10 மார்ச் 2017

தோழி எனும் பெயரில் வந்த போலி!

யானைக்கும் அடி சறுக்கும்.
ஆமாம், இணையத்தை பாதுகாப்பாக பயன் படுத்துவதாக நிரம்ப பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தேன். முகமில்லா போலிகளை நட்பில் இணைத்ததில்லை. அறிந்தோர் தெரிந்தோர், அறிந்தோருக்கு தெரிந்தோர் எனும் வகையில் மட்டுமே சில நூற்றுக்குள் என் நட்பு சுருங்கி விட்ட நிலையில்....
என் நட்பு வட்டம் என்பது நான் முழுமையாக அறிந்தவர்கள் மட்டுமே எனும் இறுமாப்பில் விழுந்தது வேட்டு.
கடந்த தை மாதம் இறுதியில் என் சுவிஸ் நண்பி ஒருத்தியின் பெயரில் வந்த இன்பாக்ஸ். மற்றும் நட்பழைப்பு... ஒருவருடங்களுக்கு மேலாக தொடர்பில் இல்லாத நிலையில் என் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி இருந்தவர்கள் நான்கைந்து மாதம் முன் வேறு வீடு மாறியது கூட அறியாமல்!!!!!
மேடம் அத்தனை பிசியாக்கும்.
தை மாதம் கடைசியில் ஒரு ஞாயிறு ஏழு மணி போல ஹோட்டல் வேலை முடிந்து களைப்புடன் கம்யூட்டரை ஆன் செய்து.. பேஸ்புக் வந்தேன். ஆன் செய்த அடுத்த நொடியே என் நண்பியின் நட்பழைப்பை கண்டேன். இப்போதெல்லாம் புதிய நட்பழைப்புக்கள் மேல் அதிக ஆர்வம் இல்லாத நிலையில்....அதே ப்ரோபைல்,,, விபரத்துடன்.. போட்டோ போட்டு வந்த அழைப்பில் சற்று ஏமாந்தேன். உடனே ஹாய் நலமா? என கேள்வி கேட்டு விட்டு.. எப்படி இருக்கின்றாய். எப்போது எங்கே வீடு மாறினாய் என ஜேர்மன் மொழியில் தட்டச்சிட்டேன்.
ஏற்கனவே என் நட்பில் இருப்பவள் மீண்டும் புதிதாக ஏன் அழைப்பனுப்பினாள் என அந்த நொடியில் சிந்திக்க மறந்தேன்.
அந்தப்பக்கம் இருந்தும் அதற்கேற்ப பதிலும் வர.. நிஜமாக அது அவளே தான் எனும் நம்பிக்கையில் உரையாடிக்கொண் டிருக்கும் போது என் செல்போன் நம்பரை அவசரமாக கேட்டாள். தான் வெளியில் நிற்பதாகவும், கடையில் ஷாப்பிங்க செய்வதாகவும்,,, ஒரு விளம்பரத்தில் கலந்து கொள்ள போன் இலக்கம் தேவை எனவும் கேட்க.... இங்கே பெரும்பாலான சுவிஸ்காரர்கள் செல்போனை அதிகம் பாவிப்பதில்லை எனும் என் சொந்த அனுபவத்தில்.... என் போன் இலக்கம் கொடுத்தேன்.
உன் போனுக்கு ஒரு மெசேஜ் வரும் அந்த நம்பரை எனக்கு கொடு என சொன்னாள். எனக்குள் கொஞ்சம் குழப்பம் தான். ஆனால் தான் ஒரு விளம்பர குவிஸில் கலந்துகொள்வதாகவும் போனுக்கு வந்த கோட் நம்பரை தந்தால் தனக்கு 500 பிராங்க் வரும் எனவும்.... சொன்னதை நம்பி கோட் நம்பரை சொன்ன அடுத்த நொடி.. எனக்குள் இருந்த முன் ஜாக்கிரதை முனியம்மா விழித்து கொண் டாள்.
என்னமோ, எங்கேயோ தப்பு செய்து விட்ட உணர்வில் அவள் வீட்டுக்கு போன் செய்தால்.. வீட்டில் அவள் பிள்ளைகளும்.. பிள்ளைகளை பராமரிக்கும் கேர்டேக்கரும் மட்டுமே இருக்க அவள் வீடு வர நள்ளிரவாகும் எனும் தகவலும். அவளுடன் உடனே தொடர்பு கொள்ள முடியாது எனும் நிலையுமாக..
