எத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா?
அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்!
தமிழ் மொழியுடனான பள்ளி வாழ்வென்பது என் 12- 13 வயதி்ன் பின் தட்டு தடுமாறித்தான் சென்றது.ஆனால அந்த 12. 13 வயதிலேயே நான் முழு வாழ்க்கைகுமாக பெறவேண்டிய மகிழ்ச்சியை அடைந்திருப்பேன்! அத்தோடுஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் எனக்கான முத்திரையை பதிந்திருக்கின்றேன் என்பதை ஊரை விட்டு வந்து 25 வருடங்களாகியும் எனக்கு கற்பித்த நினைவுகளை ஆசிரியர்கள் என்னுடன் பகிரும் போது உணர்கின்றேன்.
கடந்த வாரம் விடுமுறைக்கு வந்திருந்த என் தங்கை என் நினைவுகளை
மீட்டி விட்டுச் சென்றார்! அனைத்திலும் திறமையாய் அனைவரிலும் முதலாய்... டாக்டராய் இருக்கும் தம்பியை விடவும் என் அக்கா பள்ளியில் சிறந்து விளங்கினாள் என என்னை குறித்து தன் கணவரிடம் அறிமுகம் செய்த போது என் கண்களில் நீர்..!
நாடு விட்டு நாடு புலம் பெயர்தலால் நான் இழந்தைவைகள் எத்தனை? அந்நிய மொழியும், நாட்டிலும் நான் பெற்றவைகளும் அனேகமாயிருப்பினும் தாய் மொழியில் தாய் நாட்டில் நாம் பெறக்கூடியவை அனைத்து இழப்புக்கள் தானே?
16 வயதில் சுவிஸ்ஸர்லாந்து நாட்டுக்கு வந்து முதல் ஆறுவருடங்கள் தமிழ் மொழிக்கும் எனக்குமான உறவு வார இறுதிகளில் மட்டும் அதுவும் பேச்சளவில் என்றாகியும் இருந்தது. ஆங்கில எழுத்துக்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பில்லாத ஜேர்மன் மொழி அதாவது டொச் மொழியை கற்க தமிழ் மொழியை மட்டுமல்ல அதுவரை உறவாயிருந்த ஆங்கிலமும் கூட விலகித்தான் வைக்க வேண்டி வந்தது!எனினும் தமிழ் மொழி மீதான என் பற்று வளர்ந்ததே தவிர குறையவே இல்லை. கண்டதும் கற்க பண்டிதன் ஆகலாம் என்பதை இன்று வரை என்னில் ஆராய்ந்து கொண்டுள்ளேன்
பதிவில் எதையோ ஆரம்பித்து எங்கோ சென்று கொண்டிருக்கின்றேன். நான் இங்கே பகிர வந்த விடயமே வேறு.. என் சொந்த அனுபவங்களை வேறொரு பதிவில் பகிர்கின்றேன்.
எனக்குள் என்றுமே பாடசாலை நாள் என்பது எனக்கு இனிக்கும் நினைவலைகள் தான். மீண்டும் வராத இனிய நினைவலைகள்!
நம் பாடசாலை நாட்களில் நாம் பேச்சு வழக்கிலான பல பாடல்களை பாடி விளையாடி இருப்போம். அம்மாதிரியான விளையாட்டு பாடல்களை தொடராக இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன்.
நான்காம்,ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலே நானும் என் தோழிகளும் பாடசாலை இடைவேளைக்காகவே காத்திருப்போம். என் வகுப்பில் ஆண்பெண் இணைந்து படித்தாலும் பெண்கள் மட்டுமே சேர்ந்து விளையாடகூடிய விளையாட்டில் ஆண்களும்கல்ந்து கொள்வார்கள். அப்படிபட்ட ஒரு விளையாட்டு தான் பெண்களுக்கான பூப்பறிக்க போகிறோம் எனும் பாடலுடன் கூடிய விளையாட்டு.
படம் நன்றி இணையம்
படத்தில் பையன் துணியை கையில் வைத்திருக்கின்றான்
ஆனால் நாங்கள் பூக்கொத்து அல்லது இலைக்கொத்தை வைத்து தான் விளையாடினோம்
குறைந்தது 20- 26 பேர் சுற்றி வர பெரிய வட்டமாக நெருங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். யாரும் பின்பக்கம் திரும்பி பார்க்க கூடாது.. விளையாட்டின் ஆரம்பத்தில் ஒருவர் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் கையில் ஒரு மலர் கொத்து கொடுக்கப்படும். அது மலரோ ஆலமர இலையோ வம்மி மர காயோ பூவரசம் தடியோ எதுவானாலும் அது தான் அந்த வயதில் பூ...
