27 டிசம்பர் 2015

நான் சின்னவளாய் இருந்தபோது - 3

இப்போது மூன்று வயதில் நர்சரிக்கு குழந்தையை அனுப்பும் பொழுதே இச்சிறுவயதில் நர்சரியா என அங்கலாய்க்கின்றோம். அக்காலத்தில் பாடம் என தெரியாமலே ஆறு மாதக்கைக்குழந்தையிலிருந்தே பாடல்களை பாடி அவர்களுக்காக் கல்வி ஆரம்பித்து விட்டது என்றால் நம்புவீர்களா? நினைவாற்றலைபெருக்கிட ஆறுமாதக்குழந்தைகளுக்கே அவர்கள் தானாய் அமர ஆரம்பித்ததுமே பாட்டிமார்கள் முதல் அம்மா மார்களின் தாலாட்டும் பாடலும் ஆரம்பித்து விடும்

ராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ... ஆரடிச்சு நீ அழுதாய் அடித்தாரை சொல்லி அழு ஆக்கினைகள் செய்திடுவோம்.
மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூ செண்டாலே தாத்தா அடிச்சாரோ தாமரைப்பூ செண்டாலே ஆராரோ ஆரிரரோ.

இப்படி பெரும்பாலான பாடல்கள் பேச்சுத்தமிழில் தான் பாடப்படும்.எனினும் ஒரிரு தடவை சொல்லிக்கொடுத்தாலே நினைவில் இருக்கும்படி அபி நயங்களோடு விரல்களைஅசைத்து உடலை வளைத்து பாடுவார்கள்.

சப்பாணியாம் பிள்ளை சப்பாணி சப்பாணிச்சண்டைக்கு போனாளாம் சண்டை செய்யுமாம் சப்பாணி முத்துப்பதித்தொரு கையாலே முழங்கிக்கொட்டுமாம் சப்பாணி 

என பாடி குழந்தையின் கரங்களை தட்டுவதற்கு பழக்குவார்கள்,
குழந்தையும் சப்பாணியாம் பிள்ளை சப்பாணி என ஆரம்பித்தாலே பொக்கைவாய்ச்சிரிப்போடு கைகளை தட்ட ஆரம்பித்து விடும். 
கை வீசம்மா கைவீசு கடைக்கு போகலாம் கைவீசு மிட்டாய் வாங்கலாம் கை வீசு பாடி உண்ணலாம் கை வீசு 
என சொல்லி அமர்ந்திருந்த படியே கைகளை முன்னும் பின்னுமாய் வீசி ஆட்ட சொல்லி தாமும் சேர்ந்து கைகளை வீசுவார்கள். சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயும் மயிலே சாய்ந்தாடு குத்து விளக்கே சாய்ந்தாடு கோயில் புறாவே சாய்ந்தாடு மானே மயிலே சாய்ந்தாடு மரகதக் கிளியே சாய்ந்தாடு கண்ணே மணியே சாய்ந்தாடு கட்டிக் கரும்பே சாய்ந்தாடு மயிலே குயிலே சாய்ந்தாடு மடியில் வந்து சாய்ந்தாடு
என சொல்லியும் அமர்ந்திருக்கும் குழந்தை தன்னை முன்னும் பின்னும் அசைக்கும் படியாய் ஆட பழக்குவார்கள். சப்பாணியாம் பிள்ளை சப்பாணி என கைகளை தட்டுவதும். கைகளை வீசி கை வீசம்மா என பாடுவதும் ,சாய்ந்தடம்மா சாய்ந்தாடு என சொல்லி சாய வைத்து ஆட வைப்பதுமாய் குட்டிகுழந்தையிலேயே குழந்தைக்காக உடற்பயிற்சியோடு,உளவியல் ரிதியான குட்டிகுட்டி ரைம்ஸ்களும் கூட கற்பிக்கப்பட்டது. அடுத்து ஒரிரு வயதாகி பேச ஆரம்ப்பித்ததும் ஒன்று இரண்டு மூன்று சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பார்கள். அந்நாட்களில் சின்னஞ்சிறு மழலைகளுக்கு கணக்கு சொல்லி கொடுக்கும் விதமே தனி. 
ஒண்ணு,ரெண்டு மூணு ஒணான் என்றே கூறு நாலு அஞ்சு ஆறு மரத்தின் மேலே பாரு ஏழு எட்டு ஒன்பது உந்தன் கையைத்தட்டு 