அடுத்த நொடியே.. என் மகனை அழைத்து 24 மணி நேரமும் செயல்படும்... என் போன் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு ... இப்படி பேஸ்புக் மூலம் சாட் வந்த நட்பை குறித்து எனக்குள்” இருக்கும் சந்தேகத்தை சொல்லி எச்சரித்தேன் ... அந்த கோட் நம்பரை வைத்து எந்த தில்லு முல்லும் செய்யாத படி... என்னுடன் தொடர்பு கொண்ட ஐபியை. ட்ரேஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.
இதற்கிடையில்.. அந்த பேக்.. என்னுடன் செய்த உரையாடலை.. அழிக்க ஆரம்பித்தது... புரிய. நான் ஸ்கிரின் சாட் எடுக்க முயற்சித்தால் முழுமையாக முடியவில்லை. அழிக்கும் வேகத்துக்கு ஸ்கிரின் சாட்டெல்லாம் எடுக்க முடியாது என தோன்றிய நொடி அத்தனையையும் போட்டோவாக்கி என் செல்போனில் பதிந்து விட்டு... போன் நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்து கொண்டே.... ஒவ்வொரு உரையாடலாக டெலிட் ஆவதை கவனித்து..அனைத்தையும். போட்டோவாக்கி சேமித்து கொண்டிருந்தேன்.
எல்லாம் உரையாடல் நடந்த பத்து நிமிடங்களுக்குள்... நடக்க.... நீ யார் எனும் என் கேள்விக்கு சிரிப்பு ஸ்மைலிகள் தொடர... அதையும் போட்டோவாக்கி... கடைசில் அந்த ஐபியை டீ ஆக்டிவேட் செய்ததை உணர்ந்தேன். அதையும் போன் நிர்வாகத்துக்கு சொல்லி விட்டேன்.
மீண்டும் ஒரு மணி நேரத்தில் அக்டிவ் வந்து மீதி இருந்த உரையாடலை அழிப்பதை கவனித்து கொண்டே இருந்தேன். அனைத்தும் போனில் பதிவாக்கினேன்.
போன் நிர்வாகம்... அந்த போலி ஐபி..இத்தாலி பக்கமிருந்து என் தோழியின் பிரோபைலை பயன் படுத்தி இன்னும் பலருக்கு அழைப்பு அனுப்பி இருப்பதாக என் மகன் மூலம் தகவல் அறிந்த தோழி... தன் பக்கம் எச்சரிக்கை பதிவை தன் ஒரிஜினல் ஐடியிலிருந்து போட்டு விட்டு என்னிடம் மன்னிப்பை வேண்ட.. நான் என் நிலையை சொன்னேன். ஒருவருடம் தொடர்பில்லாத நிலையில்... எதிர் வீட்டிலிருந்தும் வீடு மாறியதை அறியாமல் இருந்ததனால் ஏற்பட்ட உற்சாகத்தில் நான் போலி ஐடியை நம்பியதை சட்டென புரிந்து கொண்டு.. தன் பெயரில் இருந்த ஒரெழுத்து வித்தியாசத்தை சொல்லி.. அதை குறித்து தன் பக்கமும் பதிவாக எச்சரிக்கை செய்தாள்.
இன்னொரு பக்கம் என் போனுக்கு நான் கொடுத்த கோட் நம்பரை வைத்து 200 சுவிஸ் பிராங்க குகள் பெறுமதிக்கு ஆன்லைன் ஷாப்பிங்க செய்ய முயன்றதாக... தகவல் வர.. அதையும் டிரேஸ் செய்த போன் நிர்வாகம் நான்கு நாட்களின் பின் என் போனுக்கு தொடர்பு கொண்டு.... நான் உரையாடிய உரையாடல் விபரம் மற்றும் அனைத்து விபரங்களுடன் எங்கள்பகுதி போலிஸுக்கு சென்று கம்ளைட் செய்து அறிக்கை அனுப்ப சொன்னார்கள்.
