07 மே 2020

எங்க வீட்டு தோட்டம் ( 1984 - 1986 )

எங்க வீட்டு தோட்டம் ( 1984 - 1986 )
எனக்கு நன்கு நினைவு இருக்கின்றது 

பீர்க்கை, நாடங்காய், வத்தவகாய் தோடடத்தில் நல்லா காய்க்கும். கச்சாணும் ( நிலக்கடலை) நல்ல விளைச்சல்.

ஊர் அவரைக்காய் பந்தலில் காய்த்து கொட்டும்.மரவள்ளி பெரிய இடம் விதைத்து இருந்தார் அப்பா.

1987 - 1988  அப்பா இந்தியாவில் நிற்கும் காலத்தில் காசு இல்லாமல்  பசிக்கும் போது பிஞ்சு வெண்டைக்காய் அவரைக்காய் பிச்சு தின்போம்.கடலை அவித்தும் உண்போம்
மரவள்ளி  தினம் உணவில் இருக்கும். வளவில் நின்ற லாவுள் காயும் பழமும் பசிக்கு ருசிக்கும்.

அப்பெல்லாம் அரிசியும், தேங்காயும் வாங்கணும். கீரை மரக்கறி வீட்டு வளவில் கிடைக்கும்.( இதோட பச்ச மிளகாய் கன்று காய்க்க தொடங்கினால்  ஒரு பத்தை வெங்காயம் நட்டு விட்டால் மார்க்கெட் போகவே வேண்டாம் ) 

பீர்க்கை, நாடங்காய், வத்தவகாய் களுக்கு  நல்ல மணப்பு கருவாடு போட்டு தேங்காய்ப்பால் விட்டு  சொதி வைப்பாள் அம்மா.

நாடங்காய் தோல் சீவி துண்டுகளாக்கி 
தேங்காய் முதல் பாலை எடுத்து வைச்சிட்டு  இரண்டாம் மூண்டாம் பாலில் காய், சின்னவெங்காயம், பச்சமிளகாய் , மணப்புக்கருவாடு, மஞ்சள், உப்பு போட்டு அவிச்சி   முதல் கட்டி தேங்காப்பாலை விட்டு கொதி வர இறக்கி தேசிப்புளி விட்டு எடுத்தால்  சொதி நாலு ஊருக்கு வாசம் வரும்.

சுடச்சுட புழுங்கல் அரிசி சோறும் 
முதல்ல சுண்டலும் பொரியலும்
இரண்டாம் தடவை குழம்பும் பால்க்கறியும்
முண்டாம் தட்டில்  இப்படி ஏதேனும் காய் அல்லது இலைதழை சொதி
கடைசியாய் முட்டியில் வரும்  கட்டித்தயிர் அல்லது  சீசன் பழம் திண்டு  வளர்ந்த காலம்  அது.

ஒரு அகப்பை சோறு ரெண்டகப்பை இலைக்கறி சுண்டல் 
கீரி,சூடை மீன் போடடவிச்சு வேலியில் கிடைக்கும் முருங்கை, குறிஞ்சா, பொன்னாங்காணி, வல்லாரை, முளைக்கக்கீரை எதோ ஒரு கீரை கடடாயம் இருக்கும்.

அப்புறம் மீன் பொரியல்
அடுத்த அகப்பை சோத்துக்கு
குழம்பு இப்படித்தான்  நாலு கரண்டி   சோறும்  அதைவிட அதிக காய் கறியும் சாப்பிடுவோம்.

அது மட்டுமா? 
தூதுவளை துளிர்
முருங்கை துளிர்
கறிவேப்பிலை துளிர் 

சோத்தை கஞ்சி வடிச்சிட்டு அதுக்கு மேல வாழை இலை போட்டு கீரையை வைச்சு சருவ சட்டியால் மூடி அதுக்குள் நெருப்பு தணலை போட்டு விடடால் கீரை வெந்து வரும்

அதுக்கும் பச்சமிளகா, வெங்காயம், உப்பு புளி விட்டு அம்மியில் அரைக்கால் சூப்பர் சம்பல்
சுடுசோத்துக்கு வேற ஒண்டும் வேண்டாம்

 நம்மட ஊர்ல சுரைக்காய் எண்டால் பூசணிக்காய் அல்லோ?
அதுக்கு தேங்காய் மிளகு, உள்ளி அரைச்சு கறிவைப்பம்.
நாடங்காய் பீர்க்கங்காய் , வத்தவகாய் சொதிக்குதான்  பெஸ்ட்

