30 நவம்பர் 2016

உதயணனின் சிங்களத்துப்புயல்

சிங்களத்துப்புயல்!

உதயணன் அவர்களின் நாவல். 
பதிப்புரை 2012 ல் தான் எழுதப்பட்டிருக்கின்றது.

தலைப்பையும் முன்னுரையையும் வைத்து சுவாரஷ்யமாக ஏதேனும் இருக்கலாம் எனும் ஆர்வத்தோடு ஆரம்பித்து இறுதியில் தொங்கலில் முடித்து வைத்தார் எனும் கோபத்தில் இனிமேல் உதயணன் நாவலே படிப்பதில்லை என முடிவும் எடுக்க வைத்த நாவல்.
சேர,சோழ, பாண்டியர்கள் சிங்கள தேசத்தினை போரில் வென்று தமிழ் ஆட்சியை நிலை நாட்டினார்கள் என மட்டும் அறிந்தோருக்கு சிங்களவரும் தமிழ நாட்டை நோக்கி படையெடுத்து வந்து அக்கால பாண்டிய இராஜ்ஜியத்தில் ஒருபகுதியை எப்படி வென்றார்கள் எனச்சொல்லும் கதை.
கி.பி 1166 ல் பாண்டியர்களுக்குள் இருந்த பிரிவினையை பயன் படுத்தி அப்பகுதியை வென்ற கதை இது. தமிழர்களை கொண்டே தமிழர்களுக்கான் புதைகுழிகள் வெட்டப்பட்டதான ஆரம்ப கால வரலாற்றின் பதிவுகளை வைத்து எழுதப்பட்ட நாவல் என எழுத்தாளர் தன் முன்னுரை யில் சொல்லி செல்கின்றார்.
சாண்டில்யனின் கன்னிமாடம், சோழ நிலா நாவல்களின் சம்பவங்களையும் இதனுடன் ஒப்பிட்டு கி.பி 1166 முதல் 1191 வரையான 25 ஆண்டுகளை சோழர், சிங்களவர், பாண்டியர் அரசியலில் புயல் விசிய காலங்களை சிங்களத்துப்புயல். கன்னிமாடம், சோழ நிலா என வரலாற்று சம்பவங்களாக வகைப்படுத்தலாம் எனவும் முன்னுரைத்து ள்ளார்.
குலசேகர பாண்டியன், வீர பாண்டியன், விக்கிரம பாண்டியன், இராதிராஜன்,பராக்கிரமபாகு, இலங்காபுரன், மழவராயன், பல்லவராயர்கள் என குறிப்பிட்ட 25 ஆண்டுகளின் நிஜமான வரலாற்றுப்பாத்திரங்களை நாவலிலும் பயன் படுத்தி இருக்கின்றார்.
ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ள ரோகண நங்கை, கடலழகி எனும் கற்பனைக் கன்னியரும் உண்டு.
சிங்கள மன்னன் பராக்கிரமபாகுவின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியும் அவர்களின் நூலான மகா வம்சத்தில் வெற்றிவாகை சூடியவன் என பாராட்டுதலுக்குள்ளானவனுமான இலங்காபுரன் சோழ மண்டலம்,ராமேஸ்வரத்தில் வந்திறங்குவதிலிருந்து ஆரம்பிக்கின்றது.
பாண்டிய நாடு அரசன் எனும் ஒருவன் கீழ் பிரிக்கப்பட்ட வள நாடுகளாக, கோட்டயங்களாக, ஊர்களான தனித்தனி நிர்வாகத்துக்கு உட்பட்டிருப்பதனால் பாண்டிய மன்னனை வீழ்த்தினாலும் அவ்வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியாது என பாண்டியர்களின் நிர்வாகம் குறித்தும், பிரிந்திருக்கும் தமிழரில் ஒருவரை கைக்குள் போட்டே காரியம் சாதிக்க நினைப்பதும், தமிழருக்கிடையேயான கட்டுக்கோப்புக்கக்ளை சிதைத்தாலன்றி  வெற்றியை தக்க வைக்கும் வாய்ப்பு கிட்டாது எனும் புரிதலுமாய்
இக்கதையும் கதைக்கான களமும் எட்டப்பர்களும் நயவஞ்சகமும், காட்டிக்கொடுப்புக்களும், நம்பிக்கைத்துரோகங்களும் நம் விரல கொண்டே நம் விரலை குருடாக்கும் வித்தையையும் சிங்களவர்கள் வழி வழியாக தம் யுத்த தர்மமாக பயன் படுத்தி சூழ்ச்சிகளால் பெற்றவைகளை தக்கவைத்துக்கொள்ள 
தமிழனை பகடையாக்கி பாண்டியனை மாது, மாது என மதியை வென்று சகடையாக்கும் அக்காலக்கதை இக்காலத்திலும் பொருந்துவது தான் மாபெரும் வேடிக்கை.

இன்றைய இலங்கை அரசியல் நிலவரத்தோடு ஒப்பிடாமல் இருக்க முடியவே இல்லை.
படிக்கலாம். 
முடிவைக்குறித்து பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வரலாறை அறிய படித்தும் பார்க்கலாம்,

25 நவம்பர் 2016

மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 4

நம் விடுதலை போரில் ஆரம்பம் மகத்துவமானது!.
அது மட்டும் தான் இன்றைய வரலாறாய் இருக்க வேண்டும், சுதந்திரம் கிடைத்து ஆங்கில அரசு இலங்கையை திருப்பி கையளிக்கும் போது நம் இன தலைவர்கள் விட்ட தவறுகள்?