பூவை கையில் வைத்திருப்பவர் பாட வேண்டும். பாடிக்கொண்டே வட்டமாக அமர்ந்திருப்பவர்களை சுத்தி ஓடவும் வேண்டும்..
பூப்பறிக்க போகிறோம்..போகிறோம்.. போகிறோம்.. என சுத்தி சுத்தி ஓடிக்கொண்டே பாட அமர்ந்திருப்போர் யாரைபறிக்க போகிறீர் போகிறீர்
என எதிர்க்கேள்வி கேட்க வேண்டும்..
ஓடுபவர் சிறிது நேரம் அமைதியாக சுத்தி சுத்தி ஓடிய படியே தம் கையில் இருக்கும் மலர்கொத்தை யாராவது ஒருத்தர் பின்னால் மொதுவாக வைத்து விட்டு ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அவர் விரும்பினால் யார் பின்னால் தான் மலர்கொத்தை வைத்தாரோ அவர் தன்னை எந்த பக்கத்தாலும் துரததிப் பிடிக்க முடியாத இடத்தில் ஓடிய படியே..அவர் பெயரைச்சொல்லி
உதாரணமாக நிஷாவை பிடிக்க போகிறோம் போகிறோம்
என சொல்லி ஓடினால் அந்த நபர் உடனே திரும்பி பார்த்து மலர்கொத்தி்னை எடுத்து கொண்டு முன்னால் ஓடுபவரை அந்த மலர்க்கொத்தால் தொட முயற்சிக்க வேண்டும். ஆனால் முன்னால் ஓடுபவர் பின்னால் வருபவர் இடத்தில் போய் உட்கார்ந்து வட்டத்தை நிரப்பி விட்டால் மீண்டும் விளையாட்டு ஆரம்பமாகும்.
அதே நேரம் முன்னால் ஓடுபவரை பின்னால் வருபவர் மலரால் தொட்டு விட்டால் மீண்டும் முன்னவரே ஆரம்பிக்க வேண்டும்.
இப்படி நாள் முழுதும் சுவாரஷ்யமாக ஒவ்வொரு பூவின் பெயரோடும் நண்பர்கள் பெயரோடும் விளையாடுவோம். பூக்களும் நண்பர்கள் பெயரும் மனப்பாடமாகியே விடும்.
அது ஒரு பொற்காலம்தான்...!
இப்படியாக நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.அப்படி ஒருசில பாடலகளை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
ஓடு
ஓடு ஓடு
என்ன ஓடு ? நண்டோடு
என்ன நண்டு ? பால்நண்டு
என்ன பால்? கள்ளிப்பால்.
என்ன கள்ளி? சதுரக்கள்ளி
என்ன சதுரம் ? நாய்ச்சதுரம்
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி,
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளத்துநத்தை
என்ன குளம்? பெரியகுளம்.
நட்புக்கள் தங்கள் நினைவலைகளில் தோன்றுவதை பின்னூட்டங்களில் பகிர்ந்தால் மகிழ்வேன்.
இப்பதிவு தொடராக வரும்.!
வணக்கம்
பதிலளிநீக்குஉண்மைதான் இளமைக்கால நினைவுகளை எம்மால் எப்போதும் மறக்கமுடியாது... அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ரூபன்!
நீக்குஅருமையான நினைவலை. நானும் இந்த விளையாட்டை சிறுவயதில் விளையாடி இருக்கிறேன். நினைவுகளை மீட்டு தந்ததற்கு நன்றி நிஷா!
பதிலளிநீக்குரெம்ப நன்றி செந்தில் குமார்!
நீக்குஇதே விளையாட்டை விளையாடி இருப்பது மகிழ்ச்சி தருகின்றது.
வணக்கம்,
பதிலளிநீக்குஅருமையான நினைவலைகள்,
இப்படியும் பாடியதாக நினைவு,
பூ பறிக்க வருகிறோம் வருகிறோம்,
எந்த மாதம் வருகிறீர் வருகிறீர்
தை மாதம் வருகிறோம் வருகிறோம்
எந்த பூ வேண்டும் வேண்டும்
ராணி பூ வேண்டும் வேண்டும்.
