21 நவம்பர் 2016

எங்கே செல்லும் இந்தப்பாதை....?

எங்கே செல்லும் இந்தப்பாதை....?
பொதுத்தளத்தில் நாம் ஒரு பதிவை எழுதும் போது அப்பதிவானது தனி நபர் பதிவென்பதிலிருந்து அவர்கள் பகிரும் விதத்தில் பப்ளிக், நட்பு என பொதுப்பதிவாக பலரின் விமர்சனத்துக்காகவே முன் வைக்கப்படுகின்றது.
இதில் பலர் ஒரு கருத்தை பகிர்ந்து விட்டு அவர்கள் எழுதும் கருத்தை படிக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பதும், நிர்ப்பந்திப்பதும், லைக் செய்யவே பதிவு என நினைத்து தேவையற்றவைகளை பகிர்வதும், எதிர்க்கருத்து வந்தால் இது என்னிடம் என் இஷ்டப்படி தான் எழுதுவேன்.. என்னை கேட்க நீ யார்? உனக்கு பிடிக்காவிட்டால் அன்பிரெண்டு செய், பிளாக் செய்து விட்டு கண் காணாமல் போய் விடு என சொல்வதுடன் தனிப்பட்ட ரிதியில் அதுவரை நம்பிக்கையோடு பகிரப்பட்ட இன்பாக்ஸ் சொந்த தகவல்களையும் வெளிப்படுத்தி நீ அப்படி பட்டவன். இப்படிப்பட்டவன் என சொல்வதோடு நீ உருப்படுவியா உன் குடும்பம் உருப்படுமா என்பதிலிருந்து அவர் வீட்டு பெண்களையும் சந்திக்கு இழுத்து சாபங்கள் இட்டு எரிதணலாய் வார்த்தைகளை அள்ளி வீசுவதும் தான் நம் தமிழரின் சகிப்புத்தன்மையில் எல்லையோ?
அது வரை நல்லவனாய் நட்பில் இருந்தவன் ஒரே ஒரு எதிர்க்கருத்தில் துரோகியாய், விரோதியாய் ஆகுவதெப்படி ?
எதிர் விமர்சனத்தினையும் ஏற்று அணுவளவு கூட சிந்திக்க மறுப்போராய் அதிமேதாவிகள் என தம்மை சொல்லிக்கொள்ளும் கற்றோர் சமூகம் விட்டுக்கொடுத்தலையும், பொறுமையையும் அடுத்தவர்களுக்கு போதிக்க முன் தம்மைத்தாம் நிதானித்து பார்க்க மாட்டார்களோ?
மது குடித்து மதி மயங்கி நடுத்தெருவில் நின்று தன் மனைவியையும் பிள்ளையையும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டி அடித்து மானத்தை வாங்கும் படிக்காத பாமரன் கூட நிதானத்தில் இருந்தால் தன் பிழையை ஒப்புக்கொண்டு இனிமேல் குடிக்க மாட்டேன் என சுயமாய் சிந்தித்து பொய்ச்சத்தியம் ஏனும் செய்வான்.
பலகலையும் கற்றோம் என தம்மை தாம் மார்தட்டிக்கொள்பவர்களோ மதிமயங்கி அறிவை அடகு வைத்தது போல் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என மனக்கண்ணை மூடிக்கொண்டே நம்புவதோடு சுயமாய் சிந்திக்கும் திராணி இன்றி மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாய் ............... ?
எங்கே செல்லும் இந்தப்பாதை....?
விமர்சனம் என்பது நல்லதை மட்டுமல்ல நல்லதல்லதையும் எடுத்துரைப்பதாய் இருந்தால் தானே நம் அறிவும், புரிதலும் விசாலமாகும்,பதிவு செய்யும் அத்தனையையும் ஆகா, ஓகோ, அருமை, எருமை, சூப்பர் என சொல்ல வேண்டும் எனில் எதற்காக பொதுத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும் ?
ஒரு பதிவுக்கு எதிர்க்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனவிசாலமற்றவர்களாய் மாறுபட்ட கருத்தை சொல்லி விட்டால் 20 வருடம் முன் நாட்டை விட்டு வந்த உனக்கென்ன தெரியும் என்பதும், நாட்டுக்குள்: வந்து இதையெல்லாம் எழுது என்பதும், உள்ளதை உள்ளபடி சிந்திக்க மறுப்பதுமாய்.......?
உண்மைகள் கண் மூடி உறங்க பொய்கள் கூடாரமடித்து நாட்டியமாடி நம் கண்களை ஏமாற்ற உதவும் உள்ளம் கொண்டோரும் நியாயம் தெரிந்தோரும் நமக்கென்ன என ஒதுங்கிச்செல்ல இம்மாதிரி வீண் வைராக்கியங்கள் காரணமாகின்றன என்பதை நாம் என்று தான் உணரப்போகின்றோம்?

