27 மே 2019

ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோராய் ........2.?

இரண்டு நாட்கள் முன் நான் இட்ட பதிவு எழுத்து மாறி வாசிக்க முடியாமல் இருப்பதாக பலரும் சொல்வதனால் அப்பதிவை திருத்தி இரு பதிவாக இங்கே இடுகின்றேன்.
பதிவின் நோக்கம் எவரையும் குற்றப்படுத்தல் இல்லை. 1990 செப்டம்பர் மாதம் வரை இலங்கையில் வாழ்ந்த நான் அங்கே வாழ்ந்த காலத்தில் கண்டது, கேட்டதுமான சம்பவங்களின் சொந்த அனுபவத்துடன்.அககாலங்களில் அங்கே வாழ்ந்த பலரின் அனுபவங்களையும் கேட்டு உள் வாங்கி எழுதி இருக்கின்றேன்.
இச்சம்பவங்கள் அனைத்தும் உண்மையாகவே நடந்தது. இதில் குறிக்கப்பட்ட படுகொலை தாக்குதல்களை விட பல சம்பவங்கள் வெளியுலகம் அறியாமலே மண்ணோடு மண்ணாகி போனது. கைது செய்து காணாமல் போனோர் காணாமலேயே போய் விட்டார்கள்.
ஒரு விடயத்தை மிகத்தெளிவாக குறிப்பிட விரும்புகின்றேன். கடந்த காலம் நடந்தவைகளை பேசி ஒருவரைஒருவர் குற்றப்படுத்தி, தற்கால சம்பவங்களை நியாயப்படுத்துவோருக்கு ஆதரவு தருவது கண்டிப்புக்குரியது. விடுதலைப்புலிகள் மேல் குற்றம் சாட்டுவதை ரசிப்பதும்,அவர்கள் செய்தது, செய்யாதது என அனைத்தையும் அவர்கள் மேல் பழியாக இட்டு வன்மம் வளர்ப்பதும் எமது கண்களை நாங்களே குத்தி குருடாக்குவதுக்கு நிகரான செயல்பாடு.
ஒரிரு சம்பவங்களை மட்டும் பேசிப்பேசி வன்மம் வளர்க்கப்படுவதை விட ஒட்டு மொத்தமாக நடந்தது அனைத்தையும் எடுத்து சொல்லி புரிய வைப்பதே இச்சூழலில் அவசியமானதாக இருக்கின்றது.
மாறி மாறி குற்றம் சாட்டுவதையும், நியாயப்படுத்துவதையும், சமூகம் சார்ந்து மீட்சி திட்டங்களில் ஈடுபடும் எம் போன்றோரும் வேடிக்கை பார்ப்பது எமக்கான தீர்வுகளை தூரமாக்கி கொண்டே செல்கின்றன்.
1985 - 1990 களில் அனைத்து தமிழ் கிராமங்களுக்குள்ளும் சோதனை எனும் பெயரில் அத்துமீறி நுழைந்து உள்ளூர் மக்களை கைது செய்ததும், காணாமல போனதும் சாம்பலானதும், ஆவணப்படுத்தப்படாமலே அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன.இதோ விட்டு விடுவோம் என சொல்லி கூட்டி சென்றவர்களை திரும்பி சந்திக்க வாய்ப்பை தரவே இல்லை.
1990 ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான் குடி பள்ளிவாசலில் நடந்த சம்பவத்தை கடந்த 30 வருடங்களாகவே அதன் வடுக்களும், வன்மமும் மாறாமல் கடத்தி வருவோருக்கு தங்கள் சமூகம் தமிழ் பேசிய இந்துக்கள், கிறிஸ்தவர்களை குறி வைத்து நடத்திய தாக்குதல் விபரங்களும் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகம் விட்ட தவறுகளை அவர்களுக்கு உணர்த்தாமல் விடுதலைப்புலிகள் செய்த தவறுகளை மட்டும் மீண்டும் நினைவு படுத்துவது ஒரு பக்க சார்பானதாகவே இருக்கின்றது.
எங்கள் உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதம், தீவிரவாதிகள் எனும் பதிவுகளும், அதை ஆதரிக்கும் எம்மவர் ரியாக்சன்களும், இரு சமூகத்தினருக்கிடையில் ஏற்கனவே இருக்கும் சிக்கல்களை இடியாப்ப சிக்கலகளாக்கி கொண்டே செல்கின்றன.
 ஈஸ்டர் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களின் பின்னனியில் ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாதசக்திகளின் ஊடுருவலும், சர்வதேச மேலாதிக்க வாதமும் இலங்கையை ஆக்ரமிக்க ஆரம்பித்திருக்கின்றன.
