24 டிசம்பர் 2015

நான் சின்னவளாய் இருந்தபோது.- 2

இது ஒரு தொடர் பதிவு! முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன்!

பள்ளிக்கால வகுப்பு இடைவேளையில் அல்லது மாலை நேரத்தில் தோழிகளோடு ஒன்று சேரும் போது மணலில் வீடு கட்டி,அங்கேயே மணல் சோறுகறி சமைத்து விளையாடிய காலங்கள் இனிப்பானவையே!

நான் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த ஆரம்ப பாடசாலை முன்பாக ஒரு பெரிய வம்மி மரம் அகன்று விரிந்து வளர்ந்து நிழல் கொடுத்து கொண்டிருக்கும்.அந்த நிழல் தான் எமது விளையாட்டு திடல்!வம்மி மர நிழலில் தான் விளையாடுவோம்.வம்மி மரம் பூக்கும் காலங்களும் அந்த பூக்கள் குண்டு குண்டாக பூத்து குலுங்கும் போதுஅதை எட்டிப்பறித்து கைக்குள் பிடித்தால் மெதுமையாக இருப்பதனால அதை பந்து போல் உருட்டி விளையாடியதும். பூக்களை ஒவ்வொரு உதிரியாக உதிர்த்தியும் தானாய் உதிரும் போதும் தரையெல்லாம் ஆரஞ்சு, மஞ்சள் வர்ணக்கோலமிட்டது போல் அழகும் அதே வம்மி மர இலை ஆலிலை போல் அகன்று விரிந்திருப்பதால் முன்னாலிருக்கும் பிள்ளையார் கோயில் பிரசாதம் வாங்கவும்,யாராவது நேர்த்தி கடனுக்காய் பொங்கலிட்டால் பொங்கல் வாங்கிச்சாப்பிட தட்டாவதுமான இனி நினைவலைகள் இன்னும் மனதுக்கு இனிமை தருவதாய் இருக்கும். 

படம் நன்றி இணையம். 

நம் பால்யகால நினைவுகளை கிளரும் இன்னொரு பாடல்...வார்த்தையாடல் எவ்வளவு அழகாக வந்து விழுகின்றது.

நீ எங்கே போனாய்?
ஊருக்குப் போனேன்.
என்ன ஊர்? மயிலாப்பூர்
என்ன மயில்? காட்டுமயில்
என்ன காடு? ஆறுகாடு
என்ன ஆறு? பாலாறு
என்ன பால்? கள்ளீப்பால்
என்ன கள்ளி? இலைக்கள்ளி
என்ன இலை? வாழைஇலை
என்ன வாழை? கற்பூர வாழை
என்ன கற்பூரம்? ரசக்கற்பூரம்
என்ன ரசம்? மிளகு ரசம்
என்ன மிளகு? வால்மிளகு
என்ன வால்? நாய்வால்
என்ன நாய்? மரநாய்
என்ன மரம்? பலாமரம்
என்ன பலா? வேர்ப்பலா
என்ன வேர்? வெட்டிவேர்
என்ன வெட்டி? பனைவெட்டி
என்ன பனை? தாள்பனை
என்ன தாளி? விருந்தாளிi
என்ன விருந்து? நிலாவிருந்து
என்ன நிலா? பிறைநிலா
என்ன பிறை? நெற்றிப்பிறை
என்ன நெற்றி? பெண்நெற்றி 
என்ன பெண்? மணப்பெண்
என்ன மணம்? பூமணம்
என்ன பூ? மாம்பூ
என்ன மா? அம்மா.

பொதுவாகவே ஏட்டிக்குப்போட்டியாக பேசும் போது வாயாடி எனும் பட்டம் தானாகவே ஒட்டிகொள்ளும்.ஆனால் அன்றைய காலகட்டத்தில் வழிவழியாக வந்த பாடல்கள் ஏட்டிக்குபோட்டியாக கேள்விக்கு எதிர்கேள்வியொடு வருவதையும் அவைகள் அறிவை வள்ர்ப்பதாக இருப்பதையும் கவனித்தால் நம் முன்னோர்கள் நமக்கென விட்டு சென்ற பல அரிய பொக்கிஷங்களை நாம் என்ன செய்ய போகிறோம் எனும் கேள்வி ஏழாமல் இல்லை.

அப்படியே மீட்டிப்பாருங்கள். சில நேரம் இந்தப்பாடல் கூட உங்கள் எல்லோருக்கும் நினைவில் வரும்

ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கேமுட்டை வைத்தாய்..
கல்லைபிளந்து கடலருகேமுட்டைவைத்தேன்
வைத்ததுமோ மூண்டுமுட்டை பொரித்ததுமோ ரெண்டுகுஞ்சு
மூத்தகுஞ்சுக்கிரைதேடி மூனுமலைசுற்றிவந்தேன்.
இளையகுஞ்சுக்கு இரைதேடி ஏழுமலைசுற்றிவந்தேன்

நினைவை மீட்ட முடிந்தவர்கள் தங்கள் பின்னூட்டத்தில் தஙகளுக்கு நினைவு வரும் பாடல்களையும் பகிரலாமே!

