18 செப்டம்பர் 2018

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 2

இப்பகுதியில் பைபிள் மற்றும் குரான் வேதங்கள் சொல்லும் வரலாறுகளும் சேர்ந்து வருவதனால் மத நம்பிக்கையை மட்டும் நுழைத்து இதை வாசிக்காமல் வரலாற்றை மட்டும் கருத்தில் கொள்ளவும்.
வேதம் போதிக்கின்றேன் என்பவர்கள் கடந்து செல்லுங்கள். 
புரிதலுக்கு நன்றி 
நிஷா

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை எதனால் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது?
எருசலேம் எனும் இடத்தை தமக்கான புனித இடம என பலஸ்தீன அராபியரும், இஸ்ரேலிய யூதரும் சொந்தம் கொண்டாடி அவ்வுரிமையை விட்டுக்கொடுக்காமல் போராடுகின்றார்கள்.

பலஸ்தீனிய அராபியர்களும் இஸ்ரேலிய யூதர்களும் யார்? காலம் காலமாக இவர்களுக்குள் போராட்டம் தொடர்வது ஏன்?
இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.
தமிழ் மொழி பெயர்ப்பு பைபிள் ஆகாரை வேலைக்காரி என சொல்கின்றது. ஆனாலும் மூல மொழியில் என்ன எழுதப்ப்ட்டதென நாம் ஆராய்ந்து தான் முடிவெடுக்க முடியும்.
ஆபிரகாமின் முதல் மனைவிக்கு இரண்டாவது மகனாக பிறந்த ஈஷாக் வம்சத்தவரே யூதர்கள் என்பவர்கள்.
திருமணமாகி பல வருடங்களாகியும் தமக்கு பிள்ளை இல்லை என நினைத்தும் இத்தனை வருடத்துக்கு பின் பிள்ளை கிடைக்காது என நம்பி ஆகாரை திருமணம் செய்ய வைத்து ஆகாருக்கு பிறந்தவர் இஸ்மவேல் வம்சத்தில் தொடரும் அராபியர்களான பலஸ்தீனியர்கள்.
இருவருக்கும் தகப்பன் ஒருவர். தாய் தான் இருவர்.
எதிர்காலத்தில் சொத்துப்பிரச்சனைகள் வரக்கூடாது,உரிமைப்போராட்டம் இருகக்கூடாது என தம் மகனுக்கே அனைத்து உரிமையும் வர வேண்டும் என ஆபிரகாமின் முதல் மனைவி சாராயால் ஆகார் குழந்தை இஸ்மவேலோடு விரட்டப்பட்டாள். விரட்டப்பட்ட அவள் குழந்தையுடன் ,வானந்தரத்தில் அலைந்து திரிந்து தாகத்துக்கு தவித்தபோது பாதுகாப்புக்காக கையில் வைத்திருந்த தடியால் தான் நின்ற இடத்தில் அடிக்கும் போது தோன்றியது தான் இன்றைக்கு அராபிய முஸ்லிம்களால் புனித நீரென கொள்ளப்படும் ஷம் ஷம் நீர் என பைபிள் சொல்கின்றது. அதே இடத்தில் ஆபிரகாமும் இஸ்மவேலும் இணைந்து அந்த நீரினை தோன்ற வைத்ததாக இஸ்லாமியர்கள் நம்புகின்றார்கள்.
எப்படியோ ஷம் ஷம் நீர் புனிதமான நீர் என இரு சாராரும் நம்புகின்றார்கள்.
கஃபா எனும் பெயரில் ஆபிரகாமும் இஸ்மவேலும் இணைந்து கட்டியதாக இவ்விடத்தை புனித இடமென இன்னமும் மதிக்கின்றார்கள்.
இஸ்மவேலை குறித்து 
உன் சந்ததியினரைக் கடவுள் ஏராளமாகப் பெருகச் செய்வார். நீ ஒரு மிகப் பெரிய குலத்தை அறிமுகம் செய்து வைத்த பெருமையைப் பெறுவாய்.. 'நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதியாகாமம் 17:20)

அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12)
ஆசிர்வாதமும், சாபமுமாய வாக்குக்கொடுக்கப்ப்ட்ட இனம் அராபியர் இனம்.
அதனால் தான் அவர்கள் உலகை ஆண்டுகொள்ளும் வளம் கொழிக்கும் ஆசிர்வாதத்தை தம் வசம் கொண்டிருந்தும் உலகளவில் எல்லோராலும் பகைக்கப்படுகின்றார்களோ எனும் ஆழமான் சிந்தனைக்குள் நான் செல்ல விரும்ப வில்லை.
ஆனாலும் துரத்தி அடிக்கப்பட்டதாக சொல்லப்ப்ட்ட இஸ்மவேல் ஆபிரகாம் மரித்து அடக்கம் செய்யப்பட்டபோது உடனிருந்ததாக அதே பைபிள் சொல்கின்றது.
ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும்,முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். (ஆதியாகமம் 25:7,8,9)
இரு குமாரர்களும் சேர்ந்து தான் ஆபிரகாமை அடக்கம் செய்தார்கள் எனும் போது ஆபிரகாமின் 100 வயதில் ஈஷாக் பிறந்த பின்னும் 75 வருட காலம் உயிரோடிந்த காலங்களில் நடந்தவை குறித்து வரலாறு சொல்வது என்ன?
ஆபிரகாமும், இஸ்மவேலும் ஈஷாக்கும் தொடர்பில் இருந்திருக்கின்றார்கள் என்பதை நாம் பைபிள் வசனங்களை வைத்தே அறிந்திட முடிகின்றது.
அது எப்படி இருந்தாலும்........ ?
இஸ்ரேலுக்கு சொந்தமானவர்களென சொல்லப்படும் யூதர்களுக்கு அவ்விடம் வழி வழியாய் தொடரும் சந்ததிகளுக்கு வாக்களிக்கப் பட்டதெனும் கூற்றை மெய்ப்பிக்கும் ப்டி இஸ்ரேலை சாலோமேன் காலம் வரை யுதர்கள் ஆண்டதாகத்தான் வரலாறு சொல்கின்றது. சாலொமோன் காலத்தின் பின் தான் சொந்த நாட்டை விட்டு நாற்புறமும் விரட்டி அடிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்கின்றது வரலாறு.
பாலஸ்தீனம் அப்படி அல்ல!
பாலஸ்தீனம் என்பது ஆக்கிரமிப்புக்குள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட்டது.
இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உயர் பீடமான பாலஸ்தீன தேசிய கவுன்சில் நவம்பர் 15, 1988 இல் அல்ஜீரியாவில் கூடி ஒருதலைப்பட்ச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டது. பாலஸ்தீன நாடு மேற்குக் கரை மற்றும் காசா ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் ஜெருசலேம் அதன் தலைநகராகவும் இப்பிரகடனம் அறிவித்தது!
பலஸ்தீன நாடு" அரபு லீக் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டாலும் ஐக்கிய நாடுகள் இதனை இதுவரையில் அங்கீகரிக்கவில்லை.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் நாள் ஐ.நா. 
பாலத்தீனத்தை "பார்வையாளர் நாடு" (observer state) என்னும் நிலைக்கு உயர்த்தியது.

ஐரோப்பிய ஒன்றியம் பாலத்தீனத்தை முழு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்காவிடினும், அது பலஸ்தீனத்துடன் தூதரக உறவைப் பேணி வருகிறது. இதுதான் பாலஸ்தீனத்தில் நிலை.
இஸ்ரேலியர் ஜெருசலேம் கானான் இறைவனால் தங்களுக்கு வாக்களிக்கப்ட்ட பூமி என நம்புகின்றனர். அந்த இடத்தினை தம் சொந்த் பூமியென பாலஸ்தீனர் சொல்கின்றனர். என்ன தான் நடக்கின்றது?
தொடர்வோம்.

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 1


Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் எனும் தலைப்பிலான இக்கட்டுரை இஸ்ரேலிய வரலாறென தொகுக்கப்பட்ட நீண்ட தொடர் ஒன்றிலிருந்து 2014 ம் ஆண்டில் என்னால் சுருக்கமாய் தொகுத்து அமைக்கப்பட்டது.

