22 மே 2020

எங்கள் ஊர் தொதல்

எங்கள் ஊர் தொதல் 

தேங்காயை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதில் இலகுவான  வழி முறையில் தொதல் எனும் இனிப்பு உணவுக்கு சிறப்பான இடம் உண்டு. 

• தொதல் எனும்  தேங்காய்ப்பால் அல்வாவுக்கு கிழக்கு மாகாணத்தில் சிறப்பு இடமுண்டு.1990 களிலும் அதுக்கு முன்னும் திருமணம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு, புது மனை குடி புகுதல் என்று எந்த  விஷேசம்  என்றாலும் தொதல் துண்டு இருக்கும்.( இக்கால மாற்றம் குறித்து எனக்கு தெரியவில்லை ) 

இப்போதெல்லாம் சாக்லேட் கேக் என நினைத்தால் போகும் வழில வாங்கிப்பது போல் அந்த நாள்களில் இல்லை. எங்கே பயணம் என்றாலும் ஒரு வாரம் முன் திட்டம்  போட்டு பயணத்துக்கு முதல் நாள் ஊர்ல தொதல் கிண்டும் ஆளுங்களுக்கு சொல்லி வைத்து  தேங்காய் துருவ நாலைந்து திருவிலை அயல் வீடுகளில் இரவல் வாங்கி தேங்காய் திருவி, உடன் அரிசி மா இடித்து என தொதல் கிண்டுவதே பண்டிகை நாள் போல் அமர்க்களப்படும். 

ஊரு விட்டு  சொந்த பந்தம் ஊருக்கு போகும் போது தொதல் பார்சல் தான் சிறப்பான  பரிசாக இருக்கும். ( ஏனைய பலகாரங்கள் போல் லேசில் பழுதாகாது என்பது காரணமாக இருக்கலாம் ) 

கிழக்கு மாகாணத்தில் மடடக்களப்பில்  எங்கள் ஊர் தொதல் ஸ்பெஷல். அதிலும் எங்க அம்மம்மாவின் தங்கை மகள் இலடசுமி ஆசம்மா  தான்  ஊருக்கே  தொதல் கிண்டுவதில் ஸ்பெஷலிஸ்ட். அவவின் தம்பி ( மாமா பெயர் மறந்து போய் விட்டேன் ) தொதல் கிண்ட உதவிக்கு வருவார். எல்லோரும் ஒண்டுக்குள் ஒன்று என்பதால் எங்க வீட்டு விசேங்களின் உணவு தயாரிப்பில் எப்போதும் ஸ்பெஷல் இருக்கும்.

எல்லா உணவு பதார்த்தமும் போல் தொதலுக்கும் ஊர்தண்ணீர், பதப்படுத்தும் விதம் ஆள், கைப்பக்குவம் என பல நுணுக்கம் இருக்கு.

வீட்டு  முன் பக்க வாசல் அல்லது பின்பக்கம் தான் இதற்கென விறகடுப்பு  இருக்கும். தொடர்ந்து மூணு நாலு மணி நேரம்  நிண்டு நெருப்பெரிய பெரிய துண்டு விறகு சொல்லி வாங்கி இருப்பாங்க.நல்லா காய்ந்த தென்னம்பாளை, பனை மட்டை தேடி குவித்து  வைத்து விடுவார் அம்மா. ஓரிடம் குவிச்சு வைச்சிருப்பதால்  அதுக்குள்ளால் தேளும் பூச்சியும் வெளி வரும் என்றால் பாருங்கோ. ரிஸ்க் எடுத்து தான் பலகாரம் சாப்பிடுவோம்🤣

தொதல் கிண்டுவதும் ஒரு கலை...! 

இரண்டு பக்கமும் புடி இருக்கும் பெரிய இரும்பு தாச்சி சட்டி ( வாணலி)  வைத்து அதற்கென இருக்கும்  உழவாரம்  எனும் பெரிய இரும்பு கரண்டியால் கிண்டுவார்கள். அம்மம்மாவிடம் இதுக்கென பெரிய இரும்பு தாச்சி, இரண்டு மூணு இரும்பு உழவாரம் இருந்திச்சி...! 

பச்சை அரிசியை ஊறவைத்து உரலில் போட்டு இடித்து மாவாக்கி சல்லடையில் அரித்து  கட்டித்தேங்காப்பால் எடுத்து சர்க்கரை சேர்த்த மாவுடன் கரைத்து விறகடுப்பில் இறுகி வரும் வரை
கட்டியாகாமல் தொடர்ந்து ஆள் மாறி ஆள் கிண்டனும். 

நெருப்பும் தளதளவென எரியும். நெருப்பை  அணையாமல் கவனிக்க ஒராள் நிற்கும். நெருப்பின் வேகத்துக்கு தொதல் எரியாமல், கருகாமல்,  அடிபிடிக்காமல் கிண்டனும்.
( தேங்காப்பாலும், சர்க்கரையும் சட்னு அடிப்பிடிக்கும் தெரியுமோ? ) வெக்கையில் நிண்டு கிண்டனும் என்பதால் மாலை ஐந்து மணிக்கு பின் தான் வேலை ஆரம்பிப்பார்கள் லைட். இல்லாத காலத்தில் பெற்றோல் மாக்ஸ் விளக்கு, சிமிலி லம்போடு. நம்ம சந்திரனும்  வெளிச்சம் தருவார். 