பொலிஸ் அறிக்கை இல்லை எனில் நான் அந்த 200 பிராங்க கட்ட வேண்டும் என சொல்லி... ஆனால் இப்படியாக சூழலில் உடனடி நடவடிக்கை எடுத்ததுடன் அடுத்த பத்து நிமிடத்தில் நிர்வாகத்துக்கு அழைத்து சொல்லி விட்டதனால்... அவர்கள் இனி மேற்கொண்டு கவனித்து கொள்வதாகவும் சொல்லி.. நெஞ்சில் பாலை வார்த்தார்கள். அத்துடன் என் போனிலிருந்து எவ்வகையிலும் ஆன்லைன் ஷாப்பிங்க , நெட் காட் பயன் படுத்த முடியாத படி பிளாக் செய்தார்கள்.
எனக்குள் இத்தனை வருடம் இணையத்தில் இருக்கும் நானே இப்படி ஏமாந்து போனேனே என என்னில் எனக்கே கோபம் கோபமாக வந்தாலும்... இதுவும் ஒருவகை அனுபவப்பாடம் தான் என மனதை தேற்றிக்கொண்டு.... போன வாரம் பொலிஸுக்கு போய்... நடந்தவைகளை குறித்து சொல்லி.. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர விசாரனை மூலம் அனைத்தையும் கம்யூட்டரில் பதிந்து என் கையெழுத்தையும் பெற்றபின் .. அறிக்கையை நேரடியாக சுவிஸ் தொலைபேசி நிர்வாகத்துடன் தானே தொடர்பு கொண்டு கொடுப்பதாக சொல்லி... மூன்று நாள் முன் மாலை பொழுதில்.. பொலிஸிடமிருந்து என் பேஸ்புக் குறித்த விபரங்கள். படங்கள். பெயர் என அத்தனையும் கேட்டு முழு விபரம் பெற்றபின்... பிரச்சனை சால்வ் ஆனது. ஆனால் இனி இப்படியான தொடர்புகள் வந்தால் கவனமாக எந்த நம்பிக்கையிலும் எவரையும் நம்ப வேண்டாம் எனும் ஆலோசனையுடன்... அனைத்தும் சுபமே.
இத்தால் உங்களுக்கு நான் சொல்வது என்னவெனில் ..யானைக்கு அடி சறுக்கினால்.. சறுக்கி விட்டதென உட்கார்ந்து அழாமல் உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை துணிச்சலுடன் செயல் படுத்தினால் அடி சறுக்கினாலும் கீழே விழுந்து விடாமல் எழுந்து விடுவோம்.
இதை எழுத வேண்டுமா என யோசித்தேன். எழுதினால் என்னை போல் எல்லாம் தெரிந்ததாக தம்மையே ஏமாற்றி கொண்டிருக்கும், பலருக்கு உதவியாக இருக்கும் என்பதனால்... பதிவாக்கி போட்டு விட்டேன்.
நான் நினைப்பது சரிதானே?குறிப்பு
**********
தொலைபேசி நிர்வாகம், காவல் துறை இரண்டும் வேகமாக நடவடிக்கை எடுத்தாலும் நம்மிடம் ஆதாரங்கள் நாள்  நேரம்   நிமிடக்கணக்கில் சரியானதாக இருக்க வேண்டும்.  அதிலும் நான் சாட் செய்த நேரம்.. அந்த போலி  தன் மெசேஜை அழிக்க ஆரம்பித்த நேரம்.. அதை நான் போட்டோ எடுத்த நேரம், திகதி  என அனைத்துமே காவல் துறை விசாரனைக்கு தேவைப்பட்டது.. அத்துடன்   என்னுடன் பேசிய போலி முகவரியை டெலிட் செய்யாமல் அப்படியே வைத்திருந்தேன். தொலைபேசி நிர்வாகமும் அப்படியே சொன்னதனால் எந்த மாற்றமுமில்லாமல் அப்படியே அதை காவல் துறை  பிரதி எடுத்துக்கொண்டது. தோழியின் சொந்த  பக்கத்தினையும் கேட்டு அதையும் குறித்து கொண்டார்கள்.   அந்த நேரம் பதட்டத்திலும் அனைத்தினையும்  அந்த பக்கம் அழிக்குமுன் நான் படபடவென புகைப்படம் எடுத்ததனால்  தான்  தப்பித்தேன் என சொல்லலாம். இல்லையெனில் என்னிடம் எங்கே ஆதாரம் இருக்கும்?


