„ எங்களுக்கு நீ வேண்டும் ..
உனக்காக எங்களுக்காக நீ வாழ வேண்டும்“
இந்த பதிவில் குறிப்பிடட விடயங்களை 30-45 வயதுக்குள் இருக்கும் ஆண்களும், பெண்களும் ஆழமாக சிந்தித்து பாருங்கள். உங்களில் பலர் இதே உணர்வை கடந்து இருப்பீர்கள்.உங்கள் அனுபவ கருத்துகள் எங்கள் சமூகத்துக்கு விழிப்புணர்வை உருவாக்கும் என நம்பினால் இங்கே கருத்திடுங்கள். உங்கள் வீட்டில், அருகில் உறவினர், நண்பர்கள் என பலர் தனக்கு என்ன நடக்குது என்கிற உணரும் தன்மை இல்லாமல் வாழலாம். அவர்களுக்கு உதவுங்கள்.
மனச்சோர்வு என்பது துக்கம் அல்லது ஆழ்ந்த சோகம் போன்றதல்ல. மனச்சோர்வு என்பது ஒரு நோய் - உயிருக்கு ஆபத்தானது - மனச்சோர்வு நீடித்தால்சிகிச்சையளிக்கப்பட வேண்டும் சிகிச்சை பொதுவாக மருந்து, பேச்சு சிகிச்சை அல்லது இரண்டின் கலவையாக இருக்கும்.இந்த சிகிச்சைகள் மனச்சோர்வுடன் தொடர்புடைய மூளையில் ஏற்படும் மாற்றங்களை இயல்பாக்கும்.
எம்மவர்களின் பெண்கள் வெளி நாடு வந்ததிலிருந்து தனக்கென தனி விருப்பு வெறுப்பு எதுவும் இல்லாமல் பிள்ளைகள், கணவர் என தான் தன் வீடு என்று வாழ்வார்கள். 20 - 25 வயதில் திருமணமாகி 35 - 40 வயதுகளில் பிள்ளைகள் பத்து முதல் டின் ஏஜ் வயதுக்கு வளர்ந்து தாயின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி அது வரை அம்மாவே எல்லாம், அம்மாக்கு எல்லாம் தெரியும் என சொன்னவர்கள் அம்மாவுக்கு தான் வாழும் நாட்டின் மொழி தெரியல்ல, அம்மாவுக்கு டீச்சர் உடன் பேச முடியல்ல, அம்மா உனக்கு ஒன்றும் தெரியாது என ஆரம்பிப்பார்கள். பெரும்பாலான கணவன் மார்கள் தன் மனைவி தனக்காக, பிள்ளைக்காக தான் வீட்டில் இருந்து எல்லாம் கவனித்தாள் என்ற உணர்வில்லாமல் ஓமடா அம்மாக்கு ஒன்றும் தெரியாது என பிள்ளைகளுடன் ஒத்து ஊதி அவளின் மன அழுத்தத்துக்கு ஆரம்ப காரணம் ஆகுவார்கள். யாரும் இதை அறிந்து திடடமிட்டு செய்வது இல்லை.. ஆனால் அது அறியாமையும் இல்லை என்பது தான் சிக்கலை உருவாக்கி விடுகின்றது.
வேலைக்கு போகும் பெண்களுக்கு இது இரட்டிப்பு பிரச்சனையாக இருக்கும். வேலை செய்யுமிடம் தரும் அழுத்தம், தொடர்ந்து ஒரே வேலை, இயந்திரத்தனமான வாழ்க்கை முறை யாருக்காக இதையெல்லாம் செய்யணும் எனும் சோர்வை உருவாக்கும் போது தனக்கு பிரச்சனை தரும் விடயங்களை தவிர்க்க தெரியாமல் தடுமாறுவார்கள்.
கை,கால், முதுகு, இடுப்பு,தலை என உடல் வலிகள் உருவாகும். (தன்னை ஒதுக்கும் குடும்பத்தின் அன்பை தேடும் ஒரு அந்தர மன உணர்வு இல்லாத வலிகளை இருப்பதாக உணர வைக்கும்) செக்அப் செய்தால் எல்லாம் நார்மலாக இருக்கும். ஆனால் வலி தொடரும்.உடலில் வலி என மருத்துவரிடம் போய் வலிக்கு கொடுக்கும் மாத்திரையே தொடர்ந்த உடல் வலி, அசதி, தூக்கம், சோகம், பசியின்மை மற்றும் எடை இழப்பு, அதிக பசி மற்றும் எடை அதிகரிப்பு, ஆற்றல் இழப்பு, மந்தமான உணர்வு, அமைதியின்மை, எரிச்சல் என்று பல பக்கவிளைவாக தொடர்ந்து டிப்ரெஷன் உணர்வுக்குள் இழுத்து கொண்டு போகும். யாரும் வ்ந்து கதைத்தால் சுய இரக்கத்தில் அழுகை வரும். கண்ணீர் வரும். மனசு சோர்வாக இருக்கும். படிப்படியாக தன்னை யாருக்கும் பிடிக்கல்ல, யாருக்கும் பிரயோசனமில்லை என்று நினைப்பில் தன்னையே வெறுத்து விடுவார்கள்.நோயாளி வலி இல்லாமல் தூங்க வேண்டும் என்று பாவிக்கும் மருந்து அதிகரிக்கப்பட்டாலும் அவர்கள் சிந்தனையை மாற்றி மனநிலையில் முன்னேறவில்லை என்றாகும் போது தற்கொலைக்கு முயற்சிக்கின்றார்கள்.
தொடர்ந்து உடல் வலி, தலை வலி என்று நாள் பட்ட டிப்ரெஷன் நோயாளிகளுக்கு தரும் மாத்திரையின் பக்க விளைவுகள் குறித்து பாவிக்கும் முன் வாசியுங்கள். அதை தொடர்ந்து பாவிக்க வேண்டுமா என நீங்கள் சிந்தியுங்கள். உங்களுக்கு நோய் இன்னதென கண்டு பிடிக்க வில்லை.. ஆனால் வலி தொடர்கின்றது. உடல் சோர்ந்து ஒத்துழைக்க மறுக்கிறது என்று உணர்ந்தால் வலி மாத்திரை எனும் டிப்ரெஷன்குளிசையை பாவிக்க வேண்டாம் என்பது தான். ( நான் நட்பு ரீதியில் பரிந்துரைப்பது) நான் சொன்னதன் பின்பு அவர்கள் பாவிக்கும் குளிசை பின் விளைவுகள் குறித்து வாசித்து உணர்ந்து குளிசை எடுக்காமல் மீண்டு வந்த பலர் என் நண்பர்களாக இருக்கின்றார்கள்..!
அம்மா, அப்பா, சகோதரம், கணவர். பிள்ளைகள், ஊர் உறவு என சிந்தித்து மற்றவருக்கு என்று வாழாமல் நீங்கள் உங்களுக்காக ரசித்து வாழனும் என உணருங்கள். அதே போல் கணவனும் பிள்ளைகளும் தன் மனைவி, அம்மா தங்களுக்கு முக்கியம், அவள் தான் எல்லாம், அவளை நேசிப்பதை வெளிப்படையாக சொல்லுங்கள்.
„ எங்களுக்கு நீ வேண்டும் ..
உனக்காக எங்களுக்காக நீ வாழ வேண்டும்“
இது தான் அவள் மீண்டு வரும் ஒரே நம்பிக்கை..!
#மனஅழுத்தம் எவ்வாறெல்லாம் ஆரம்பிக்கும் தொடர்ந்து அலசுவோம்...!
#Depression
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!