04 பிப்ரவரி 2016

பெண்ணே உன்னால் ஆகும் காவியம் !



ஆக்குவதும் அழிப்பதுவும் அவளேயன்றி யாருமில்லை 
பெண்ணில்லா வீடு என்றும் பாழபட்டதென்றோ செப்பி
பெண் இன்றி பெருமை இல்லை, கண் இன்றி காட்சியில்லை
உன் கண்ணீரை போல ஒரு ஆயுதமும் வேறில்லை 
அடக்கிடவும் அடங்கிடவும் அங்குசமாய்  இருப்பவளே!
*
கருவில் உயிர்த்த  நொடி முதலாய் மண்ணோடு மண்ணாய் 
மக்கிப்போகும் நாள் வரைக்கும்  தான் வாழ போராடும்  
சுமை தாங்கியானவளின்  மனக்காயங்கள் ஒன்றிரண்டா?
தன்னலமின்றி  உருகி வெளிச்சம் தரும்  மெழுகினைப்போல
தன்னை உருக்கிடுமவள் வலிகள் எண்ணுள்ளடங்கிடுமா?
*
தலைசுற்று, வாந்தி  முதல்  தனை வெறுக்கும் உணர்வுணர்ந்து  
யாருமுணரா வலி தாங்கி  தன் உதிரப்பாலை புகட்டி பத்திரமாய் 
பாதுகாத்து  பவித்திரமாய் பேணி டுமவள் வாழ்க்கையின் 
சோதனை  தான்  வேதனையா? வேதனைதான் சாதனையோ?
தையலவள் காயம் தனை தைத்து விட்டால்  அடங்கிடுமா?
*
ஆணென்றால்  உயரும் தட்டும் பெண்ணென்றால்  தாழ்வதுடன் 
கண்ணாய் நீ யிருந்தாலும் பெண்ணே  உன் பணி யிவைகள் 
சொல்லி விளையாடிடத்தான் விளையாடு பொருள் சட்டி பானை!
ஓர் வயதில் ஆரம்பிக்கும்  ஓர்மை தனை என்ன வென்பேன்?
ஆரம்பிக்கும் சேட்டைத்தனம் அடக்கியாளல் சரியோ?
*
மூவிரண்டு வயதானால் ஆரம்பிக்கும் ஆக்கினைகள்,
ஐயிரண்டு மாதம் சுமந்திடாமலே  சேயிரண்டுக்கவள்  
தாயாகும்  பாக்கியங்கள்,அன்னையாய் அரவணைத்து 
தந்தையாய் வழிகாட்டி அனைத்திலும் தலைமகளாய் 
தன்னையே சீர்ப்படுத்த ஏவிடுவர் நாள் தோறும்! 
*
நாலிரண்டு வயதினிலே அடுப்படியில் அடங்கிடுவாள்
அந்தி சந்தி  வேளையிலே அன்னமூட்டும் தாயாவாள்
அத்தனைக்கும் அவள் வேண்டும் சிந்தனைக்கு நேரமில்லை
வீடு கூட்டி பெருக்கி விளக்கேற்றி வைக்க வேண்டும் 
பெண்ணே உன் பணியிவைகள்  என்றும் சொல்வர்!
*
ஐயிரண்டு வயதினிலே கன்றாய் துள்ளி ஓடி விட்டால் 
காலிரண்டில் சலங்கையிட்டு  துள்ளல் அடக்கிடுவர்
அன்னையவள்  பூமியுந்தன் துள்ளல் தாங்கமாட்டாள் 
அடக்கமாயிரு பெண்ணே  என்றே சொல்லி குட்டிடுவர் 
தட்டுவதும் குட்டுவதும் கொடுக்குகளாய் அவள் மேலே! 
*
ஆறிரண்டு வயதானால்  நாலு சுவர் உந்தன் சொந்தம் 
வாயிற்படி வந்து விட்டால் அமிலமாய்  ஏச்சுப்பேச்சு
பூமிப்படி அதிராது அனன் நடை அவள் பயில அச்சம், மடம் 
நாணமெல்லாம்  இலவசமாய் இணைந்து விடும் 
இயைந்தால் என்று அறிந்தாலே அர்ச்சனைகள் தொடங்கி விடும
*
குனிந்த நடை தானே குமரி உனக்கழகெனச்சொல்லி 
முழுமை யடையாத அவள் உள்ளம் மூடி முடங்கும் 
தன்னைத்தொலைத்து தன் பெயர் மறந்து அமிழ்ந்தாலும் 
மாதந்தோறும் வலிகள் உயிர் வதை உணர வைத்தே 
நீயும் பெண்ணெனெவே சத்தமாய் கூச்சலிடும்! 
*
மங்கையவள் சிந்தனைகள் சிறகடித்து பறந்து  சென்றால் 
சிறகொடித்து  விறகாக்கி  சீர் கொட்டி சிறையாக்கி 
சித்திரம் போல் சிலையாக்கி சிந்தைதனை கொய்து 
சிலுவையிலும் அறைவர்! இதுவே நியதியுமென்பர்
சிக்கிச்சீரழித்திடுவார் சின்னவளே நீ என்பர்!
*
பத்திரண்டு  வயதானால் கற்பனைக்கோர்  கடிவாளம் 
கட்டி விட்டே ஓய்ந்திடுவர், தாய்மை அவள் சொத்தாகி 
மீண்டும் அவள் உயிர்ப்பாள்,மீளவும் பிறப்பாள், 
தாலி கட்டும் மணாளன் மனம் கவரும் மங்கையவள் 
அன்னையாகும் அவளன்பிலெ ன்றும் பேதமில்லை!
*
இத்தனைக்கும் அவள் வாழ்வில் பத்திரமாய் தான் இருப்பாள் 
வேடன் போல வந்திறங்கி  வேட்டை யாடும் மிருகங்களின் 
பாலியல் வக்கிரங்கள் பாவையவள் வாழ்வினிலே 
பாதாளம் செல்ல வைக்கும் பாடுகளை  தந்திடுமே!
பாலூட்டும்  நெஞ்சமதை பாழாக்கும் மாமனிதா!
*
காமுகனாய் ஆனதேனோ  குத்திக்குதறியதேனோ?
தாலாட்டும் தாயுந்தன் தாய்மை உணராதவனே! 
பெண்ணின்றி ஏதுமில்லை, அவளின்றி நீயுமில்லை 
அமிலத்தால் அவளுடலை உருக்குலைக்க நீ யார் சொல்?
அகமுணரா கொடூரம்  உன் தாகம் தீர்த்ததோ  மனிதா?
*
பட்டுபோல பட்டாம் பூச்சியை பிடித்து  நூல் கட்டி 
பறக்கச்சொன்னால் எது வரை தான் பறக்கும்? 
எப்படித்தான் துடிக்கும் பார்த்து மனம் ரசிப்பவனை 
தட்டிக்கேளா தாயவளே தண்டனைக்குரியவளென்று 
தனயனவன்  தவறுகளும்  தாயவளின் தலை மேலே! 
*
நாடாள பிறந்தானென போற்றி வளர்த்திடு தல் தப்பென்று 
நான் சொல்லேன்! ஆணுக்கொரு நீதி சொல்லிடுமுன் கேளீர்!
ஆணுமில்லை பெண்ணுமில்லை, ஒருவரின்றி எவருமில்லை 
ஆணும் பெண்ணும் விண்ணூக்கும் மண்ணுக்கும் செல்லுதல் 
சாத்தியமே சொல்லி வளர்ப்பீர்! வாதைகளை தவிர்ப்பீர்!
*
                                        படங்கள்  இணையத்தேடலில் கிடைத்தது 

