06 டிசம்பர் 2015

தொற்று நோய் அபாயம்! தற்பாதுகாப்பும் முன் எச்சரிக்கையும்!

இயற்கையின் சீற்றம் அதன்  கோபத்தினை காட்டி சென்று விட்டது. அதன் பாதிப்புக்களோ நம் முன் மிக நீண்டதாய்   இருக்கின்றது.

இதுவரை அல்ல! இனிமேல் தான்  பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டிய நிலையில்  மனம் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களாய்  மிகக்கடினமான தொரு சூழலை நாம் எதிர் கொள்ள போகின்றோம்.

மிக முக்கியமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் கழிவு நீர், இறந்த மிருகங்கள், மற்றும்  அழுகிய பொருட்கள் என அனைத்தும் கலந்து விட்டதனால் நோய் தொற்று அபாயம் அதிகமாக இருக்கின்றது.

குடி நீர் குழாய்களில் நீர் வரத்து இருந்தாலும் அவைகளும் உடைந்து சேதமடைந்து உள்ளதால் குடிக்கும் நீரிலும் தொற்று  நோய் அபாயம் அதிகமாகின்றது என்பதனால்  அந்த நீரை குடிப்பதை தவிருங்கள். அப்படியும் வழி இல்லை எனில் மழை நீரையே சேமித்து  நீரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி  குடியுங்கள்.

வெள்ளம் வடிய ஆரம்பித்ததும் அழுகிய குப்பைகள் மிருகங்களின் உடல்களஅனைத்தினையும்  எரித்து சாம்பலாக்குங்கள். எங்கோ எவர் வீட்டின் முன்னோ தானே என இருக்காமல் அது உங்களையும் பாதிக்கும் என்பதால் எப்படியேனும்  அவைகளை அப்புறப்படுத்த முயற்சியேனும் செய்யுங்கள்.

உங்கள் பாதிப்பு அதிகம் என்பதையும் வார்த்தைகளால் ஆறுதல், ஆலோசனை சொல்லி தீர்வு கிடைக்காது என்பதையும்  நானும் அறிவேன். எனினும்  மழை  வரும் வெள்ளம் வரும் என  முன்கூட்டியே தெரிந்தும் ஆயத்தமின்றி அசட்டையாய் இருந்தது போல் இனியும் இருக்காதீர்கள் உறவுகளே!

நிதர்சனம் இதுவென புரிந்து  உங்கள் சூழலில் கிருமி நாசினிகளை தெளித்தல், கொசு ஒழிக்கும் புகை தெளித்தல், திறந்திருக்கும் நீர் தேக்கங்கள் மட்டும் அல்ல உங்கள் குடி நீர் தொட்டிகளிலும் குளோரின் தெளித்தல் என அவசர கால முறையில் செயல் படுங்கள்.

வசதியும் வாய்ப்பும் இருப்பின் உங்கள் பகுதிக்கு மருத்துவ குழுக்களை வரச்செய்து மருத்துவ முகாம்களை நடாத்தி தர வேண்டுங்கள்.மன
நிலையில் பாதிக்கப்ட்டிருப்போரை இன்ம் கண்டு ஆறுதலாய் இருங்கள்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் மட்டும் அல்ல வெள்ள நிவாரன உதவியில் ஈடுபடும் அனைவருமே தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். தொற்று நோய்கள் பரவும் அபாயத்தில் இருப்பதனால் டெட்டனஸ் தடுப்பு ஊசி போட முடிந்தவர்கள் முன் கூட்டியே போட்டு தற்பாதுகாத்து கொள்ளுங்கள்.

நிலவேம்பு கசாயம் குடிப்பதும் கூட நல்ல தற்பாதுகாப்பு முன்னேற்பாடு தான். 
பொதுமக்கள் தாங்களாகவே அரசு மருத்துவமனைகளை அணுகி நில வேம்பு வாங்கி குடித்து  பயன் பெறுங்கள். 

 நீரில் சேவை செய்ய இறங்கும் தன்னார்வலர்களே நீங்கள் மிக முக்கியமாக இவைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

டெட்டனஸ் ஊசி போட முடிந்தவர்கள் முன் கூட்டியே போட்டு தற்பாதுகாத்து கொள்ளுங்கள்.திறந்தநிலையில்  காயங்கள் இருந்தால் கவனமாக கையாளுங்கள், அசட்டையாய் இருக்காதீர்கள். தோல் நோய் பரவும் வாய்ப்பும் கிருமித்தொற்றுக்களால் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு. நீரழிவு நோயாளிகள் தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். கிருமி நாசினிகளை கைவசம்  தயாராக வைத்திருங்கள்.

வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட நோயாளர்களை தூக்கும் போது  கவனமாக கையாளுங்கள். நீங்கள் மருத்துவம் கற்றவர்கள் இல்லை என்பதை நினைவில் வைத்திருங்கள்” பேரிடர் பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்பதையும் மறக்காதிருங்கள்  உங்கள் ஆர்வ வேகம் உங்களுக்கு ஆபத்தாகாத படி
 பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொடர்ந்து  செய்ய வேண்டும் எனில் முதலில் நீங்கள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்!



2 கருத்துகள்:

  1. மிக நல்ல பதிவு. சென்னையின் குடிநீரில் ஆங்காங்கே கழிவு நீர் கலப்பதாகத்ட் தெரிகின்றது. சென்னை மாநகராட்சி, அப்படிக் கலந்து வந்தால், அவர்களிடம் அறிவிக்கச் சொல்லி இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  2. பயம் கொள்ள வைக்கும் உண்மைகள். இனிமேல்தான் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இதில் இன்னொரு பெருமழை இருப்பதாக வேறு பயமுறுத்தல்...!

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!