அதனூடான போராட்ட விதைகள், மட்டும் பேசப்பட வேண்டும், இடையில் சில பல கசப்புக்கள் மறைக்கப்பட அல்லது மறக்கப்பட வேண்டும், இதிலும் இந்திய அரசின் பகடைக்காய்களாய் நம் கை கொண்டு நம் கண் குத்தி குருடாக்கப்ப்ட்ட அரசியல் கோமாளித்தனம் குறித்து பேசி.. இனியும் ஆவதென்ன? இலங்கை அரசுடன் முட்டி போதி பெறப்போதும் என்ன?

ஐ, நா முன் நின்று நம் நேரத்தினை வீணாய் செலவிடுவதை விட ஆக்கபூர்வமாய்   உறங்கிக்கொண்டிருக்கும்  உள்ளங்களை தட்டி எழுப்ப... சிந்திக்க வைக்க எது அவசியமோ அதை மட்டும் நாம் இலக்காக்குவோம்.அறிவால் ஈழத்தை கட்டி எழுப்ப வேண்டிய எம் சமுதாயம் அறிவை மழுங்கடித்து வரலாற்றினை அறியாது உணர்வுகளால் மட்டும் உயிர்த்தெழுவதனால் ஆகப்போவது என்ன?

பள்ளி, கல்லூரி மாணவர்களின் உணர்வுகளை தூண்டி கல்லூரி பாடங்களை பகிஷ்கரித்து தெருவில் நிறுத்தி படிக்கும் காலங்களை அதிகமாக்கி பொருட்செலவும், உடல், உளரிதியான உளைச்சல்களையும் உருவாக்கி ஈற்றில் போராளியாக்கி, முழுக்குடும்பத்துக்கும் பாதிப்பை உருவாக்கி, படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கும் சொத்து, நகை நட்டை வித்து வட்டிக்கு கடன் வாங்கி... நாட்டை விட்டு நாடோடியாய் துரத்தப்பட்டு, பட்ட கடன் அடைக்க நாற்பது வயது வரை நாயாய் உழைத்து.... மாரடைப்பிலும் விபத்திலும் மாண்டு சாவில் கூட உண்மையாய் கண்ணீர் விட எவரும் இல்லா அனாதை கள் ஆவதற்கா அனைத்தையும் இழந்தோம்?

எங்கே அடித்தால் எங்கு வலிக்கும் என அரசியல் வாதிகளுக்கு நன்கு தெரிந்திருக்கின்றது. அதற்கு நாமும் பலியாகிக்கொண்டிருக்கின்றோம்.
இன்றைய சூழலில் இலங்கையில் கத்தி இன்றி இரத்தமின்றி ஒரு மாபெரும் யுத்தம் நடக்கின்றதென்பதை எப்போது புரிந்து கொள்ள போகின்றீர்கள்?
ஒரு இனத்தை வெற்றி பெற அவன் அறிவை மழுங்கடிக்க வேண்டும் என சரியாக புரிந்தவர்களாய் அரசியல் வாதிகள் இருக்க... அதற்கு நாம் இடம்கொடுக்கலாமா?
இஸ்ரேல்...? 
நமக்கு கற்றுத்தரும் பெரிய பாடம் ஒன்றுண்டு!

மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3

 தீர்வு  என்ன? 

 நம் சந்ததிக்கேனும்   உள்ளதை உள்ளபடி உணர்த்தி வளர்த்தெடுப்போம் என  உணர்வு பூர்வமாக அணுகாமல் உள்ளப்பூர்வமாக சிந்தித்தாலே பாதி விடுதலை கிடைத்து விடும்.


விடுதலைப்போராட்டம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?
பள்ளிகளில் தரப்படுத்தல் என்றொன்றில்லா விட்டால் இந்த விடுதலைப்போராட்டம் அவசியமாகி இருக்குமா?
எதற்காக இத்தனை உயிர்களை நாம் இழந்தோம்?
நாம் இழந்தது உயிர்கள் மட்டும் தானா?
அக்காலத்தில்  யாழ்ப்பாணத்தில் பிறந்த சான்றோர்கள் உலகத்தமிழர்கல் தலை நிமிர்ந்து வணங்கும் இடத்தில் இருந்தார்கள். தமிழ்மொழி என்றாலே யாழ்ப்பாணம் நினைவுக்கு வரும்படி தம்மை உயர்த்திக்கொண்டார்கள். சாதனையாளர்களாக, செல்வத்தில் சிறந்தோராக போற்றுமிடத்தில் இருந்தார்கள்.