ஐந்து பகுதிகளாக இங்கே பகிர்கின்றேன். அனைத்தையும் படியுங்கள்.

கி.முன்னரான அரசர்களின் ஆட்சிகாலங்களின் ஆண்டுகள் தோராயமாய் எழுதப்பட்டது!

ஆல்ப்ஸ் தென்றல் நிஷா
நிஷாந்தி பிரபாகரன்

எந்த ஒரு பிரச்சனைக்கும் ஆரம்ப வரலாறு ஒன்றிருக்கும் அந்த வரலாறை திரித்து புரிந்து கொள்வதனால் தான் உலகில் இனக்கலவரங்கள் 
வெடித்து இரத்த ஆறுகள் ஓடுகின்றன. இதற்கு இஸ்ரேல். பலஸ்தீனமும் வேறு பட்டதாக இல்லை.

அன்றைய இஸ்ரேலியர் சூழலில் தான் இன்று இலங்கை தமிழர்களென சொல்லபட்டவர்களும் இருக்கின்றோம். இனக்லவரத்தால் நாட்டைவிட்டு வெறியேறி அன்னிய நாடுகளில் குடியேறி அங்கேயே நம் சந்ததிகளை பெருக்கி கொண்டிருக்கின்றோம். சொந்த தேசத்தைவிட்டு துரத்தப்ப்ட்டவர்களாய் அகதிகளாக அலைகின்றோம். எதிர்காலத்தில் நம் சொந்த தேசமென ஈழத்தில் உரிமை கோருவது தவறெனில் இஸ்ரேலியர்களின் உரிமைப்போராட்டமும் தவறுதான்.
சிந்திக்க சில கேள்விகள்
1.புலம் பெயர்ந்து நம் நாட்டை விட்டு வந்ததனால் நம் தேசத்தின் மீதான உரிமையை விட்டுக்கொண்டுக்க வேண்டுமென சொல்ல முடியுமா?
2.எதிர்காலத்தில் நாம் புலம்பெயர்ந்த நாடுகள் தான் நம் நாடு என நாம் சொல்லி உரிமை கொண்டாட முடியுமா?
3.உலகத்தில் பல பகுதிகளிலும் சிதறிக்கப்பட்டிருக்கும் நாங்கள் எங்களுக்கான அதாவது தமிழர்களுக்கான் தேசம் என எதை உரிமை கோர முடியும்?
4.நாங்கள் சொல்வது இருக்கட்டும். நம்மை அரவணைத்திருக்கும் நாடுகள் முழுமையாக நம்மை நாட்டு பிரஜைகள் தாம் நாங்கள் என ஏற்குமோ?
இஸ்ரேலியர்களின் தேச மீட்ப்பு போராட்டம் குறித்த அகிம்சை வாதிகள் கருத்தை பாருங்கள்.
பலஸ்தீன, இஸ்ரேல் பிரச்சனை குறித்து 
1938 ல் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் காந்தி எழுதிய கட்டுரையில் சில வரிகள் தான் இந்த கட்டுரைக்கான தேடலை எனக்குள் கொடுத்தது.

உலகில் ஏனையவர்கள் சொல்வதைப் போல, எங்கே அவர்கள் பிறந்து வளர்ந்தார்களோ அதனையே ஏன் தங்கள் சொந்த நாடாக ஏற்றுக் கொள்ள முடியாது என அப்போதே காந்தி கேட்டிருக்கின்றார் .
இதற்கான பதிலை கடந்து வந்த வரலாற்றை படித்த பின் சிந்திப்ப்போம்.

