28 ஆகஸ்ட் 2017

உணர்வற்று போன பின்???

எங்கள் கலாச்சாரத்தின் படி பெற்றவர்கள் பிள்ளைகளை தாங்கியே நம்பியே வாழும் சூழலில் இக்கால இளையோரிடம் இருகுடும்பத்தினையும் அனுசரித்து செல்லுதல் என்பது குறைந்து திருமணம் எனில் தாங்கள் இருவர் மட்டுமே எனும் புரிதல் அதிகமாகி, வேற்றுமைகள்,பிரச்சனைகள் என சரியான புரிதல்கள் இன்றி பெரியோரை தூரமாய் நிறுத்தி தனக்கு எல்லாம் தெரியும், தன்னால் எல்லாம் சமாளிக்க முடியும் என அகந்தை கொண்ட மனமும், சரியான் புரிதலின்மையும், வழிகாட்டுதல் இன்றியும் தவறான நபர்களின் ஆலோசனையுமாக சீர்குலையும் குடும்பங்கள் தற்காலத்தில் அதிகமாகி... பிரச்சனைகளை எதிர் நோக்க தன்னம்பிக்கையற்று தற்கொலையை நாடிச்செல்லும் சூழல் அதிகரித்து வரும் இன்றைய சூழலில்

நமக்குப்பின் நம்மை நம்பி இருப்போர் நிலை குறித்து என்றேனும் சிந்தித்திருக்கின்றோமா?