எங்கள் வாடகை வீட்டின் கூரை ஓலையால் வேய்ந்திருந்தது. கிணறு இறைப்பது எனினும் கூரை வேய்வது எனினும் அன்று எங்கட வீடு திருவிழாக்கோலம் பூணும். அப்பாவின்  நண்பர்கள் ஏழெட்டு பேர் வருவார்கள். அம்மா முதல் நாளே புட்டுக்கு மா அவிச்சு வறுத்து வைப்பா. புட்டும் சம்பலும் காலைசாப்பாடுமாக அந்த மாதிரி தடபுடல் படும்.  வீட்டில் மேல்  கூரையில் வேய்ந்த பழைய கிடுகுகள் குசினிக்கு புது கூரையாகும்  ( அது தனிய  ஒரு குடிசையா கட்டி இருந்தார்கள். அதை வேய்வோம்) மழைக்காலத்தில் இரண்டில் ஒன்று ஒழுகினால் ஒன்று  நல்லா இருக்கும். அது ஒழுகினால் இது நல்லா இருக்கும், குடிசைக்குள் அடுப்பும் இருக்கும்,  அதில் நாலு கல் போட்டு  உயர்த்தி அதில் பலகை வைச்சு அம்மா உயர்த்தி வைச்சிருப்பாள். அதில் ஏறி படுப்போம் .
மழை காலத்தில் வீடு ஒழுகினால்  நாங்கள் ஆறு பிள்ளைகளும் அம்மா, அப்பாவும் ஓலை  குடிசையில் தூங்க இடம் போதாது 

பல நாள்  நாங்கள் தலைகாணியை தூக்கிட்டு பக்கத்து வீட்டு நகுலேஸன்ரி வீட்டு விறாந்தையில் போய் தூங்கி எழும்பி வருவம். வீடு வேய்ந்தால்  அங்கே போக 
தேவையில்லை.  எல்லாம் கொஞ்சம் காலம் தான். ( சித்தப்பா அவர் friends பேராதனை கம்பஸில் பிரச்சனை என ஊரிலும் ஆர்மி வந்து தேடி வீட்டில் இருக்க ஏலாது என வெளிநாட்டுக்கு அனுப்ப இந்தியா போக  அப்பாவையும் கூட்டி போய்  அனுப்பி பிறகு சித்தியை அனுப்ப போய் சித்தியின் மகனுக்காக அப்பாவும் சுவிஸ் வரும் வரை 1987 - 1989 ரெண்டு வருடம் இருண்ட காலம் ) 

நான் வறுமையையும் உணரணும் என கடவுள்  நினைச்சார் போல. அப்பா வெளி நாடு வரவென வெளிக்கிட்டு இந்தியாவில் நின்ற காலங்களில்  பசியும், உணர்த்தி தான் 1990  என்னை  சுவிஸ் வர வைச்சார் கடவுள். 

எத்தனை சோதனை வந்தாலும் எதிர்த்து போராடி உழைத்து பிழைத்தால் வாழ்க்கையில் உயரலாம் என எனக்கு கற்று தந்தவள் என் அம்மா சொந்த வீடு தோட்டம்  காணி என செல்வாக்கான குடும்பத்தில் முத்த பெண் பிள்ளையாக பிறந்து கஷ்டம் தெரியாமல் வளர்ந்து ஊருக்கு தானம் செய்த குடும்ப பாரம்பரியம் அவளுக்கு இருக்கின்றது. 

எல்லாமே இழந்த போதும் மனம் தளராமல் தான் பெற்ற பிள்ளைகளுக்காக உதிரத்தை உரமாக்கினாள். ( இன்னொரு பதிவில் சொல்வேன் ) 

வாழ்க்கையில் 
உயர்வும் , தாழ்வும் 
ஏற்றமும் இறக்கமும் எப்போதும் வரும்

கொரோனாவாலும் வரும் 😍

1 கருத்து:

  1. நினைவுகள் எத்தனை நினைவுகள்...

    எந்தப் பிரச்சனை வந்தாலும் அதை எதிர் நின்று போராட்டும் திறமை தந்த அனுபவங்கள்.

    இந்த கொரோனாவும் விட்டு விலகும். நம்பிக்கை கொள்வோம்.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!