1938 ல் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் காந்தி எழுதிய கட்டுரையை படியுங்கள். 
பலஸ்தீனத்தில் அரபு-யூத பிரச்சனைப் பற்றிய எனது கருத்தைக் கேட்டு ஒரு சில கடிதங்கள் எனக்குக் கிடைத்தன. ஜெர்மனியில் நிகழ்த்தப்பட்ட யூத இனப் படுகொலைகள் பற்றியும் கேட்கிறார்கள்.
நான் தென்னாபிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் அவர்களை நெருக்கமாக அறிவேன். சில யூத நண்பர்கள் கூட எனக்கு இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் யூதர்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகள் பற்றி அறிந்திருக்கின்றேன்.
நீதி என்ற தேவை ஏற்படும்போது இந்த அனுதாபங்கள் எல்லாம் என் கண்களை மறைக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையும் யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி நாடு கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவர்களுடைய வேதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே யூதர்கள் பலஸ்தீனத்தை நோக்கி திரும்புகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உலகில் ஏனையவர்கள் சொல்வதைப் போல, எங்கே அவர்கள் பிறந்து வளர்ந்தார்களோ அதனையே ஏன் தங்கள் சொந்த நாடாக ஏற்றுக் கொள்ள முடியாது?.
இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்கு சொந்தமோ, பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்கார்களுக்கு சொந்தமோ அது போல பாலஸ்தீன் அரபுகளுக்கு சொந்தமானது. பிற நாடுகளில் வசிக்கும் யூதர்களைக் கொண்டு வந்து அங்கே குடியேற்றுவது மனிதாபிமானமற்ற செயலாகும்.
நான் ஒரு யூதனாக இருந்து, ஜெர்மனியில் பிறந்திருந்தால், ஜெர்மனிதான் என் தாய் நாடு என்று நினைப்பேன். அங்கே என்ன கொடுமை நடந்தாலும் எனது சொந்த நாட்டில் அது நடப்பதாக எடுத்துக்கொள்வேனே தவிர, பிற நாட்டை என் தாய்நாடாக நினைத்து ஓடிவிடமாட்டேன்.
சந்தேகமில்லாமல் சொல்கிறேன் யூதர்கள் தவறான பாதையிலேயே போய்க்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வேதத்தில் குறிப்பிடப்படும் பாலஸ்தீன் என்பது இன்றைய புவியியல் எல்லைகளுக்குள் தேடப்படவேண்டிய நிலப்பரப்பு அல்ல, மாறாக அவர்கள் இதயங்களுக்குள்ளே இருக்கவேண்டியது.
அப்படியே அது அவர்களின் தாயகப்பிரதேசம் என்றாலும், இங்கிலாந்து ராணுவத்தின் துப்பாக்கி நிழலின் கீழ் திருட்டுத்தனமாக ஒரு தேசத்தை அடைய விரும்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
Mahatma Gandhi on ! Palestine written in 1938
The Jews In Palestine
By Mahatma Gandhi
Published in the Harijan
26-11-1938.

தேடல் உதவிகளும் ஆதாரமும் 
Dr E.K. Victor Pearce, Evidence for Truth: Arhaeology
மற்றும் விக்கிமீட்டியாவின் ஆங்கில தளங்கள்.
தொடரும்.

15 செப்டம்பர் 2018

தருமங்கள் தவறுதே?

பட்டென்று போனதென 
பொட்டில் அடித்தால் 
போலொரு நொடி 
துடிக்குதே எம் நாடி.

நல்லவர்களெல்லாம் 
சட்டென்று விண்செல்லல் 
வீணர்களிற்கே 
இடமென்றுணர்த்திடுதே.

எவருக்கும் இடமிங்கே 
நிரந்தரமில்லை என்றுணர்ந்தாலும்
இவரிங்கே இனியில்லை 
உணர்வுகள் துடிக்குதே

சட்டென,சடுதியில் சலசலப்பில்லாமல் 
சென்றிடல் வரமாய் தானிருந்தாலும் 
யாம் என நினைப்போர் செய்
தருமங்கள் தவறுதே?


ஒத்தை மகளை பொத்தி வைத்து 
பத்திரமா பாதுகாத்த வித்தை கண்டு 
காலனுக்கிங்கே பொறுக்க வில்லையோ?


