03 ஜூலை 2020

Depression.. மனஅழுத்தமா? அது ஒன்றுமே இல்லை..!

குடும்பம், கணவர், மனைவி, குழந்தைமீது அக்கறை அன்பு கொண்டோர் இந்த பதிவை நிதானமாக வாசியுங்கள் 

இது எச்சரிக்கை பதிவு..! 

லண்டனில் வாழும் 35  வயது இலங்கை தமிழ் பெண் சுதா..! இரு குழந்தைகளின் (10,5 வயது ) தாய் தன் ஐந்து வயது செல்ல மகளை  கத்தியால் குத்தி தன்னையும் குத்தி இருக்கின்றாள். பிள்ளை அவ்விடம் இறந்து போனாள்.தாய்  ஹெலிஹொப்டர் அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலை க்கு கொண்டு போய்  ஐந்து மணி நேரமும் ஆப்ரேஷனின் பின் பிழைத்து இருக்கின்றாள்.

இவ்வாறான சம்பவங்கள் எமது சமுகத்தில் தொடர்கதையாகின்றன..! 

பிள்ளையின் தாய் சுதா தனக்கு கேன்சர், தான்  இறந்து விடுவேன் என்று பயந்து  வெளிப்படுத்தி இருக்கின்றாள்  ( கான்சர் அவருக்குள் இருந்திருக்குமானால்  உண்மையில் அவர் பரிதாபத்துக்குரிய பெண்..! ஆனால் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை . உடல் பாகங்களில் வலி  தொடர்ந்து. அதன் மனப்பிரமையாக  தனக்கு தானே முடிவெடுத்திருக்கலாம் அல்லது நெருங்கிய இரத்த உறவில் யாருக்கும் கான்சர் இருந்து அது தனக்கும் வரும் எனும் பயம் உருவாகி இருக்கலாம் ) 

▪️ தான்  சாகும் போது  பிள்ளையையும் கூட்டி போவேன் என்றும் சொல்லி இருக்கின்றாள். தான்  இல்லை என்றால் பிள்ளை வாழ்வு என்னவாகும் எனும் அச்ச  உணர்வு உருவான காரணம்  என்ன? அந்த பயத்தை வளர விட்டது ஏன் ? இந்த விடயத்திலும் அவள் கணவர் மீதான அவள் நம்பிக்கை குறித்து கேள்வி எழுகின்றது. 

இந்த பெண் மன அழுத்தநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றாள் என்பதை வெளிப்படையாக புரிந்து கொள்ளும்படி தனக்குள்  தானே பேசி கொள்வாள் என்கின்றார்கள். இவர் உணர்வை புரிந்து தகுந்த மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து சென்றிருந்தால்  தனக்கு வருத்தம் எனும்  பயத்துக்கு பின்னணியை மனோதத்துவ கவுன்சில்ர் அவருடன் பேசி  புரிந்து அதுக்கு தகுந்த ஆலோசனை சொல்லி இருப்பார்.

🖤 சுதாவின் பயம் கணவரால், உறவுகளாலும் கண்டு கொள்ள படவில்லை என்பதன் வெளிப்பாடாக  குழந்தையின் உயிர் பலியாகி இருக்கின்றது. தனக்கு பின் தன்  பெண் பிள்ளைக்கான பாதுகாப்பு குறித்த  பிள்ளை மீதான அதீத பாசம் பிள்ளையை கொலை செய்யும் உணர்வை தூண்டி இருக்கின்றது. அவரின் நோய்  குறித்து அறிந்து கொள்ள விரும்பாத இந்த சமூகமும் அது தன்  மேல் போர்த்தி கொண்டிருக்கும்  போலி ( பிரஸ்டீஜ்) கௌரவமும் தன் மனைவிக்கு நீண்ட நாட்களாக இருந்த மன அழுத்த வியாதியை  குணப்படுத்த அக்கறை கொள்ளாத  அவர் கணவரும்   உணர வேண்டியவர்கள்.

