18 ஜனவரி 2017

இது வரை காணாத எழுச்சி இது.

ஜல்லிக்கட்டு அவசியமா இல்லையா என்பது இன்றைய கேள்வி அல்ல. ஜல்லிக்கட்டுக்கான தடை எமது இளையோரின் மனத்தடைகளை உடைத்து பொங்கி சிலிர்த்தெழும்ப வைத்திருக்கின்றதே. அது மட்டும் பேசப்படு பொருளாகட்டும். 
இந்த ஒன்றுபடல் இந்த உணர்ச்சி உத்வேகம்.இன்றைய சூழலில் எமது சமூதாயத்துக்கு அவசியமானது என்பதனால் இன்றைய எமது வெற்றியும் இது தான்.
உலகத்தமிழினம் இதுவரை காணாத எழுச்சி இது. இன மத பேதம் மறந்து தமிழனாய் உரத்து குரல் கொடுக்கும் காலமும் இது தான். 

தம் தேவைக்காக இதுவரை ஒன்று பட்டு குரல் கொடுக்காத ஒரே இனம் நாம் தான். நமது அடிப்படை தேவைகளை கூட கேட்டுப்பெற வக்கற்றவர்களாக எப்போதும் எவருக்கேனும் அடிமைப்பட்டுக்கிடக்கும் அடிமைகளை சிலிர்த்தெழும்பிடும் குரல் இது. 
தலைவன் என வழிகாட்ட எவனும் இல்லாமலே எமது சிங்கங்கள், வன்முறைகள் இன்றி, அறப்போராட்டமாக தம் உரிமைக்காக  போராட முடியும் என நிருபித்திருக்கும் நாட்கள் இவை. 
என்ன செய்தாலும் எத்தனை குட்டினாலும் தமிழன் குனிவானே தவிர நிமிரவே மாட்டான்எனும்ஆளும் அதிகார வர்த்தத்தினருக்குமான சாட்டையடி போராட்டம் இது.  ஜாதி, மதம் எனும் பெயரில் பிரிந்தே கிடைப்பவர் தானே என தூசாய்  எம்மை நடத்த  நினைத்தவர்களுக்கு முகத்தில் கரி பூசிய நாட்கள் இவை. 
சீரும் சிறப்புமான தமிழினம் தன்னை வழி நடத்தக்கூட  தன்மானமிக்க தமிழன் இல்லாமல் தவிக்கிறதே  எனும் இன உணர்வோடு  கலங்கிய பல இலட்சம்  தமிழுணவாளர்களை உயிர்ப்பிக்க வைத்த நாட்கள் இவை. 
தொழில் நுட்ப வளர்ச்சி எனும் பெயரில் தம் தேசத்து குப்பைகளை  கொட்டி எம் தேசத்து மண்ணையும் மக்களையும் மலடாக்க நினைக்கும் மேற்குலகின் அகம்பாவத்தினை அறுந்தெறிந்த நாட்கள் இவை. 
அடக்கப்படும் உரிமைகளுக்காக கிளர்த்தெழும்பப்படும் உணர்வுகளை திசை திருப்ப முயலும் சதிகாரர்களை இனம் கண்டு அவர்களை துரத்தி அடிக்க முடியும் என உணர்வைத்தந்த நாட்களும் இவையே. 
இந்த ஆரம்பத்தினை எமக்கான உரிமைகளை தட்டிக்கேட்கும் குரலாக , சமூதாய அவலங்களுக்காக உரத்து ஒலிக்கும் குரலாக மாற்றிட வேண்டியது எமது ஒவ்வொருவரின் கடமையும் தான். 
எந்த அரசியல் வாதிக்கும் பின்னால் செல்லாமல், சினிமாவின் பளபளப்புக்களை முன் நிறுத்தாமல் தமிழன் எனும் உணர்வில் மட்டும் சிலிர்த்தெழும்பி இருக்கும் எமது இளம் காளைகளுக்கான ஆக்கபூர்வமான உந்து சக்தி நாம் தான்.