இரு அணியாக பிரிந்து நின்று, அனைவரும் கைக் கோர்த்துக் கொண்டு ஒவ்வொரு வரி பாடும் போதும் அந்த அணி முன் சென்று கேட்க வேண்டும். அடுத்து பதில் சொல்லும் அணி முன் சென்று பதில சொல்ல வேண்டும் யார் பெயர் சொல்கிறார்களோ, அவர்களை கேட்ட அணி இழுப்பர் அவர்கள் விடாமல் இழுப்பர், அவர் யார் பக்கம் செல்கிறாரோ அவர் அணி வெற்றிப் பெற்றதாக, இப்படியே தொடரும்.
பகிர்வுக்கு நன்றி.
கிட்டத்தட்ட கபடி கபடி போலா?அருமையாக உங்கள் நினைவலைகளை மீட்டதுக்கு நன்றிமா! தொடருந்து வாருங்கள்.
நீக்குஅந்தக்காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி இன்று அதை விளையாடினால் எப்படி இருக்கும் என்றும் யோசித்துப்பார்த்தேன் கிழுகிழுப்பாக இருக்கிறது நாட்டுக்கு வாருங்கள் கடற்கரை மண்ணில் எம் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்து இந்த விளையாட்டை விளையாடுவோம்
பதிலளிநீக்குஹாசிம்@ ஊருக்கு வந்தால் முதலில் கடற்கரைக்கு கூட்டி போய் இந்த விளையாட்டை விளையாடி விட்டுத்தான் கடலில் நண்டு பிடிசித்து சுட்டு சாப்பிடணும். சொல்லி விட்டேன். எனை ஊருக்கு கிளப்புவதென்னும் முடிவில் தான் இருக்கின்றீர்கள். வரேன் வரேன். சீக்கிரம் வருவேன்.
நீக்குசிறிய வயது நினைவுகளை ஆசை போடுவதே ஒரு சுகம் தான்.
பதிலளிநீக்குதங்களின் இந்த பதிவின் மூலம், நானும் என்னுடைய பள்ளி நாட்களுக்கு சென்று வந்தேன்.
முதல் வருகைக்கு நன்றி சார்.தொடர்ந்து வாருங்கள். உங்கள் பள்ளி நாட்கள் நினைவிலிருந்தால் அதையும் பகிருங்கள்.
நீக்குதி. ஜ அவர்கள் டெல்லியிலெயே
பதிலளிநீக்குபலகாலம் இருந்தாலும் அவர் நினைவுகள் கதைகளாய்
எப்போதும் காவிரிக்கரையைச் சுற்றியே இருக்கும்
அப்படித்தான் நம் போல் பலரின் நினைவுகளும்..
நானும் போய் வந்தேன்
மனம் தொட்டப் பதிவு
வாழ்த்துக்கள்
எங்கிருந்தாலும் தமிழ் எம் உயிர் மூச்சென்பதால் நினைவில் நிற்கத்தான் செய்கின்றது. நன்றி ஐயா!
நீக்குநானும் பழமையான நினைவுகளில் மூழ்கினேன் இனிவரும் சந்ததிகளுக்கு இது கிடைக்குமா ? என்பது ஐயமே...
பதிலளிநீக்குஇனி வரும் சந்ததிக்கு கிடைக்க முன் நம் சந்ததிக்கே இவை கிடைக்கவில்லையே என்பது தான் பெரும் சோகம். நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குஅருமையான நினைவுகளை மீட்டுள்ளீர்கள் அக்கா நம்மால் என்றும் மறக்க முடியாத பொற்காலம்தான் அது பள்ளியில் முதல் மாணவியாய் கெட்டிக்காரியாய் திகழ்ந்த உங்கள் பழைய நினைவுகள் இன்னும் சிறப்பு
பதிலளிநீக்குபுலம் பெயர்ந்து அங்கு நீங்கள் அனுபவித்த சிரமங்கள் அனுபவங்கள் வாரக்கணக்கில் எழுதலாம் என்று நான் நினைக்கிறேன் இப்போது நீங்கள் இருக்கும் நிலை கண்டு நாங்கள் மகிழ்கிறோம் ஆனால் இந்த நிலை நீங்கள் அடைவதற்கு என்ன பாடு பட்டுரிப்பீர்கள் என்பதை உணர முடிகிறது அறிந்தும் இருக்கிறேன்
பூப்பறிக்க போகிறோம் என்ற விளையாட்டு நான் விளையாடியதில்லை ஆனால் சிறு வயதுப்பாடல் விளையாட்டுவிளையாடி இருக்கிறோம் அந்த வகையில் நீங்கள் பாடியவாறும் இருக்கும் ஓடு ஓடு என்று நீங்கள் பாடியுள்ளீர்கள் நாங்கள் கிள்ளிக்கிள்ளிப்பிராண்டியாரே என்றும் இன்னும் பல பாடல்கள் பாடியும் இருக்கிறோம் நினைவுக்கு வருகிறது இருந்தாலும் உங்கள் பதிவுகள் நினைவுகள் அனைத்தும் இங்கு தொடரட்டும் நாங்களும் படிக்கிறோம் எங்கள் நினைவுகளும் அதில் தவழட்டும்
நன்றியுடன் நண்பன்
வாங்க வாங்க பெரியவரே@ நீங்க இந்த விளையாட்டை விளையாட வில்லை என்பதே ஆச்சரியம் தான்.கிள்ளிக்கிள்ளி பிராண்டியாரும் இத்தொடரில் வரும்.
