16 டிசம்பர் 2023

கானாந்தி,முல்லை,முசுட்டைக்கீரையும் புளிமாங்கா சொதியும்

நாங்கள் குடியிருந்த வீட்டில் வேலியில் கானாந்தி செடி மரமாகி,அதில் மேல் முல்லை கொடியும் படர்ந்து வளர்ந்து நின்றது. கானாந்தி,முல்லை,முசுட்டை கீரையின் துளிர்களை ஆய்ந்து அலசி புளி மாங்காயும் கீரி மீனும் சேர்த்து தேங்காய்ப்பால் சொதி வைச்சால் கீரைகளின் வாசமும் தேங்காய்ப்பாலின் வாசமும் சேர்ந்து ஊரையே விருந்துக்கு அழைக்கும். சோத்துக்குள் சொதியை விட்டு தின்று விட்டு சொதிக்குள் சோற்றை தேடி அப்படியே தட்டோடு குடிப்போம்.
கானாந்தி செடி கீரைகளை ஆய்ந்து கழுவி வைச்சிட்டு... மீன் அல்லது இறாலை சுத்தப்படுத்தி அதுக்குள் மஞ்சள் உப்பு,பச்சமிளகாய்,புளிமாங்காய் சேர்த்து தண்ணீர் விட்டு அவிய விடணும்,அவிந்ததும் இரண்டாம் மூணாம் தேங்காய்ப்பால் விட்டு கொதிக்க விட்டு பின் இலைகளை போட்டு மூடி ஒரு நிமிடம் விட்டு திற்ந்து தலைப்பாலை விட்டு அதுவும் கொதி வர இறக்கிரனும். கீரைகளை அதிகம் அவிய விட கூடாது.
பொன்னாங்கன்னி,வல்லாரை, திராய் கீரைகள் வயலில் சேற்று நிலத்தில் 2/12 அடி சுற்றளவுக்கும் அதிகமாகப் படரும்.மத்ததெல்லாம் வீட்டு வேலிகளிலும் குப்பை மேட்டிலும் தோட்டத்தில் வளர்ந்து வீட்டில் முற்றத்தில் முருங்கை மரங்களும் அதில் கீரையும் பூவும் காயும் எப்பவும் கிடைக்கும், அதிலும் மாரிகாலம் வந்தால் அடிச்சி ஊத்தும் மழையில் மரங்களெல்லாம் குளிச்சி சுத்தமா நிக்கும், பூச்சிபுழுக்கள் எல்லாம் மழைத்தண்ணீரில் அலசிப்பட்டு போயிரும், நாலு நாள் மழை பெய்ந்தாலே மரங்கள் எல்லாம் துளிர் விட்டு இளம் தளிருடன் பார்க்கவே பரவசமாக நிற்கும். வெள்ளத்தில் எல்லாம் அள்ளுப்பட்டு போவதனால் வேலியில் மரத்தில் படரும் கீரைகளும் காய்களும் தான் சமையலுக்கு.
முல்லை
தூதுவளை, முருங்கை, கறிவேப்ப்பிலை கீரைகளின் துளிர்களை பிடுங்கி அலசி சோத்துபானையில் கஞ்சி வடிச்சதும், அதுக்கு மேல் வாழை இலை போட்டு மூடி நெருப்பை அணைச்சி விட்டால் கொஞ்ச நேரத்தில் கீரை துளிர்கள் அவிந்து இருக்கும். அதோட பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு, தேசிப்புளியும் சேர்த்து அம்மியில் அரைச்ச சம்பலுக்கு சுடு சோறு இருந்தால் வேற கறி வேண்டாம் தான்.
பீர்க்கை கொடியும் நாடங்காயும், புடலங்காயும் முருங்கை மரத்தில் படந்து கிடப்பார். பீர்க்கை வீட்டு தேவைபோக அல்லயவருக்கு கொடுத்தும் காய் அப்படியே காய விட்டு காய்ந்து பாத்திரம் தேய்க்கவும்,. முதுகு தேய்க்கவும் பாவிப்பம். பீர்க்கங்காய், நாடங்காய், வத்தவக்காய்க்கெல்லாம் மணப்பு கருவாடு போட்டு சொதி, புடலங்காய் பால் கறி, கத்தரிக்காய் பால் கறி மணப்பு கருவாடு போடாமல் சமைக்க மாட்டோம். லாவுட் பழம் மரம் கிணற்றடியில் பெரிதாக வளர்ந்து நின்றது. லாவுட் காயும் புளிமாங்காயும், உப்பும் போட்டு உரலில் இடிச்செடுத்தால் அது தான் பின்னேரம் டிபன். லாவுட் பழமும் மாரி காலம் தான் பழுக்க தொடங்கும். தானே பழுத்து பழங்கள் நாலா வெடிச்சி விழும், மாவு போல் செம்ம ருசியான பழம், சின்ன வயதில் நான் அதிகம் லாவுட்காயும் பழமும் சாப்பிட்டிருக்கேன்.
பாத்திரம் தேய்க்கவும், முதுகு தேய்க்கவும் காய்ந்த பீர்க்கங்காய்
திராய் நல்ல கசப்புச் சுவை கொண்டது. நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது. திராய்,குறிஞ்சா இரண்டும் சமைக்கும் போது கீரையில் நீர் இருக்க கூடாது. நீரில் வேக விட்டால் கசப்பு அதிகரிக்கும், கழுவி காய வைத்த பின் அரிந்து சுண்டல் செய்யணும், மீன் அவித்து பிசைந்து தேங்காய்ப்பூவும் சின்ன வெங்காயம் நிரம்ப போட்டு உப்பும் தேசிப்புளியும் சேர்த்தால் கசப்பு குறைந்து விடும், நான் கீரைகளுக்கு தேசிப்புளி சேர்க்காமல் சும்மா சமைப்பேன்.மீன் போடாமலும் சுண்டல் செய்யலாம். திராய் சுண்டலை போல் மீனும் புளிமாங்காயும் சேர்த்து செய்யும் அவியலுக்கு கடைசியா திராயை தூவி விட்டு கிளறி விட்டால் செம்மயா இருக்கும்.
எங்கட வடகோவை ஐயா கீரை பத்தி போட்ட பதிவில் நான் கானாந்தி கீரையை விட்டு விட்டீங்களே என கேட்டனா... அவரும் கானாந்தி கீரையோட படம் போட சொல்லி கேட்டாரா.அவர் கேட்டதும் கீரையோட படம் மட்டும் போட்டால் திண்ட சோறு செமிக்காது அல்லோ? அதனால் கானாந்தி கீரையோட சேர்த்து கதையும் சொல்லிட்டேன். 😻😻😻 ப்டங்கள் இணையத்தில் இருந்து எடுத்தேன்.

1 கருத்து:

  1. அருமை சகோதரி ... உங்கள் பதிவை பார்த்ததுமே பழைய நினைவுகள் வந்து மனதை நிறைத்தது .அப்படியே ஆய்ந்து கழுவி சமைத்த காலங்கள் போய் குளிருட்டியில் வைத்து சமைக்கும் காலங்கள் இது .திருப்பி திருப்பி இரண்டு மூன்று தரம் படித்து வி ட்டேன் இதுவரையில் ..நன்றி

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!