27 மார்ச் 2019

பெண்ணியமும் எமது பெண்களும் ........!?

ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் குட்டை முடியை தவிர்த்து நீண்ட முடிகளை வளர்க்கவும், இந்திய கலாச்சார சல்வார், குர்தா போன்ற உடலை மூடி அங்கங்களை மறைக்கும் ஆடைகளை அணியவும் ஆர்வம் காட்டுகின்றார்கள். கோடை வெயில் காலத்திலும் அவர்கள் அணியும் ஆடைகளில் ஆபாசம் இருப்பதில்லை. நீச்சலுடையில் நீந்துமிடங்களில் கிடந்தாலும் ஆண்கள் கண்களில் கண்ணியம் தவறுவதில்லை அங்கங்களை மேய்வதிலை. அங்கங்கே அலைவாரும் இல்லை. / அரிதாக சிலர் விதிவிலக்காகலாம்.
ஆண், பெண் நட்புக்களை தரம் பிரித்து காமம், காதல் எனவெல்லாம் ஒதுக்குவதில்லை. பெண்ணுக்கு பெண் தோழிகள் போல் தான் ஆண் தோழர்களும் ஒரே சம கோணத்தில் அணுக கற்பிக்கப்படுகின்றார்கள். ஆண்களை காமமெனும் கடைக்கண் பார்வைகளில் வீழ்த்தும் செயல்பாடுகளில் பெண்கள் ஈடுபடுவதில்லை.
டேட்டிங்க,காதல் என சென்றாலும் ஒருவனுடன் தம் உறவை தொடரும் போது அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதில்லை. திருமணம் எனும் சட்ட பூர்வ பந்தத்தை தவிர்த்தாலும்,ஒருவரோடொருவர் சேர்ந்து வாழும் காலத்தில் தம் பாட்னரின் அன்புக்கு அடங்குவார்கள்,உண்மையாக வாழ்வார்கள். புரிதல் இல்லாத போது மனமொத்து பேசி பிரிந்தாலும் எதிரிகள் ஆகாமல் நட்புடன் நண்பர்களாக் தொடர்வார்கள்.
30 வயது வரை சுதந்திரமாக தமக்கென கல்வி, பெருளாதாரம் என தன்னிறைவை தேடி வாழ்ந்து விட்டு 30 வயதின் பின் தம் எதிர்காலத்தை திட்டமிடுவார்கள். சட்டத்தை மதித்து திருமணம் செய்த பின் குழந்தைகள் குறித்து சிந்தித்து, குழந்தை பிறந்ததும் தாம் செய்யும் வேலைகளை விட்டு விலகி பிள்ளைகளை சரியாக வளர்க்க அக்கறை காட்டுவார்கள். கணவன், மனைவிக்கு மட்டுமலல் குழந்தைகளுக்கும் உண்மையாக வாழ்வார்கள்.
40 வயதுக்கு பின் தமக்கான வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு குழந்தைகளை சமூகத்தின் அக்கறையானவர்களாக வளர்த்து 16 வயது வரை அவர்களின் மீதாக பாதுகாப்பு, கண்காணிப்பை தொடர்ந்து, அரசின் சட்டங்களுக்குட்பட்டு கல்வியை வழங்கியும், பொருளாதார தேவைகளை நிறைவேற்றவும் செய்கின்றார்கள்.அன்பெனும் பெயரில் அடக்குமுறையும், அதீத செல்லமும், அளவு மீறிய கண்டிப்பும் இருப்பதில்லை. நள்ளிரவு பார்ட்டிகளில் தடையும் இல்லை,அவரவர் எல்லைக்கோடுகளை அவ்ர்கள் விருப்பம் இன்றி மீறப்படுவதும் இல்லை.
வன்முறை,வற்புறுத்தல்கள் காதலிலும், காமத்திலும் வெளிப்படுத்தப்படுவதில்லை. .
ஐரோப்பிய நாடுகள் பல நமது கலாச்சாரங்களை பின்பற்ற ஆரம்பித்து வெகுகாலமாகி விட்டது.
அதற்கு நேர் மாறாக தமிழ்ப்பெண்களின் வழிகாட்டிகளாக தம்மை வெளிக்காட்டிக்கொள்வோர், நீண்ட தலைமுடிகளை வெட்டி குட்டைஆக்குவது, ஜீன்ஸ்,டீசர்ட் போன்றவை அணிவதுமே பெண் விடுதலை தரும் எண்ணத்தினை திணிக்கின்றர்கள். 
ஆண் நட்புக்களோடு வெளியில் சுற்றுவதும், அவர்களுக்கு இணையாக புகைத்தல்,குடித்தல் தான் பெண்ணுக்கான விடுதலை என நம்ப வைக்கப்படுகின்றார்கள். ஆண் நண்பர்களுடன் கூடி கும்மாளமிடுவதும், அவர்களுடன் கவர்ச்சி, காமம் பேசுவதும் பெண்ணியம் என்றாகி போயிருக்கின்றது.