நீக்குவருகைக்கும் நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி.
நம் காலத்தில் ,வீட்டுக்கு வெளியே ஓடியாடி விளையாடியது சுகமான நினைவுகள்தான் ,ஆனால் ,இன்றைய தலைமுறை ,இன் டோர் கேம் மட்டுமே ஆடுகிறார்கள் ,இது ஆரோக்கியமான விஷயம் இல்லை :)
பதிலளிநீக்குஆம், வீட்டுக்கு வெளி நான் விளையாடினோம் வீட்டில் இருப்பதே இல்லை எனலாம். இக்காலத்தில் வீட்டை விட்டு வெளி வர வைக்கவே கஷ்டப்பட வேண்டி இருக்கின்றது.
நீக்குவருகைக்கு நன்றிங்க!
//கடந்த வாரம் விடுமுறைக்கு வந்திருந்த என் தங்கை என் நினைவுகளை மீட்டுச்சென்றாள்//
பதிலளிநீக்குமீட்டி விட்டுச் சென்றார்!
நீங்கள் சொல்வது ' கோகோ' விளையாட்டு என்று நினைக்கிறேன்.
எங்கள் பக்கங்களில்,
பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம்..
எந்த மாதம் வருகிறீர்.. வருகிறீர்..
இப்படி இன்னும் நீளமாக வரிகள் செல்லும். எனக்கு நினைவில்லை!
இந்த வசனங்களோடு பெண்கள் இரண்டு குழுவாய், இரண்டு நீளவரிசையாக ஒருவரோடு ஒருவர் கை கோர்த்து நின்று விளையாடிப் பார்த்திருக்கிறேன்!
எனக்கு நிறைய பாடல்கள் மறந்துவிட்டது.. மகளுக்கு சொல்லி கொடுக்க விளையாட்டும் ஞாபகமில்லை...
பதிலளிநீக்குஆமாம் அக்கா இதே பூப்பறிக்க வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம்... எந்தப் பூவை பறிக்க வருகிறீர்கள்....
பதிலளிநீக்குஅத்தலிப் பித்தலி மக்கான் சுக்கான் பால் பறங்கி...
என எத்தனை பாடல்களுடன் கூடிய விளையாட்டு...
ஆரம்பத்தில் உங்கள் வாழ்க்கை பற்றி சொல்லி வந்து பாதியிலேயே நிறுத்திவிட்டீர்கள்...
தங்கள் வாழ்க்கையை தனித் தொடராக பகிர்ந்து வாருங்கள் அக்கா...
புலம் பெயர்ந்ததால் பெற்றதும் இழந்ததும்...
வலிகள் வர்ணஜாலங்கள் என எல்லாமாய் எழுதுங்கள்...
நிஷா சகோ இது போலும் விளையாடியது உண்டு மகேஷ்வரி சகோ சொல்லியது போலவும். நீங்கள் சொல்லியது போல மற்றொரு விளையாட்டும் கொலை கொலையா முந்திரிக்கா நிறைய நிறைய சுத்திவா கொள்ளையடிச்சான் எங்கிருக்கான் கண்டுபிடிக்க சுத்திவா என்று சொல்லி பின்னால் இடுவது பின்னர் பிடிப்பது என்று....பூப்பறிக்க என்பது மகேஷ்வரி சொல்லியதுபோல
பதிலளிநீக்குஓடு ஓடு என்பதும் விளையாடியது உண்டு...பல சொல்லி..பழைய நினைவுகளை மீட்டியது...
