மன்னார் வளைகுடா
மன்னார் வளைகுடா (Gulf of Mannar) இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுக் கடலின் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடா ஆகும். இது இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் 160 முதல் 200 கிலோமீட்டர் (100 முதல் 125 மைல்) அகல இடத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தின் தாமிரபரணி ஆறும் இலங்கையின் அருவி ஆறும் வளைகுடா கடலில் சங்கமிக்கிறது. தூத்துகுடி துறைமுகமும், திருச்செந்தூர் முருகன் கோயிலும் இக்கடற்கரைப் பகுதியில் உள்ள முக்கிய இடங்களாகும்!
இம் மன்னார் வளைகுடாவானது கடல்சார் உயிர்பல்வகைமையின் புகலிடமாக விளங்குகின்றது. மன்னார் வளைகுடாவில் இருந்து வடகிழக்கே ராமர் அணை, பாம்பன் பாலம், நிலமுடிவு , பாம்பன்துறை ஆகியனவும் வடமேற்கே திருச்செந்தூர் முனை, புன்னை கயல், வழிநோக்கம் வெளிச்சவீடு, சிதம்பர நகர் துறை ஆகியனவும் தென்கிழக்கே மனபாட் வெளிச்சவீடு, கிழக்கு முனை, கன்னியாகுமாரி, விவேகானந்தா பாறை ஆகியனவும் தென்கிழக்கே நீர்கொழும்பு, கொழும்பு, காலி, காலிதுறைமுகம் ஆகியவும் காணபடுகின்றன.
மன்னார் வளைகுடாவின் வடகிழக்கு பகுதியில் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் இடையில் சுமார் 30கி.மீ நீளத்திற்கு கற்பாறைகளுடன் கூடிய 13 மணற்திட்டுகள் தாழ்வான தீவுகளைப்போல் அடுத்தடுத்து உள்ளன. இந்த மணல் திட்டுகள் "ஆதாம் பாலம் என்றும் "சேது பாலம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் கடலின் ஆழம் மிகவும் குறைவு. அதிகபட்சமே 12 அடிதான். இந்தப் பாலம்தான் மன்னார் வளைகுடாவையும் பாக் வளைகுடாவையும் பிரிக்கிறது.
மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா
மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா (Gulf of Mannar Marine National Park) இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.இது தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது. 1980ம் ஆண்டு மன்னார் வளைகுடா தேசிய பூங்கா தென் கிழக்காசிய பகுதியில் முதன்முதலாக உருவாக்கப்பட்டது. பல்வகை கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாக இவ்வளைகுடா விளங்குவதால் 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் "மன்னார் வளைகுடா கடல் வாழ் தேசியப்பூங்காவை' உள்ளடக்கி சுமார் 10,500 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகம் இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகமாக அறிவிக்கப்பட்டது.இதற்கு ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பும் அங்கீகாரம் அளித்துள்ளது. கடல் தேசியப் பூங்கா என்பது ஆழமான நீலக் கடலின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதாகும்
தெற்காசியாவின் முதல் கடல் உயிர்க்கோள காப்பகமான மன்னார் கடல் பூங்கா, பல்லுயிர் பெருக்கத்தின் அடிப்படையில் இவ்வளைகுடா பகுதி உலகளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பூமியின் வளமான கடல் வாழ் பல்லுயிர் பகுதிகளில் ஒன்றாகும்.தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து 1 முதல் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா.தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் 560 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வளமான பன்முகத்தன்மை கொண்ட கடல்வாழ் உயிரினங்களையும் பல்வகை தாவரங்களையும் விலங்குகளையும் கொண்டுள்ளது. கடல் மாடு மற்றும் சதுப்புநில இனங்கள் உட்பட அழிந்து வரும் உயிரினங்களும் இதில் அடங்கும்.
பலவகையான உயிர்ப்பல்வகைமை நிறைந்துள்ள மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா 21 சிறிய தீவுகளையும், பவளப் பாறைகளையம் முகத்துவாரங்கள், கடற்கரைகள் மற்றும் சேற்றுப் பகுதிகள் ஆகியவை உள்ளடங்கும். மன்னார் வளைகுடாப் பகுதியில் காணப்படும் அழகான பவளப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாக திகழ்கிறது.
இந்த உயிர்கோளக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong) ஓங்கில்களும் (டால்பின்) இப்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளன. முத்துக்கள், சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து காணப்படுகிறது.
மேலும்
* 280 வகை கடற்பஞ்சுகள்,
* 92 வகை பவளங்கள்,
* 22 வகை கடல் விசிறிகள்,
* 160 வகை பலசுனைப்புழுக்கள்,
* 35 வகை இறால்கள்,
* 17 வகை நண்டுகள்,
* 7 வகை கடற்பெருநண்டுகள்,
* 17 வகை தலைக்காலிகள்
* 103 வகை முட்தோலிகள்
காணப்படுகின்றன.