இன்றைய நிலை என்ன?
90கள்வரை இலங்கையின் பெரும்பான்மையான வைத்திய சாலைகளில் எம்மின வைத்தியர்கள் தான் அதிகமாய் கடமையாற்றினார்கள் கடமை உணர்வும், ஆர்வமும், விருந்தோம்பும் மாண்பும் கல்ந்து செல்லுமிடமெல்லாம் எம் கற்றோர் தம்மை உயர்த்தினார்கள். கொழும்பு போன்ற பெரிய வைத்திய சாலைகளிலேயே பத்து தமிழ் வைத்தியருக்கு ஒரு சிங்கள வைத்தியர் எனும் நிலை இருந்த காலம் அது,
இலங்கையில் பல பகுதிகளிலும் பல உயர் பதவிகளை வகித்தார்கள்.
தமிழன் அறிவில் மேலோங்குவதை கண்டு பொறாமைப்பட்ட சிங்கள அரசு அவனை குட்டிக்குனிய வைக்க ஆரம்பித்தது தான் தரப்படுத்தல்...!
இந்த தரப்படுத்தல் என்பதே என்ன என இன்றைய தலைமுறைக்கு தெரியுமோ என்னமோ?
இன்றைக்கு என்ன நடக்கின்றது?
இலங்கை அரசு எதை நினைத்ததோ.அது நன்றாகவே நடக்கின்றது.
அறிவை அகற்றி அகந்தையை புகுத்தி சிந்தனையை தாறுமாறாக்கி நாடு விட்டு நாடு கடத்தி,, எஞ்சியோர் சிந்தனையையும் எச்சில் இலைக்கு பறக்கவைத்து...எடுத்ததுக்கெல்லாம் பலகலைக்கழக மாணவர்கள் போராட்டம் என கல்வியை நிறுத்தி தெருவுக்கு போராட இறங்கு முன் கொஞ்சமேனும் சிந்தியுங்களேன்பா!
உங்கள்கல்வியை பகிஷ்கரித்து உங்கள் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கி அனாதிகளாய் அல்லலுற்று எங்கோ ஒரு நாட்டில் டாய்லட் கிளின் செய்ய, பாத்திரங்கள் கழுவவா இத்தனையையும் நாம் இழந்தோம்?
என்ன தான் செய்யலாம்? எங்கே செல்லும் இந்த ப்பாதை?

மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 2


ஈழப்போராட்டம் குறித்த வரலாற்று சம்பவங்கள்பலர் எழுதி இருக்கின்றார்கள்!

அவரவர் பார்வையில் அவர்களுக்கு சாதகமானபடி எழுதி  ஒருவரை உயர்த்தி இன்னொருவரை தாழ்த்தி...அவர்கள் செயதது சரி, மற்றவர்கள் தேசத்துரோகிகள் இப்படி பல குழுக்களை குறித்தும் அதன் வரலாறு குறித்தும்... அவர்களுக்குள்ளான போட்டுக்கொடுத்தல் காட்டிக்கொடுத்தல் குறித்தும் எழுதுவது தான் வரலாறென நினைத்து தாமும் குழம்பி வாசிப்போரையும் குழப்பிகொண்டிருக்கின்றார்கள்..
அனைத்திலும் அடிப்படையாக தமிழின அழிப்பெனும் பெயரில்விதைக்கப்பட்ட அறிவை மழுங்கடிக்கும் பணிக்கு இந்த கருத்து வேற்றுமைகள் தான் அடித்தளம், நம் கை கொண்டே நம் கண் குத்தப்படும் அழகியல் யுத்த தர்மம், எது புரிய வைக்க ப்பட வேண்டும் என்பது தான் இப்போதைய முக்கியம். நம் இலக்கு எதுவாயிருக்க வேண்டும் என்பது தான் நம் கவனம் செல்ல வேண்டும், நடந்தவை கடந்தே போகட்டும், நல்லதை நினைப்போம்.


