31 அக்டோபர் 2016

நடிகையவள் செய்த தப்பென்ன?


பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் பல வகைகளில் விமர்சிக்கப்ட்டாலும் தாமாக விரும்பியும், நிர்பந்திக்கப்பட்டும் பிழைக்க வேறு வழி இன்றியும் பலர் நடிப்புதொழிலுக்குள் வருகின்றார்கள்.
வருபவர்கள் அனைவரும் நாயகி ஆவதில்லை. ஆனாலும் அவர்கள் பிழைக்க வேறு வழி இன்றி அதையும் ஒரு வழியாக்கி கொண்டு தம் இயலாமையை வெளிப்படுத்தாது முன் சிரித்து பின் அழுபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
நடிகை என்பதனால்அவளுக்குள் இருக்கும் திறமைகள் மழுங்கிப்போனதாய் சொல்லி அவளை வெறும் போகப்பொருளாக மட்டும் ரசித்து அவள் கருத்துசுதந்திரத்தினை மறுதலிக்கலாமா?
ஒரு நடிகையின் மரணத்தின் பின் பாவம் அவளுக்கு பரலோகத்தில் இடமில்லை என்றார் ஒரு நண்பர்? அவர் அறிந்தது அவ்வளவு தான்? 
ஏன் அவளுக்கு பரலோகத்தில் இடமில்லையாம்? அப்படி யார் சொன்னார்கள்? அப்படி நியாயத்தீர்ப்பு வழங்க யாருக்கு இங்கே அதிகாரம் உண்டு?

நடிப்பு என்பதும் ஒரு தொழில் தான்,நடிகை என்பதனால் அவள் பாவி என முத்திரை குத்துவோர் தான் மகா பாவிகளாக இறைவன் சமூகத்தில் பார்க்கப்படுவார்கள். தான் செய்வது இன்னதென அறியாமல் செய்யும் அவளையும், செய்வது எதுவென அறிந்தே அனைத்தினையும் செய்யும் உலகத்து நீதிமானகளையும் கடவுள் ஒரே தராசில் வைத்து தான் எடை போடுவார்! ஆம்!அவள் அங்கங்களை ரசித்த பின்பே விமர்சிக்கும் உங்களுக்கும் அங்கே இடம் மறுக்கப்படலாம்!

விபச்சாரம் எனப்படுவது என்னவென பைபிளில் ஒரு விளக்கம் உண்டு. உடலால் இணைதல் மட்டுமே விபச்சாரம் அல்ல ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் அல்லது ஒரு ஆணை இச்சையோடு ரசிக்கின்ற எவளும் அவனுடனே,அவளுடனே விபச்சாரம் செய்தாயிற்று!
அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுவதும் விபச்சாரம் தான்.அடுத்த வீட்டு பெண்ணின் அங்கங்களை அணு அணுவாக ரசிப்பவர்கள் தான் தன் வீட்டுப்பெண்ணை பொத்தி மூடி வைப்பார்கள்.தன்னை போல் பிறனையும் நினைப்பார்கள்.
நான் சினிமா பார்ப்பதில்லை. எனினும் பொதுவாக சினிமா நடிகைகளைக்குறித்து எனக்குள் பரிதாப உணர்வு உண்டு.எந்தச்சூழலில் எதற்காக நடிக்க வந்தார்களோ நாமறியோம், ஆனால் அவர்களுக்குள்ளும் நாம் அறியாத வலிகளும் வேதனைகளும் நிரம்ப உண்டு,
சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சிக்கு பின் அவரின் குடும்பச்சுமை இருந்தது போல் கோவை சரளாவின் சிரிப்புக்கு பின்னும் கண்ணீர் கதை இருந்தது. நடிகை என்பதனால் அவள் வெறும் உடல் அழகை மட்டும் காட்டி சம்பாதிக்கவில்லை,அதன் பின்னால் இருக்கும் சிரமங்களை பாடுகளை நாம் புரிந்து கொண்டோமானால் அவளைப்போல் பரிதாபத்துக்குரிய ஜீவன் யாரும் இல்லை என அனுதாபப்படுவோம்.
எங்கள் கம்பெனியில் ஷூட்டிங்க் குழுவுக்கு சாப்பாடுஆர்டர் வரும் போது பல நாட்கள் அனைவருடனும் நேரில் பழகும் வாய்ப்பு கிடைக்கும். 
இங்கே ஷூட்டிங்குக்காக வரும் கதா நாயகிகள் படும் பாட்டை நேரில் கண்டு வருந்தி இருக்கின்றேன். மைனஸ் டிகிரி குளிரில் கதாநாயகன் உட்பட அனைவரும் கம்பளியும் ஸ்வெட்டரும் குளிர்கால பாதணியும் அணிந்திருக்க அத்தனை குளிரில் மெல்லிய ஆடை அணிந்து வெற்றுப்பாதத்துடன் நடனமாடி கைகால்கள் விறைத்துப்போக நினைத்து பார்க்கவே கஷ்டமாயிருக்கும். ஒரு பாடலுக்காக காடு,மலை,மேடு என அலையும் அலைச்சலுடன் உடல் உபாதைகளும் சேர்த்தே பெண் நாயகிகள் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.