என்ன தான் தொழில் நுட்பத்தில் நான் வளர்ந்திருந்தாலும் 
நம் நிகழ்கால சந்ததி இழந்திருப்பவை என்ன?
எதிர்கால சந்ததி இழக்கபோவது என்ன?

இன்னும் தொடர்வேன்!

20 கருத்துகள்:

 1. //என்ன தான் தொழில் நுட்பத்தில் நான் வளர்ந்திருந்தாலும்
  நம் நிகழ்கால சந்ததி இழந்திருப்பவை என்ன?
  எதிர்கால சந்ததி இழக்கபோவது என்ன?//

  தொலைந்துபோன அந்த பாரம்பரியத்தை நாம் இனிமேல் மீட்க முடியுமா..? தெரியவில்லை.

  மீண்டும் மழலையாக மாறிடும் உணர்வைத் தந்தது தங்கள் பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் மழலையானோம் என்பது என்னமோ நிஜம்பா! மீடக் முயற்சிக்கும் முயற்சியாய் என் பதிவு இருந்தால் மகிழ்ச்சியே! பார்க்கலாமே!

   நீக்கு
 2. அருமையான நினைவலைகள்.
  அந்த ஏட்டிக்கு போட்டி பாடல் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான சொல்லாடல் ரசித்தேன்
  முடிவில் தாங்கள் சொல்லிய விடயத்தையே நான் கடந்த பதிவில் கருத்துரையாக சொன்னேன் வேதனையானதே இனி வரும் சந்திகளுக்கு இவை இல்லை தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்! அருமையாக சொல்லி சென்றீர்கள் நன்றி யார்!

   நீக்கு
 4. ஆஹா...சின்ன வயசுப் பாடல்களை மீட்டெடுக்கும் பகிர்வு...
  ம்... தொடருங்கள்... தொடருங்கள்...
  அருமையா இருக்கு.

  பதிலளிநீக்கு
 5. மலரும் நினைவுகள் என்றுமே மணப்பவைதான்
  அருமை

  பதிலளிநீக்கு
 6. ரசித்தேன்.

  பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட் என்ன ஜாம் கோ ஜாம் என்ன கோ மாக் என்ன மா பாட்டிம்மா மொட்டைப்பாட்டி என்ன மொட்டை திருப்பதி மொட்டை என்று யதோ இளையாடுவார்கள். சரியாய் நினைவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா,அடுத்தடுத்த பதிவில் இதையும் நினைவில் கொள்ள வேண்டியது தான்.

   நீக்கு
 7. மிக மிக ரசித்தோம்...இது போன்ற வார்த்தை விளையாட்டுகள் விளையாடியதுண்டு...அருமை அருமை...

  பதிலளிநீக்கு
 8. மிகவும் இரசித்தேன்.

  ஜம் ஜம்
  என்ன ஜம்
  ராஜம்
  என்ன ரா
  கோரா
  என்ன கோ
  டி கோ
  என்ன டி
  பொண்டாட்டி


  என ஒன்று என் ஞாபகத்திலும்...

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  கடந்த காலம் வருமா..என்ற ஏக்கம் மனதில் உதிக்கிறது... அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. //என்ன தான் தொழில் நுட்பத்தில் நான் வளர்ந்திருந்தாலும்
  நம் நிகழ்கால சந்ததி இழந்திருப்பவை என்ன?
  எதிர்கால சந்ததி இழக்கபோவது என்ன?
  //
  நிறைய!!

  பிஸ்கட் பிஸ்கட் ..
  கண்ணாமூச்சி ரே ரே
  கீச்சு கீச்சு தாம்பாளம் ...

  பதிலளிநீக்கு
 11. ஐயோ அக்கா ரொம்ப நன்றி அக்கா நீண்ட நாட்களின் பின் இந்த வம்மி மரமும் மலரும் பார்க்கிறேன் மிக்க சந்தோசம் அத்தோடு நான் மறந்து போன பாடல் ஒன்று இந்த
  ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கேமுட்டை வைத்தாய்..
  கல்லைபிளந்து கடலருகேமுட்டைவைத்தேன்
  ஐயோ சான்சே இல்லை அக்கா உங்க நினைவுக்கும் முயற்சிக்கும் ஆயிரம் நன்றிகள் சூப்பரோ சூப்பர் பாராட்டுக்கள்
  இன்னும் தொடருங்கள் இதை நான் சேனையில் பார்க்க வில்லை வருந்துகிறேன்

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!