உலகில் மொத்தம் ஏழு வகையான ஆமைகள் உள்ளன. இதில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை, சித்தாமை ஆகிய ஐந்து வகை ஆமைகள் வாழ்கின்றன. கடலில் விஷத் தன்மையுள்ள ஜெல்லி மீன்களை ஆமைகள் உட்கொள்கின்றன.பவளப்பாறையில் படியும் பாசிகளை உணவாக்குகின்றன. கடல் வளத்தை பாதுகாப்பதில் ஆமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக, கடல் சுற்றுச்சூழல் துாய்மை காவலர் என ஆமைகளை கூறுகின்றனர்.கடல் ஆமைகள் கால நிலை மாற்றத்தால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன. வேட்டையாடுதல், கடலோரத்தில் சுற்றுலா மூலம் பெருகும் வீடுகள், ஹோட்டல்கள், மின் விளக்குகள் காரணமாக பெரும்பாலானவை குஞ்சுகளாக இருக்கும் போதே திசை தப்பி விடுகின்றன. அல்லது இறந்தும் விடுகின்றன.
இந்திய பெருங்கடலில் 4 முக்கிய பவளப்பாறைகள் உண்டு. இது அந்தமான் தீவுகள், நிக்கோபார் தீவுகள், மன்னார்வளைகுடா, லட்ஷ தீவுகள் ஆகிய இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. பாம்பன் முதல் தூத்துகுடி வரையிலான 160கி.மீ நீள கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள வான் தீவு, முயல் தீவு உள்ளிட்ட 0.25 ஹெக்டயர் முதல் 125 ஹெக்டயர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன.
மன்னார் வளைகுடாவின் பவளப்பாறைகள் பிரசித்தமானவை. பிரமிக்க வைக்கும் வகையில் அழகானவை மற்றும் பெரும்பாலும் 'நீருக்கடியில் வெப்பமண்டல மழைக்காடுகள்' என்று குறிப்பிடப்படுகின்றன.ஆழமற்ற வெப்பநீர் கடல்பகுதிகளில் காணப்படும் பவளத்திட்டுகள் கல் போன்ற பொருளல்ல. இவை சுண்ணாம்பு கூட்டின் மீது ஒட்டிக் கொண்டு கூட்டம் கூட்டமாக வாழும் பவளப்பூச்சிகளினால் உருவாக்கப்படுபவை. பவளப்பூச்சி மென்மையான ஒளி ஊடுருவும் தன்மையுடைய சிறிய உயிரினமாகும்.
இவற்றின் கூடானது இப்பூச்சிகளினால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் உருவாக்கப்படுகிறது. முதலில் கால்சியம் கார்பனேட்டைக் கொண்டு கடினமான எலும்புக் கூடு போன்ற ஓர் அமைப்பைத் தோற்றுவிக்கிறது. இவை பல கிளைகளைக் கொண்ட மரங்களைப் போன்ற தோற்றம் கொண்டிருக்கும். இதனைப் பவளக்கொடி என்றும் சொல்வார்கள்! இந்தப் பவளக்கொடித் திட்டுகள் இறுகும்போது பாறைகளாகிவிடும்!கடற்கரையோரப் பகுதிகளில் சூரியவெளிச்சம் படும் தெளிவான நீர்ப் பகுதிகளில் மிதமான வெப்பநிலையில்தான் பவளத்திட்டுகள் செழித்து வளரும்.இவை உருவாக நீண்ட காலமாகும். உயிரிழந்த பவளத் திட்டுகளிலிருந்துதான் நகைகளில் பதிக்கப்படும் நவரத்தினங்களில் ஒன்றாகிய பவளம் எடுக்கப்படுகிறது. முளைப்பவளம், மான்கொம்புப் பவளம், தட்டுப் பவளம் என பவளத்திட்டுகளில் பலவகை உண்டு!
