22 அக்டோபர் 2018

இணையத்தில் என் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் என்பது ?

இனி எதையும் வெளியில் சொல்ல வேண்டாம். கண்ணை மூடி, காதை பொத்தி கொண்டு நம்மை மட்டும் நாம் பாதுகாத்து கொள்வோம். கண்டதும், கேட்பதும் எதுவானாலும் கடந்து செல்வோம். இப்படித்தான் இந்த உலகம் நமக்கு அனுபவங்களை தந்து கொண்டிருக்கின்றதா?
வேலியில் போகும் ஓணானை தூக்கி காதில் விடுவது எப்படி எனபதையும் அப்படி விட்டால் என்ன ஆகும் என்பதை ஆண்களை விட சக பெண்களே எனக்கு நிருபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த இணைய உலகில் ஆண் நட்புக்கள் தரும் ஆதரவை பெண்கள் தருவதில்லை என்பதே உண்மை. பெண்களே பெண்களுக்கு எதிரிகள் என்பதை மீண்டும் மீண்டும் நாம் நிருபித்து கொண்டே இருக்கின்றோம். எத்தனை லைக்ஸ், எத்தனை நட்பு என்பதை வைத்து யார் இங்கே பிரபல்யம் என போட்டி போடுகின்றோம்.
உண்மையில் பெண்கள் முன்னேறவும், சாதிக்கவும் ஆண்களை விட அதிகமான பெண்களே பெண்களுக்கு தடையாக இருப்பதாக அறிந்திருந்தாலும் நான் எனக்குள் எவ்வித பொறாமை உணர்வையும் உள் வாங்கியதில்லை.
எழுத்தாகட்டும், செயலாகட்டும், பெண்கள் தாமாக இணைந்து , உணர்ந்து தம்மை முன்னேற்ற செயல் படும் போது என் மனப்பூர்வமான ஆதரவை கொடுப்பேன். அதே போல் அவர்கள் பாதிக்கப்படும் போதும் என்னால் இயன்ற ஆறுதலை, புரிதலை கொடுக்கவே நினைப்பேன்.
ஆனால் பல பெண் நட்புக்கள் இதை சரியாக புரிந்து கொள்வதிலலை. என் நட்பில் இருக்கும் பெண்கள் கூட இணையத்தில் ஆண் பெண் நட்புக்களாக் குடும்ப ரிதியில் அனைத்தினையும் பகிர்ந்து காலப்போக்கில் வாக்குவாதங்கள், புரிதலின்மை வரும் போது இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி குற்றம் சுமத்தி பதிவிட்டிருக்கின்றார்கள்.
எனக்கு இருவரும் முகம் தெரியாத அகம் தெரிந்த நட்பாக இருந்தாலும் நான் பெரும்பாலும் ஆணை விட பெண்களை எச்சரிக்கவே நினைத்து செயல் படுவேன். இயன்ற வரை இந்த மாதிரி பிரச்சனைகளை பொதுவெளியில் திட்டி த்தீர்க்காமல், பதிலுக்கு பதில் இட்டு வாதாடாமல் அமைதியாக சென்று விடுங்கள்: என்பேன்.
இணைய பாதிப்புக்கள் எனும் போது அறியாத ஒருவரை நட்பென நம்பியது நம் தப்பாக இருக்கும் போது அதை பொதுவெளியில் இன்னார் இப்படி என வெளிப்படுத்தி பெண்கள் இடும் பதிவுகள் பெண்களை தவறாக புரிந்து கொள்ளவும், பெண் மீதான கேலி கிண்டல்களுக்கும் இடம் கொடுக்கின்றதே தவிர சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு எந்த இமேஜ் பாதிபும் வருவதில்லை. பாதிகப்பட்ட தாக சொல்லும் பெண் இன்னும் அதிகமாக ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்ட படுகின்றாள்
குற்றம் சுமத்தப்படும் ஆண் மீது எந்த களங்கமும் சேர்வதில்லை. அவன் துசி தட்டி செல்வது போல் என் மீது போலியாக புகார் செய்தார்கள்: என சொல்ல அதை நம்பி நம் சக பெண்களே அவனை பாதுகாப்பதும், அவனுக்காக வாதாடுவதும் நடந்து கொண்டு தான் இருகின்றது. இப்படியான ஆண்கள் தங்கள் வீட்டு பெண்களை இணையத்தில் உலாவ விடுவதில்லை என்பதும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
பெண்களுக்கு எச்சரிக்கை எனும் பெயரில் நாம் சொல்லும் முன் ஆலோசனைகள் இன்னார் இப்படி, இப்படி எல்லாம் இங்கே நடக்கின்றது. நீ அதை புரிந்து கொள் என நமக்கு தெரிந்ததை சொல்லும் போது அவர்கள் மீதான அக்கறையால் சொல்லும் நமது நட்பும், அன்பும் கூட பல நேரம் சந்தேகத்துக்குள்ளாகின்றது. களங்கப்படுத்தப்படுகின்றது. நீயும் அவனுள் ஒருத்தியோ என குற்றச்சாட்டு நம்மீதே பூமராங்காக திரும்பி வீசப்படுகின்றது.
சில வருடங்கள் முன்னால் நல்ல நட்பாக பழகிய பெண். இணையத்தில் அவர் குறித்து பல பதிவுகள் அவர் நம்பி பழகிய ஆண் நட்பினால் அவதூறாக பரப்பப்பட்ட போது பதிலுக்கு பதிலடி என பெண் நட்பும் கிளம்ப.. நான் அப்படி செயல் பட வேண்டாம். அமைதியாக இருங்கள் என சொல்ல.. அவர் அதை அவர் நம்பி அவர் மீதே குற்றம் சாட்டிய ஆணை சார்ந்தவராக என்னை நினைத்து நட்பையே விட்டு விலகி சென்றார். இணையத்திலிருந்தே காணாமல் போனார்.
நானும் அவர்களுள் ஒருத்தி எனும் உணர்வில் எச்சரிக்கை செய்கின்றேன் என புரிந்து கொள்ள முடியாதவாராக இருந்தார்.
இப்போதும் பலர் அப்படித்தான் இருக்கின்றார்கள்?
தமக்கென்ன இலக்கும் இலட்சியமும் பிரபல்யமாவதும் லைக் எண்ணிக்கைகளை கூட்டுவதும் தான் என வும் தாங்கள் இடும் பதிவுகளுக்கு கிடைக்கும் லைக் எண்ணிக்கைகளை வைத்து தம் கருத்துக்களும் சமூகத்தில் பேசப்படுவதாக நினைப்பதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.
பெண்கள் பாதிக்கப்படுவதற்கு பின் ஒரு பெண் இருப்பதனால் ஆண்கள் இதை பயன் படுத்தி கொள்கின்றார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.
சமீபத்தில் நட்பாகிய ஒரு பெண், ஆளுமையுடன் பல பதிவுகள். தாம் உணர்ந்ததை அபப்டியே எழுதும் அரிவை அவர். அவர் எழுத்தாழுமையை சகிக்க இயலா சிலர் அவர் மீதான அவதூறுகளை, பாலியல் ரிதியான குற்றச்சாட்டுகளை என் ரைம் லைன் வரை கொண்டுவர.. நான் அதை அவருக்கு அனுப்பி எச்சரிக்க.. அவர் என் மீதே சந்தேகம் கொண்டு, என்னை தடை செய்ததை எவ்வகையில் புரிந்து கொள்ள வேண்டும்?
நல்லதுக்கு காலம் இல்லை என இப்படித்தான் பலர் நிருபித்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு கருத்தை இன்னார் சொன்னார் என சொன்னவருக்கு பின்னாலிருக்கும் பிரபல்யத்தை வைத்து ஆஹா ஓஹோ என கடந்து செல்வதும் , சொல்லப்படும் கருத்தை உள் வாங்கி உணர்வதுடனான புரிதல்களை குறித்து எவருக்கும் அக்கறை இல்லையா?
நான் என்ன செய்ய வேண்டும்? என் எழுத்துக்கள் இனி எப்படி இருக்க வேண்டும்? 
எவர் எக்கேடு கெட்டால் எமக்கென்ன என செல்ல வேண்டுமா?

