06 செப்டம்பர் 2018

சுவிஸ்லாந்து நாட்டின் இராணுவ பயிற்சிக்களத்தில் ஒரு நாள்.

Tag der Angehörigen
18.8.2018
Kaserne, Thun

 நடுவில் நிற்பவர் என் மகன்

சுவிஸ்லாந்து நாட்டின் 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய இராணுவப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சுவிஸ் இளையோரின் பயிற்சி குறித்த விபரணங்களுடனும்,இராணுவ பயிற்சி தளத்தின் இராணுவ தளவாடங்கள், வாகனங்களை காட்சிப்படுத்தி அவைகளை பார்வையிடும் அனுமதியும், இராணுவ தாக்குதல்கள் குறித்த மாதிரி பயிற்சிகளுமாய் மிக அழகாகவும், அரிதான வாய்ப்பாகவும் இன்று அமைந்திருந்தது.
பயிற்சி பெறும் இராணுவத்தினரின் உறவினர்கள். நண்பர்களுக்கான நாளாய் இந்த நாள் மிகவும் அருமையானநாள். என் வாழ் நாளில் நான் மறக்க முடியாத நாள். என் மகனை சான்றோனாய் கண்டு மகிழ்ந்த நாள். இராணுவ உடையில் கம்பீரமாய் சிங்க நடையில் ஆயுதமேந்தி வந்த என் செல்லத்தை கண்ட போது ஈன்ற பொழுதிற் பெரிதுவர்க்கும் தாயாய் நான் உணர்ந்தேன்.
எனது மகன் கப்ரியேல். இவ்வாண்டுக்கான இராணுவப்பயிற்சியில் யுத்த நேரம் களத்தில் நின்று போராடும் ஆயுதப்பயிற்சி பெற்ற, உருமாற்றம் செய்யப்பபட்ட படைகளுக்கும் இராணுவ முதன்மை தளபதிகளுக்குமான தொலைத்தொடர்பாடல், மற்றும் பொருட்காவுதல் சம்பந்தமான அனைத்து இராணுவ கனரக வாகனங்களையும் இயக்கும் பயிற்சி, தேவையான ஆயுதங்கள் உணவு, மற்றும் மருத்துவ தேவைகளை களத்தில் போரிடும் இராணுவத்தினருக்கு சரியான இடத்தில் நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்கான பயிற்சியுடன், காயம்பட்டோருக்கான முதலுதவி, அம்புலன்ஸ் வண்டியை இயக்குதல் மற்றும் ஆயுதம் ஏந்தி போராடுதல்,அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும், போராட்ட் களத்தில் புகைப்படம், அசைபடங்களாக்கி ஆவணப்படுத்துதல் என பல வகையான பிரிவில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மகனுடன் நான்
பயிற்சிக்கு சென்ற சில வாரங்களுக்குள் 15 நபர்கள் அமைந்து பயணிக்கக்கூடிய பொதுப்போக்குவரத்து வண்டியை இயக்கும் சாரதி அனுமதிப்பத்திரத்தை தன் வசப்படுத்தியும் கொண்டிருக்கின்றார்.
சுவிஸ் எப்படி எல்லா விடயத்திலும் தலை நிமிர்ந்து நிற்கின்றது என்பதை இன்றைய இராணுவ தளத்தின் செயல்பாடுகளின் போது நேரடியாக கண்டுணர முடிந்தது. அருமையானதிட்டமிடல். தடையில்லாத நிகழ்வுகள். ஆயிரக்கணக்கானோரை ஒரே இடத்தில் ஆரம்ப முதல் முடிவு வரை உற்சாகமாய் வைத்திருக்க ஒவ்வொரு பிரிவிலும் சுவாரஷ்யமான நிகழ்வுகள்.
இலங்கையில் ஆர்மிப்படையணிகள் வரும் போதும் கவச வாகனங்கள், பீரங்கிகளின் சத்தம் கேட்டாலே ஓடி ஒளியும் எமக்கு அவைகளை அருகில் சென்று பார்க்க கிடைத்த அனுபவம் அலாதியானது.
காலை எட்டரைக்கு ஆரம்பித்து மாலை மூன்றரை வரையாக நிகழ்வுக்கான அழைப்பிதழில் சுவிஸின் பல பாகங்களில் இருந்து சொந்த வாகனத்தில் வருவோருக்கும், பொதுப்போக்குவரத்தைபயன் படுத்தி வருவோருக்குமான பயண, அட்டவணைகளுடன் உள் நுழைந்தவுடன் சுவிஸ் கடும் கோப்பியும், கிப்லி, சாக்லேட், பிஸ்கட்களும், மதியம் 12 மணிக்கு மதிய உணவும், மாலை மூன்றுக்கு மீண்டும் மாலை சிற்றுண்டியாக விதவிதமாக கேக்குகளும் காப்பியுடனும் பயிற்சித்தளத்தில் நமது வாகனம் உள் நுழையும் நொடியில் இருந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இளைய இராணுவத்தினரின் செயல்பாடுகள் என்னை ஆச்சரியப்படுத்தியது.