ஈழ மக்களுக்கான் விடுதலை யுத்தத்தில் விடுதலைப்புலிகளுக்கான பங்கும் மேதகு பிரபாகரன் அவர்களின் வழி நடத்தலும் மகத்துவமானது.
பிரபாகரன் அவர்களை போல் ஒருவர் இனி எமக்குள் பிறக்க போவதும் இல்லை, பிறந்ததும் இல்லை, ஆரம்ப காலத்தில் அவரால் சில பல தவறுகள் நடத்தப்பட்டிருக்கலாம். அப்படியான தவறுகளை நடத்த அவர் வழி நடத்தப்பட்டிருக்கலாம்.
எம்மை அடிமைப்படுத்த நினைத்தவர்களை அலற வைத்து தன்னை மட்டுமல்ல தன் முழு குடும்பத்தினையும் எமக்காக அர்ப்பணித்தவர் அவர்!
நம்மால் இன விரோதிகள் என சொல்லப்படும் சிங்கள் மக்களின் ரியல் ஹீரோ அவர், அவர்களாலும் நேசிக்கப்பட்டவர், என்னுடைய பல சிங்கள் நட்பூக்கள் அவரை நேசிப்பவர்கள். பகைவனையும் அந்தரங்கத்தில் நண்பனாக்கிடும் மாண்பு அவரிடம் இருந்தது.
ஈழத்தமிழன் எனும் இன உணர்வில் எம்மை முழு உலகுக்குள் அடையாளம் காட்டி தலை நிமிரச்செய்து பலருக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் அவர். விடுதலைப்போருக்காக தன்னை மட்டுமலல் தன் குடும்பத்தையே அர்ப்பணித்த அவரின் தனிப்பட்ட குணாதியங்களை, ஆரம்ப கால தவறுகளை பேசுவது நம் கை கொண்டு நமது கண்ணையே குத்துவதற்கு நிகரானது!
விடுதலை போராட்டத்தில் ஆரம்ப கால தவறுகளை சுட்டிக்காட்டி நமக்குள் நாமே நம்மை தாழ்த்தி கொள்வதை நிறுத்தினாலே விடுதலை அடைந்து விடுவோம்.
நாளை நாம் விடுதலையை அறுவடை செய்வோம் என நம்பிக்கையோடு தம் உயிரை விதைத்தோரை நாம் போற்றும் அதே நேரம் நம் சின்னத்தனமான செய்கைகள், பேச்சுக்களினால் அவர்கள் நமக்கென உருவாக்கிச்சென்ற வரலாற்றின் மகத்துவத்தினை திசை திருப்பி நம் வரலாற்றை கேலிக்கூத்தாகாதிருந்தாலே விடுதலை தான்.
நாம் விடுதலை பெற வேண்டியது சிங்கள அரசிடமிருந்தல்ல நம்மிலிருக்கும் பெருமை, பொறாமை, ஈகோ போன்றவற்றிலிருந்தும் ஜாதி, மதம்,பிரதேசவாதம் யார் பெரியவன் , அனைத்திலும் நானே இப்படியான பல சிந்தனைகளிலிருந்து விடுபட்டு நம் சமுதாயத்தை கட்டு எழுப்ப வேண்டும் எனும் ஒரே பொது நோக்கம் வந்தாலே நமக்குள் விடுதலை சாத்தியமாகும்.
இஸ்லாமிய மக்கள் தமக்குள் பலவாறு அடி படுவார்கள். பொது விடயம் என வரும் போது மார்க்கம் எனும் விடயத்தில் கட்டுப்பட்டு ஒன்றாகுவார்கள்.
அவர்களை பார்த்தேனும் நாம் நமக்குள் ஒன்று பட்டு விடுதலை வேண்டி எம் மக்கள் செய்த தியாகத்தினை போற்றுவோம், கடந்து போன காலத்தில் அவர்கள் செய்த தவறுகளை பேசி பேசி நம்மை நாம் தாழ்த்திக்கொள்ளாது, ஈழ மக்கள் எனும் ஒரே சிந்தையில் மட்டும் சிந்திக்கும் போது தான் நமக்கு விடுதலை சாத்தியம் !
சிந்திப்போம்.. !

இன்னும் வரும்!


மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 1


வரலாறு  விடுதலையைப்பெற்றுத்தருமா?

மாவீரர் நாளெனில் மௌனமாயிருப்பதும் இழந்தைவைகள் குறித்து கவிதை எழுதி தானும் மாவீரர் நாளை கொண்டாடுவதாய் காட்டிக்கொள்வதும் தான் நிஜமான தேசப்பற்று என நினைக்கும் சமுகத்தில் வாழ்கின்றோம், 

1983 ல் என்ன நடந்து மக்கள் புலம்பெயர ஆரம்பித்தார்கள்.1990 களில் என்ன நடந்தது? அதனால் எத்துணை பாதிப்பு அடைந்தோம்? நாம் இழந்தைவை என்ன? எதற்கான இந்தபோராட்டம்? உயிரிழப்புக்கள்? இன்றைக்கு நாம் செல்லும் பாதை என்ன?

சிந்திக்க வேண்டிய காலமும் இதுவென புரியாதோராய் இருக்கின்றோம்.  

நான் அறிந்த பலருக்கு அதாவது ஈழ யுத்தம் எனில் 2009 ல் நடந்த முள்ளிவாய்க்கால்,முல்லைத்தீவு தான் தெரிந்திருக்கின்றது. அந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் , மீதி எல்லோரும் சொகுசு வாசிகள். இப்படித்தான் இன்றைய பெரும்பாலான இளம் தலைமுறையில் ஒரு குருப் சிந்திக்கின்றது. 

அதற்கு முன் என்ன நடந்தது? ஏன் நடந்தது என கேட்டால் அப்படியா தெரியாதே என சொல்லிக்கொண்டு இன்னொரு பகுதி தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் செல்கின்றது..

அதிலும் 90 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்த பலருக்கு எமது   போராட்டத்தின் ஆரம்பமும் வளர்ச்சியும் தெரியவே இல்லை. இதில் எந்த வரலாறு நம்மை விடுதலை செய்யும்? 

இதற்கு தீர்வு என்ன? 

இன்னும் வரும்!

Hegas Catering Services ஐந்தாம் ஆண்டின்விசேஷ அறிவிப்பு !!!!

ஐந்தாம் ஆண்டின்!
விசேஷ அறிவிப்பு 
***************************

Hegas Catering Services நிறுவனம் ஆரம்பித்து ஐந்தாம் ஆண்டில் வெற்றிகரமாக நுழையும் இவ்வேளையில் எஙகளுக்கு ஆதரவு தந்த எமது வாடிக்கையாளர்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத்தெர்ரிவிக்கின்றோம்.

அடுத்து வரும் புதிய வருடத்துக்கான விருந்துகள் வைபவங்கள் விழாக்களை திட்டமிடுகின்றீர்களா?
உங்கள் வீட்டு விருந்து என்றும் நினைவில் நிலைக்க 
வட இந்திய செட்டி நாட்டு உணவுகளோடு 
தென் இந்திய, இலங்கை உணவுகளைவும் 
சுவையாகவும், சூடாகவும், தரமாகவும் 
அழகுடன் மட்டுமல்ல மலிவாகவும் சுவிஸின் எப்பாகத்துக்கும் வந்து செய்து தர காத்திருக்கின்றோம்.