மணித்தியாலக்கணக்கில் கிண்டி.. கடைசி ஒரு மணி நேரம் ரெண்டு மூன்று பேர் நிண்டு கிண்டி கொண்டிருப்பார்கள். மாவிலிருந்து எண்ணெய்  பிரிந்து உருகி வரும்.  எண்ணெயை வடித்து எடுத்து  விட்டு நெருப்பை குறைத்து தணலில் வீட்டு கொண்டே கிண்டுவார்கள்.

ரெண்டு மூணு போத்தல் எண்ணெயும் வரும்., எண்ணெய் பிரிந்து மாக்கலவை இறுகி சுருண்டு உழவார இரும்பு கரண்டியில் இறுக்கி பிடிக்க ஆரம்பிக்கும் பதத்தில் வறுத்து வைத்திருக்கும் பயறு தூவி வேகமாக கிளறி கொண்டே இருப்பார்கள்.பயறு அவிய விடமாடடார்கள். தொதல் சாப்பிடும் போது பயறு கடி படணும்.  

🔹 பதம் அல்வா போல்  கொழுக் மளுக் என்று இருக்க கூடாது, 
🔹 செங்கல் போல் இறுக்கவும் கூடாது
🔹 கையால் பிய்த்து எடுக்க கூடாது   

🔶 பதமாக இறுகி வந்ததும் இறக்கி தட்டில் கொட்டி ஆற வைத்து  
துண்டு போட்டு சுத்தமான துணியில் கட்டி வைத்தால்  அதிலிருக்கும் மீதமான எண்ணெயும் துணிக்கு போய் விடும். 

எங்க வீட்டில் தொதல் கிண்டும் போது

அந்த சட்டியை துடைச்சு வழிச்சி சாப்பிட நான் நீ என போட்டு போடுவோம். அடிப்பகுதி நல்லா  தேங்காய் எண்ணெயில் உருகி பதமா சூப்பர் சுவையாக இருக்கும். செக்கு  எண்ணெய் என்று சொல்வார்களே..அப்படி ஒரு ஸ்பெஷல் சுவை கிடைக்கும் .

இன்றும்  இலங்கைக்கு யார் போனாலும் மறக்காமல்  கொண்டு வரும்  உணவில்
தொதலுக்கு முதலிடம் உண்டு.  ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாய்  பதம் வந்தாலும் எங்களூர் தொதலுக்கு ஈடு இல்லையாக்கும்.

அப்புறம் முக்கியமான  விடயம் தொதல் கிண்டும் போது  நல்ல தாட்டியான ஆண்கள் தான்  கிண்டுவார்கள். அன்னிக்கு இரவுக்கு கை கால் உளைவு நிச்சயம் இருக்கும். அதுக்கு ஆளுக்கு காப்போத்தல் சாராயம்  வாங்கி கொடுக்கணும்.

நான் அறிந்து விருந்து விஷேஷம் என்றால் பெண்களுக்கு சமமா வீட்டு ஆண்களும் இணைந்து உதவி செய்து தான் பார்த்திருக்கின்றேன். 

அப்புறம் எப்படி அம்மா என்றால் சமைக்கணும்? 
அப்பா வேலைக்கு போகணும் tv பார்க்கணும் எனும் கோளாறு உருவானது? 

நாங்கள் ஒரு வீட்டுக்கு போகும் போது அவங்களுக்கு அன்பும் ஆசையும் அக்கறையுமாக நேரம் செலவு செய்து  பக்குவமாக தயார் செய்து கொண்டு போகும் பொருளுக்கும் கடையில் காசை அள்ளி கொடுத்து வாங்கி ஏனோ தானோ என கொடுக்கும் பரிசுக்குமிடையில் ஏணி வைத்தாலும் எடடாத பாசம் இருக்கும் 

சிலதுக்கு பணம் பெறுமதி கணக்கிட முடியாது அல்லவா?


 தொதல் கிண்டும் தாச்சி இதை போல் இதை விட மூன்று மடங்கு பெரிய அளவில் இருக்கும்


                                          இப்படி தான் நெருப்பும் தளதளவென எரியும்


அரிசியை மாவாக்கும் உரலும் உலக்கையும்

தேங்காய் திருவும் துருவிலை

                                                        இது புல் வெட்டும் உழவாரம் 😂
தொதல் கிண்டும் உழவாரம் இப்படி தான் ஆனால்  முன் பக்கம் சுத்தி சுழற்றி
கிண்டுவதுக்கு ஏற்றபடி சின்னதா  தாச்சி சட்டிக்கு மேல் வரை வருவது போல் இரும்பு தகடு பொருத்தி அதுக்கு மேல் கைப்புடி ஒரு ஆள் அளவில் இருக்கும்

இணையத்தில் இருந்து கிடைத்த படங்களிலும் விளக்கம் எழுதி இருக்கின்றேன்.


Nisha 
22.05.2020





1 கருத்து:

  1. தொதல் - ஆஹா... செய்முறை கேட்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறதே... சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். பொருட்களின் பெயரும் படங்களும் சேர்த்தது சிறப்பு.

    சில இடங்களில் நொதல் என வந்திருக்கிறதே - தொதல் தான் சரியான வார்த்தை அல்லவா?

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!