எதை பகிர்ந்தாலும், அமெரிக்காவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் என தொடங்குகின்றோம். அமெரிக்கர், ஐரோப்பியர்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் எமது சமூகத்தின் பிரச்சனைகளை அணுகுவது சரியானதா?
மாறுபட்ட காலநிலை,கலாச்சாரம், பண்பாடு, சமூகக்கட்டுப்பாடுகளை கொண்ட தேசங்களில் , கல்வியறிவு, பொருளாதாரத்தில் தனி நபர் தன்னிறைவை அடைந்திருக்கும் மக்களை வைத்து செய்யப்படும் ஆய்வுகளின் முடிவுகளை நாங்கள் எங்கள் சமூகம் சார்ந்து ஒப்பீடு செய்வது சரியானதா?
இது வரை நாங்கள் எமக்கான தேடல்களின் தீர்வாக அமெரிக்க ஆய்வுக்கட்டுரைகளை பின்பற்றி கொண்டிருக்கின்றோம்.
எமக்கென தனி கலாச்சாரப்பண்பாட்டு சூழல் இருக்கும் போது நாம் ஏன் நமது மக்களுக்குள் தனி ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை?
அடுத்தவன் முதுகில் சவாரி செய்யும் நிலையும் , நமது தவறுகளை உணராத சுபாவமும் தொடர்வதனால் நாம் எமக்கான சிறப்பம்சங்களை இழந்து கொண்டிருக்கின்றோமா ?
அணியும் ஆடை,உண்ணும் உடை முதல் அனைத்தும் அவரவர் நாட்டு கால நிலைச்சூழலுக்கு அமைவாக உருவாக்கப்பட்டிருக்க நாங்கள் எங்களுக்கான தேடல்களையும் தீர்வுகளையும் எமக்கு வெளியே தேடலாமா?
குளிர்ப்பிரதேச மக்களுக்கான செயல்பாடுகளை வெப்பப்பிரதேச மக்கள் பின் பற்றுவதும், அதுவே நாகரீக வளர்ச்சி,நவீனத்துவம்,முன்னேற்றம் என்கின்றோம்.
எமது வரலாற்றின் சிறப்பம்சங்களை மறைத்து அன்னியர் பெருமை பேணலில் விளைவுகளே இன்றைய சமூகச்சீர்கேடுகள் என்றாலும் மறுப்பதற்கில்லை. எமது கண்களை குருடாக்கி சித்திரம் வாங்குவது அவசியம் தானா?
எமது சமூக ஆண்,பெண்கள் ஒவ்வொரு வயதிலும் எதிர் கொள்ளும் உடல் உளவியல் மாற்றங்கள், அதனால் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கலகள் குறித்து எந்த ஆய்வும் எம்மிடம் இல்லை. ஒவ்வொருவரும் தம் சூழல் சார்ந்து எழுதப்பட்டபதிவுகளை தான் பொதுப்புரிதலாக அனைவருக்கும் எடுத்துக்காட்டுகின்றோம் தவிர ஆராய்ச்சி செய்து எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை.
சமீப காலமாக எமது பெண்கள் பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொள்கின்றார்கள். அது ஒட்டு மொத்த சமூக சீர்கேட்டுக்கும் விதையாகின்றதென நாம் உணர்கின்றோமா?
5 தொடக்கம் 60 வரை எமது பெண்களுக்கான பிரச்சனைகளில் 40+ வயதுகளில் பெண்கள் எதிர் நோக்கும் உடல், உளவியல் குழப்பங்களை மெனோபாஸ் என ஒற்றை சொல்லின் கீழ் முடித்து கொள்கின்றோம். அதை அவள் தலை விதி என்பதும் சக பெண்களாலேயே புரிந்து கொள்ளப்படாமல் இருப்பதும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
என்ன பிரச்சனை வந்தாலும் ஆண்கள் பெண்கள் மாறனும் என பிரச்சனையின் தன்மைக்கேற்ப விவாதங்கள் தூள் பறக்கின்றது. எம்மிடம் எந்த தீர்வுகளும் இல்லை.
ஏன் இந்த நிலை?
மேலை நாடுகள் பெண்கள் பிரச்சனைகளை நிதானமாக கையாள்கின்றார்கள்.
ஆவதும் அழிவது பெண்ணாலே தான் என்பதை நன்கறிந்தவர்களாக பெண்கள் பிரச்சனைகளை அவர்கள் மேம்போக்காக அணுகுவதில்லை. பெண்ணிடமிருந்து வரும் சிறு மாற்றமும் கவனிப்புக்குள்ளாகின்றது. பெண் என்றொரு வார்த்தைக்குள் ஒட்டு மொத்த சமூகமுமே அடங்கி விடுகின்றது என்பதனால் பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் அலட்சியப்படுத்தப்படுவதில்லை.
பெண் என்பவள் தான் அனைத்தையும் நிச்சயிக்கின்றாள்.பெண் தான் உலகத்தை சீராக இயக்கும் சக்கரம்,பெண் தான் எல்லாமே. பெண் சரியாக இருந்தால் எல்லாமே அதனதன் போக்கில் இயங்கும் என்பதை நன்குணர்ந்தவர்கள் என பெருமை பேசும் நாம் நம் சமூக மக்கள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளாததும், மாறிவரும் சூழல்களை குறித்து அக்கறைப்படாததும் எமது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல.
நாம் இதை குறித்து இன்னமும் சிந்திக்காமல் இருக்கின்றோமா? சிந்திப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!