போராட்டங்கள் எப்படியும் வெடிக்கலாம். அதை பாட்டாளி மக்களின் தேவைக்கானதாக  சர்வாதிகாரத்துக்கு எதிராக திசை திருப்பி எடுப்பதும் உண்மை உணர்வாளர்கள் கைகளில் தான் உள்ளது. .  எவ்வித பின்புலமுமின்றி இயல்பாக எழுந்த போராட்டத்தினை   நம் தேவைகளுக்கான தாக ஒலிக்க வைப்பதும்  நம் கைகளில் தான்.   
ஆம்....!
ஜல்லிக்கட்டு தடை எனும் பெயரில் ......... தமிழருக்கான அடக்குமுறை..... தடை அதை உடை..... என இளையோரும், பெரியோரும் வயது வேறுபாடின்றி ஒருமனதோடு இணைந்து தமிழர் எனும் இன உணர்வில் ஜாதி மத பேதம் களைந்து ஒன்று பட்டு நிற்கும் தருணம்.
ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல சமூக அவலங்களுக்காகவுமான உரிமைக்குரல் உரத்து ஒலிக்கட்டும்.
இந்த ஒன்றுபடல் நல்ல ஆரம்பமாகட்டும். வேகத்தினை விட விவேகமும் அவசியம் என்றுணர்ந்து இத்தனை ஆற்றல்களும் திசை மாறி சிதறடிக்கப்படாதிருக்க வேண்டும் எனும் மன உணர்வோடு இணைவோம்.
இளைஞர் சக்தி ஆற்றலில் சக்தி. இத்தனை ஆற்றுமைப்படுத்தல்களையும் சரியாக பயன்படுத்தி வழி நடத்திட களத்தில் போரிடுவோருக்கு அகத்தில் சக்தி தரும் ஊற்றாகிட ஒன்று சேருங்கள்.
தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு. 
தலை நிமிர்ந்து சொல்லும் நாட்கள் வரும். 
ஒலிக்கட்டும் முரசு. 
விடியல்கள் தூரமில்லை.


22 கருத்துகள்:

  1. எஸ்.ரா சொன்னது போல..1965 க்குப் பிறகான தன்னெழுச்சிப்ப்போராட்டம் இது..நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை பிறக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெரினா எழுச்சிக்கு முன் பின் என பிரித்து கருத்திடலாமா செல்வா சார்?இது ஆரம்பம் தான்.

      நீக்கு
  2. நீங்கள் சொல்லியிருப்பது போல் இதற்குமட்டுமின்றி சமூக அவலங்களுக்கும் தொடர்ந்து ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும். எல்லாமே இங்கு அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளதால்தான் போராட வேண்டியக் கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். இதனைப் பிரித்துப் பார்த்து ஆளும் திறனுள்ள நல்ல தலைவர் நமக்குக் கிடைக்காதது வேதனையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். நலல் தலைமையும் வழிகாட்டுதலும் இல்லாமல் எடுப்பார் கைப்பிள்ளை ஆனோமோ? ஆனாலும் இந்த எழுச்சி நல்ல பாடங்களை கற்றுத்தந்து விட்டே சென்றிருக்கின்றது.

      நீக்கு
  3. அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்

    ஆம் இது ஒரு நல்ல
    ஆரம்பமாக இருக்கட்டும்

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  4. PETA என்னும் NGO வைத் தடை செய்வதன் மூலம் சுலபமாகக் கையாண்டிருக்கவேண்டிய விஷயம், கலைஞர் மற்றும் ஜெயலலிதாவின் மெத்தனத்தால் ஊதிப் பெரியதாக்கப்பட்டுவிட்டது. உலக நாடுகள் பலவற்றில் PETA எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளம்பரப்படுத்தி, அது ஒரு anti-human நிறுவனம் என்பதை இந்திய அரசு அறிவித்தால் போதுமே! இன்று போராடும் நம் இளைஞர்களின் அடுத்த செயல்பாடு அவ்விதமே இருக்கவேண்டும். அதுவே வெற்றி தரும். - இராய செல்லப்பா நியூஜெர்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் நலல்தே.எம்மக்களை ஒன்று படுத்தி இருக்கின்றோம் அல்லவா? அரசின் உண்மை சுயம்புரிந்திட்டோம் அல்லவா?

      நீக்கு
  5. பெயரில்லாPM 6:07:00

    துவக்கம் இனிய முடிவினைத் தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் நன்றி

      நீக்கு
  6. நன்றாக எழுதியுள்ளீர்கள் நிஷா. பேஸ்புக்கிலும் வாசித்தேன்..இடைவெளிகள் விட்டுவிட்டு கைப்பேசியில் வாசித்ததால் விரிவாகப் பதிலேதும் இடவில்லை. அதற்கும் இங்கு எழுதிவிட்டீர்கள். நல்லதாப் போச்சு.