கையை தட்ட வேண்டும்..ஒண்டு, ரெண்டு மூண்டு என பாடினாலும் தட்டச்சிடும் போது அதை தவிர்க்க முயற்சிக்கிறேன்.

அதே வரிசையில் இன்னும் சில பாடல்கள்..

ஒன்றும் ஒன்றும் இரண்டு. இரண்டும் ஒன்றும் மூன்று மூன்றோடு ஒன்றைசேர்த்தால் நான்கு நான்கும் ஒன்றும் ஐந்து 
என் கையின் விரல்கள் ஐந்து

கையில் இருக்கும் விரல்களை விரித்து காட்டியபடியே என முதல் ஐந்து இலக்கங்களை கைவிரல்களைக் காட்டியே கற்பிப்பார்கள் 
எண்கணக்கு பத்து வரை நினைவுக்கு இருக்க அன்றாட பயன்பாட்டு பொருட்களை பயன் படுத்தும் வித்தையை என்ன வென்போம்.
ஒன்றும் ஒன்றும் இரண்டு பூவில் இருப்பது வண்டு இரண்டும் இரண்டும் நான்கு இனிப்பாய் இருக்கும் தேங்காய் மூன்றும் முன்றும் ஆறு வேலைசெய்தால் சோறு. நான்கும் நான்கும் எட்டு நன்றாய் பாடுவாள் பட்டு ஐந்தும் ஐந்தும் பத்து அன்பே நமக்கு சொத்து கீழே இருக்கும் பாடலின் வார்த்தையாடலைக்கவனித்தால் ஒவ்வொரு வார்த்தையையும் நம் மூதாதையர் எப்படி அறிவுபூர்வமாக இணைத்திருப்பார்கள் என புரியும். கொக்குச்சிக் கொக்கு ரெட்டை சிலாக்கு முக்குச் சிலந்தி நாக்குலா வரணம் ஐயப்பன் சோலை ஆறுமுக தாளம் ஏழுக்குக் கூழு எட்டுக்கு முட்டி ஒன்பது கம்பளம் பத்துப் பழம் சொட்டு கடந்த வாரம் என் தங்கை தன் ஆறு மாத பெண் குழந்தையோடு வந்து சில நாட்கள் என் வீட்டில் நின்றாள். அவள் குழந்தைக்கு நான் வைத்த செல்லப்பெயரே பார்பி டால் என்பது தான். அத்தனை அமைதி.அனைத்தினையும் கவனித்தாலும் இயல்பான வரக்குடிய சத்தம் கூட இல்லாமல் அமைதியாய் பொம்மை போல் இருக்கின்றாளே என கைகளை பிடித்து சப்பாணி யாம் பிள்ளை சப்பாணி என பாட்டை இரண்டு தடவை பாடினேன். மூன்றாம் தடவை நான் பாட ஆரம்பித்ததும் குழந்தை தானாக கல கலவெனும் பொக்கை வாய் சிரிப்பும்.சத்தமுமாய் கைகளை தட்ட ஆரம்பித்தாள். பிள்ளை அமைதியாய் இருந்ததுக்கு காரணம் தாயோ தகப்பனோ அக்குழந்தையுடன் பேசி, பாடி கலகலப்பாயிராதது தான் எனும் உண்மை புரிந்ததும் எனக்குள் கவலையாய் இருந்தது.