சைவ, அசைவ உணவுகள் 

பன்னீர் டிக்கா
பன்னீர் பட்டர் மசாலா 
ஆலுபர்தா
சென்னா மசாலா
கோபி மஞ்சூரியன்

பட்டர் சிக்கன் 
குருமா வகைகள்
டெவலட் சிக்கன் 
பீவ் டிக்கா

பூரி
பட்டூரா
இட்லி 
தோசை
இடியாப்பம் 
புட்டு
கொத்துப் பரோட்டா
தயிர்சாதம் 
புளிசாதம் 
லெமன் சாதம் 
முதல் அனைத்து சாத வகைகளும்

பிரியாணி வகைகளும்

ரோல்ஸ், வடை. கட்லெட், சமோசா, பற்றிஸ் என சிற்றுண்டிகளும்
அழகும் சுவையுமான இந்திய, இலங்கை, சுவிஸ் டெசட் வகைகளும்

இன்னும் உங்களுக்கு விருப்பமான் உணவுத்தேர்வுகளுக்கு ஏற்ப 

பார்வைக்கு அழகான பவ்வே மேசை அலங்காரங்களுமாய்
உங்கள் வீட்டு விசேசத்தினை அசத்திட காத்த்திருக்கின்றோம்.


எட்டு சுவிஸ் பிராங்கிலிருந்து !! 💃💃💃

*

*

*
மறவாதீர்கள்! எமது நிறுவனத்தினூடாக விருந்து ஒழுங்குகளை ஆயத்தம் செய்யும் போது வியாபர நோக்கம் மட்டும் எம்மில் இருப்பதில்லை.

அந்த நாளில் பதட்டம், சுமைகளை தவிர்ப்பதனால் உங்கள் வீட்டு விழா எங்கள் வீட்டு விழா எனும் கடமை உணர்வோடு நடத்தி சிறப்பாக்கி தருவோம் என்பது நிச்சயம்.


இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்து சுவிட்சர்லாந்து  சுற்றுலாவுக்கு வரும் உல்லாசப்பயணிக்களுக்கான சைவ, அசைவ,உணவுகள்,
ஜெய்ன்உணவுகள்உட்பட.... !!!!!!!!!!!!!!!❤
தேர்ந்த வட இந்தியச்சமையல் வல்லுனர்களினால் தயார் செய்தும் தரப்படும், ஹிந்தி , ஆங்கிலம் பேசும் ஊழியர்கள் சேவையும் உண்டு.

முன் கூட்டியே  ஆர்டர் செய்தால் தங்குமிடம் பயண ஒழுங்குகளயும் செய்து தரக்காத்திருக்கின்றோம். 

தொடர்பு கொள்ளுங்கள்..
hegasevents@gmail.com 

24 நவம்பர் 2016

நீதிமொழிகளும் நிஷாவும்

  நீதிமொழிகளும் நிஷாவும்
****************************** 

1.மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும்  வெளிப்படையான 
கடிந்துகொள்ளுதல்  நல்லது.
தன்நாவினால்  முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்து
 கொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். 
💃💃💃உண்மையான அன்பு கொண்டவர்கள் தாம் நேசிக்கும் மனிதர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாது செல்ல மாட்டார்கள். நல்லது கண்டால் தட்டிக்கொடுத்து பாராட்டுவது போல் தவறு கண்டு கண்டிப்பதும், செய்யும் பிழை உணர்த்துவதுமே நல்ல நட்பூக்கு அடிப்படை. நண்பன் செய்யும் தவறுகளை முகதாட்சன்யம் பார்த்து கண்டும் காணாது செல்வது நட்புக்கு நாம் செய்யும் துரோகமே! 
நல்ல நட்புக்கு நிஷா தான் பெஸ்டாம்!💙💙💙💙

2.முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான்.💃💃💃எத்தனை உண்மை!
முகத்துக்கு நேரே பாராட்டி முதுகில் குத்தும் நண்பர்களை இனம் கண்டு விலக வேண்டும், நண்பன் செல்வது தவறான பாதை என தெரிந்தும் அவன் செய்யும் தவறை உணர்த்தாமல் கவலைப்படுவான், கலங்குவான், கோபிப்பான் என நினைத்து கண்டுக்காணாமல் செல்பவரை இனம் கண்டு நாமே ஒதுங்கிச்செல்ல வேண்டும், அவர்கள் நமக்கு எதிரிகளும்,துரோகிகளும் ஆவார்கள்.

3.வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். 
💃💃💃துஷ்டரைக்கண்டால் தூர விலகு என்பார்கள். சமுதாயத்தில் நல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆரோக்கியமான் விவாதங்களை விதாண்டாவாதங்களாக்கி சண்டைகள் வைராக்கியங்கள் கோபங்கள் வருமானால் அவ்விடம் விட்டு அகல்வது நமக்கு மேன்மையே!

4.ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.💃💃💃நல்லது நடக்குமானால் நல் ஆலோசனை செய்து விவாதம் செய்வதும், தீமையை விட்டு விலக்கி நன்மையை விதைப்பதும் நல்லதே! உண்மையை உள்ளபடி பேச என்றுமே தயங்கக்கூடாது.
மூன்றாவது வசனத்துக்கும் நான்காவதுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகவனித்து பாருங்கள்.

