25 டிசம்பர் 2015

குழந்தைத்தொழிலாளி!

படப்பகிர்வு நன்றி 
சேனைத்தமிழ் உலா  நண்பன். 

கூரிய பார்வையோடு, வெயிலில் உருகி
வயிற்றுப்பசிக்காய் இளமை விலை போக
வீதியோரத்தில் அமர்ந்து விடியலை தேடுமிவன்
கண்ணில் தெரிவதெல்லாம்...நாளைய எதிர்காலம்...!

திக்கெட்டும் திசையெங்கும்  யாரையும் காணலையே!
நாலு கூறு பழம் விற்றால்  நாலு உயிர்ப்பசி அடங்கும்
நாவல் பழம் விற்றிடுமோ வயிற்றுப்பசி தீர்ந்திடுமோ?
நாவரள நிற்கின்றான் நாளைய தலைவனாம் இவன்!

கல்வி கற்கும் வயதினிலே கடமையிவன் தலைமேலே
காத்திடுவான் இவனென்னும் நம்பிக்கையில் தாயங்கே!
இவன் சொல்லும் கதை கேட்டால் கண்ணீர் கூட இரத்தமாகும்!
இவன் தலையின் சுமை நாமறிந்தால் நம சுமையெல்லாம் பஞ்சாய்ப்போகும்!

தகப்பனில்லா பிள்ளையவன் சுமைதாங்கி யாகி விட்டான்
அரை வயிறும் கால் வயிறும் ஒன்றையொன்று தின்றிடுமே!
பசி என்ற சொல் தவிர இவன் உணர்ந்ததென்றுமில்லை
கருணைக்கிங்கே இடமில்லை. காலம் செய்யும் கோலம் இது!

குட்டிப்பையன் சுட்டியாய்  துள்ளிவிளையாடும் வயதில்
அமைதியாய் அடங்கியிங்கே உழைத்துப்பிழைக்கின்றான்
கால் போன போக்கில் வாழும் காளையரே கதை கேளீர்
காலமிவன் வாழ்வில் இட்ட சோகம் தனை  பாரீர்.

கருமை நிறக்கண்ணனாயிருந்து  காண்போரை கலங்க வைக்கும்
கடமை கண்ணனிவன் காலமதை எதிர்த்து  நின்று
கல்வியிலும் இவன் சிறந்து... கடமைகளை முடிப்பான்
விளையும் பயிரிவனாம், விதியை வென்றிடுவான்.

பரிதாபம் காட்ட வேண்டாம். பரிவாய் நல் வார்த்தை வேண்டாம்
பசிதாகம் தீர்த்துவிட்டால் பண்பாய் அவன் பிழைத்திடுவான்.
விடியல் அவன் வாழ்வில் உண்டு, விடைகள் நம் கரத்திலுண்டு!
கருணை கொண்ட உள்ளங்களே... கரங்களை நீர் நீட்டுங்களேன்!

22 கருத்துகள்:

  1. மிக மிக அருமை அக்கா
    அந்தப் படத்திற்கு பொருத்தமாக
    மிகவும் சிறப்பாக உள்ளது
    உங்கள் வரிகள் அத்தனையும்.

    நேற்றே நான் படித்திருக்க வேண்டும்
    தாமதமாகப் படிக்க முடிந்தது
    வருந்துகிறேன் அக்கா

    பரிதாபம் காட்ட வேண்டாம். பரிவாய் நல் வார்த்தை வேண்டாம்
    பசிதாகம் தீர்த்துவிட்டால் பண்பாய் அவன் பிழைத்திடுவான்.
    விடியல் அவன் வாழ்வில் உண்டு, விடைகள் நம் கரத்திலுண்டு!
    கருணை கொண்ட உள்ளங்களே... கரங்களை நீர் நீட்டுங்களேன்!

    சூப்பராக எழுதி முடித்தீர்கள் அக்கா வாழ்த்துக்கள் பாராட்டுக்களும் கூட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றிப்பா! நாம் வாழும் பகுதியிலாவது இம்மாதிரி குழந்தைகளை இனம் கண்டு நம்மால் இயன்றதை செய்வோம்.

      நீக்கு
  2. அருமையான கவிதை, குழந்தை தொழிலாளியின் ஒவ்வொரு நிலையையும் எடுத்துச் சொன்னது கவிதை. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் குமார், உங்கள் தொடர் வருகைக்காக நன்றி.

      நீக்கு
  3. கவிதையில் வேதனை வரிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம், கடந்து வந்த பாதை எனபதனால் அனுபவமிக்க வரிகளாயுமிருக்கும் தானே?

      நீக்கு
  4. வணக்கம்
    சகோதரி..
    கவிதையின் வரிகளை படிக்கும் போது மனம் வேதனையில் துடிக்கிறது... எல்லாவற்றுக்கும் நாகரீக வளர்ச்சியும் முதலாளி வார்க்கமும்தான் காரணம்..
    எனது பக்கம் வாருங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:        

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு நன்றிப்பா. உங்கள் பக்கம் வந்தோமே!

      நீக்கு
  5. எத்தனை சட்டம் வந்தாலும், வறுமைக்கு ஓர் முடிவு வந்தால்தான் குழந்தைத் தொழிலாளி படும் துயர் தீரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்,வறுமை மட்டுமல்ல குடிமகன்களும் திருந்தணுமே!

      நீக்கு
  6. வேதனைகள் நிறைந்த கவிதை அக்கா...
    உங்கள் எழுத்தில் வேதனைகளின் வலி நிறைந்தே காணப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்துமே கடந்து வந்த பாதையின் அனுபவித்தவைகள் அல்லவா? அதனால் என் வரிகள் நிஜம் பேசுகின்றதோ என்னமோ?

      கருத்திடலுக்கு நன்றிப்பா!

      நீக்கு
  7. அருமை! உணர்வு பூர்வமான கவிதை!! மனமும் இது போல குழந்தைகளைக் காணும் போது வலிக்கும்..வரிகள் அர்த்தம் நிறைந்தவை...ஆனால் பாருங்கள் இவன் நாளைய தலைவன் ஆவான்!!! கலாமும் சிறியவயதில் மிகவும் வறுமையில் வாழ்ந்தவர்தானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் கலாம் மட்டுமல்ல நாங்களும் தான். பசியும் பட்டினியும் உணர்ந்ததனால் தான் இம்மாதிரி சிறுவர்களில் வலியும் ஏக்கமும் புரிகின்றது.

      கருத்திடலுக்கு நன்றி.தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  8. துளசிதரன் சார் சொன்னது போல் இம்மாதிரி குழந்தைகளை காணும்போது மனது வலிக்கும். இப்போது இந்த கவிதையை படித்தவுடன் இன்னும் அதிகமாக வலிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஐயா! தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  9. நான் சார்ந்திருக்கும் சேவைச்சங்கம் மூலம்
    கூடுமானவரையில் இவர்களைப் போன்றவர்களுக்கு
    எங்க்களால் முடிந்ததைச் செய்து வருகிறோம்

    மனமசைத்துப்போகும் பதிவு

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி ஐயா! உங்கள் சேவை தொடர என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

      நீக்கு
  10. சமூக சிந்தனைச் செழுமை
    வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப நன்றிங்க! தொடர்ந்து வாருங்கள், ஏனைய பதிவுகளையும் படியுங்கள்.

      நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!