    உண்மைதான், ஜல்லிக்கட்டுக் தடை நீக்கம் பெற்றபிறகும் நம் சமூக நலனுக்குத் தேவையான அனைத்து விஷயங்களுக்காகவும் ஒன்றுபட்ட எழுச்சி வேண்டும். செய்வார்கள், நடக்கும் என்றே நம்புகிறேன். களத்தில் இருக்கும் சில நண்பர்களும் அதையே தான் சொல்கிறார்கள். தமிழன் என்று பூர் பெருமை வந்திருக்கிறது நம் தமிழ்ச் சிங்கங்களைப் பார்த்து! ஆங்கில மோகத்தில் சிக்கி அழிந்துவிட்டான் என்று தூற்றிக்கொண்டிருந்த இளைஞர்கள் அப்படியல்ல என்று உலகுக்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அமைதியான முறையில் அறப்போராட்டம் செய்யும் நம் மக்களைப் பார்த்தால் மகிழ்வும் பெருமையும் ஓங்குகிறது. தொடரட்டும் இந்த எழுச்சி! வெற்றிகள் பல கிடைக்கட்டும். நாமும் எழுத்தில் உரம் ஊட்டிக் கொண்டே இருப்போம்.
    "ஆளுவோர்க் காட்பட் டேனும்,
    அரசியல் தலைமை கொள்ள
    நாளுமே முயன்றார் தீயோர்;
    தமிழேநீ நடுங்க வில்லை!
    "வாளினை எடுங்கள் சாதி
    மதம்இல்லை! தமிழர் பெற்ற
    காளைகாள்" என்றாய்; காதில்
    கடல்முழக் கத்தைக் கேட்பாய்!" உண்மையில் என் காதில் கடல்முழக்கம் கேட்கிறது, தமிழில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டது கடல் முழக்கம் என்பதனால் தான் அதை அடக்கி ஒடுக்கி விட்டார்களோ கிரேஸ். கடலை அடக்க முடியும் என கனவு காண்கின்றார்கள். கடல் பொங்கிச்சீற ஆரம்பித்தால் என்னாகும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தும் இன்னும் திருந்தவே இல்லை.

      நீக்கு
  7. தன்னெலுச்சிப்போராட்டம் வெல்லட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெல்ல வேண்டும் என எதிர்பார்த்தோம் ஐஆ

      நீக்கு
  8. முக்கியமாக கலவரங்களோ, விரும்பத் தகாத சம்பவங்களோ நடக்காமல் கட்டுக் கோப்புடன் இருப்பதைப் பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அதனால் தான் அரசே களமிறங்கி திருஷ்டிகழித்துக்கொண்டார்களாம் நாம் அனைவரும் ஒன்று பட்டோம் அலல்வா? அது நிறைவே

      நீக்கு
  9. //ஜல்லிக்கட்டு அவசியமா இல்லையா?//
    நம் சிலரின் இந்த மனநிலையே இந்த குள்ள நரிகளுக்கு உள்புகுந்து குதற வாய்ப்பைக் கொடுக்கிறது என்பது என் அபிப்பிராயம்.
    ஜல்லிக்கட்டை - இன்னும் சற்று ஒழுக்குபடுத்தி விருத்தி செய்வோம். ஒழித்தல் முட்டாள்தனம்.
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை இளஞர்கள் உணர்தது மகிழ்வே!
    பொதுமக்களுக்கு எந்த இடையூறுமின்றி, பெண்களுக்கு உரிய பாதுகாப்பையும், மரியாதையும் நம் இளைஞர்கள் கொடுத்தார்கள்
    என்பதைக் பார்க்கையில், கேட்கையில் , மனம் மிக மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புப்படி ஜல்லிக்கட்டு அவசியமில்லை என தான் சொல்வேன். ஆனால் ஜல்லிக்கட்டை பிரதானமாக்கி எம்மக்களின் ஒன்றுபடலே என்னை ஈர்ந்தது. அதனால் என் பர்வையில் ... அன்று பதிவெழுதும் போது இந்த ஆராய்ச்சி அவசியமில்லை என தோன்றியது.

      நீக்கு
  10. நல்லதொரு துவக்கம். தொடரட்டும்.

