29 அக்டோபர் 2016

அகல் மின்னிதழில் தித்திப்பாய் தீபாவளி

அப்போதெல்லாம் இலங்கையில் பாடத்திட்டத்தில் மூன்றாம் வகுப்பிலிருந்து அதாவது இப்போதைய ஆண்டு நான்கிலிருந்து தான் ஆங்கிலப்பாடம் ஆரம்பம்.

A for Apple
B for Ball

என படம் போட்டு நம் கண்ணில் முதல் முதலாக மூன்றாம் வகுப்பு ஆங்கிலப்புத்தகத்தில் தான் அப்பிளையே காட்டி இருப்பார்கள். அழகாய் சிவப்பு வர்ண ஆப்பிள். பார்க்கத்தான் அழகுசுவைத்தால் வெறும் பச்சைத்தண்ணீரின் சுவை தான் என்பதை நான் எட்டாம் ஆண்டில் படிக்கும் போது தான் புரிந்து கொண்டேன். .

மூன்றாம் வகுப்பில் படிக்கும் போது படமாய் பார்த்து அதன் அழகில் மயங்கினாலும் பாடசாலை விடுமுறையில் கொழும்புக்கு சித்தி வீட்டுக்கு வரும்போது பழக்கடைகளில் அழகாக குலை குலையாக கட்டித்தொங்க விட்டிருக்கும் அப்பிள் பழம் பார்த்தும் அதன் விலை சாப்பிடும் ஆசையை தூரமாக்கி விட்டிருக்கும். ஒரு ஆப்பிள் 20 தொடக்கம் 30 ரூபாய் வரும். அப்போதெல்லாம் என்அப்பாவின் மாத சம்பளமே 1500 தான் வந்திருக்கும் என நினைக்கின்றேன். ஒரு கிலோ பிரெட் மூன்று ரூபாயும்,ஆப்பம் ஒரு சோடி ஒரு ரூபாயும் விற்ற காலத்தில் இருபது ரூபாய் என்பது அக்காலத்தில் பெரிய தொகை தானே?

இலங்கை போக்குவரத்துசபையில் பேருந்து நடந்துனராய் அப்பா வேலை செய்ததால் போகுமிடமிருந்தெல்லாம் சீஷனுக்குரிய பழங்கள் மூட்டை மூட்டையாக வீட்டுக்கு வந்தாலும் அப்பிள்பழம் மட்டும் எனது எட்டாம் வகுப்பு வரை எட்டாக்கனியாகவே இருந்தது.சாப்பிட்ட போதோ அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை கதையாகிப்போனது,

இப்போது நான் சொல்ல வந்ததுமூன்றாம் வகுப்பு படிக்கும் போது அதேஆங்கிலப்பாடப்புத்தகத்தில் கோக்கனட் ரொபி அதாவது தேங்காய்ப்பூ பர்பி செய்வது எப்படி என செய்முறை விளக்கத்தோடு இருந்தது. அதை ஆங்கில ஆசிரியரும் வகுப்புமாணவருமாய் சேர்ந்து செய்தது தான் என் வாழ்வில் முதல் இனிப்பு செய்த அனுபவம்,

தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்து சீனிப்பாகில் போட்டு கிளறி இறுகி வந்ததும் தட்டில் கொட்டி ஆறியதும் சின்ன சின்ன துண்டுகளாய் வெட்டி எடுத்தால் அதான் தேங்காய்ப்பூ அல்வா!
என் நினைவில் நீங்காது நிற்கும் முதல் இனிப்புச்சிற்றுண்டி தேங்காய்ப்பூ அல்வா தான்!
தீபாவளிச்சிறப்பிதழுக்கு இனிப்புவகை வேண்டும் என அகல் மின்னிதல் கணேஷ் எனும் சதயா கேட்டதும் என் நினைவில் நான் முதல் முதலில் செய்த தேங்காய்ப்பூ பர்பி தான் நினைவில் வந்து சென்றது.

நன்றி கணேஷ்!

அகல் மின்னிதழ் வாசகர்களுக்காக இலங்கையின் சிற்றுண்டிகள் சிலவற்றை பகிர்கின்றேன்!

1.வாய்ப்பன் எனும் சிற்றுண்டி இலங்கையில் யாழ்ப்பாண மக்களிடம் மிகவும் பிரபல்யமானது,குறுகிய நேரத்தில் செய்ய முடிவதோடு மூன்று நான்கு நாட்கள் வைத்து சாப்பிட முடியும்.
சிறுவர்கள் விரும்பிச்சாப்பிடும் சத்தானதும் செலவு குறைவானதுமான தின்பண்டம் வாய்ப்பன்அதை செய்வது எப்படி என பார்க்கலாம்.