அது வரை நான்கைந்து நாள் அத்தனை அமைதி, சின்னகுழந்தை இருக்கும் வீடா என எனக்குள் ஆச்சரியம் தரும் படி அத்தனை அமைதியாயிருந்தாள்,
தங்கை குழந்தையை பார்த்ததும் தான் எனக்குள் இப்படி ஒரு பதிவு எழுதினால் என்ன என்று தோன்றியது. ஏற்கனவே தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலாவில் இப்பாடல்களை நான் தொகுத்திருந்தாலும் சின்ன வயதில் நான் கேட்டு இருந்தவைகளை என் நினைவாற்றலில் இருந்தபடியேயும் தட்டச்சிட்டு பகிர்வதால் இப்பாடல்களில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். இக்காலத்தில் அப்பா,அம்மாவும் வேலைக்கு போகும் சூழலில் பெரும்பாலான குழந்தைகள் இம்மாதிரியான வாய்ப்புக்களை இழப்பதனால் பல நேரங்களில் அந்தந்த வயதுக்குரிய அசைவுகள் இன்றி பிடித்து வைத்த பொம்மை போலிருக்கின்றார்கள். 

குழந்தைகளுக்கு இம்மாதிரி பாடல்கள், குட்டிக்கதைகளை சொல்லி கொடுக்கும் போது குழந்தையின் பார்த்தல், கேட்டல், கிரகித்தல் குறித்தும் கவனத்தில் கொள்ள முடியும். குழந்தைகள் அந்தந்த வயதுக்கே உரிய குறும்புகள் சத்தங்களோடு வளர்கின்றார்களா என்பதை அனுபவமிக்க தாய்மார்களால் கண்டு பிடிக்க முடியும்.ஆக்டிவிட்டி மற்றும் உடல், உளவியல் குறைபாடுகள் இருந்தால் சிறுவயதில் கண்டு பிடித்து தகுந்த சிகிச்சை செய்யவும் முடியும் என்பதை உணராமல் குழந்தை ஒன்று அது பொம்மை போலிருந்தாலும் போதும் எனும் நிலைமை மாற வேண்டும்.  

பெற்றவர்கள் வீட்டிலிருந்தாலும் வீட்டு வேலை, தொலைக்காட்சி, தொலைபேசி, கணணி என பொழுது போகும் சூழலில் குழந்தைகளை அக்டிவ்வாக வளர்ப்பது எப்படி என அறியாதவர்களாயிருப்பதனால் குழந்தைக்குள் ஒருவித மந்த சக்தியும், ஆர்வமின்மையும் உருவாகிட காரணமாகின்றது.சின்னக்குழந்தைகளோடு பேச வேண்டும், பாட்டு சொல்லி கொடுக்க வேண்டும் என்பதுவும் தெரிவதில்லை. சில தாய்மார்கள் பிள்ளைக்கு பாலூட்டும் போதும் கவனத்தினை வேறெங்கோ வைத்திருப்பார்கள். 

இதற்கு என் தங்கையும் விதி விலக்கல்ல என நான் புரிந்ததும் நான் சொன்னது ,, தங்கையையும் பிள்ளைகளையும் இரண்டு மாதங்களாவது எங்கள் வீட்டில் விடுங்கள். பிள்ளையை இப்படியே வளர விடாதீர்கள் என்பது தான். என் பிள்ளைகள் சுவிஸில் பிறந்திருந்தாலும் நான் என் நினைவில் இருந்த படி என் பசங்களுக்கு இவைகளை சொல்லி கொடுத்திருந்தேன். அதனால் தானோ என்னமோ என் மகனும் மகளும் எட்டு மாதங்களில் நடக்கவும், ஒரு வயதுக்குள் பேசவும் தொடங்கி இருந்தார்கள்..