 40 க்கும் மேற்பட்ட வருடங்கள் உள் நாட்டுக்குள் நடந்த உரிமை போராட்டத்தினூடான தாக்குதல் சம்பவங்களை தற்கால குண்டுவெடுப்பு நிகழ்வுகளை ஒப்பீடு செய்கின்றார்கள்.
 தமிழரிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப்பெறவென ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப்புலிகளுடன், ஐ,எஸ் தீவிரவாதிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நியாயப்படுத்த முனைந்த பலரை காண முடிகின்றது.
எங்கள் உரிமைக்காக போராடியவர்களை உலகம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தலாம், தடை செய்யலாம். தமிழர்களாகிய எங்களுக்கு தெரிய வேண்டும். அவர்கள் எங்கள் உரிமைக்காக ஆயுதமேந்தினார்கள். சர்வதேசமே இணைந்து எங்கள் உரிமை போராட்டத்தை நசுக்கியது.
ஈஸ்டர் கால தற்கொலை குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எந்த உரிமைக்காக மக்களை கொன்றழித்தார்கள் என அவர்களை எங்கள் உரிமைப்போராட்டத்துடன் ஒப்பீடு செய்கின்றார்கள்?
அப்போது நீ செய்தாய் தானே? இப்போது நான் செய்தால் தப்பா என எதிர் விவாதம் செய்து ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோர் நாட்டின் பாதுகாபபை கேள்விக்குறியாக்கி, அன்னியர் எம் நாட்டை அடிமைப்படுத்த இடம் கொடுப்பதை உணராதோராய் இருக்கின்றார்கள்.
நாடென்ன செய்தது எனக்கு என வினாவுவதை விட என் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என சிந்திப்பதே இன்றைய நிலையில் சிறப்பு.
கடந்ததெல்லாம் மறந்து புதியதோர் உலகம் காண நினைப்பது நல்லது தான். அதற்கு முன் அவரவர் மனட்சாட்சியின் நிமித்தம் தாமும் விட்ட தவறுகளை உணர்ந்து கொள்ள வேண்டும். எம்மை நீதிமானாக்கி, எதிராளியை குற்றப்படுத்திக் கொள்வோமானால் எம்மால் ஒரு அடி கூட முன்னோக்கி நகர முடியாது. 
இனியேனும் எம்மிரு சமூகத்துக்குமான நல்லெண்ணம்,சமுதாய நலன் சார்ந்து நீண்டகால மீட்சித்திட்டங்களை நோக்கிப்பயணிக்க வேண்டுமானால் அவரவர் தவறுகள் உணர்த்தப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக்க நீட்டப்படும் விரல்கள் தம்மை பரிசுத்தமானவர்களாக நியாயப்படுத்த எடுக்கும் முயற்சிகளால் எந்த பயனும் இல்லை.
இங்கே நான் பகிர்ந்திருக்கும் தகவல்கள். திகதிகளின் அடிப்படையில் அவரவர் சொந்த புத்தியை சரியாக கூர் தீட்டி தம்மை தாம் ஆராய்ந்தறிந்த பினஅவரவர் செயல்பாடுகளை நியாயப்படுத்தவும்.
நான் தமிழ் பேசும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கின்றேன். போராளிகள்+ இராணுவ மோதல்கள் குறித்து குறிப்பிடவில்லை.
விடுதலைப்புலிகள் + ராஜிவ் காந்தி கொலையுடன் நிகழ் கால சம்பவங்களை ஒப்பிடுவோருக்கு,அறிந்தோ அறியாமலோ அன்னிய,அண்டை நாட்டு அரசியல் சதிக்குள் சிக்கியதனால் எங்கள் உரிமைகளை நாங்கள் இழந்ததுடன், இருப்புக்களையும், இழந்து, உயிர்களையும்,உடமைகளையும் பறிகொடுத்து நாடற்றவர்களாக அகதி வாழ்க்கையின் வலிகள் என்றேனும் புரியுமோ என்னமோ?
காலம் அவர்களுக்கும் பலதை உணர்த்தும்.
முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழ பேசும் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் இராணுவத்துடன் இணைந்தும் தனித்தும் நடத்திய தாக்குதல்கள், படுகொலையானோர் விபரங்கள் குத்துமதிப்பாகவே கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.
இதை விடவும் அதிகமான இழப்புக்களை நாங்கள் சந்தித்தோம். 