இளவயது மலரது உதிர்வது கொடியது.
இருப்போரை இறக்க வைக்கும் வலி தருவது.
இரு சின்னஞ் சிறு அரும்புகளையும் நான்கு வயதே ஆன மொட்டையும் விட்டு மலரது உதிர்ந்து போனது. 34 வயதில்  இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து ஒரே வாரத்தில்  தான் உதிர்ந்து போகும் கொடுமையை என்ன வென்பது? 


06 செப்டம்பர் 2018

சுவிஸ்லாந்து நாட்டின் இராணுவ பயிற்சிக்களத்தில் ஒரு நாள்.

Tag der Angehörigen
18.8.2018
Kaserne, Thun

 நடுவில் நிற்பவர் என் மகன்

சுவிஸ்லாந்து நாட்டின் 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய இராணுவப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சுவிஸ் இளையோரின் பயிற்சி குறித்த விபரணங்களுடனும்,இராணுவ பயிற்சி தளத்தின் இராணுவ தளவாடங்கள், வாகனங்களை காட்சிப்படுத்தி அவைகளை பார்வையிடும் அனுமதியும், இராணுவ தாக்குதல்கள் குறித்த மாதிரி பயிற்சிகளுமாய் மிக அழகாகவும், அரிதான வாய்ப்பாகவும் இன்று அமைந்திருந்தது.
பயிற்சி பெறும் இராணுவத்தினரின் உறவினர்கள். நண்பர்களுக்கான நாளாய் இந்த நாள் மிகவும் அருமையானநாள். என் வாழ் நாளில் நான் மறக்க முடியாத நாள். என் மகனை சான்றோனாய் கண்டு மகிழ்ந்த நாள். இராணுவ உடையில் கம்பீரமாய் சிங்க நடையில் ஆயுதமேந்தி வந்த என் செல்லத்தை கண்ட போது ஈன்ற பொழுதிற் பெரிதுவர்க்கும் தாயாய் நான் உணர்ந்தேன்.
எனது மகன் கப்ரியேல். இவ்வாண்டுக்கான இராணுவப்பயிற்சியில் யுத்த நேரம் களத்தில் நின்று போராடும் ஆயுதப்பயிற்சி பெற்ற, உருமாற்றம் செய்யப்பபட்ட படைகளுக்கும் இராணுவ முதன்மை தளபதிகளுக்குமான தொலைத்தொடர்பாடல், மற்றும் பொருட்காவுதல் சம்பந்தமான அனைத்து இராணுவ கனரக வாகனங்களையும் இயக்கும் பயிற்சி, தேவையான ஆயுதங்கள் உணவு, மற்றும் மருத்துவ தேவைகளை களத்தில் போரிடும் இராணுவத்தினருக்கு சரியான இடத்தில் நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்கான பயிற்சியுடன், காயம்பட்டோருக்கான முதலுதவி, அம்புலன்ஸ் வண்டியை இயக்குதல் மற்றும் ஆயுதம் ஏந்தி போராடுதல்,அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும், போராட்ட் களத்தில் புகைப்படம், அசைபடங்களாக்கி ஆவணப்படுத்துதல் என பல வகையான பிரிவில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மகனுடன் நான்
பயிற்சிக்கு சென்ற சில வாரங்களுக்குள் 15 நபர்கள் அமைந்து பயணிக்கக்கூடிய பொதுப்போக்குவரத்து வண்டியை இயக்கும் சாரதி அனுமதிப்பத்திரத்தை தன் வசப்படுத்தியும் கொண்டிருக்கின்றார்.
சுவிஸ் எப்படி எல்லா விடயத்திலும் தலை நிமிர்ந்து நிற்கின்றது என்பதை இன்றைய இராணுவ தளத்தின் செயல்பாடுகளின் போது நேரடியாக கண்டுணர முடிந்தது. அருமையானதிட்டமிடல். தடையில்லாத நிகழ்வுகள். ஆயிரக்கணக்கானோரை ஒரே இடத்தில் ஆரம்ப முதல் முடிவு வரை உற்சாகமாய் வைத்திருக்க ஒவ்வொரு பிரிவிலும் சுவாரஷ்யமான நிகழ்வுகள்.
இலங்கையில் ஆர்மிப்படையணிகள் வரும் போதும் கவச வாகனங்கள், பீரங்கிகளின் சத்தம் கேட்டாலே ஓடி ஒளியும் எமக்கு அவைகளை அருகில் சென்று பார்க்க கிடைத்த அனுபவம் அலாதியானது.
காலை எட்டரைக்கு ஆரம்பித்து மாலை மூன்றரை வரையாக நிகழ்வுக்கான அழைப்பிதழில் சுவிஸின் பல பாகங்களில் இருந்து சொந்த வாகனத்தில் வருவோருக்கும், பொதுப்போக்குவரத்தைபயன் படுத்தி வருவோருக்குமான பயண, அட்டவணைகளுடன் உள் நுழைந்தவுடன் சுவிஸ் கடும் கோப்பியும், கிப்லி, சாக்லேட், பிஸ்கட்களும், மதியம் 12 மணிக்கு மதிய உணவும், மாலை மூன்றுக்கு மீண்டும் மாலை சிற்றுண்டியாக விதவிதமாக கேக்குகளும் காப்பியுடனும் பயிற்சித்தளத்தில் நமது வாகனம் உள் நுழையும் நொடியில் இருந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இளைய இராணுவத்தினரின் செயல்பாடுகள் என்னை ஆச்சரியப்படுத்தியது.

