு விடுதலை சாத்தியம் !
சிந்திப்போம்.. !

இன்னும் வரும்!