    சிறப்பான கட்டுரை.... பாராட்டுகள் நிஷா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார். உங்கள் அனைவரின் ஊக்கமும் தான் எழுத வைக்கின்றது

      நீக்கு
  11. ***//ஜல்லிக்கட்டு அவசியமா இல்லையா?//
    நம் சிலரின் இந்த மனநிலையே இந்த குள்ள நரிகளுக்கு உள்புகுந்து குதற வாய்ப்பைக் கொடுக்கிறது என்பது என் அபிப்பிராயம்.***

    அதாவது இப்படி யோசிக்கவே கூடாது? பகுத்தறிதல் சுத்தமான தப்பு? அப்படிங்களா?

    சரி, புதுக்கோட்டை மஞுவிரட்டில் ராஜா (30) , மோஹன் (30) னு ரெண்டு பேரு மாடு முட்டி இறந்து இருக்காங்க. அதையும் மூடி மறைச்சுட்டு இருக்கணும்? அப்படித்தானே? இல்லைனா குள்ள நரிகள் வந்து உம்மைத் தேடி வந்து குதறிவிடும்?

    நான் ஜல்லிக்கட்டில் போய் காளையை அடக்கணும்னு சொன்னால் என் தாயார், போகாதேனு தான் சொல்லுவார். அவருக்கு மகனை தற்கொலை பண்ண சொல்லியனுப்பி காக்கும் தமிழ் கலாச்சாரமா இல்லை தன் மகன் உயிரானு வந்தால் மகன்தான் முக்கியம். நானும் என் தாயார் சொல்றபடிதான் கேட்பேன். அதாவது காளையை நிம்மதியாக இருக்கவிட்டு நானும் உயிரோட இருக்க வழி பார்ப்பேன்.

    உங்க தாயார் எப்படி, யோகன், பாரீஸூ? போ மகனே போயி மாட்டை அடக்கி தமிழ் கலாச்சாரம் காத்து சாவு! னு சொல்லி உம்மை சாக அனுப்பி வைப்பாரா?

    சும்மா உள்ள மக்களை தூண்டிவிட்டு குளிர் காய்கிற தமிழனையெல்லாம் மொதல்ல அறையணும். எங்கேயோ உக்காந்துக்கிட்டு அப்பாவிகளை தூண்டிவிட்டு அவர்களை பலிகொடுக்கும் இவர்கள் என்ன ரகம் இல்லை "இனம்"னு தெரியவில்லை.

    ஐந்தறிவே பெற்ற சும்மா இருக்க மாட்டை மிரட்டி, அது முட்டி சாவுறதுதான் தமிழ் கலாச்சாரம் காப்பதுனு எவன் இவர்களுக்கு சொன்னான்னு தெரியலை??

    உம்மைப்போல் தூண்டி விட்டவன் எல்லாம் உயிரோட திரிகிறான். பாவம் எவனோ ஒரு அப்பாவி தமிழ் கலாச்சாரம் காக்கிறேன்னு சாகிறான். எவனையோ பலி கொடுத்து இவனுக தமிழ் கலாச்சாரம் காக்கிறானுகளாம்.

    போய் சொல்லுங்க, மோகன், ராஜா அம்மாட்ட, மனைவி, சகோதரிகளிடம், "உங்க மகன் வீரன். நான் அவனைத் தூண்டிவிட்ட கோழைம்மா" னு! அதானே உண்மை, யோகன் பாரீஸு??



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நீண்ட கருத்துக்கள் அத்தனையும் உண்மை தான். எம்மிடம் எதற்கும் பதிலில்லை. ஜல்லிக்கட்டு தேவையா என என்னிடம் எவரேனும் கேட்டால் இல்லை வேண்டாம் எனத்தான் சொல்வேன். ஆனால் ஜல்லிக்கட்டை பிரதானப்படுத்தி இந்த மக்களின் எழுச்சி அத்தனை எதிர்ப்புணர்வையும் அடக்கி தமிழனாக மட்டும் ஒன்றுபட சொன்னது. உடலும் உணர்வும் இணைந்து இது எமது மக்களின் அடக்குமுறைக்கெதிரானது என சிலிர்த்தெழ சொன்னது. அரசின் அடக்குமுறைக்கு பலியானாலும் நாம் வென்றிருக்கின்றோம் அல்லவா? நம் ஒன்றுபடல் அரசினை அதிர செய்திருக்கின்றது அல்லவா?

      நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!