என் சிந்தனை என்பது உலகத்தின் டிரெண்டுகளுக்குள் அகப்படாமல் மெதுவாக நகர்ந்திடவே நினைக்கின்றது. ஒரு பிரச்சனை டிரெண்ட் ஆகும் போது அதன் பின்னால் இருக்கக்கூடிய சாதக, பாதகங்களை குறித்தே சிந்திக்க சொல்கின்றது. அதனால் தான் என் பதிவுகள் கும்பலோடு கோவிந்தா போடுவதாக ஊரோடு ஒத்து இருப்பதில்லை
நான் எனக்கும் வட்டம் போட்டு கொள்ள வேண்டுமா? கட்டம் கட்டி கொள்ள வேண்டுமா? 
பூசி மெழுகாமல் இப்படித்தான் என நான் எழுத்தில் சுட்டிக் காட்டுவது தவறா? 
அல்லது என் பார்வைக்கோணம் தவறா?
நான் உலகத்தை புரிந்திருக்கும் விதம் தவறா? 
நான் என்னை மாற்றிக்கொள்ள வேண்டுமா?

இன்பாக்சில் வந்து நான் உங்கள் விசிறியானேன் என்பதும், நேரில் காணும் போது உங்கள் எழுத்துக்கள் பிரமாதம் என்பதும், என் மன உணர்வுகளை, நான் எழுத நினைப்பதை நீங்கள் எழுதி இருக்கின்றீர்கள் என்பதும் போதுமா? எழுத்து ஆளுமை மிக்கவர் எனும் வாழ்த்தோடு கடந்திட லாமா?
இந்த சமூகம் எனக்கு தரும் அங்கீகாரம் என்ன?
லைக்ஸ் எண்ணிக்கைகளை வைத்து தான் நமது அங்கீகாரம் கணிப்புக்குள்ளாகின்றதா?
கண்ணை மூடி எவரென அறியாதோரை நட்பில் இணைத்து மேலேறி அதே வேகத்தில் நானும் மறைந்தே போக வேண்டுமா?
வழக்கம் போல் என் அண்ணா, தம்பிமார்கள் , நண்பர்கள் வழிகாட்டுவீர்கள் என நம்புகின்றேன்.
உங்களை குற்றம் சொல்வதாக நினைத்து கடந்து செல்லாமல் சுய ஆய்வுப்பதிவாக நம்மை நாம் புரிந்திட அக்காக்கள் தோழிகள் தங்கைகள் கூட வழி காட்டலாம்

1 கருத்து:

  1. வலைப்பூ பதிவுகள் குறைந்து வருவது ஏன்...? தங்களுக்கு சில விடைகள் புலப்படலாம் சகோதரி...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!