வாய்ப்பன்
***************

கோதுமை மா 500 கிராம்
கனிந்த வாழைப்பழம் அல்லது 4
சீனி 200 கிராம்.
பேக்கிங்க பவுடர் அரை தே.கரண்டி
ஒரு துளி உப்பு
சமையல் எண்ணெய்

செய்முறை
*****************
கோதுமைமா,சீனி,பேக்கிங்கபவுடர்,உப்பு போன்ற அனைத்தினையும் ஒன்றாக கலந்து விட்டு வாழைப்பழத்தினை நன்கு நசித்து மாக்
கலவையுடன் சப்பாத்தி மா பதத்துக்கு பிசைய வேண்டும்தண்ணீர் சேர்க்காமல் வாழைப்பழத்திலேயே பிசைந்து எடுத்தால் நல்லது.
பிசைந்து வைத்த மாவை ஒரு மணி நேரம் காற்றுப்புகாமல் மூடி வைக்கவும்,
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் மாவில் கொஞ்சம் எடுத்து உள்ளங்கையில் வைத்து கோலிக்குண்டை விட கொஞ்சம்பெரிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு நன்கு பொரித்தெடுக்கவும்.எண்ணெய் அதிக சூடாக இருந்தால் வெளிப்பக்கம் வெந்து உள்ளே வேகாமல் இருக்கும் என்பதால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்தே பொரித்தெடுக்க வேண்டும்.


2.வட்டிலப்பம் எனும் இனிப்பு சிற்றுண்டி இலங்கை முஸ்லில் மக்களிடையே மிகப்பிரபல்யமான சிற்றுண்டி! முட்டை சேர்ப்பதால் முட்டை மணம் வருவது பலருக்கு பிடிப்பதில்லை ஆகினும் நான் செய்யும் முறையில் முட்டை வாசனை வராது!அனைவரும் விரும்பி உண்ணும் படியும் இருக்கும்,

வட்டிலப்பம்
*****************
   
கித்துள் அரை மூடி
பிரவுன் சீனி 250 கிராம்
முட்டை எட்டு
பால் ஒரு லீட்டர்
ஏலக்காய் ஆறு

செய்முறை
*****************
ஏலக்காயை வறுத்து மிக்சியில் இட்டு பொடியாக்கிக்கொள்ளவும்.
கித்துளை தூளாக்கி கொள்ளவும்.
தூளாக்கிய கித்துள்பிரவுன் சீனிமுட்டைபால் அனைத்தினையும் மிக்சியில் இட்டு நன்கு கித்துள்சீனி கரைந்து வரும் வரை அடிக்கவேண்டும்.
அடித்த கலவையில் ஏலக்காய் பொடியையும் தூவி கலக்கவும். ஏலக்காய் பொடி நன்கு சேர்ந்தபின் வடிகட்டிமூலம் வடித்து ஆவியில்வேகவைக்கும் 
ஸ்டீமர் அல்லது இட்லி சட்டிக்குள் வைக்கும் படியாய் ஒரு பாத்திரத்தில் 
ஒன்றரை மணி நேரங்கள் அவித்தெடுக்கவும்.

ஒன்றரை மணி நேரம் சென்றதும் மூடியை திறந்து குச்சியால் நடுவில் குத்தினால் கலவை குச்சியில் ஒட்டாமலிருந்தால் வெந்து விட்டதென புரிந்து கொள்ளலாம்,

நன்கு அவிந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்து குளிர்சாதனப்
பெட்டியில் வைத்து மூன்று நாட்கள் வரை பயன் படுத்தலாம். பரிமாறும் போது அழகாக உருண்டைகளாய் கரண்டியால் அள்ளியும் சின்ன சின்ன சதுர துண்டுகளாக வெட்டியும் பரிமாறலாம்.வாழைப்பழ துண்டுகளை அலங்கரிப்புக்கு பயன் படுத்தலாம்.

டிப்ஸ்
********
* கட்டித் தேங்காய்ப்பால் அல்லது பசும்பால் என இரண்டிலும்  செய்யலாம்.
*இனிப்பு தேவைக்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்
*வேக விடும் முன் நெய்யில் வறுத்த முந்திரியை மேலே தூவி விடலாம்.
*இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக விடஒன்றரை மணி நேரம் ஆகும், வீட்டில் மைக்ரோவேவ் ஓவனில் செய்ய வேண்டுமெனில் அதற்கான தட்டுக்களில் ஊற்றி 150c  வெப்ப நிலையில் 45 நிமிடங்கள் சூடாக்க வேண்டும்.

கித்துள் என்பது கித்துள் மரத்திலிருந்து கிடைக்கும் வெல்லம். கித்துள் பனங்கட்டி, கித்துள் பாணி எனவெல்ல்லாம் கிடைக்கும், பனையைபோல் ஒரு மரம்!