5.மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். 
💃💃💃கருத்தாடலின் போது அக்கருத்தினை திசை திருப்புவோருக்கும், முயலுக்கு மூன்றே கால் என தான் சொல்வதே சரியென சொல்லி தங்கள்வாதங்களையே  தாறுமாறாக்கி பதிலளித்து விதண்டாவாதம்செய்வோருக்கும்அகக்கண்களை 
குருடாக்கி அந்தகார இருளில் இருப்போருக்கும் விதண்டாவாதமாய் சம்பந்தமில்லாமல்கேள்விகள்கேட்போருக்கும்நாம்பதில்சொல்லத்தேவையில்லை.

6.மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
💃💃💃ஐந்தாவதில் சொல்லப்பட்ட வசனத்தினை வாசித்து விட்டு ஆறாவதுக்கு வந்தால்!!!!!!!!!!!!!!! 
விவாதங்களுக்கு பதில் சொல்லாது விலகி மௌனமாய் செல்வோரும், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தராமல் அசட்டை செய்வோரும் மௌனம் சம்மதம் என்பதன் மூலம் நம் கருத்தினைஏற்றுக்கொள்கின்றார்கள் 
என புரிந்து கொள்ளவும் வேண்டும்.
குறிப்பிட்ட விவாதம் அல்லது கலந்துரையாடலை திசை திருப்புவது போல் அதற்கு சம்பந்தமில்லாமல் வரும் கருத்துக்களை த்தான் நாம் அசட்டை செய்ய வேண்டுமே தவிர ஒரு விவாதத்தில் ஈடுபட்டால் முடிவு வரை நம் கருத்தில் உறுதியாய் இருக்க வேண்டும்.
மாறி மாறி பேசுவதும், விவாதத்தை திசை திருப்புவதும் அவர்கள் கருத்துக்கு நமக்கு பதில் தெரியாது எனும் இயலாமையில் மொத்த வெளிப்பாடே அன்றி ஞானமான காரியமல்ல !
வேண்டாத விவாதம் என தோன்றி நாம் மௌனமாய் செல்வது தாம் சொல்லும் கருத்து சரிஎன நாம் ஏற்றுக்கொண்டதாய் அவனுக்கு புரிய வைத்து தன்னை மேதை என எண்ணும் படியும் செய்கின்றதே!
முட்டாள்தனமாக விவாதம் செய்பவர்களின் முன் நான் என் கருத்தில் உறுதியாய் இருந்து ஞானியாக இருக்கவே விரும்புகின்றேன்!

7.தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்
💃💃💃ஆமாம், தனக்கு இலாபமும் நன்மையும் கிடைக்க தன்னை நம்புபவர்களுக்கு தவறான பாதை காட்டி உணர்வுகளை உசுப்பேற்றி காரியம் சாதிக்க நினைப்போரை நாம் இனம் காண வேண்டும்.
தன் காரியம் முடிந்தபின் நான் சும்மா பகடிக்கு செய்தேன் என சொல்லி கையை தட்டிக்கொண்டே செல்பவர்கள் தான் அனேகர்.

8. கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். 
💃💃💃இப்படியானவர்கள் ஈரைப்போனாக்கி பேனைப் பெருமாளாக்கி ஊரென்ன உலகத்தையே உருட்டி உரலுக்குள் போட்டு இடிப்பார்கள். வதந்தியை தந்தியாக்கி எரியும் நெருப்பை இன்னும் திகு திகு என எரியை வைப்பார்கள்.
தங்கள் ரேட்டிங்க எகிறி வியாபாரம் பெருக கடைப்பிடிக்கும் பத்திரிகை, மற்றும் செய்திச்சேனல்களை நடத்துவோருக்கு இதை விட வேறென்ன வேலை?

9.விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
💃💃💃கோள் மூட்டுகின்றவர்கள் நல்லதை சொல்ல மாட்டார்கள்! நல்லவர்கள் ஒருவர் சொன்னதை ஒன்பதாக்கி அடுத்தவரிடம் சொல்ல மாட்டார்கள். ஒன்றைப்பத்தாக்கி சின்ன விடயத்தையும் பெரிய சண்டை யாக்கும் திறமையை இந்த கோள் மூட்டுவோர் கொண்டிருப்பதனாலும் அவர்கள் வார்த்தைகள் சட்டென இதயத்தினுள் புகுந்து மனதை கலங்கடித்து காயப்படுத்துவதனால் உண்ர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுப்பதனாலும் விரோதங்கள் அதிகமாகும். அப்படியானவர்களிடம் நாம் நம் இரகசியங்களை பகிரவும் கூடாது. நம்மை நம்பி அடுத்தவர் சொல்லும் விடயங்களை நாம் இன்னொருவருக்கும் சொல்லவும் கூடாது.
நம்பிக்கை தான் எமது தும்பிக்கை!