அரை குறை ஆடை அணிந்த விளையாட்டு விராங்கனைகளை விமர்சிப்போரும் இங்குண்டு, டென்னிஸ் ஆடைகள் நீச்சல் ஆடைகள், உயரம் தாண்டுதலில் போது அணியும் ஆடைகள் என பெண்கள் அணியும் ஆடைகள் அவளின் திறமை யை பின்னிறுத்தி அங்கங்களையே ஆராய்ச்சி செய்ய வைக்கின்றது.வெளி நாடுகளில் அப்படி அல்லவே! அவள் திறமையோடு கருத்தும் மதிப்புக்குள்ளாகின்றது.
சேலை அணிந்து பொட்டும் பூவும் வைத்தால் அவள் பத்தினி! அதனால் தான் இசைக்கச்சேரி செய்யும் பெண்களை பாராட்டுகின்றோம்,கைகூப்பி வணங்குகின்றோம். அவளே ஆடைகளை தளர்த்தி அவள் வசதிக்கு ஏற்ப அணிந்தால் அவள் சித்தினி!
இது எந்த ஊர் நியாயம்? இங்கே அவள் அணியும் ஆடைகள் தான் பேசுபொருளாகின்றதே அன்றி அவள் திறமை அல்லவே?
நடிகையாகட்டும், விளையாட்டு வீராங்கனையாகட்டும், விஞ்ஞானியாகட்டும், டாக்டராகட்டும், ஆசிரியைஆகட்டும் , அரசியல்வாதியாகட்டும், ஏன் குடும்பத்தலைவியாக கூட இருக்கட்டும், அவளின் தனிப்பட்ட குணவியல்புகளையும் தொழிலையும் அவள் சொல்லும் கருத்துக்களோடு ஏன் முடிச்சிட்டு பார்க்க வேண்டும்?
அவளுக்கும் கருத்துச்சுதந்திரம் உண்டு?
நடிகை என்பதனால் அவள் அரசியலில் ஈடுபடக்கூடாது என சொல்லவும் எவருக்கும் உரிமை இல்லை! அரசியலில் ஈடுபட கருத்து சொல்ல அவள் அந்த நாட்டுப்பிரஜையாயிந்தாலே போதும்!
பொதுப்பிரச்சனைகளில் கருத்து சொல்ல அவளுக்கு உரிமை இல்லை என சொல்ல முன் மனவிகாரமின்றி முழுமையான் பரிசுத்தமாய் இருப்போர் முதலில் அவள் மேல் கல்லெறியட்டும்.
நடிக்கும் காலத்தில் அதே நடிகையையும் கனவுக்கன்னியாக்கி கோயில் கட்டுவீர்கள்! அவள் காலம் முடிந்தபின் அவள் தீண்டத்தகாதவள் ஆவதெப்படி?
ஒரு கருத்தினை நடிகர்கள் சொன்னால் அவனுக்கு பாலாபிஷேகம் செய்வீர்கள்! கட்டவுட் வைத்து தெய்வம் ஆக்குவீர்கள்? பாலினம் பார்த்து நியாயம் தீர்க்கும் நீதிபதிகளே கொஞ்சம் சிந்தியுங்கள்! தொழிலென வரும் போது ஆணென்ன? பெண்ணென்ன?
உலக வரலாற்றில் நடிகைகள் அரசியலில் ஆளுமை செய்ததும் வெற்றியடைந்ததும் உண்டு. குஷ்பூ எனும் ஒருத்திக்கான பதிவு இதுவல்ல. அனைத்து நடிகைகள் குறித்தும் ஜெயலலிதா உட்பட அனைவருமே போகப்பொருளாக விமர்சிக்கப்படுவதை காணும் போது இப்படி ஒரு பெண் ஆண் நடிகர்களை குறித்து பேசினால் அதுவும் உங்கள் வீட்டுப்பெண்கள் பேசினால் எப்படி உணர்வீர்கள் என எதிர்கேள்வி கேட்க தோன்றுகின்றது!
அத்தனை கோடி மக்கள் தொகையில் சரிபாதி ஆண்கள் இருந்தாலும் தமிழ் நாட்டை ஆள்வதற்கும் அனைவரையும் ஆட்டிவைப்பதற்கும் முன்னாள் நடிகையான ஒரு பெண்ணால் முடிந்ததெனும் போது நடிகை என்பதனால் அவள் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது.
தான் செய்வதை மறைக்காது வெளியரங்கமாய் இருக்கும் நடிகைகளை விட உள் மன விகாரங்களோடு இருக்கும் பலரின் கருத்துக்களை தான் நாம் புறம் தள்ள வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் கன்னட படப்பிடிப்புக்காக சுவிஸ் வந்த மாளவிகா குருப்புக்கு உணவு ஆர்டர்கள் எங்கள் ஈவன்ஸ் சார்பாக செய்த போது என் கண்வர் மற்றும்   நண்பருடன்  என் வீட்டில் எடுத்த புகைப்படம் இது!