கித்துள் வெல்லம்


3.ப்ருட் சலாட் என்றதும் பழங்களையெல்லாம் ஒன்றாக்கி மிக்ஸ் பண்ணுவது தானே அதில் என்ன விஷேசம் இருக்கின்றது என நினைப்போம்அதுவே ஐஸ்கிரிம் கடைகளில் போய் சாப்பிடும் போது வீட்டில் செய்வதில் இப்படி சுவை வருவதில்லையே எனவும் நினைப்போம் அல்லவா?அதன் அழகுக்காகவும் சுவைக்காகவும் ஐஸ்கிரிம் கடைக்கு செல்லத்தேவையே இல்லை.வீட்டிலேயே செய்யலாம்,

ஐஸ்கிரிம் கடைகளில் சாப்பிடும் அதே சுவையுடனான ப்ருட்சலாட் எப்படி செய்வது என பார்க்கலாமா?

ப்ருட்சலாட்
 *********************

அப்பிள் 2
பியர்ஸ் எனும் பேரிக்காய் 1
அன்னாசிப்பழம் பெரிய துண்டுகள்
மாம்பழம் 1
வாழைப்பழம் 1
விரும்பினால் மாதுளம் பழம்
எலுமிச்சம்பழம் சிறிதளவு
ஆரஞ்சு கலரின் ஒரு துளி
அன்னாசி எசென்ஸ் ஒரு துளி
சீனி 100 கிராம்
ஆரஞ்சு சின்ன துண்டு

செய்முறை
*****************
50 மி.லீட்டர் தண்ணீரில் 100 கிராம் சீனியை கலந்து ஆரஞ்சு பழத்துண்டினை தோலுடன் போட்டு அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். கொதித்ததும் ஆரஞ்சை எடுத்து வீசி விட்டு ஆற விடவும்.ஆரஞ்சு பழம் சேர்க்காமலும் பாகு காய்ச்சலாம்.

ஆப்பிள்,பியர்ஸ்,அன்னாசிப்பழங்களை தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டவும்அப்பிள் பழம் தோல் சீவினால் நிறம் மாறி விடும் என்பதனால் வெட்டியதும் சிறிதளவு எலுமிச்சைசாறு கலந்து விடவும்மாம்பழம் பாதியை சின்ன துண்டுகளாக்கி பழக்கலவையுடன் சேர்க்கவும்,மீதிப்பாதியை மிக்சியில் அடித்து கூழாக்கி பழக்கலவையுடன் சேர்த்து ஆறவைத்திருக்கும் சீனிப்பாகையும் ஆரஞ்சு வர்ணத்தினையும் இட்டு நன்கு கலந்த பின் அன்னாசி எசென்சையும் சேர்க்கவும்.

பழக்கலவையை மூடி குளிர்சாதனபெட்டியில் வைக்கவும்இக்கலவையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து மூன்று நாட்கள் பயன் படுத்தலாம்,பரிமாறும் போது வாழைப்பழங்களை சிறு துண்டுகளாக வெட்டிகலந்து பரிமாறவும்,

டிப்ஸ்
**********
*கஜூத்துண்டுகளை நெய்யில் வறுத்து மேலே தூவலாம்,
*அன்னாசி,மாம்பழஜெல்லிகளை பச்சை சிவப்பு வர்ணங்களில் செய்து பழங்களை கப்பில் இடும் போது இடையிடையே தூவி விடலாம்.
*டூட்டிப்ருட்டி பழங்களையும்தூவலாம்.
*ஒரு கரண்டி வனில் ஐஸ்கிரிம் சேர்த்தும் பரிமாறலாம்,.

அவரவர் வசதிக்கேற்ப விருந்தினை ரோயல் விருந்தாக்கும் ப்ருட்சாலட் இது!
                   
அகல் மின்னிதலில் படிக்க இங்கே செல்லுங்கள்.
http://agalmagazine.weebly.com/2980300829863006299729953007-2970300729932986302129863007298029963021-2016/3169335

படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்ததே! நன்றி!

5 கருத்துகள்:

  1. புதிய புதிய பெயர்களுடன் செய்றைகள் அபாரம். ஆப்பிள் கதை சோகம்!

    பதிலளிநீக்கு
  2. மூன்றும் முச்சுவை...
    வாழ்த்துக்கள் அக்கா...
    தொடர்ந்து எழுதுங்க...

    பதிலளிநீக்கு
  3. ஹலோ எங்க ஊரில் இனிப்பு போண்டா என்று சொல்வதையே உங்க நாட்டுல வயப்பன் என்று சொல்லுறாங்க போல இருக்கேய்

    பதிலளிநீக்கு
  4. நிஷா கொழும்புவில் சிறியவயதில் இருந்ததால் இவை அனைத்தும் என் பாட்டி வீட்டிலேயே செய்து சாப்பிட்டிருக்கிறேன், வெளியிலும் ஆனால் வட்டிலப்பம் தவிர முட்டை நாங்கள் சாப்பிவதில்லை என்பதால் அதைத் தவிர பல இலங்கை உணவுப் பதார்த்தங்கள் இப்போதும் வீட்டில் செய்வதுண்டு.

    பழைய நினைவுகளை மீட்டெடுத்தது நன்றி. ஆப்பிள் கதை ம்ம்ம் சோகம் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கித்துல் படத்தைக்காணவில்லை[[ கித்துல்பாணி நல்ல சுவை!

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!