10.நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்
பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
பகையை வஞ்சகமாய் மறைத்துவைக்கிறவனெவனோ அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். 
 💃💃💃அன்பாய், ஆதரவாய், பாசமாய், அக்கறையாய் இருப்பது போல் நடித்து பாசம் காட்டி காரியம் சாதிப்போரை இனம் காண்பது மிகக்கடினம் தான். அவர்கள் உள்ளத்தில் உள்ளதை மறைத்து கபட வேடம் போடுவதில் வல்லவர்கள்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போலவே 
தனக்குள் இருக்கும் பகை உணர்வை மறைத்து பாசமாய் நடிப்பவர்கள்வேசம் ஒரு நாள் வெளிப்படும்,

அடுத்தவனுக்கு தீங்கு செய்ய நினைத்து குழியை வெட்டி காத்திருப்பவன் கடைசியில் அவனே விழும் நிலையும் உருவாகும்,
********************************************************************************************************
மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?
💃💃💃எனக்குப்புரியவே இல்லை! உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்! 
ஊரைச்சுற்றிப்பார்த்தேன் .......மாயை
உலகைச்சுற்றிப்பார்த்தேன்.... மாயை
வானத்தை பார்த்தேன்...... மாயை
பூமியில் நான் காண்பதெல்லாமே மாயையாகத்தான்  இருக்கின்றது!

நீதிமொழிகள் என்பது பைபிளின் இருக்கும் வேதமொழிகளாகும்! அதனோடு என் மொழிகளையும் கலந்தேன்.

21 நவம்பர் 2016

எங்கே செல்லும் இந்தப்பாதை....?

எங்கே செல்லும் இந்தப்பாதை....?
பொதுத்தளத்தில் நாம் ஒரு பதிவை எழுதும் போது அப்பதிவானது தனி நபர் பதிவென்பதிலிருந்து அவர்கள் பகிரும் விதத்தில் பப்ளிக், நட்பு என பொதுப்பதிவாக பலரின் விமர்சனத்துக்காகவே முன் வைக்கப்படுகின்றது.
இதில் பலர் ஒரு கருத்தை பகிர்ந்து விட்டு அவர்கள் எழுதும் கருத்தை படிக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பதும், நிர்ப்பந்திப்பதும், லைக் செய்யவே பதிவு என நினைத்து தேவையற்றவைகளை பகிர்வதும், எதிர்க்கருத்து வந்தால் இது என்னிடம் என் இஷ்டப்படி தான் எழுதுவேன்.. என்னை கேட்க நீ யார்? உனக்கு பிடிக்காவிட்டால் அன்பிரெண்டு செய், பிளாக் செய்து விட்டு கண் காணாமல் போய் விடு என சொல்வதுடன் தனிப்பட்ட ரிதியில் அதுவரை நம்பிக்கையோடு பகிரப்பட்ட இன்பாக்ஸ் சொந்த தகவல்களையும் வெளிப்படுத்தி நீ அப்படி பட்டவன். இப்படிப்பட்டவன் என சொல்வதோடு நீ உருப்படுவியா உன் குடும்பம் உருப்படுமா என்பதிலிருந்து அவர் வீட்டு பெண்களையும் சந்திக்கு இழுத்து சாபங்கள் இட்டு எரிதணலாய் வார்த்தைகளை அள்ளி வீசுவதும் தான் நம் தமிழரின் சகிப்புத்தன்மையில் எல்லையோ?
அது வரை நல்லவனாய் நட்பில் இருந்தவன் ஒரே ஒரு எதிர்க்கருத்தில் துரோகியாய், விரோதியாய் ஆகுவதெப்படி ?
எதிர் விமர்சனத்தினையும் ஏற்று அணுவளவு கூட சிந்திக்க மறுப்போராய் அதிமேதாவிகள் என தம்மை சொல்லிக்கொள்ளும் கற்றோர் சமூகம் விட்டுக்கொடுத்தலையும், பொறுமையையும் அடுத்தவர்களுக்கு போதிக்க முன் தம்மைத்தாம் நிதானித்து பார்க்க மாட்டார்களோ?
மது குடித்து மதி மயங்கி நடுத்தெருவில் நின்று தன் மனைவியையும் பிள்ளையையும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டி அடித்து மானத்தை வாங்கும் படிக்காத பாமரன் கூட நிதானத்தில் இருந்தால் தன் பிழையை ஒப்புக்கொண்டு இனிமேல் குடிக்க மாட்டேன் என சுயமாய் சிந்தித்து பொய்ச்சத்தியம் ஏனும் செய்வான்.
பலகலையும் கற்றோம் என தம்மை தாம் மார்தட்டிக்கொள்பவர்களோ மதிமயங்கி அறிவை அடகு வைத்தது போல் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என மனக்கண்ணை மூடிக்கொண்டே நம்புவதோடு சுயமாய் சிந்திக்கும் திராணி இன்றி மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாய் ............... ?
எங்கே செல்லும் இந்தப்பாதை....?
விமர்சனம் என்பது நல்லதை மட்டுமல்ல நல்லதல்லதையும் எடுத்துரைப்பதாய் இருந்தால் தானே நம் அறிவும், புரிதலும் விசாலமாகும்,பதிவு செய்யும் அத்தனையையும் ஆகா, ஓகோ, அருமை, எருமை, சூப்பர் என சொல்ல வேண்டும் எனில் எதற்காக பொதுத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும் ?
ஒரு பதிவுக்கு எதிர்க்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனவிசாலமற்றவர்களாய் மாறுபட்ட கருத்தை சொல்லி விட்டால் 20 வருடம் முன் நாட்டை விட்டு வந்த உனக்கென்ன தெரியும் என்பதும், நாட்டுக்குள்: வந்து இதையெல்லாம் எழுது என்பதும், உள்ளதை உள்ளபடி சிந்திக்க மறுப்பதுமாய்.......?
உண்மைகள் கண் மூடி உறங்க பொய்கள் கூடாரமடித்து நாட்டியமாடி நம் கண்களை ஏமாற்ற உதவும் உள்ளம் கொண்டோரும் நியாயம் தெரிந்தோரும் நமக்கென்ன என ஒதுங்கிச்செல்ல இம்மாதிரி வீண் வைராக்கியங்கள் காரணமாகின்றன என்பதை நாம் என்று தான் உணரப்போகின்றோம்?