விசேசமாக குழந்தைகளாயிருக்கும் போது இருவரையுமே இக்கால வோக்கர் எனப்படும் நடைவண்டியில் விட்டதே இல்லை.. 
படம் நன்றி இணையம் 
என்னவர் பிள்ளைகளுக்கு என ஸ்பெஷலாக செய்த நடை வண்டி
மகளுடைய ஒரு வயது பிறந்த நாள் போட்டோ

இப்பதிவை படிக்கும் ஒரு சில தாய்மார்களாவது தமக்கு தெரிந்த படியே தம் குழந்தையை ஐந்து மாதம் முடிந்ததுமே இப்பாடல்களை பாடி குழந்தைகளை உடல், உள ஆரோக்கியத்தோடு அந்தந்த வயதுக்குரிய துடிப்புக்களோடு வளர உதவிடுமானால் அதை விட மகிழ்ச்சி வேறில்லை தானே?
முழுமையாக்க வேண்டும் என முயன்றதில் கொஞ்சம் நீண்ட பதிவாகி விட்டது. மன்னித்து விட்டு உங்கள் கருத்தினை சொல்லுங்கள். ..
தொடர்வேன்!

32 கருத்துகள்:

  1. சிறுவயதில் உற்சாகமாய் பாடி ஆடி ரசித்த பாடல் அனுபவங்களை சுவையாக சொன்னதற்கு பாராட்டுக்கள் .இனிமைக் காலங்கள் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா!தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  2. நீண்ட பதிவல்ல சகோதரி! மிகவும் அவசியமான பதிவு. மிக மிக அருமை!! தொடருங்கள்.

    கீதா : //இக்காலத்தில் அப்பா,அம்மாவும் வேலைக்கு போகும் சூழலில் பெரும்பாலான குழந்தைகள் இம்மாதிரியான வாய்ப்புக்களை இழப்பதனால் பல நேரங்களில் அந்தந்த வயதுக்குரிய அசைவுகள் இன்றி பிடித்து வைத்த பொம்மை போலிருக்கின்றார்கள்.
    பெற்றவர்கள் வீட்டிலிருந்தாலும் வீட்டு வேலை, தொலைக்காட்சி, தொலைபேசி, கணணி என பொழுது போகும் சூழலில் குழந்தைகளை அக்டிவ்வாக வளர்ப்பது எப்படி என அறியாதவர்களாயிருப்பதனால் குழந்தைக்குள் ஒருவித மந்த சக்தியும்,
    ஆர்வமின்மையும் உருவாகிட காரணமாகின்றது.சின்னக்குழந்தைகளோடு பேச வேண்டும், பாட்டு சொல்லி கொடுக்க வேண்டும் என்பதுவும் தெரிவதில்லை. சில தாய்மார்கள் பிள்ளைக்கு பாலூட்டும் போம் கவனத்தினை வேறெங்கோ வைத்திருப்பார்கள். //

    வார்த்தைகள் உண்மையே! மிக மிக. இந்தப் பாடல்கள் குழந்தைகளை நம்முடன் பிணைப்பது மட்டுமின்றி ஒரு அந்நியோன்யம் வளர்க்கும். அவர்களுக்குப் பல கற்றுக் கொடுக்கும். நர்ஸரிகளை விட. நான் எனது மகனுக்கு நிறைய பாடுவேன். கருப்பையில் வளர்ந்து வரும் போதிலிருந்தே. நிறைய கதைகள் பேசியிருக்கிறேன். சொல்லியிருக்கிறேன். பஞ்சதந்திரக் கதைகள். புராணக்கதைகள். என் அம்மா வீட்டிற்குப்போகும் போதும் என் அம்மா அவனிடம் நிறைய பேசுவார். கிராமத்தில் தாமரைக் குளம், ஆறு என்று அழைத்துச் சென்று..எப்போது என்று நினைக்கின்றீர்கள் பிறந்து 3 ஆம் மாதத்திலிருந்தே...ஒவ்வொன்றையும் காட்டிக் காட்டி, பறவைகள் அனைத்தையும்...

    இதில் மிகவும் முக்கியம் இவை அனைத்தையும் செய்யும் போது குழந்தைக்குப் பார்வை சரியாக இருக்கிறதா, காது கேட்கின்றதா, உணர்தல் இருக்கின்றதா, குழந்தையின் செயல்பாடுகள் சரியாக இருக்கின்றதா, கிரஹிக்கும் சக்தி இருக்கின்றதா, மூளை வளர்ச்சி என்று எல்லாமே கூர்ந்து கவனித்தால் தெரிந்துவிடும். தெரியும் போது அதற்குத் தகுந்தபடி நாம் குழந்தையை வளர்க்க முடியும்.