பவளப்பூச்சிகள் வாழ்நாள் முழுவதும் கூட்டில் ஒட்டிக்கொண்தான் வாழ வேண்டும். சந்ததிகள் கூடப் பிரிந்து செல்ல முடியாது. மிதக்கும் நுண்தாவரங்களே இதன் உணவாகும்.பவளத்திட்டுகள் உள்ள கடல் பகுதிகளில் பலவகையான கடல் உயிரினங்கள் வாழ்கின்றன. கடலுக்கு அடியில் ஒரு உலகம் இருக்கிறது, மிகவும் மூச்சடைக்கக்கூடியது மற்றும் மிகவும் தெளிவானது; உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் வாழும் இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் வகையில் தேசிய கடல்பூங்காவாக பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதிக்குள் மீனவர்களோ மற்றவர்களோ செல்ல தடை உள்ளது. இராமேஸ்வரத்தில் கடல் வாழ் தேசிய பூங்காவைப் பார்ப்பதற்கு கண்ணாடிப் படகுகள் உள்ளது. பூங்காவின் உள்ளே பொதுமக்கள் கண்ணாடிப் படகுகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகள்
1. வான்தீவு
2. காசுவார் தீவு
3. காரைச்சல்லி தீவு
4. விலங்குசல்லி தீவு
5. உப்புத்தண்ணி தீவு
6. புலுவினிசல்லி தீவு
7. நல்ல தண்ணி தீவு
8. ஆனையப்பர் தீவு
9. வாலிமுனை தீவு
10. அப்பா தீவு
11. பூவரசன்பட்டி தீவு
12. தலையாரி தீவு
13. வாழை தீவு
14. முள்ளி தீவு
15. முசல் தீவு
16. மனோலி தீவு
17. மனோலிபுட்டி தீவு
18. பூமரிச்சான் தீவு
19. புள்ளிவாசல் தீவு
20. குருசடை தீவு
22. சிங்கில் தீவு
மன்னார் வளைகுடா தேசிய பூங்காவின் சிறப்பு அம்சமாக 0.25 ஹெக்டேர் முதல் 125 ஹெக்டேர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.இந்தத் தீவுகளில் முக்கியமானது குருசடை தீவாகும். பல ஆண்டுகளுக்கு முன் இங்கு ஆய்வுக்கூடங்கள் இயங்கி வந்தன. கடல்சார்ந்த அறிவியலாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள் எனப் பலரும் இங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வந்தனர். காலப்போக்கில் இங்கிருந்த ஆய்வுக்கூடங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டதால் குருசடை தீவு முடங்கிப் போனது. இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள தீவுகளுக்குச் செல்ல முடியாத ஏமாற்றமும் நிலவி வந்தது.
பருவநிலை மாற்றம்,கடல் அரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. விலங்குசல்லி தீவு, கீழக்கரை குழுவில் பூவரசன்பட்டி ஆகிய 2 குட்டி தீவுகள் கடலில் மூழ்கிவிட்டன. வான்தீவும் கடலில் மூழ்கும் அபாயம் உருவானது. இந்த தீவை சுற்றி பவளப்பாறை மறு உருவாக்கம் மற்றும் செயற்கை பவளப்பாறை நிறுவுதல் போன்ற திட்டங்களையடுத்து ஓரளவுக்கு அழிவில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடாவில் 2005ஆம் ஆண்டு முதல் பவளப்பாறைகள் வெட்டியெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன் சுமார் 30ஆண்டு காலம் தொடர்ந்து அளவுக்கு அதிகமாகப் பவளப்பாறைகள் வெட்டியெடுக்கப் பட்டதாலும் முறைகேடாக குறிப்பிட்ட சிலவகை மீன்களும் தாவரங்களும் புற்களும் அதிகமாக எடுக்கப்படுவதாலும் இப்பகுதியின் உயிர்வளம் குறையத் தொடங்கியுள்ளது. பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பவளப்பாறைகளுக்கு மனிதர்களால் அழிவு ஏற்படத் துவங்கி உள்ளது.
மேலும், நவீன மீன்பிடித் தொழில்முறையும் இதன் அழிவுக்கு காரணமாகின்றன. தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி உள்ளிட்ட வலைகளையும், ஜெலட்டின் வெடி குண்டுகளையும் பயன்படுத்தி இன்று வரை மீன்பிடிப்பு தொடர்கிறது. இதனால் பவளப்பாறைகள் சேதம் அடைந்து கரை ஒதுங்குகின்றன. பவளப்பாறைகள் அழிவதுடன், அதை நம்பி வாழும் கடல் வாழ் உயிரினங்களும், அழியும் சூழல் உருவாகியுள்ளது. சமீபகாலமாக உயர் ரக ஆபரணங்கள் தயாரிப்பிற்கும் வீடுகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் மீன் தொட்டிகளை அலங்கரிக்கவும் மீன்களை வளர்க்கவும் பவளப்பாறைகள் கடத்தி அழிக்கப்படுகின்றன. பவளப்பாறைகள் கடத்தலால் மட்டுமின்றி கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமயமாதல், கடலுக்குள் அதிகரித்துள்ள வெப்பம், மாசு போன்ற காரணங்களும், தொழிற்சாலை கழிவுகளால் கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் ஆகியவற்றாலும் அழிந்து வருகின்றன.
கடல் என்பது கழிவுகளைக் கொட்டும் இடம் அல்ல.அது காடுகளைப் போலவே தாவரங்கள், நுண்ணுயிரிகள், பாலூட்டிகள் எனப் பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது. இவற்றில் கடல் வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது பவளப்பாறைகள். இவை கடலின் தட்பவெப்பத்தை பேணிக் காக்கவும் கடல் பகுதிகளை இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும் அரணாக உள்ளன. அனைவரும் நமது கடல் வளத்தைப் பாதுகாக்க முயற்சி செய்வோம்!
தொகுப்பு : Face Book : Nishanthi Prabakaran
தகவல் ஆதாரம் நன்றி : சுற்றுசூழல் பாதுகாப்பு கடல் வளமும் விழிப்புணர்வு
இணைய தளங்களில் இருந்து தரவுகள் & photos எடுத்தேன் .
தமிழர் போருண்மியத்தில் அச்சுப்பதிப்பாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!