20 ஜூன் 2018

ஏமாளிகளாய் நாம் இருக்கும் வரை நம்மை ஏய்ப்போரும் ஏய்த்துகொண்டிருப்பார்கள்.

மக்களுக்காக மக்களே குரல் கொடுத்தால் தான் இனி அவர்களுக்கான விடுதலையும், விடிவும் என புரியவைத்து கொண்டிருக்கின்றது காலம்.
இனிவரும் காலங்களில் எவரையும் தனித்து தலைமைப்படுத்தாமல், மக்களை ஏமாந்த கோணங்கிகளாக்கி தலைமேல் மிளகாய் அரைக்க நினைப்போரை இனம் கண்டு ஒதுக்குவது, ஒதுங்குவதும் தான் நம்மை மீட்சிப்படுத்தும்.
நம்மை கோமாளிகளாக்கி, மூளைச்சலவை செய்து, என்ன சொன்னாலும் தமிழன் நம்புவான்,தமிழனே இளிச்சவாயன் தான் என நம்மை ஏய்க்கும் நமக்குள் இருக்கும் ஓநாய்களை முதல் நாம் இனம் கண்டு கொள்(ல்) வோம்.
அன்று மக்கள் கல்வியறிவில் குறைந்தோராய் இருந்ததனால் அவர்களை ஏமாற்றுவது இலகுவாக இருந்தது. இன்றைய நம் சமூகம் கல்வி அறிவில் மேன்மை யடைந்தும் இன்னும் அதே ஏமாளித்தனம் தொடருமானால் நாம் கற்ற கல்வியினால் என்ன பயன்?
யார் சொன்னாலும் எதை சொன்னாலும் நம்புவதை முதலில் நிறுத்துங்கள் தமிழ் மக்களே!
கொஞ்சம் சுய புத்தியாலும், அறிவாலும் ஆராய்ந்துணருங்கள்.இன,மத பேதங்களை விதைத்து உங்கள் மனக்கண்களை குருடாக்கி இருப்போரை இனம் காணுங்கள்
நாம் விடுதலை அடைய வேண்டியது அன்னியனிடமிருந்தல்ல!
நமக்குள் இருக்கும் அறியாமையிலிருந்தும், 
நம்மை ஏய்க்கும் நம் சக தமிழரிடமிருந்தும் 
நாம் முதலில் விடுதலை அடைய வேண்டும்.

தமிழர்கள் முட்டாள்கள் தான் என்பதை புரிந்து, அவர்களை ஏமாற்றி,ஏய்த்து பிழைக்க நினைப்போரின் கபடங்கள் புரியாமல் இருக்கும் வரை நாங்களும் தேசியவாதிகள் தான்.அப்படிப்பட்ட போலிப்பாராட்டுதல்கள் எமக்கு வேண்டாம்.
ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விகளை கேட்டால் சமூகவிரோதிகள் என முத்திரை குத்தப்படுவோம். ஒதுக்கப்படுவோம்.
யார் என்ன சொன்னாலும் ஏன், எதுக்கு, எப்படி என சிந்திக்காமல் நம்பும் தமிழர்கள் இருக்கும் வரை ஏமாறுவோர் ஏமாறிக்கொண்டே இருப்போம்.

கடந்த வார செய்திகள்.......!
1.இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பணி புரிந்த இராணுவ அதிகாரியின் மாறுதலை தொடர்ந்த பிரியாவிடை நிகழ்வும், கௌரவப்படுத்தலும் கண்ணீரும் நமக்கு சொல்வது என்ன?
மக்கள் மனங்களை கவரும் படி செயல் பட்ட அவரின் செயல்பாடுகள் எதிரியின் சூழ்ச்சி என சொல்லி மக்களை விமர்சிக்கும் தகுதி எமக்கிருக்கின்றதா?
எங்கள் மக்களை நாங்கள் ஏன் கைவிட்டோம்? பேசியும் ஏசியும் நாங்கள் கண்டவை என்ன?
இதுவரை எதை இலக்கு வைத்து எம் போராட்டம் இருந்தது?
போராட்டத்தின் இலக்கு திசை மாறி விட்டதையும் இழப்புக்கள் நம்மை பூஜ்ஜியத்தில் கொண்டு விட்டிருப்பதையும் புரிந்து கொண்டோமா?
2.மீண்டும் பிரதமர் மோடி...!
பால்.தினகரனின் தீர்க்கதரிசனமும் அதைத்தொடர்ந்த விமர்சனங்களும் .
பைபிள் வசனம் சொல்வதை தவிர ஏனையதையெல்லாம் திரித்துவமாக திரித்துக்கூறுவோரை தேவனின் தூதர்களாக நம்பிக்கொண்டிருக்கும் மக்களே தெளிவு பெறுங்கள். 
வேத வசனம் சொல்வதை ஆராய்ந்து சரியானதை பற்றிக்கொள்ளுங்கள்.

3. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள்,தீவிர வாதிகள் அல்ல. சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

வழங்கப்பட்ட தீர்ப்பின் சாரம்.
விடுதலைப்புலிகள் சுவிஸ் நாட்டில் சட்டத்தின் படி கிரிமினல்களாக செயல்பட்ட்டார்கள் என்பதை நிருபிக்கும் படி கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை.சுவிஸில் தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் இல்லை.
Tamil Tigers sind keine kriminelle Organisation

விடுதலைப்புலிகளின் அமைப்புக்கு உதவுவதற்காக   நிதிமோசடி, வங்கி  மோசடி, ஏய்ப்பு, மிரட்டல்  போன்ற குற்றச்சாட்டுகளுடன் கைது செய்யப்பட்டு  13 நபர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் சட்டம் (Criminal law)  வழக்கில் மூவர் மீது மட்டும் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனையும், தண்டப்பணமும் செலுத்த  நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. ஏனையோரை  கிரிமினல் குற்றவாளிகள் இல்லை, என விடுதலையாக்கியதுடன் சுவிஸுக்குள் விடுதலைப்புலிகள் கிரிமினல் குற்றவாளிகளாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் போதுமாக வில்லை என தீர்ப்பளித்திருந்தார்கள். 

இந்த தீர்ப்பு பல பத்திரிகைகளில் ஜேர்மன் , பிரேஞ்சு மொழிகளில் விபரமாக பகிரப்பட்டிருந்தும் , தமிழ் மொழி பெயர்ப்புக்களில் 
கிரிமினல்களுக்கும், பயங்கரவாதிகளுக்குமான புரிதலும் சட்ட நடவடிக்கைகளும் எத்தகையது உணராமல் முழுப்பூசணிக்காயை சேற்றில் மறைத்து சுவிஸ் நீதிமன்றம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் அல்ல என தீர்ப்பளித்து விட்டதாக போலியான மாயையை உருவாக்கி மக்களை ஏமாற்றுவோர் இத்தனை பட்டும் இன்னும் திருந்த வில்லை என உணர வைக்கின்றார்கள்.
செய்திகளை மொழி பெயர்க்கும் போது வார்த்தைகளை மாற்றிப்போடுவது எதிரிகள் நம்மை நோக்கி கேலி செய்ய மட்டுமல்ல நமமை நம்பியவர்கள் நம்பிக்கைக்கு நாமே வைக்கும் வேட்டு எனவும் உணராமல் செயல் படுவோரையும் இனம் காண்போம்.
எது நடந்தாலும் யாருக்கோ தானே என ஒதுங்கிச்செல்லும் மன நிலையிலிருந்து நாம் விடுபட்டு இன்றையை விதை நாளை விருட்சமாகி எம் சந்ததிகளை பாதிக்கும் எனும் புரித்துணர்வை அடையும் நாளே நமக்கான விடியல்களை தரும்.
வீரன் என்பவன் எத்துணை விமர்சனத்துக்கும் உட்படுத்து முடியாதவனாக தன் சொல், செயல் அனைத்திலும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால் இங்கே நடப்ப்து என்ன?
யார் சமூகத்துக்கானவர்கள்?
இன்றைய நிலையில் நம் தேவைகள் என்ன? சிந்திப்போம்.
நாம் போலி தேசியம் பேசும் வியாதிகளாக இருக்காமல் சமூகத்தை குறித்து சிந்தித்து செயல்படும் சமூக விரோதிகளாக மாறுவதில் தப்பே இல்லை.

2 கருத்துகள்:

  1. அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள். உணர்வுப்பூர்வமான வார்த்தைகள்.

    இது தமிழ் நாட்டுக்கும் பொருந்தும்...

    திரைப்படங்களிலும், அரசியலிலும் நடித்து ஏமாற்றுபவர்களைவிட, அவர்களை கடவுளாகவே பாவிக்கும் தொண்டர்களையும், ரசிகர்களையும் இனியும் திருத்த இயலாது. ஆகவே அவர்களை ஒழித்தால் நாடு இனியெனும் உருப்படலாம்.

    பதிலளிநீக்கு
  2. தைரியமாக சங்கடங்கள் ஏதுமின்றி சொல்லி இருக்கிறீர்கள்.

    கில்லர்ஜி சொல்வது போல இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். ஏன், எல்லா இடங்களுக்குமே பொருந்தும்.


    ஒரு உண்மையை மறைக்க ஒன்பது போலிசெய்திகள் வலம் வரும். எது உண்மை என்று அறியும் வாய்ப்பு அப்பாவிப் பொதுமக்களுக்கு குறைவானதாகி விடுகிறது.

    நலம்தானே? அவ்வப்போது முகநூலில் உங்களைப் பார்ப்பதுண்டு.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!