    அது போன்று நடை வண்டி ஆம் எனக்கும் வாக்கர் எல்லாம் மகனின் அத்தை பரிசளித்தார்கள். அது போன்று ப்ராம். ஆனால் நான் அவனை எனது இடுப்பில்தான் தூக்கிச் செல்வது வழக்கம். அது போன்று இதே நடைவண்டிதான் அவனுக்குப் பழக்கப்படுத்தியது. அது போன்று இடுப்பில் சுமப்பதுதான் சரி அதாவது கிழக்கு நாடுகளின் கலாச்சாரம் அதுதான் தாய் சேய் இணைப்பை வலுப்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூட சொல்லுகின்றன.

    அருமையான பதிவு சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட பின்னூட்டத்துக்காக் நன்றிங்க!

      நிஜம் தான் இம்மாதிரி கதைகள் சொல்லி பேசும் போதும் பாடல்களை சொல்லிக்கொடுக்கும் போதும் குழந்தைகளில் கேட்டல்,பார்த்தல்,கிரகித்தல் குறித்த உடல் உள வளர்ச்சியையும் கண்காணித்து அதற்கேற்ப அவர்கள் வளர்ச்சி குறித்து சிகிச்சைகள் அளிக்கவும் முடிகின்றது.

      நான் வெளி நாட்டினரை பார்த்து தான் பிரேம் போன்ற வாக்கர்களை பயன் படுத்த ஆரம்பித்தோம்.குழந்தையை அம்மாதிரி பிரேம்களில் விடுவதனால் அவன் நடை பயிலும் போது நடைவண்டி தரும் எலும்புகளுக்கான உறுதியை இழக்கின்றான்.

      நடைவண்டி முழங்கால் மற்று பாதங்களின் எலும்புகளை உறுதியாக்கி தசைகளையும் இறுக்கி விழுந்தாலும் முறிவுகள் ஏற்படாத உறுதியை தருகின்றது.

      வோக்கரில் விடுவதனால் சின்னதாய் விழுந்தாலே வெண்டிக்கைய உடைவது போல் எங்கேனும் எலும்பு முறிவும் ஏற்படுகின்றது.

      இல்லாலத்தில் இதையெல்லாம் யோசிக்க நேரம் ஏது?பெற்றால் போதும் எனும் நிலையில் தான் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

      நீக்கு
    2. //இடுப்பில் சுமப்பது தான் சரி அதாவது கிழக்கு நாடுகளின் கலாச்சாரம்//

      கீழைத்தேய நாடுகளில் மட்டுமல்ல இங்கிலாந்து இளவரசிகள் டியானாவும் அவரது மருமகள் கேட் டும் வெளிநாட்டுப் பயணங்களில் விமானத்திலிருந்து இறங்கி வரும் போது அவர்களது குழந்தைகளை இடுப்பில் சுமந்து வருவதை செய்திகளில் பார்த்திருக்கிறேன்.
      இன்னும் பல வெளிநாட்டுப் பிரபலங்கள் தங்கள் குழந்தைகளை பொது இடங்களில் கூட இடுப்பில் சுமந்திருப்பதை கண்டிருக்கிறேன்.

      ஆனால் எங்கள் ஊர் FOREIGNERS இங்கு வந்து பண்ணும் அளப்பறைகளை பார்க்கும் போது... சில வேளை சிரிப்பை அடக்க முடிவதில்லை.

      நீக்கு
  3. பாட்டிமார்கள் இல்லாத வீட்டிற்கு உங்களை அனுப்பிவிடலாம் போலிருக்குதே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டி மட்டும் தான் பாடணுமா? அத்தை பாடக்கூடாதா?
      சில விடயங்களில் ஓல்ட் இஸ் கோல்ட் தான். சரி சரி விமான டிக்கட் அனுப்பினால் பாட்டி வேஷம் போட்டு வந்து உங்க வீட்டில் கூட பாட்டு பாடிட்டு போகின்றேன்.