வீட்டின் ஆண் மகனாய் பிறந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து திருமணமானபின் மனைவி, தாய் என வரும் சூழலில் இருவரையும் ஒரே தராசில் நிலைக்க வைக்க முடியாதவர்கள் தங்கள் இல்லாமை, இயலாமை நேரம் தன்னை நம்பி இருக்கும் தாய், தகப்பன், சகோதரர்கள், உற்றார்,உறவினர் நிலை குறித்து என்றேனும் சிந்தித்திருக்கின்றீர்களா?
கடவுள் சட்டப்படி தாயையும், தகப்பனையும் அசட்டை பண்ணாமல் அவர்களுக்கான கடமையை நிறைவேற்றி, மனைவியாளவளுக்குரியதையும் சரியாக செய்ய வேண்டும் என்றிருந்தாலும் ஒரு ஆண்மகனுக்கு மனைவி எனும் பந்தம் இடையில் வந்திருந்தாலும் அவனுக்குரிய அனைத்து ஆளுமைகளையும் உலகச்சட்டத்தின் படி மனைவிக்கே எனும் சாதகமிருப்பதும் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களையும் பயன் படுத்திடும் வாய்ப்பு கிடைக்கின்றது.
ஆனால்........?
ஒரு ஆண் தாயின் கர்ப்பந்திலில்ருந்து பிறந்து வளர்ந்து 25 தொடக்கம் 30 வருடங்கள் பெற்றோரால் வளர்க்கப்பட்டு, நேசிக்கப்பட்டு திருமணம் எனும் பந்தத்தின் மூலம் முழு உரிமையும் மனைவிக்கு தாரை வார்க்கப்ப்ட்ட பின் வாழும் காலத்திலேயே அவனால் மனைவியையும் சொந்தக்குடும்பத்தினையும் சமாளிக்க முடியாத போது அவன் இல்லாத நிலையில் அவனை நம்பி இருக்கும் அவன் தாய் தகப்பன் நிலை என்ன ஆகும் என்றேனும் யோசித்திருக்கின்றீர்களா?
நாளை என்ன இன்றே அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை நாமறியோம் எனும் நிலையில் உங்களுக்கான எதிர்காலம் குறித்து மட்டுமல்ல நீங்கள் இல்லாத வாழ்க்கையை தைரியமாக உங்களைச்சார்ந்தவர்களும் எதிர் கொள்ள திராணியுள்ளவர்களாகும் படி திட்டமிடுங்கள்.
வீட்டுக்கு ஒரு பையனாயிருந்தால் நீங்கள் மட்டுமே உங்கள் பெற்றோருக்கான ஊன்று கோலாயிருக்க முடியும்,. இறப்பும், பிறப்பும் இயற்கையின் படைப்பில் இன்றியமையாது போனது. இழப்பினை ஈடுகட்ட எவராலும் இயலாது.
இழப்பு என்பது இறப்பு மட்டும் அல்ல.உணர்வற்று உயிர் உசலாடும்  நிலை, நோயுற்று உடல் அங்கங்கள் செயலற்று போகும் நிலை என இல்லாமை இயலாமை   ஆக்ரமிக்கலாம்.
இழப்பின் நேரம் உடல், உள ஆரோக்கியம் சார்ந்து சொந்தபந்தங்கள் துணை நின்றாலும் பொருளாதார ரிதியாக உங்களை நம்பி இருக்கும் உள்ளங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்.
சொந்தமும் போய் சொத்தும் போய் நடுவீதியில் நிற்கும் நிலை ஏன்?
வாழும் காலத்தில் இன்னாருக்கு இது என முடிவெடுத்து அனைத்தினையும் எழுத்தில் எழுதி வையுங்கள். எழுத்தில் எழுதுவதை சம்பந்தப்ப்ட்டவர்களுக்கும் அறிவியுங்கள்.
உலகத்து சட்டங்கள் உங்கள் உடல் முதல் சொத்து வரை அனைத்தும் மனைவிக்கு மட்டுமே முதல் உரிமை என சொல்லி செல்லும் போது உங்கள் இல்லாமை மனதை அழுத்த உடலையேனும் உரிமையாய் தொட்டு தடவ , கண்ணீர் விட்டு கதறி அழ , கடைசி நிமிடங்கள் உங்களோடு கழிக்க உங்கள் மனைவியை கெஞ்சி கேட்கும் நிலையும் வரும்.
மனைவி அனுமதிக்காவிட்டால்????
பாதியில் வந்த சொந்தம் ஆதியில் தொடரும் பந்தத்தை கதறிடிக்கும் அவலமான நிலை வரலாமா?
முன்னொரு காலத்தில் திருமணம் என்பது ஆயுள் பந்தமாயிருந்தது தான். ஆனால் இன்றைய உலகமயமாக்கலில் எதுவுமே நிலையானதில்லை.
கணவனோ மனைவியோ இழப்பின் பின் காலம் முழுக்க நினைத்து கண்ணீர் விடும் சூழலும் இப்போதில்லை. கலங்கி நிற்பதுவ்ம் இல்லை. குழந்தைகளை கூட தூக்கி போட்டு விட்டு தனக்கென ஒரு வாழ்க்கை தேடி அடுத்த சில வருடங்களில் செல்லலாம். இயந்திர உலகில் அன்பும் வற்றித்தான் போனது. காலத்துக்கு ஏற்ப திட்டமிடுங்கள்.
நேசிப்பும் யாசிப்பும் தூசிக்கப்படும் காலம் இது. 
வாழும் வாழ்க்கையில் நீங்கள் எதை விதைக்கின்றீர்களோ அதை மட்டுமே விளைவிக்க முடியும், விதை ஒன்று போட்டால் மரம் ஒன்றாய் முளைக்கவே முளைக்காது.

திருமணம் என்றாலே அவன் சொந்ததாயையும் தகப்பனையும் மொத்தமாக விட்டு விலகி அதாவது அதுவரையான ஆசாபாசங்கள், சொந்த பந்தங்கள் அனைத்தினையும் கழுவி போட்டு விட்டு மனைவிக்கு மட்டுமே சொந்தம் எனும் கையறு நிலை தான் இங்கே பல ஆண்களுக்கு வரமாகி இருக்கின்றது.

அதே போல் பெற்றோர் சரியான புரிதலுள்ளவர்களாக மகனின் மனைவியை 
மறுமகளாக நேசிக்காவிட்டால் கணவன் இழப்பின் பின் உங்களை மட்டுமே நம்பி வந்த மனைவி அவர்களினால் துன்பப்படும் சூழலும் விலக்கி வைக்கப்படும் நிலையும் கைவிடப்பட்டு அனாதரவான வாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம்.

