04 ஜனவரி 2017

ஆடுவது தாண்டவம் தானா?

தட்சனின் மகளென்றாய் ஆடுவதும் தாண்டவமென்றாய்
நிலவென்றாய் உலகென்றாய் விட்டிலானேனென்றாய்
விட்டகுறை தொட்ட குறை அத்தனையும் உண்டென்றாய்
சொல்லுக்குள் சொல்லாகி சோக கீதம் படைத்தாய்
அத்தனையும் அர்ப்பணிப்பாய் ஆண்டாளுக்கே என்றாய் 
முழுமதியாள் முகம் கண்டால் சுடுகின்றதே என்றாய்
சுட்டு விடும் சூரியனை தூரமாய் ஒதுக்கி விட்டாய்
எட்டி நிற்கும் நிலவினையே தொட்டு விடத்துடிப்பாய்
தொட்டு விட்ட அகமனதை புறமாக்கி தொலைத்திடுவாய்

.
நீ நடந்தால் உடன் நடக்கும் நிலவுக்கும் களங்கமுண்டு
வெண்மதியாள் முகம் மறைக்கும் நாட்களும் இங்குண்டு
நாள் தோறும் தனை சுற்றி தனில் தானே உயிர்த்து
தனை சுற்றும் போதினிலே பூக்கோளமதை குளிரச்செய்து
கதிரவனின் கதிர்க்கணைகள் கன்னம் வைத்து தாக்காது
காத்திடும் அரும்பணிக்கோர் மகுடமுண்டு நீ உணர்வாய்
முழுமதியும் காரிருளும் நிறைமதியாள் வசமாகி
தானியங்கியாவதனால் ஞாலமதில் காலமது கனிகிறது.
எதற்கும் ஒரு காலமுண்டு, காரணமும் பல உண்டு
நெருப்பாற்றை கடந்து விடும் நெஞ்சுரம் தனை பெறவே
புடம் போடும் பணிதனையே பக்குவமாய் பதம் செய்தே
தடம் பதிக்கும் நாளிலிலே நிலவுமகள் பின்னிருப்பாள்
மேகத்தின் நடுவினிலும் விடிந்து விடும் பொழுதினிலும்
வீட்டு வாசற்படியினிலும்  வெண்மயிலாள்  துணை வருவாள்
நின் மதியின் நினைவுகளில் சிவனாடும் நர்த்தனமாய்
வரியாகும் காரணத்தை சுயஅகத்தில் தேடுவோரை
துச்சமின்றி தூரமாக்கி சிந்தனையை பறக்க விடு
நித்திலம் போற்றிடும் நாளும் வரும், நிம்மதியே வசமாகு
..


11 கருத்துகள்:

 1. அருமையான தன்னம்பிக்கைக் கவிதை.

  பதிலளிநீக்கு
 2. இரசித்தேன் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. வசமாகட்டும் நிம்மதி.

  பதிலளிநீக்கு
 4. அருமை ஒவ்வொரு வரியும் அருமை!! இரசித்தோம்...!!

  பதிலளிநீக்கு
 5. அருமையான கவிதை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. துச்சமின்றி தூரமாக்கி சிந்தனையை பறக்க விடு
  நித்திலம் போற்றிடும் நாளும் வரும், நிம்மதியே வசமாக

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான வரிகள்! அருமை! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 8. ருத்ரனின் தாண்டவம் அறிவோம்.. இங்கே தட்சன் மகளின் தாண்டவம் உங்கள் எழுத்துத்தாண்டவத்தோடு இணைந்து... ஆஹா.. அபாரம்..

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!