      நீக்கு
  4. அருமை அக்கா உண்மையில் இந்தக்கால தாய்மாருக்கு இந்த பாடல்கள் தெரியாது குழந்தை கத்தினால் லப்டொப்பைத் திறந்து ஏதாவது பாப்பாப் பாடல் போட்டுவிடுகிறார்கள் உயிரற்ற ஒரு பொருளிலிருந்து உணர்வை எப்படி அடைய முடியும்

    உங்களின் சிறப்பான இந்த ஆக்கம் தெரியாதவர்களுக்கு கற்றுத் தருவதாக அமைந்துவிட்டது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த லாப்டப் மோகம் எங்கே கொண்டு போய் விடுமோ?

      நன்றுப்பா! தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  5. அனைத்தும் நல்ல விடயங்கள் சிறுவயது நினைவோட்டங்கள் இன்னும் நினைவில் வைத்து எழுதியமைக்கு எமது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு பாட்டும் அருமை. அந்த நடைவண்டி சூப்பர்.
    உங்கள் மகள் உண்மையைலேயே தேவதை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் நிஜம் தான். வெளி நாட்டில் இருக்கும் நாங்கள் ஊர் நினைவிலும் உள் நாட்டில் இருப்போர் வெளி நாட்டு நினைவிலும் இருக்கும் அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை நிலை தானே.. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா. தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  7. நீங்கள் பதிவரானது எங்கள் அதிர்ஷ்டம்
    என உங்கள் அருமையான பதிவுகளைப் படிக்க
    நினைத்துக் கொள்கிறேன்.
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தொடர்ந்த ஊக்குவிப்புக்கு நன்றி ஐயா!

      நீக்கு
  8. அந்த காலத்தை இந்தக் காலத்தோடு ஒப்பிட்டு சொன்னது அருமை. அழகான மலரும் நினைவுகள் பதிவு. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    சகோதரி

    இளமைக்கால நினைவுக்கு எங்களை அழைத்து விட்டீர்கள்..விளக்கமும் சொல்லிய கிராமிய மனம் வீசும் பாடல்கள் அற்புதம்... வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. அருமையான ஒரு பதிவு இக்காலத்தில் நிறைய குழந்தைகள் இது போன்ற பல பற்றை மிஸ் பண்ணி விடுகிறார்கள் அதற்கு அவர்களின் குற்றமும் இல்லை பெற்றவர்களின் குற்றமும் இல்லை இன்றய அவசர யுகத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகிறார்கள் என்றால் குழந்தை இது போன்ற நல்ல பல விடயங்கள் மிஸ்ஸாகித்தான் போகிறது அவர்களின் சந்தர்ப்ப சூழல்

    எது எப்படியாக இருந்தாலும் அக்காவின் ஓர்மைத் திறணை மெச்சுகிறேன் அருமையான பல தாய்மார்கள் மறந்த பாடல்கள் இவைகள் இப்போது படிக்கும் போதுதான் எனக்கும் நினைவுக்கு வருகிறது சூப்பர் அக்கா அப்படியே காப்பி எடுத்து எங்கள் வீட்டம்மாவுக்கும் அனுப்பி விடுகிறேன் ஏன் என்றால் எங்க வீட்டம்மா மறந்த பாடல் இது என் குழந்தைகளை இப்படி பாடி சிரி தூங்க வைக்க அதை நான் பார்க்க நிறையவே ஆசைகள் இருந்தது ஆனால் இது வரை நடக்கவே இல்லை அது இனியும் நடக்காது