அவர்கள் ஆயத்தப்படுத்தி இருந்த மதிய உணவு முடிந்து அடுத்த வாகனத்தில் உணவு வந்து சேர அரை மணி நேரத்துக்கும் மேல் ஆன போதும், மக்கள் எந்த முனகலும், முகச்சிணுக்கமும் இல்லாமல் கிட்டத்தட்ட 400 பேருக்கும் மேல் காத்திருந்தார்கள். எம்மக்களாக இருந்தால் அவ்விடம் எத்தனை அமளி துமளிப்பட்டிருக்கும் என நான் நினைத்து கொண்டேன். எத்தனை நொட்டைகளும் குற்றங்குறைகளும் விமர்சனம் எனும் பெயரில் விளாசித்தள்ளப்பட்டிருக்கும் என பேசியும் கொண்டோம்.
நூற்றுக்கணக்கில் வாகனங்களும், ஆயிரக்கணக்கில் மக்களும் கலந்தாலும் எங்கும் நெரிசல் இல்லை.ஒழுங்கு முறையான கட்டமைப்போடு செயல் பாடுகள் இருந்ததை அவதானித்து நாங்கள் விடுதலைப்புலிகளின் இராணுவ செயல்பாடுகளும், பயிற்சிகளும் இப்படித்தான் இருந்ததென எங்கள்பிள்ளைகளுடனும் நண்பர்களுடனும் நினைவு கூர்ந்து எமது விடுதலை போராட்டம் குறித்தும் பகிர்ந்து கொண்டோம். நானும் என் தங்கையும் எங்கள் மகள்களுக்கு எங்கள் நாட்டினை குறித்து விரிவாக, விளக்கங்களோடு எடுத்து சொல்ல இந்த களம் உதவி இருந்தது.
அண்ணனும் தங்கையும்.
எமது போராளிகளின் போராட்ட யுக்தி, கொரில்லா தாக்குதல், தற்கொலை தாக்குதல் என இராணுவச்செயல்பாடுகள் குறித்தும் ஏன் நாங்கள் போராடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதை பிள்ளைகளுக்கு புரியும் படியும் விளங்கப்படுத்த முடிந்தது.
எமக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த என் மகனை நினைத்து பெருமைப்படுகின்றேன். சுவிஸ் தேசத்தை நேசிக்கின்றேன்.
சொந்த நாட்டில் கிடைக்காத பல அரிய வாய்ப்புக்களை நாங்கள் அனுபவிக்க உதவும் சுவிஸ் நாட்டை கனப்படுத்துகின்றேன்.
நீண்ட நாட்களின் பின் பிள்ளைகளோடு பிள்ளைகளானோம்.
வாய்ப்புக்கிடைத்தால் சுவிஸ் வாழ் 
தமிழ் மக்கள் தவற விடாமல் கண்டுணர வேண்டிய களம் இது.