அவர்கள் ஆர்டர் செய்த உணவை  எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் ரயில்வே ஸ்டேசனுக்கு கொரியர் செய்ய சொல்லி இருந்தார்கள் அன்றைய நாள் குளிரில்  வெளியில் நிற்கவே முடியாத சூழலில் இந்தபெண் இந்த ஆடை மட்டும் அணிந்து வெடவெடவென நடுங்கி விறைத்து போயிருந்ததை கண்டு அனைவரையும் எங்கள் வீட்டுக்கு அழைத்து வைந்து  சுடு நீர் வைத்து கொடுத்து  தொடர்ந்த சூட்டிங்க் தேவைக்குரிய சுடு நீர்  முதல் நேனீரும்  வைத்து பிளாஸ்கில் கொடுத்து அனுப்பினேன்! 

7 கருத்துகள்:

 1. பொது ஊடகத்தில் இருப்போர் நடிகை என்றாலே மூன்றாம் தரமக்கள் என்று விழிப்பதை என்று மாற்றுகின்றார்களோ அன்றுதான் ஒரு நடிகை என்றாலும் அவளுக்கும் மனம் உண்டு நடிப்பும் ஒரு தொழில் என்று சமூகம் கொஞ்சம் திருத்தமாக சிந்திக்கும்.

  பதிலளிநீக்கு
 2. பாலினம் பார்த்து நியாயம் தீர்க்கும் நீதிபதிகளே கொஞ்சம் சிந்தியுங்கள்! தொழிலென வரும் போது ஆணென்ன? பெண்ணென்ன?

  உண்மைதான் சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 3. Well said. You've hit the nail on the head. Congrats!

  பதிலளிநீக்கு
 4. மிகவும் அருமையான கட்டுரை! நடிகை என்றாலே வேறு மாதிரி கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு சரியான சவுக்கடி! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 5. in this MALE CHUVANISTIC SOCIETY this descrimination against actresses would continue...and the actresses after their success ....tease and command the male actors... as revenge...

  பதிலளிநீக்கு
 6. மிகவும் அருமையான கட்டுரை அக்கா...

  விரிவாய் எழுதியிருக்கீங்க... ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறீர்கள்...

  உண்மைதான்... நடிகைகளை போகப் பொருளாய் மட்டுமே பார்க்கிறோம்... அவர்களின் வலியை வேதனையை உணர்வதில்லைதான்... இதை இயக்குநர்கள் கூட உணர்வதில்லை... கவர்ச்சியாக நடிக்க வைத்தால்தான் காசு பார்க்க முடியும் என்பதை புரிந்து வைத்திருப்பதால்தான்... சிறிய உடையுடன் பனிக்கட்டியில் நடனமிட வைக்கிறார்கள்...

  வருத்தமான விஷயமே....

  நடிகைகள் என்று ஆன பின்னர்... பிரபலமான பின்னர்... பொது இடங்களில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம், அணிந்து வரும் உடைகள் எல்லாம் சரியானவையாக இல்லையே... அது ஏன்...? மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதால்தானே...?

  இந்த விஷயத்தில் நாமும் திருந்த வேண்டும்... நம்மோடு சேர்ந்து அவர்களும் திருந்த வேண்டும்...

  தவறுகள் இருபக்கமுமே... மற்றபடி அவர்கள் குறித்து தரக்குறைவாக பேசுவது கண்டிக்கத்தக்கதே...

  நல்ல கட்டுரை அக்கா...

  பதிலளிநீக்கு
 7. ஆணாதிக்க உலகம் இது. பெண்கல்வி ஒன்று மட்டுமே இதற்கான தீர்வைத் தர முடியும்.
  நல்ல அலசல். வாழ்த்துக்கள் சகோதரி

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!