    கணக்குப்பாடல்கள் கேட்டிருக்கிறேன் இருந்தாலும் உங்கள் நினைவுக்கு வந்த வற்றை அருமையாக தந்துள்ளீர்கள் பாராட்டுக்கள் அக்கா அதிலும் சாய்தாடம்மா பாடல் சூப்பர்
    சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
    சாயும் மயிலே சாய்ந்தாடு
    குத்து விளக்கே சாய்ந்தாடு
    கோயில் புறாவே சாய்ந்தாடு
    மானே மயிலே சாய்ந்தாடு
    மரகதக் கிளியே சாய்ந்தாடு
    கண்ணே மணியே சாய்ந்தாடு
    கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
    மயிலே குயிலே சாய்ந்தாடு
    மடியில் வந்து சாய்ந்தாடு
    இது நான் மறந்த பாடல்களில் ஒன்று முழுதாக படித்துப்பார்த்தேன் நன்றி அக்கா உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் இந்தப் பாடல் பாடினிங்களா ? குழந்தைகளின் புகைப்படம் அழகாய் உள்ளது பளய நினைவுகள் மீட்டுத்தந்த அக்காவின் சேவை தமிழ் மண்ணுக்கும் தேவை இன்னும் தொடருங்கள்
    நன்றியுடன் நண்பன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி கண்ணா! உங்கள் நீண்ட பின்னூட்டம் தானே என் எழுத்துக்கு உற்சாக ஊற்று. நன்றிப்பா!

      நீக்கு
  11. நல்ல பகிர்வு, இப்போ யார் பாடுகிறார்கள், தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பாடுவேன் வாருங்கள், பாடிக்காட்டுகினேறேன் ஹாஹா!

      நீக்கு
  12. பதில்கள்
    1. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  13. இழந்து விட்ட ஒரு இன்பம் பற்றி அருமையாச் சொன்னீங்க !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இழந்து விடாமல் பாதுகாப்போம் எனும் ஆசை தான் ஐயா! நன்றி ஐயா!

      நீக்கு
  14. இந்தப் பாடல்கள் எல்லாம் சின்ன வயதில் கேட்டுப் பாடி ரசித்தவை.
    இப்போதோ இந்தப் பாடல்கள் எல்லாம் யாரும் பாடுவதில்லை...
    இன்றைய தலைமுறைக்கு நடைவண்டியும் தெரிவதில்லை... இது போன்ற பாட்டுக்களும் தெரிவதில்லை...
    நல்ல பகிர்வு அக்கா...
    ஆனால் இதையெல்லாம் இழந்து விட்டோம் என்றே நினைக்கிறேன். மீட்டெடுப்பது என்பது மிகக் கடினமே...
    குழந்தைகளின் குழு விளையாட்டெல்லாம் போயாச்சு...
    கணிப்பொறியும் மொபைலும் கெடுத்தாச்சு....

    பதிலளிநீக்கு
  15. அப்படியெல்லாம் விட்டு விட முடியுமா குமார். நான் என்னளவில் என் தங்கை, தம்பியிடம் சொல்லி என் பதிவுகளை படித்து உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள் என சொல்லி விட்டேன். தம்பியும் மனைவியும் டாகடர் என்பதால் குழந்தையுடன் செலவிடும் நேரம் குறைவு என்பதை போக்க நேரம் கிடைக்கும் போது இப்பாடல்களை சொல்லி கொடுப்பார்கள் என நம்பிகின்றேன். அத்தோடு மருத்துவ ரிதியில் பயன்கள் இருப்பதனால் இம்மாதிரி பாடல்களை நாம் தான் பதிவு செய்து நம் இளையை தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டும்,

    பதிலளிநீக்கு
  16. நிஷா கையக் குடுங்க :-)
    மிக அருமையான பதிவு, மிகத் தேவையும் கூட!! நானும் என் பிள்ளைகளுக்குப் பாடியே வளர்த்தேன்.
    நீங்கள் பதிவு செய்வது மிகப்பெரிய விசயம், அதற்காக நன்றி பல

    பதிலளிநீக்கு
  17. அருமை. குழந்தைகள் நடை பழகுவதற்காக எமக்கு முந்தைய தலைமுறை இந்த 3 சக்கர வண்டியை பாவித்தது. எனது அம்மா பாவித்த வண்டி அம்மம்மா வீட்டில் 80களிலும் இருந்தது.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!