இவ்விடயத்தில் மேலைத்தேய நாட்டினர் மிகத்தெளிவாக திட்டமிடுவார்கள். தங்களுக்கு பின் யார் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை சிக்கலாக்கி கொள்ள மாட்டார்கள்.
ஆனால் நாங்கள்?/
சிந்தியுங்கள்...! நெருப்பென்றால் வாய் வெந்து விடாது.

12 கருத்துகள்:

 1. நல்லதொரு அலசல் இன்றைய வாழ்க்கைச்சூழல் மாறிக்கொண்டுதான் வருகிறது.

  இருப்பினும் அந்த ஆண் மகனுக்கோ, கணவனுக்கோ பிரச்சனைகளின் தொடக்கமே பெண் என்ற தாயும், மனைவியுமே இதில் ஒற்றுப்போகும் பெண்கள் மிக மிக குறைவு.

  தன் கணவனை தனது கைக்குள் வைத்துக்கொள்ள நினைக்கும் மனைவி, தான் மாமியார் ஆனபோது மகனை விட்டுக்கொடுக்க துணிவதில்லையே இது எவ்வகையில் நியாயம் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த விடயத்தில் தாய், தாரம் இருவருமே எதிர்த்திசையில் தான் பயணிக்கின்றார்கள் என்றான பின்னும் அந்த நபருக்கு பிரச்சனை யாரால் எங்கிருந்து எனும் புரிதலிருக்கும் அல்லவா? தான் உயிர்ப்புடன் இருக்கும் போதே இத்தனை பிரச்சனைகளை தன்னால் சமாளிக்க முடியவில்லை எனும் போது தனக்கு பின் தன்னை சார்ந்தவர்கள் நிலை என்ன என்பது மட்டும் தான் என் கட்டுரையும் நோக்கம் கில்லர்ஜீ சார். இருவரும் பெண்கள் தான். பெண்கள் இப்படித்தான் என புரிந்த பின் சந்தர்ப்பங்களை சரியான புரிந்திடாமல் கையறு நிலையில் விட்டு செல்லும் ஆண்கள் தான் சிந்திக்க வேண்டும்.

   இறப்புக்கு திட்டமிடுபவர்கள் அதற்கு பின் என்ன எப்படி எனவும் திட்டமிடத்தான் வேண்டும், இல்லாவிட்டால் அவன் உழைத்த காசுல் ஒரு ரோஜாப்பூ வாங்கக்கூட முடியாத அவலமும் தோன்றும்.

   இப்போதெல்லாம் பெண்களுக்கு சாதகமான சட்டங்களை பயன் படுத்தி வாழ்க்கையை வீணாக்கும் சம்பவங்கள் தான் அனேகம்,

   நீக்கு
 2. நல்ல புரிதல் இருந்தால் அதுவும் எந்த உறவையும் முதலில் நட்புடன் அணுகும் புரிதலும் அன்பும் இருந்துவிட்டால் பிரச்சனைகள் பல தீர்ந்துவிடும். ஆனால் அப்படி நட்புடன் பார்ப்பதற்கான மனப்பக்குவம் எல்லோருக்கும்வ் வருவதில்லையே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரிதல்கள் இப்போதில்லாமல் போவது தானே அடிப்படைப்பிரச்சனையே. திருமணம் என்றாலே கணவனும் மனைவியும் மட்டும் தான் என பெண் நினைப்பதும் அல்லது அப்படி வளர்வதும் .. இதில் மனைவியான பெண் தான் தாயாகின்றாள். தாய் தான் மனைவியும் ஆகின்றாள் என மறந்து போகின்றார்கள். மகன் அல்லது கணவன் உயிர்ப்புடன் இருக்கும் வரை அடங்கி வாழ்பவர்கள் அவன் இல்லை என்றானதும் அதுவரையான் அவனுடனான அனைத்து பந்தத்தினையும் கேள்விக்குறியாக்குவதும் நடக்கின்றது

   நீக்கு
 3. உறவுகளுக்கு மதிப்பில்லாமல் போகும் காலம். தான், தன் சுகம் என்னும் சுயநலம் மிகும் காலம். கூட்டுக்குடும்பம் எனும் முறை மிகவும் பழையதாகி விட்ட வாழ்க்கைமுறை. பணம் இருந்தால்தான் மதிப்பு என்றாகிவிட்ட நிலைமை.. சீரழிந்துகொன்டே போகிறது மனித உறவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூட்டுக்குடும்பமாக இருக்கா விட்டாலும் இருபக்கமும் தன் குடும்பம் தான் எனும் புரிதல் கூட போதும் சார். இங்கே தற்காலத்தில் அவை அற்றும் இற்றும் போகின்றது.