31 கருத்துகள்:

 1. இப்படிப்பட்ட செய்திகளை கேள்விப்படும்போது இணையதளம் பாதுகாப்பானதா என்ற கேள்வி அடிக்கடி எழாமலில்லை ..
  நீங்க இப்படி பதிவாக போட்டது நல்லதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிப்பா. இணையம் பாதுகாப்பாக இருபப்து நமது கரங்களிஉம் தான்பா. ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விட்டு காட்டு வாசியாக ஆதிகாலத்துக்கும் செல்ல இனி முடியாதில்லையா?

   நீக்கு
 2. மிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே
  தங்களின் செயல் திறன்போற்றுதலுக்கு உரியது
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நனறி ஐயா, என் மகனிடம் நல்ல்ல்ல திட்டு வாங்கி கட்டிகிட்டேன்ல.ஊருக்கு உபதேசம் செய்யும் உங்களுக்கு மூளையே இல்லை அம்மா என திட்டிக்கொண்டிருந்தான் ஐயா.

   நீக்கு
 3. பலருக்கும் உதவும் உங்களின் அனுபவ பகிர்வு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம், அதனால் தான் பகிர்ந்தேன்.

   நீக்கு
 4. ஆம், ஏஞ்சல் சொல்லியிருப்பது போல இதனை இங்கேயும் பகிர்ந்து இருப்பது நல்லதுதான். இதை படிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வைக் கொடுக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது ஐயா, உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

   நீக்கு
 5. இணையத்தில் இப்படி பாதகங்களும் உண்டு.....

  உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கும் ஒரு பாடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நனறி அண்ணா. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

   நீக்கு
 6. நாம் எப்படி பயன்படுத்தினாலும் இவங்க குறுக்கு சால் ஓட்டிடுறாய்ங்க. இவனுங்களுக்கு பயந்து நல்லவங்களை இழந்திடுவோம்ன்னு பயமா இருக்குக்கா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை ராஜி.யாரை நம்புவது என்பதே தெரியவில்லை.

   நீக்கு
 7. ஃபேஸ்புக் என்றாலே எனது நண்பர்கள் சிலபேர் அப்பால் ஏன் ஓடுகிறார்கள் என்ற காரணம் புரிகின்றது. மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை தரும் பதிவு. அங்கு எடுத்த துரித நடவடிக்கைகள் பாராட்டும்படியாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேஸ்புக் என்றில்லை ஐயா. எல்லா இடங்களிலும் நேரிலும் சொந்தத்திலும் நட்பிலும் கூட ஏமாற்றங்கள் உண்டு. நாம் நமக்கு தேவையானதை பயன் படுத்திக்கொள்வதில் இருக்கின்றது. பேஸ்புக்கால் நல்லதும் உண்டல்லவா? உங்கள் அன்பான பின்னூட்டத்துக்கும் நன்றி ஐயா.

   நீக்கு
 8. எப்போதும் அவதானம் தேவை என்பதைச்சொல்லும் உங்க அனுபவம் எனக்கும் ஒரு படிப்பினை!

  பதிலளிநீக்கு
 9. எல்லாருக்கும் உதவும் தங்களிடமும் கைவரிசை காட்டியவர்கள் மனிதர்களா?

  அனுபவப் பகிர்வு - முகநூலில் வாசித்தேன்.

  இனி கவனமாக இருங்கள் அக்கா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதென்ன? என்னிடம் மட்டும் அப்படி என்ன இருக்கின்றது. என் மூஞ்சில தான் ஏமாளி என எழுதி ஒட்டியே இருக்கின்றதேப்பா.. நான் தான் கவனமாக இருந்திருக்க வேண்டும்.