 *
1990 ல் முஸ்லிம் ஊர்காவல் படை எனும் துணை இராணுவப்படையினரும், இலங்கை இராணுவமும் இணைந்தும் தனித்தும் பொது மக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் என பதிவு செய்யப்பட்டிருப்பவை. 
🔘 1.கல்முனைப் படுகொலைகள் - 250 / 12.06.1990
🔘 2.திராய்க்கேணிப் படுகொலைகள்- 47 / 06.08.1990
🔘 3.வீரமுனைப் படுகொலைகள்- 400 / 12.08.1990
🔘 4.கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்-158 / 05.09.1990 
🔘 5.சவுக்கடி படுகொலைகள் 20.09.1990
🔘 6.கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள்-152 / 11.06.1991

விடுதலைப்புலிகள் முஸ்லிம் பொது மக்கள் மேல் நடத்திய தாக்குதல்கள் என பதிவு பெற்றிருப்பவை. 
🔘 1.காத்தான் குடி 103 பேர் படுகொலை ஆகஸ்ட் 3 1990 
🔘 2.பல்லியகொடல்லை 166 -171 பேர் படுகொலை அக்ரோபர் 1991

அடுத்த பதிவில் தொடரும்.

1 கருத்து:

  1. என்னங்க நிஷா? இந்த குண்டு வெடிப்பு கேள்விபட்டதும் உங்களைத்தான் நான் நினைத்தேன். என்ன சொல்லப் போறீங்க இதைப் பத்தினு? :)

    உங்க பெற்றோர்கள் ஒருவர் இந்துவும், இன்னொருவர் கிருத்தவரும்னு நீங்க சொன்னதாக ஞாபகம்.

    இலங்கையில் உள்ள கிருத்தவ ஆலயங்களில் இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களே மனித வெடிகுண்டு வைத்து படுகொலைகள் செய்துள்ளார்கள்.

    எனக்குக் கடவுள் நம்பிக்கை கெடையாது. அதனால் மதத்தையோ கடவுளையோ சொல்லி என்னை ப்ரைய்ன் வாஷ் பண்ண முடியாது. ரெண்டுமே அர்த்தமற்றவைகள் என்னை பொருத்தவரையில். மொழிப்பற்றை வச்சும் என்னை ப்ரைய்ன் வாஷ் பண்ண முடியாது. என் அம்மா அப்பா தமிழர்கள் என்பதால் நான் தமிழ் பேசுகிறேன். தமிழ் பழமையான அல்லது உயர்வான ஒரு மொழியாக இருந்தால் அதில் எனக்கு என்ன "க்ரிடிட்" இருக்கு? னு யோசிப்பவன் நான். அதனால் எம்மொழி பேசுபவன் செய்வதெல்லாம் சரி என்றெல்லாம் வாதிட மாட்டேன். இன்னொன்னு இனம் அல்லது சாதிப் பற்று. நான் கூர்ந்து கவனித்த வரைக்கும் என் சாதியில் நல்லவர்களும் இருக்காங்க. படு அயோக்கியர்களும் இருக்காங்க. அருவருக்கத்தக்கவர்களும் உண்டு. இப்போ பிற சாதியில் உள்ள ஒரு நல்லவருக்கும் என் சாதியில் உள்ள ஒரு கேவலமானவனுக்கும் பிரச்ச்னை என்றால், நான் பிற சாதியச் சேர்ந்த நல்லவனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். உண்மையைத்தான் சொல்றேங்க.

    அதனால், இந்த மொழிப்பற்று, இனப் பற்று, மதப்பற்று, என் கடவுள் உயர்ந்தவர் போன்ற விசயங்களெல்லாம் எனக்கு அர்த்தமற்றவை என்பதால், இந்த படுகொலையில் எமோஷனலாக மாட்டேன். மனிதன் ஏன் இப்படி கேவலம் மதத்துக்காகவும், இல்லாத கடவுளுக்காகவும் அடிச்சுக்கிறான்?னு புரியாமல் தவிக்கிறேன்னு சொல்லலாம். இதுதான் என் நிலைப்பாடு. :)

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!