03 மே 2019

மதம் எனும் பெயரில் மதம் பிடித்து அலைவோர் ....?

மதம் எனும் பெயரில் மனங்களில் மதம் பிடித்தலையும் அனைவரும் தீவிரவாதிகளே........!
மனிதர்களை சுயமாக சிந்திக்க விடாது, தாம் கொண்ட கொள்கைகளை மட்டுமே சரியானதென இனம்,மொழி,ஜாதி எனும் குறுகிய வட்டத்தினுள் சிந்திக்க, செயல்பட கற்பிக்கப்படுவதும் ஒருவகை தீவிரவாதமே......!
இந்துவோ,கிறிஸ்தவனோ,முஸ்லிமோ,பௌத்தனோ அவன் நம்பிக்கையை அவனுக்குள் வைத்து அவன் சார்ந்த மதம் சொல்லும்,அன்பை,அகிம்சையை, பொறுமையை,விட்டுக்கொடுத்தலை,சகிப்புத்தன்மையை போதிப்பவர்களாக இல்லை.
மத கட்டுப்பாடுகள் எனும் பெயரில் மனிதர்களை வெல்வதாக நினைத்து 
மதத்தின் பெயரால் தீவிர வாதிகளை உருவாக்கப்படுகின்றார்கள். 

எல்லா மதத்தினுள்ளும் மதத் தீவிரவாதிகள் உண்டு.

மனிதர்கள் ஆண்டாண்டு காலமாக தொடரும் நம்பிக்கைகளை கை விட்டு இன்னொன்றின் மீதான பற்றை உருவாக்க முடிவது என்பது இலகுவானது இல்லை. தம் மூதாதைய்ர் பின்பற்றியதாக சொல்லி கடைப்பிடிக்கும் நம்பிக்கைகளை விட்டு விலகி புதிதாக ஒன்றை நம்புகின்றார்கள் எனில் அதற்கான உளவியல் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும்.
தீர்வுகளை தேட வேண்டும். ஊருக்கொரு வணக்க ஸ்தலம் கட்டுவதை விட ஊரிலிருக்கும் மக்களின் குறைகளை தீர்க்க முன் வர வேண்டும்.
பெருமைக்காக வானுயர்ந்த வணக்க ஸ்தலங்களை கட்டி, அங்கே கடவுள் எனும் பெயரில் ஒன்றை அமைத்து தங்கத்தாலும், வைரத்தாலும் அலங்கரிக்க மனிதனோ பசியாலும், தாகத்தாலும் துடிக்கின்றான். 
அவன் பசியை இன்னொரு மனிதன் தனக்கு சாதகமாக்குகின்றான்.

தன் நிறைவை அடைந்த மனிதனை எதனாலும், எவராலும் அசைக்க முடியாது. மனிதர்களை தன் நிறைவடைந்தவர்களாக மாற்றும் வழிகளை காட்டாமல் மதங்கள் மூலம் மதங்களை வெல்ல முயற்சிப்பது அப்பாவி மக்களை அழிவின் விளிம்பில் கொண்டு விடுகின்றது.
மனிதர்களின் இயலாமையை தமக்கு சாதகமாக பயன் படுத்துவதும்,பசியால் தவிப்பவனுக்கு சோறு கிடைக்கும் என சொல்லியும்,வறுமையை வெல்லவும் மதங்கள் மாற்றம் என்பது மனங்களை வன்முறை பாதைக்கே வழி காட்டுகின்றன.
என் கடவுள்,என் நம்பிக்கை எனும் பெயரில் ஏட்டிக்கு போட்டியாக அப்பாவி மக்களை தம் செல்வாக்காலும், அதிகாரத்தாலும் வசப்படுத்தி, மூளைச்சலவை செய்வதும், வன்முறையை விதைப்பதும் தீவிரவாதிகளை உருவாக்குகின்றது.
பிறப்பை போலவே மனிதர்களின் மதங்கள் என்றுமே மாறுவதில்லை. மனங்கள் தான் மாறுகின்றன.
மாற்றம் ஒன்றை தாம் உணர்ந்து கடைப்பிடிக்கும் மனிதர்கள் இங்கே அரிது.

ஏதோ ஒரு சுயலாபம், சுய நலம் கருதி மதம் மாறியதாக நம்பி தாம் அதுவரை கடைப்பிடிக்கும் நம்பிக்கைகளோடு தம் பிழைப்புக்காக ஏற்றுக்கொள்ளும் புதிய நம்பிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உருவாக்கபப்டும் குழப்பங்களால் அடிப்படை மதம் எனும் நம்பிககையே தோற்கடிக்கப்படுகின்றது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை செல்லுமென நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்? 
நெருப்புக்கு அஞ்சி, எண்ணெய்ச் சட்டிக்குள் விழுவதில் வீரர்களாக நாம் வரலாற்றில் பதிவாகிக்கொண்டே இருக்கின்றோம்.

வாழ்க்கையில் பட்டறிவும், கல்வி தந்த பட்டறிவும் செல்லாக் காசாகிக்கொண்டிருக்கின்றன.

1 கருத்து:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!