சட்டங்களை மீறுவதும், தடைகளை கடப்பதுமே பெண்ணுக்கானது என பயிற்றுவிக்கபப்டுகின்றார்கள்.
ஆண் பெண் உறுப்புக்களை சொல்லி விமர்சிப்பதும், 
பெண் உறுப்பில் விடுதலை கிடைக்குமென நம்பிக்கையோடு, மறைக்க வேண்டியதை குறித்து பேசுவதும், அரைகுறை ஆடைகள்:,பப்புகள், டிஸ்கோத்தேக்களில் தான் பெண்ணுக்கு சுதந்திரம் கிடைக்கும் எனும் மாயை உலகம் ஒன்றை சிருஷ்டித்து அவள் வாழ்க்கையை திசை திருப்புகின்றார்கள்.

இல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப வைப்பதும், இருப்பதை இல்லை என்பதும் தமிழர் பண்பாடாகிப்போனது. அதை நம்பவும் ஒரு கூட்டமுண்டு.அதுவே சரியெனும் பெரும் கூட்டமும் உண்டு.
பெண் ஆக்கவும்,அழிக்கவும் சக்தி வாய்ந்தவள். அவள் படைப்பே அது தான்.
உலகத்து பெண்கள் உலகாளும் உரிமைகளுக்கு உரியவராக தம்மை கட்டமைத்து கொள்ள போராடும் போது,எங்கள் பெண்களோ உடலாளம் தேடி பயணிப்பதே தம் விடுதலை என்கின்றார்கள்.
உலகம் எதை கொண்டு தமிழர் கலாச்சாரம், பண்பாடு என மேன்மை படுத்துகின்றதோ, 
எதனால் நாம் உயர்ந்து நின்றோமோ 
அதுவே சீரழிக்கப்படுகின்றது.
சின்னாபின்னமாக்கப்படுகின்றது.

தமிழ்ப்பெண்கள் பெண் விடுதலை எனும் பெயரில் தம்மை மட்டுமலல் தமிழ் சமுகத்தையே அழித்து கொண்டிருக்கின்றார்கள்.
எது உண்மையான பெண் விடுதலை என்பதை தமிழ்ப்பெண்களுக்கு உணர்த்தும் எல்லைக்கோட்டில் நாம் நிற்கின்றோம்.
உலகத்தில் சகல பெண்களுக்கும் தேவையானது . 
நிமிர்ந்த நன்னடை 
நேர்கொண்ட பார்வை 
எதற்கு அஞ்சா திண்மை
தெளிந்த சிந்தனை.
கல்வி
பொருளாதாரம் 
பணிவும்,பண்பும்
அன்பும்,அறனுமே.

நாம் தேட வேண்டியதும், எடுத்து கொள்ள வே\ண்டிய உரிமையும் இதுவே.
ஆனால்..............!?
நாம் வாழ்வோமா? வீழ்வோமா?❤️
❤️உலகப்பெண்களில,தமிழ்ப்பெண்களுக்கான நிர்வாகம், உரிமை சார்ந்த ஆளுமை, அறிவு போல் வேறெந்த பெண்களிடமும் காண முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் நிர்வாகம் என்பது பெண்களிடம் என்பதில் ஈழத்து தமிழ் பெண்கள் மேம்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
🔴👁‍🗨குறிப்பு* எனது பதிவு பெண்களை குற்றம் சாட்டி, அவர்களை கூனிக்குறுக வைக்கும் நோக்கத்தில் எழுதப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும். பெண்ணியம் எனும் இலக்கில் மேலை நாட்டு பெண்கள்,ஆண்களை பழிவாங்க, ஆணுக்கு பெண் நிகரென நிருபிக்க கடைப்பிடித்த பல விடயங்களை அவர்களின் தவறான அணுகுமுறையென உணர்ந்து கொள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்டு சரியான இலக்கினுள் வரும் போது அவர்கள் வேண்டாம் என விடுபட்டு வரும் பழக்கங்களை நமது பெண்கள் தமக்கான விடுதலைப்பாதையின் இலக்கென திசை மாற்றம் செய்வது நலல்தல்ல என்பதை உணர சொல்வதே இப்பதிவின் நோக்கம்.

5 கருத்துகள்:

  1. ஒப்பிடுதல் பலவற்றில் தீமையையே அளிக்கும்...