அவர்கள் ஆயத்தப்படுத்தி இருந்த மதிய உணவு முடிந்து அடுத்த வாகனத்தில் உணவு வந்து சேர அரை மணி நேரத்துக்கும் மேல் ஆன போதும், மக்கள் எந்த முனகலும், முகச்சிணுக்கமும் இல்லாமல் கிட்டத்தட்ட 400 பேருக்கும் மேல் காத்திருந்தார்கள். எம்மக்களாக இருந்தால் அவ்விடம் எத்தனை அமளி துமளிப்பட்டிருக்கும் என நான் நினைத்து கொண்டேன். எத்தனை நொட்டைகளும் குற்றங்குறைகளும் விமர்சனம் எனும் பெயரில் விளாசித்தள்ளப்பட்டிருக்கும் என பேசியும் கொண்டோம்.
நூற்றுக்கணக்கில் வாகனங்களும், ஆயிரக்கணக்கில் மக்களும் கலந்தாலும் எங்கும் நெரிசல் இல்லை.ஒழுங்கு முறையான கட்டமைப்போடு செயல் பாடுகள் இருந்ததை அவதானித்து நாங்கள் விடுதலைப்புலிகளின் இராணுவ செயல்பாடுகளும், பயிற்சிகளும் இப்படித்தான் இருந்ததென எங்கள்பிள்ளைகளுடனும் நண்பர்களுடனும் நினைவு கூர்ந்து எமது விடுதலை போராட்டம் குறித்தும் பகிர்ந்து கொண்டோம். நானும் என் தங்கையும் எங்கள் மகள்களுக்கு எங்கள் நாட்டினை குறித்து விரிவாக, விளக்கங்களோடு எடுத்து சொல்ல இந்த களம் உதவி இருந்தது.
அண்ணனும் தங்கையும்.
எமது போராளிகளின் போராட்ட யுக்தி, கொரில்லா தாக்குதல், தற்கொலை தாக்குதல் என இராணுவச்செயல்பாடுகள் குறித்தும் ஏன் நாங்கள் போராடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதை பிள்ளைகளுக்கு புரியும் படியும் விளங்கப்படுத்த முடிந்தது.
எமக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த என் மகனை நினைத்து பெருமைப்படுகின்றேன். சுவிஸ் தேசத்தை நேசிக்கின்றேன்.
சொந்த நாட்டில் கிடைக்காத பல அரிய வாய்ப்புக்களை நாங்கள் அனுபவிக்க உதவும் சுவிஸ் நாட்டை கனப்படுத்துகின்றேன்.
நீண்ட நாட்களின் பின் பிள்ளைகளோடு பிள்ளைகளானோம்.
வாய்ப்புக்கிடைத்தால் சுவிஸ் வாழ் 
தமிழ் மக்கள் தவற விடாமல் கண்டுணர வேண்டிய களம் இது.

2 கருத்துகள்:

  1. மிகவும் பெருமையான விடயம் வாழ்த்துகள்.
    சொந்த பூமியில் கிடைக்காததின் ஏக்கம் உங்களது எழுத்தில் பிரதிபலிக்கிறது.

    உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சியான விடயம் என்பதை பகிர்வு புலப்படுத்துகின்றது

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!