துளசி அண்ணா, கீதா,
நீக்குநானும் இதையே சொல்ல வந்தேன்.. உங்கள் பின்னூட்டம் பார்த்தவுடன் இங்கேயே நானும் இணைந்தேன் :-)
நிஷா, சுற்றி அமர்ந்து குலைகுலையா முந்திரிக்கா என்று விளையாடுவோம். மகேஸ்வரி சகோதரி சொல்வது போல் பூப்பறிக்க .. :-)
பிறகு ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம், இரண்டு குடம் தண்ணி ஊத்தி இருபூ பூத்துச்சாம் இப்படியே பாடிக்கொண்டு இருவர் கைகளை கோபுரம் போல் மேலே இணைத்துப் பிடித்திருக்கவேண்டும், மற்றவர் அதன் கீழ் சுற்றி சுற்றி வர வேண்டும். கைகளைப் பிடித்திருப்பவர் திடீரென்று இடையில் வருபவரைப் பிடிக்க வேண்டும் :-)
இனிமையான நினைவுகள்.. இப்பொழுது அத்தனை பேரைச் சேர்க்கவும் முடிவதில்லை
உங்களின் சிறு வயது நினைவலைகள் என்னையும் 1980 க்கு அழைத்துச் சென்று விட்டது...
பதிலளிநீக்குஎன் பிள்ளைகளிடம் சிறுவயது நினைவுகளை சொல்லிச் சொல்லி சந்தோஷப்படுவேன்.... அந்தக் காலம் மீண்டும் வராதா என ஏக்க்கம் வருகிறது... இல்லையென்றால் இப்போது நடப்பதெல்லாம் கனவாக இருந்து சின்னப்பிள்ளையாய் மீண்டும் தூக்கத்திலிருந்து எழுந்து விட மாட்டோமா என தோன்றுகிறது....
பூப்பறிக்க வருகிறோம் நாங்களும் விளையாடி இருக்கிறோம்... மற்ற பாடல் தெரியவில்லை. இங்கே இந்தியாவில் வேறு மாதிரி பாடி ஆடுவோம் ... ஆனால் அரைகுறையுமாக நினைவிருக்கு....
இழந்ததும் பெற்றதும் .. ஹ்ம்ம்ம் உங்கள் வாழ்க்கை அனுபவங்களையும் விருப்பப்பட்டால் பகிருங்கள்.
பதிலளிநீக்குரொம்ப சமத்துப் போல நீங்கள் :-) வாழ்த்துகள் நிஷா
ரொம்ப பெருமையா இருக்கு இன்னும் நிறைய பகிருங்கள்
பதிலளிநீக்குஇன்று மாலைதான் இப்பதிவைப் படித்தேன். சின்ன வயசினிலே என்ற எனது மலரும் நினைவுகளை நினைக்க வைத்தது. தொடருகின்றேன்.
பதிலளிநீக்குஅருமை அக்கா இப்பதிவு முற்று முழுதாய் என் வாழ்வோடும் ஒத்துப்போகின்றது. இந்த விளையாட்டு நாமும் சிறுவயதில் விளையாடுவோம். ஆனால் வேறு பாடல் பாடுவோம். குலை குலையா முந்திரிக்காய் நரியே நரியே சுத்திவா என்று தொடங்கும்.
பதிலளிநீக்குஅருமை அக்கா இப்பதிவு முற்று முழுதாய் என் வாழ்வோடும் ஒத்துப்போகின்றது. இந்த விளையாட்டு நாமும் சிறுவயதில் விளையாடுவோம். ஆனால் வேறு பாடல் பாடுவோம். குலை குலையா முந்திரிக்காய் நரியே நரியே சுத்திவா என்று தொடங்கும்.
பதிலளிநீக்குமிக அருமை. நாங்கள் கூட வட்டமாய்ச் சுற்றி அமர்ந்து விளையாடுவோம். ஆனால் குலை குலையாம் முந்திரிக்காய்! என்று சொல்லி விளையாடி இருக்கோம்.
பதிலளிநீக்குஎல்லாப் பதிவுகளையும் படித்தேன். உங்கள் ஏக்கமும் உணர்வும் புரிகிறது. உங்கள் குடும்பத்தினர் அனைவருடன் நீங்கள் சேர்ந்து ஒரு பண்டிகையானும் கொண்டாடும்படி இறை அருளைப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்கு