    பெண்ணிற்கு நிகர் எதுவும் கிடையாது...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்தை விளங்கிக் கொள்ள மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
    எந்த ஐரோப்பிய நாடு இந்திய கலாசாரத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? நீங்கள் சொல்வது போல் இந்திய ஆடைகள் உடுத்துவது ட்ரெண்ட். அந்தந்த காலங்களில் சில நாடுகளில் பின்பற்றப்படுகின்ற ஆடைகள், சிகையாலங்காரம் போன்றவை ட்ரெண்ட் ஆவது பலகாலமாக நடப்பது தான். ஏன் பலர் இந்திய ஆடைகள் என்று நம்பும் பிளாசோ பாண்ட் & குர்தி சில வருடங்களுக்கு முன் பாகிஸ்தானில் ட்ரெண்டிங்கில் இருந்தது, அதுவே பின்பு இந்தியாவிற்கு பரவியது. சல்வாரும் அனார்கலி சூரிதாரும் ஈரானிய/ஆப்கானிஸ்தான் பாரம்பரிய ஆடைகள். அது இந்தியாவிற்குள் ஊடுருவியது. அதற்காக இந்தியர்கள் பாரசீக கலாசாரத்திற்கு மாறி விட்டார்கள் என்று சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
  3. எமது நாட்டு கலாசாரத்தை பின்பற்றுவதால் தான் ஆண் பெண் உறவுகளில் ஐரோப்பியர்கள் கண்ணியமாக நடந்து கொள்கிரார்கள் என்று நீங்கள் சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த முதிர்ச்சி அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தால் வந்தது. எல்லாவற்றையும் தாராளமாக பெற்றுக்கொள்ள வசதி இருக்கும் போது அவர்கள் ஏன் அதை களவாகவும் பலாத்காரமாகவும் அடைய வேண்டும்? அவர்களுக்கு அது தேவையே இல்லை.

    பதிலளிநீக்கு
  4. மேலைத்தேய நாடுகளில் உள்ள ஆண்கள் பெண்களை சமமாக நடத்துவதற்கும் ஏன் ஆண்களுக்கு நிகராக உலகத்தை ஆள்வதற்கும் காரணம் அங்குள்ள பெண்களுக்கு அவர்களின் சட்டமும் சமூகமும் வழங்கியுள்ள சுதந்திரம் தான். மேலைத்தேய நாடுகளில் இருந்த பெண்களும் கடுமையான ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்களுக்கு இன்றுள்ள சமஉரிமையும் சுதந்திரமும் அவர்கள் கட்டுப்பாடுகளை உடைத்து வீட்டை விட்டு வெளியே வந்து போராடியதாலேயே கிடைத்தது. மிக கடுமையான சோதனைகளை கடந்தே அவர்கள் இன்றுள்ள நிலையை எட்டியிருக்கிறார்கள். அந்த பெண்களுக்கு தன் உடலின் மேல் முழு விடுதலை கிடைத்து விட்டது, அதனால் உலகை ஆள ஆண்களுடன் போட்டி போடுகிறார்கள். எமது பெண்கள் இன்னும் வீட்டை விட்டு வெளியே வருவதே குடும்பத்துக்கு சம்பாதிக்க மட்டும் தான். இங்கே பொருளாதார சுதந்திரம் உள்ள பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

    நீங்கள் சொல்லும் நிர்வாகத்திறன், ஆளுமை மற்றும் அறிவுள்ள தமிழ் பெண்கள் உலகத்தில் எதை சாதித்தார்கள் என்று சொல்ல முடியுமா? வேண்டுமானால் தன் பிள்ளைகளை மிஞ்சி மிஞ்சி டொக்டராகவோ எஞ்சினீராகவோ படிப்பித்து இருப்பார்கள். இந்த டாக்டரும் என்ஜினீரும் பெண்களாயிருக்கும் பட்சத்தில் பல லட்சங்கள் பிறந்தவீட்டு சீதனத்தோடு தாலிக்கொடி வாங்கக்கூட மாப்பிள்ளைக்கு டொனேஷன் கொடுத்து இன்னொரு டொக்டரையோ என்ஜினீரையோ கட்டிக்கொள்வார்கள். என்னையும் என் பெற்றோர் அந்தளவு செலவு செய்து தான் உருவாக்கினார்கள், அதனால் சீதனமெல்லாம் தரமுடியாது என்று சொல்ல இவர்களுக்கு தைர்யம் உண்டா என்றால்... மூச் ....

    பெண்கள் வெளியே வராதவரை எந்த உரிமையும் விடுதலையும் சாத்தியமில்லை. எங்கோ ஓரிடத்தில் தவறு நடந்தது / நடக்க போகிறது என்பதற்காக துணிச்சலாக வெளியே வரும் பெண்களையும் இப்படி கலாசாரத்தை காரணம் காட்டி நாலு பேர் காலை பிடித்து பின்னுக்கு இழுப்பது சரியல்ல. ஒரு பயணத்தில் தடைகள் ஆபத்துக்கள் இருப்பது சகஜம். நாம் அதை அறிவுடனும் துணிவுடனும் எச்சரிக்கை உணர்வுடனும் எதிர்கொள்ள வேண்டும். வெற்றிப்பாதையில் சில இழப்புகள், தியாகங்கள் கட்டாயம் இருக்கும். பாதுகாப்பாக இருக்கிறேன் என்று வீட்டுக்குள் இருந்தால் எந்த ஜென்மத்திலும் எதையும் ஆளமுடியாது.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!