   நீக்கு
 4. நல்லதொரு அலசல் அக்கா...
  வீட்டுக்கு ஒரு பிள்ளையாக இருக்கும் பலர் பெற்றவர்களைவிட மாமியார் வீட்டை நன்றாக பார்த்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். அதனால் தான் சொல்கின்றேன் நினைவும் சுயமும் இருக்கும் காலத்திலேயே இன்னாருக்கு இன்னது என்பதையும் எழுத்தில் வைத்து விட வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை உண்டென்றானவர்கள் கட்டாயம் இதை செய்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் உயிரற்ற சூழலில் குடியிருக்கும் வீட்டிலிருந்து துரத்தப்பட்டு தெருவில் அனாதையாய் அலையும் நிலை யை நாம் நேசிப்பவர்களுக்கு இழப்புடன் பரிசாக்கும் நிலையும் வரும். கண் முன்னே நடப்பவை அப்படித்தான் இருக்கின்றதுபபா

   நீக்கு
 5. நெருப்பென்றால் வாய் வெந்துவிடாது என்பது உண்மைதான்.... ஆனால் சுடு சொல் இருக்கிறதே...நெருப்பைவிட பயங்கரமானது. எனது அனுபவம்,,..

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் நிஷா !

  அழகிய கருத்தை இங்கே
  ...ஆழமாய்ச் சொன்னீர் நன்றே
  இழப்பென எதுவும் இல்லை
  ...இயற்கையின் சுழற்சி தானே
  பழகிய உறவென் றாலும்
  ...பாதிதான் வருமாம் இங்கே
  வழங்கிடு மன்பை மட்டும்
  ...வலிதென விட்டி டாதே !


  பெண்ணிய மென்ப தற்கும்
  ...பெரும்சுமை இருத்தல் போல
  எண்ணிய தெல்லாம் நன்றாய்
  ...இருந்திடா வேளை கூட
  நண்ணிய உறவை எல்லாம்
  ...நயந்துநாம் காக்கும் போதில்
  பண்ணிய பாவம் போகும்
  ...பரிவதைக் காட்டு வோமே !

  பெற்றவர் உளம்ம கிழ்ந்தால்
  ...பெருமையில் குறைகள் இல்லை
  உற்றவள் உளம்ம கிழ்ந்தால்
  ...உயர்வினில் தடைகள் இல்லை
  அற்றவர்க் கமுதம் ஊட்டும்
  ...அருஞ்செயல் அன்ன வாழ்க்கை
  பொற்புடன் நிறைவு காணப்
  ...பொறுமைதான் வேண்டும் என்பேன் !

  முனிவது பாவம் என்று
  ...முத்தமிழ் சொன்ன தைப்போல்
  கனியது போலச் சொற்கள்
  ....கரைந்திட வேண்டும் நாளும்
  குனிவது கோழை இல்லை
  ....குறையிலான் கொண்ட கொள்கை
  இனியது வாய்மை தானே
  ....இருந்திட வாழ்வு தேனே !


  நடைமுறையில் காணும் வாழ்க்கை இது இருதலைக் கொள்ளி எறும்பாய் இன்றும் சில ஆணும் பெண்ணும் துயர்களைத் தாங்கிக் கொண்டு வாழ்கிறார்கள் ( நமக்குத்தான் உற்றவளும் இல்லை பெற்றவரும் இல்லை ) காலமாற்றம் இன்னும் மோசமாக்கும் சமூகக் கட்டமைப்பை என்ன செய்வோம் கலிமுற்றிப் போச்சே !

  பதிலளிநீக்கு
 7. அலசல் நன்று ! இது இன்றைய உலகம் அறியாத ஒன்று வயதானால் அறிவார் அன்று த ம 6

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!