05 பிப்ரவரி 2019

கௌசல்யா சக்தி

கௌசல்யா சக்தி
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதான ஆதாரங்களோடு 22 வயது இளம் பெண் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றாள்.
ஆணவப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவள் என்ற அடிப்படையில் அரசுப்பணியான இந்திய மத்திய அரசின் இராணுவப்பணிமனை வேலையிலிருந்து தகுந்த காரணங்களோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றாள்.
நூணலும் தன் வாயினால் கெடும் என்பது போல் அவள் பேசிய பேச்சுக்களே ஆதாரமாக நீதியின் முன் வைக்கப்பட்டிருக்கின்றது?
இத்தனை சிறு வயதில் அந்த அப்பாவி பெண்ணுக்கு இந்த கொடுமையான அனுபவம் தேவை தானா?
கௌசல்யா சங்கரை காதலிக்கும் போது 17 வயது, சங்கருக்கு 21 வயது. சங்கர் கொலை செய்யப்பட்ட போது கௌசல்யாவுக்கு 18 வயது. சங்கருக்கு 22 வயது. எஞ்ஞினியரிங்க கல்லூரி மாணவன். படித்து பட்டம் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்த்திருக்க வேண்டியவன்.
கௌசல்யா சக்தியை திருமணம் செய்த போது 21 வயது.
இளம் வயதில் எடுப்பார் கைப்பிள்ளையாக்கி அந்த பெண் வாழ்க்கையை நாசமாக்கும் உரிமையை யார் கொடுத்தது?
தோற்றத்தில் மாற்றத்தை உருவாக்கியோர் அவள் சிந்தனையில் விசத்தை விதைத்தும் அவளை தம் ஆதாயத்துக்கு பகடையாக பயன் படுத்துவதும் தவறென தட்டிக்கேட்காத எல்லோருமே இங்கே குற்றவாளிகளாக இருக்கின்றார்கள்.
முதல் தப்பே உணர்த்தப்படாத நிலையில் இரண்டாம் தப்பு செய்ய தூண்டுதலாக இருந்த இந்த சமூகத்தினை தட்டிக்கேட்க போவது யார்?
அவள் இரண்டாம் திருமண நேரம், வாழ்த்துப்பாமாலைகள் பாடியோரும், அக்கா, தங்கை, மகள் எனவெல்லாம் வாழ்த்தியோரும் என்ன பதில் வைத்திருக்கின்றார்கள்?
தவறுகள் உணர்த்தப்படாமல் தம் ஆதாயத்துக்காக ஒரு இளம் பெண் வாழ்க்கையை பாழாக்கி கேள்விக்குறியாக்கி நிற்கும் சமூகத்துக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும்?
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசச்சொல்லி கொடுத்து யாரை தண்டிக்க நினைக்கின்றது இந்த சமூகம்?
பக்குவப்படாத 17 வயதில் வந்த காதலையும், அதனால் தொடர்ந்த ஆவணப்படுகொலையையும், தம் அரசியல் இலாபங்களுக்கும், சமூக சீரழிவுக்கும் பயன்படுத்தி ஆத்தி, ஊத்தி தேத்தி விட்டோர் என்ன சொல்ல போகின்றார்கள்?
பரிதாபத்துக்குரிய பெண் கௌசல்யா. அன்று அப்பாவியாக இருந்தவள். இன்று அகம்பாவம் கொண்டவளாக சித்தரிக்கப்படுவது ஏன்?
உண்மையில் இனித்தான் அவளுக்கு ஆதரவு தேவை. ஆனால் இதுவரை அவளை ஏத்தி விட்டோரெல்லாம் இனிமேல் விலகித்தான் செல்ல போகின்றார்கள்.
அவள் வாழ்க்கையில் இனிமேல் நடக்க இருக்கும் அத்தனைக்கும் அவளை தூக்கி பாராட்டி சீராட்டிய அத்தனை பேரும் காரணமாகி இருக்கின்றார்கள்.
மனச்சாட்சி இன்னும் செத்து போகாதிருந்தால் அவரவர் மனமே தம் தவறுகளை உணர்த்தும்.
அரசன் அன்றறுக்கலாம். தெய்வம் நின்று நிதானித்து ஒவ்வொன்றையும் அறுக்கும்.
நாளை எமது பிள்ளைகள் இதே நிலையில் இருந்தால் என்ன செய்வோம் என நினைத்து செயலாற்றுவோம். அடுத்தவர் பிள்ளை தப்பு செய்தால் ஆராத்தி கரைகக முன் அந்த பிள்ளைகள் எங்கள் சொந்த பிள்ளையாக இருந்தால் என்ன செய்வோம் என இனியேனும் சிந்திப்போம்.
பாவம் கௌசல்யா. பரிதாபத்துக்குரிய பெண்
கூடா நட்பு கேடாய் முடிந்திருக்கின்றது எனபதன் நிகழ் கால நிஜமாகி இருக்கின்றாள். இனியேனும் அவள் செய்த தவறுகள் அவளுக்கு உணர்த்தப்படட்டும்.

இனி அவள் வாழ்க்கை???


பேஸ்புக்கில் என் பக்கம் எழுதிய பதிவு.   கௌசல்யா சக்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!