சுதா திட்டமிட்டு செயல்பட்டிருக்கின்றார் என விமர்சனம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். பெரும்பாலான பெண்கள் இவ்வாறான மனப்பிரமையினுடாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு  இருக்கின்றார்கள். இவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் தான் செய்வதை உணராமல்  அந்த நேர உணர்வு தூண்டல்  எப்படி இருக்குமோ அதை செய்வார்கள். யாரோ  உத்தரவிடுவது  போல்.. எடு .. குத்து.. குதி என தம்மை அறியாமல் அவர்களை உள்ளுணர்வு இயங்க வைக்கும்.  உளவியலில் மிக ஆபத்தான நிலை இது. அவர்களை குற்றம் சொல்லி பயனில்லை. அவர்கள் குற்றவாளிகளும் இல்லை.

ஊரில் சொந்த பந்தம் உறவுகள் என்று வாழ்ந்ததால் இப்பிரச்சனை பெரிய அளவில் தெரியவில்லை.ஒருவர் இல்ல என்றால் ஒருவர் வந்து  போய்  சின்ன மனஸ்தாபங்கள் பெரிதாகாமல் பார்த்து கொண்டார்கள். வெளி நாட்டில் அப்படி இல்லை. சின்ன சின்ன குழப்பங்கள் பலூனுக்குள் அமுக்கும் காற்று போல் வெடித்து  சிதறுகின்றன.

மனைவி, மகள் என்று பாதிக்கப்பட்டிருக்கும் அந்த தகப்பனை குற்றம் சொல்வது எனது நோக்கம் இல்லை. நிச்சயம் அவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஈடு  செய்ய முடியாத இழப்புக்கள் இவை..! அதே  நேரம் அவரின் தவறுகள் உணர்த்தப்படாமல்  உணர்ச்சி நிறைந்த வெறும் பரிதாபத்தை விரயமாக்குவதில் எனக்கு விருப்பமில்லை.அவரை போல் பல ஆண்கள், கணவர்கள் உங்கள் வீட்டிலும் தாய், மனைவி  இவ்வாறு பாதிக்கப்பட்டு அடங்கி கிடக்கலாம் என்பதை உணருங்கள். இந்த தாய் மற்றும்  குழந்தையின் இடத்தில உங்கள் மனைவி, பிள்ளைகளை நினைத்து பாருங்கள். இது தவிர்க்கப்பட முடியாத பிரச்சனை என்று நினை க்கின்றீர்களா? நீங்கள் யாருக்காக இரவும், பகலும் ஓடி உழைக்கின்றீர்கள்?

பல ஆண்களுக்கு தன்  மனைவிக்கும் மனம் ஒன்று  உண்டு என்று உணர்ந்து கொள்வது இல்லை. இது தவறு என்று ஆண்கள் உணரணும் எனும் உண்மையை  புரிந்து கொள்வோர் உணர்ந்து கொள்ளுங்கள். உனக்கென்ன குறை எனும் ஒரு வார்தைகில் வீட்டு பெண்களின் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் கடந்து விடுகின்றீர்கள். அவளுக்கு என்ன. பிரச்சனை என்பது காது கொடுத்து கேட்டு அதற்காண தீர்வுகளையும் தேடுங்கள். குடும்ப பிரச்சனை, கருத்து வேறுபாடுகள் மனத்துக்குள் புதைத்துகொள்ளாதீர்கள்.உங்களுக்கு நம்பிக்கையானவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள்.

#மனஅழுத்தமா? அது ஒன்றுமே இல்லை எனும் கருத்தும் அதற்கு பல பெரிய மனிதர்களின்  ஆதரவும் அதை நம்பும் மனிதர்களின்  புரிதல்களும் மாறவில்லை என்றால்  என்றால் சுதாக்களும், சாயகிகளும் உருவாகி கொண்டேன் செல்வார்கள்.

#Depression
#மனஅழுத்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!