10 கருத்துகள்:

  1. எங்கே செல்லும் இந்தப்பாதை அது தான் எனக்கும் தெரியல அக்கோ !

    பதிலளிநீக்கு
  2. சரியான கருத்து. வரம்பு மீறிய வார்த்தைகள் வருத்தம் தருகின்றன.

    பதிலளிநீக்கு
  3. எதிர்க்கருத்தே சொல்லக் கூடாது என்றால் என்ன செய்ய! சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள். நான் அப்படிச் சொல்லவில்லை, நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பார்கள். அவர்கள் நினைக்கும் கருத்தைத்தான் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் போலும்.

    பதிலளிநீக்கு
  4. அவங்க அவங்க நிலையைப் பொறுத்தது....அக்கா

    பதிலளிநீக்கு
  5. என்ன செய்வது சகோதரியாரே
    இப்படியும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  6. தங்களது ஆதங்கத்தை நாகரீகமாக, அருமையாக பகிர்ந்த விதம் நன்று
    சிலர் மட்டுமல்ல பலரும் இப்படித்தான் இவர்கள் 'நான் அறிவாளி' என்ற கொள்கையாளர்கள் அல்ல 'நான்தான் அறிவாளி' என்ற கொள்ளை'க்காரர்கள்
    மாற்றுக்கருத்தையும் ஏற்று அதற்கும் பக்குவமாக பதில் சொல்வதே நல்ல எழுத்தாளனுக்கு அழகு இல்லையே இழுக்கு.

    என்னை எடுத்துக்கொள்ளுங்கள் உங்களது கருத்துக்களுக்கு அழுதாவது நான் பதில் சொல்வதில்லையா... எல்லோரும் என்னைப்போல் அப்பாவியாக இருப்பதில்லை.
    விட்டுத்தள்ளுங்கள் பிறருக்காக நமது கொள்கையை மாற்றவேண்டும் என்பதில்லையே...

    பதிலளிநீக்கு
  7. அடேங்கப்பா நிஷா நீங்க என்ன வருண் மாதிரி சிந்திக்க ஆரம்பிச்சுட்டீங்க!! :)))

    பார்த்தீங்களா? உங்களைப் புகழ்வதுபோல் வருண் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான்? ஆக இவ்வுலகம் அபாயகரமானதுதான். :(

    யாருக்கு? மிகவும் சிந்திப்பவர்களுக்குத் தான். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு போய்விட்டால் மன உளச்சல் கம்மி! ஆக ரொம்ப சிந்திக்காதீங்க, நிஷா! :))


    என்னடா பொல்லாத வாழ்க்கை. இதுக்குப் போயி அலட்டிக்கலாமா? னு போய்க்கிட்டே இருங்க! :)

    பாருங்க, நிஷா! அறிவுரை வழங்க அருகதை இல்லாதவ(ருண்)னையெல்லாம் அறிவுரை சொல்ல வச்சுட்டீங்க! ஆமா எல்லாம் உங்க தப்புத்தான்! வேறென்ன?? :)

    பதிலளிநீக்கு
  8. நிஷா சகோ/நிஷா உண்மைதான் இது. நாங்களும் முதலில் நமது கருத்தைப் பதியலாமே என்று அது எதிர்க்கருத்தாக இருந்தாலும் அதையும் அதீதமாய் வார்த்தைகள் பயன்படுத்தி விமர்சிக்காமல், நயம்பட நம் கருத்தை உரைத்த போது அதை ஏற்கும் மனப்பக்குவம் அற்றவர்கள் உள்ளதை அறிந்தோம். அப்படியென்றால் பதிவுலகம் எதற்கு, கருத்துக்கள் பரிமாற்றம் எதற்கு நம் அறிவை, சிந்திக்கும் திறனை விரிவாக்கிக் கொள்ளத்தானே? என்று நினைத்த காலங்களும் உண்டு. பின்னர் எங்களை மாற்றிக் கொண்டோம். எங்கள் பதிவுகளுக்கும் எதிர்க்கருத்துக்கள் வந்ததுண்டு. ஆனால் எதையும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. இப்போதும் பதிவர்கள் நண்பர்கள் வட்டத்தில் எதிர்க்கருத்துக்கள் இருந்தால் அதை முன்வைப்பதுண்டு. மனம் புண்படாமல்... எல்லாதளத்திலும் அல்ல. எப்போதுமல்ல...உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்...

    பதிலளிநீக்கு
  9. நல்ல விவரமான அலசல். வலையுலகம் என்றால் என்ன, எப்படி செல்வது என்று இந்நேரம் ஒரு முடிவுக்கு வந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனது வலைத்தளத்திலும் சில பெயரிலிகள் (Anonymous) எழுதிய தேவையற்ற கருத்துரைகள் காரணமாக, எனது Comments அமைப்பில் Anonymous தேர்வை நீக்கி விட்டேன். தொடர்ந்து எழுதுங்கள்..

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!