14 கருத்துகள்:

  1. அடி ஆத்தி மடை திறந்த வெள்ளம் மாதிரி.

    பதிலளிநீக்கு
  2. அடி ஆத்தி அற்புதமான வார்த்தை
    எனக்கும் படிக்கப் படிக்க அப்படித்தான் தோன்றியது

    பகிர்வுக்கும் தொடரவும்ம் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஆஹா அழகாக மிக அழகாக இருக்குமா,,

    பதிலளிநீக்கு
  4. பெண்ணின புரட்சிக்கவிதை அருமை வாழ்த்துகள் தொடரட்டும் இவ்வகை

    பதிலளிநீக்கு
  5. அட்டகாசமான கவிதையை தந்துள்ளீர்கள். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. வதைகளுக்குள்ளாகும் பெண்ணை கண்முன்னே கொண்டு வந்த கவிதை வரிகள் பெண்ணின் வளர்ச்சிப்படிகளில் உள்ள நிலைகளை விவரித்திட்ட வர்ணனை உங்கள் கவிதை மிக மிக அருமை அக்கா பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதை சகோ/நிஷா..

    பதிலளிநீக்கு
  8. அருமை. இந்தப் படங்களை வரைந்த ஓவியர் பற்றி ராமலக்ஷ்மி தனது பக்கத்தில் அடிக்கடி பகிர்வார்.

    பதிலளிநீக்கு
  9. சூப்பர் கவிதை...

    பதிலளிநீக்கு
  10. #தட்டிக்கேளா தாயவளே தண்டனைக்குரியவளென்று
    தனயனவன் தவறுகளும் தாயவளின் தலை மேலே! #
    குழியையும் பறித்து ,தள்ளியும் விடுவது போலிருக்கிறது இந்த செயல் :)

    பதிலளிநீக்கு
  11. அழகாக உண்மையை உணரச் சொன்னீர்கள்......

    பதிலளிநீக்கு
  12. அடி ஆத்தி....
    இம்புட்டு நீளக் கவிதை...
    ஆத்தாடி... உண்மையைப் பூராம் மிக அழகாச் சொல்லிட்டீங்களே...
    இன்னும் கொஞ்சமே கொஞ்சமா சேர்த்து எழுதினால் இதை கையடக்க புத்தகம் ஆக்கிடலாமே...

    அருமையா இருக்கு அக்கா....

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!