   நீக்கு
 10. நிச்சயமாக இணையதளம் பாதுகாப்பில்லாததுதான். நாம் தான் கவனமாக இருக்க வேண்டியிருக்கு. உங்கள் அனுபவத்தை இங்கு சொன்னது நல்லதே. எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள்தானே.

  பதிலளிநீக்கு
 11. நிச்சயமாக இணையதளம் பாதுகாப்பில்லாததுதான். நாம் தான் கவனமாக இருக்க வேண்டியிருக்கு. உங்கள் அனுபவத்தை இங்கு சொன்னது நல்லதே. எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள்தானே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முற்று முழுதாக இணையம் பாதுகாப்பற்றது என நான் சொல்ல மாட்டேன். இங்கே நிரம்ப நன்மைகளும் அதை விட அதீக தீமைகளும் கொட்டிக்கிடக்கின்றது. நன்மை தீமைகளை இனம் கண்டு நமக்கு தேவையானதை பற்றிக்கொள்வதும், பாதுகாப்பாய் இருப்பதும் நமது கைகளில் தான். எதுவானாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென்பது போல் கவனமாக இருந்தால் போதும்பா. உங்கள் அன்பான கருத்துரைக்கு நன்றி .

   நீக்கு
 12. ஆகா முகநூலில் படித்தேன்

  ஆனால் இங்கு இருந்தால்தான் மீட்டு எடுப்பது வசதி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். பேஸ்புக் பதிவுகளை பல நேரம் நம்மால் நமது பதிவை தேடுவதே மிகக்கஷ்டமாக இருக்கின்றது தான். உங்கள் கருத்துக்கு நன்றிங்க மது.

   நீக்கு
 13. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

  https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

  பதிலளிநீக்கு
 14. எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், தீயவர்கள் புதுப்புது வழிகளில் ஏமாற்றப் பார்ப்பார்கள். எனவே, நம்மையும் மீறி ஒரு தவறு நேர்ந்துவிட்டால், நீங்கள் சொன்னதுபோல் சரியான reflex action செய்திடவேண்டும். நாம் தரும் ஆதாரத்தை வைத்துதான் காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியும். இம்மாதிரி போனில் வரும் நம்பரைக் கொடு என்று கேட்டு மோசடி செய்யும் கும்பல், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா -டெபிட் கார்டு வாடிக்கையாளர்களைக் குறிவைத்து செயல்படுகிறது.(இந்தியாவில்). எச்சரிக்கை தேவை.

  - இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா. ஆமாம் புதுப்புது வழிகளில் ஏமாற்றப்பார்க்கின்றார்கள் என்பது உண்மை. அதன் பின்னும் பல தடவைகள் என் போன் இலக்கத்துக்கும், பேஸ்புக்கிலும் இம்மாதிரி பலர் உள் நுழைய முயன்றார்கள். அவர்களை ஆரம்ப நிலையில் இனம் கண்டு பிளாக் செய்து கொண்டிருக்கின்றேன். நிரம்பவே விழிப்புணர்வு தேவைப்படும் சம்பவங்கள் இவைகள்.

   நீக்கு
 15. நல்ல பகிர்வு நன்றி

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் தங்கையே! வெகுநாள் கழித்து உங்கள் தளத்திற்கு வந்தால்...ஏதோ துப்பறியும் கதைபோல விறுவிறுப்பான நிகழ்வுகளை அப்படி எழுதியிருந்தீர்கள். ஒரு வேண்டுகோள்- இதை அப்படியே ஒரு கேள்விபதில் பாணியில் முகநூலில் இருக்கும் இளையோர் பலருக்குமான எச்சரிக்கையாக எழுத முடியுமா? மிகவும் அவசியமான கட்டுரையாக அமையும். உங்கள் பெயரில் என் தளத்தில் அதை வெளியிட -நீங்கள் அனுமதித்தால்- வெளியிட விரும்புகிறேன். அன்பு கூர்ந்து எழுத வேண்டுகிறேன். வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. நிச்சயம் எழுதுகின்றேன். இப்போது நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கும் சூழலில் சிந்தனை மரத்து போய் இருக்கின்றது. யூலை மாதம் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் போது எழுதுவேன் ஐயா.

   நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!