09 ஆகஸ்ட் 2020

உளவியல்_உண்மைகள் 2

#உளவியல்_உண்மைகள்  

சிலரை பார்த்ததும் அவர்களிடம் நம் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச அவர்சொல்வதை கேட்டு நடக்க தோன்றும், அந்த நபர் கெட்டவராக இருப்பார் எனும் சந்தேகம் இல்லாமல் அவர் சொன்னால் சரியாக தானிருக்கும் எனும்  முழு நம்பிக்கை தோன்றும். 

இன்னொருவரிடம் பகிர முடியாத  தன் கவலைகளை புரிந்து தனக்கு ஆதரவாக இருப்பார் எனும் நம்பிக்கையை  நம்மால் ஒருவருக்கு கொடுக்க முடிவதே  உளவியல் ஆலோசகருக்கான அடிப்படை..!

உளவியல் சார்ந்த பிரச்சனை என்பது எல்லோருக்கும் இருப்பது தான். எனக்கும், உங்களுக்கும், நம்மை சுற்றி இருக்கும் பலருக்கும்  எதோ ஒரு வடிகால் தேவைப்படவே செய்யும். 

இதற்கு முந்தைய பதிவில் சொல்லி இருந்தேன்.உளவியல் தத்துவத்தின் பிரதானமானது ஆலோசனை சொல்வதோ... அதன் படி நடக்க வற்புறுத்துவதோ இல்லை. 

நம்பிக்கை கொடுப்பது  முதல் படி என்றால் அவர்கள் சொல்வதை பொறுமையாக  கேட்பது  அடுத்த படி..!  பேச விட்டு அவர்கள் மனப்பாரம் குறைப்பது. யாரோ ஒருவரிடம் மனதில் இருப்பதை சொல்வதால் மனதின் பாரம் குறையும் போது அது வரை பெரிய பிரச்சனையாக மனதுள் பேயாட் டம்  போட்ட தெல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஆகி போகும். இது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. 

“ நம்மை பத்தி திறந்த புத்தகமாய் மனதின் பாரங்களை எவரிடமேனும் 
பகிர்ந்து கொள்ள முடியும் என்றால் மன அழுத்தம் பாதி குறைந்து விடும். இது மனோதத்துவம்“

இதில் நாம்  யாராகவும் இருக்கலாம்.. மனம் விட்டு சொல்லும் நிலையிலும்... அடுத்தவர் சொல்வதை, பேசுவதை கேட்கும் நிலையிலும் எங்களை உருவாக்கி கொள்ளலாம்.

உளவியல் ரீதியான பிரச்சனைகள் என்பது ஒன்றுமே இல்லாமலும் இருக்கும். ஆலோசனைகள் தேவையற்ற சாதாரண சின்ன சின்ன குழப்பங்கள் மனம் விட்டு பேச பகிர ஆளில்லாத நிலையில் உள்ளே அமுங்கி மன அழுத்தமாக உருமாறுகின்றது. இதை புரிந்து கொள்ளாமல்   எங்கள் சமூகத்தினுள் புரையோடி 
கொண்டிருக்கும் டிப்ரேஸிவ் தற்கொலை, கொலைகளுக்கு 
தீர்வு தேட முடியாது..ஒரு பிரச்சனைக்கு  பிறகு மட்டும் பேசி அடங்கி மீண்டும் ஒன்றில் தொடங்குவதை விட தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக  எழுதி அனைத்துக்கும் தீர்வு எங்களிடமே இருக்கின்றது என புரிய வைக்க நினைக்கின்றேன். 

எப்போதும் என் பயணம் இலக்குகளை நோக்கியே இருக்கும். என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வரும் உங்களுக்கு நான் எழுதுவது புரியும்.இங்கே எழுதுவதை வைத்து பலர் inbox ல் எனக்கு தெரிந்த மன நல ஆலோசகர் அதுவும் தமிழில் தெரிந்தவர்களை சொல்லுங்கள் என்று வருகின்றார்கள். அவர்களுக்காகவும், எனக்காகவும், உங்களுக்காகவும்  நான் இங்கே எழுதுகின்றேன்.

சாப்பிடும் போது சோத்துக்குள் கல் கிடந்தால் தூக்கி போட்டு விட்டு சாப்பிடுவது போல் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களையும் தூக்கி போட்டு போயிட்டிருக்கணும்.. 
நான் எழுதும் பதிவுகள் யாரோ ஒருவருக்கு தேவையாக பயனுடையதாக இருக்கின்றது எனில் அது என் சொந்த அனுபவமாக இருந்தாலும் எழுதலாம் என்று நினைக்கின்றேன். இத்தனை எழுதுவதால் நான் ஒன்றும் தெய்வ பிறப்பு இல்லையே..? எனக்கும் பிரச்சனை உண்டு. 

இங்கே நான் எழுதுவதை பார்த்து  பலர் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்க்கின்றார்கள்..உண்மையில் யாருக்கும் நான் ஆலோசனையோ, தீர்வோ சொல்வது இல்லை. என்னை தொடர்பு கொள்ளுங்கள், உதவுகின்றேன் என்று எவருக்கும் உத்தரவாதம் தருவது இல்லை. அவரவர் பிரச்சனைக்கு அவர்களே தீர்வு காண வேண்டும் என்பதே என் பாலிசி. தனி தனியே சொல்வதை விட அவர்களே தம் நலன் நாடுவோருக்கு ஆறுதலாக இருக்கலாம் என்றே இங்கே எழுதுகின்றேன். 

1 கருத்து:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!