19 நவம்பர் 2016

நீங்க நல்லா இருக்கோணும்

19/11/2016 சர்வதேச ஆண்கள் தினம்

இந்த வாழ்க்கை எனும் நீண்ட நெடும் பயணத்தில் என்னைப்புரிந்து, என்னை வளப்படுத்த்தியவர்களுள் முதன்மையாய் ஆண்கள்இருக்கின்றார்கள்.

அப்பா எனும் ஆண் என் ரோல் மாடலாய் இருந்தாரெனில் நான் பிறந்து நான்கு வயது வரை என் பாதம் மண்ணில் படாமல் தூக்கிச்சுமந்தவர்களாய் மாமாக்களும், ஏழ்மையிலும் எளிமையாய் என் பசியுணர்ந்து தன் கையில் இருக்கும் கடைசி ஒரு ரூபாயில் தின்பணடம் வாங்கித்தந்து விட்டு பொடி நடையாய் பல மணி நேரம் நடந்தே வீடு அழைத்து வரும் தாத்தாவும், என்னுள் மறைந்திருக்கும் திறமைகளை கண்டுணர்ந்து பாராட்டிச்சீராட்டி ஊக்கம் தந்த பள்ளிக்கால அதிபர், ஆசிரியர்களும், நான் துவண்ட நேரம் என்னுள் உயிர்ப்பாகி எனை பெலப்படுத்திய அண்ணாக்களும், கலங்கும் நேரம் கண்ணீர் துடைக்கும் தம்பிகளும், நண்பர்களுமாய்
அப்பா, மாமா, தாத்தா, ஆசிரியர், அண்ணா, தம்பி என என்முன் வடிவெடுத்து எனை ஆள்வோருக்கும், துணையாய் தூணாய் என் செயல்களில் கரம் கொடுக்கும் என்னவர்க்கும், எனை அதட்டி உருட்டி ஆட்டம் காட்ட வைக்கும் என் அன்பு மகனுக்கும் இன்று மட்டும் அல்ல.... என் ஆயுள் உள்ள வரை நன்றிகளும், பாராட்டுகளும், வாழ்த்துகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். 


என்னுள் நுழைந்து என்னை உயிர்ப்பித்து 

மண்ணான என்னை விண்ணுக்கும் உயர்த்தி 
ஒடிந்து விழும் போதில் ஊன்று கோலுமாகி 
தாயாய், சேயாய், தந்தையாய், தமையனாய்
பொறுமையாய் தோள் தந்து சுமை தாங்கி
தரணியில் அனைத்துமாய் தரத்தினில் சிகரமாய் 
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உணர்த்தி 
உரிமையாய் திட்டி, உண்மையாய் பாராட்டி 
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா 
வஞ்சனை யற்ற நல் உள்ளங்களாயென்னுள் 
உறங்கிடும் உணர்வை உயிர்ப்பிக்கும் 
உத்தமராயென்னகம் தங்கிடும்
வேந்தர் குலமே நீர் வாழ்க!

17 நவம்பர் 2016

இப்படியும் சிலர் அல்ல, இப்படித்தான் பலர்

கனி இனிமை என்பதனால் கனிதரும் மரத்தினை வேரோடு பிடுங்குதல் சரியோ ?
இனிமை தரும் கனிமரமானாலும் விதையிட்டபின் சரியாக பராமரிக்காவிட்டால்  பலன் தருமோ?
கனி பறித்த பின் பூக்களையும் சேர்த்தே உதிர்த்து விட்டால் அம்மரம் மீண்டும் கனி தருமோ?
உறவு, நட்பெனும் விதையூன்றி அக்கறை, பாசம், நம்பிக்கை,விட்டுக்கொடுத்தல், பொறுமை தனை பசளையாக்கி,அன்பெனும் நீரையும் அடிக்கடி ஊற்றாமல் நம் தேவையின் நேரம் வாடி பட்டுப்போன மரத்தில் கனிகளை மட்டும்  எதிர்பார்ப்பது போல் ............. ?

 உச்சி வெயிலின் உக்கிரம் தாங்கி 
பல்லினப்பறவைகள் கூடிக்களிக்க 
பூவும்,பிஞ்சும்,காயும் கனியுமாய் 
பயன் தந்த பொழுதினில்
ஊஞ்சல் கட்டி உல்லாசம் கண்டு
ஏறி மகிழ்ந்தோர் எட்டி உதைக்க
இதம் தரும் தென்றலென
நிழல் நாடி நின்றோர் ஒதுங்கிச்செல்ல
கல்லெறிகளினால் காயங்கள் வலிக்க
நீரின்றி வேரும் உடலும் காய்ந்து
கிளைகளை உடைத்து ஒடித்த பின்னும்
பாதைகள் எங்கும் முட்செடி விதைத்து
வாதைகள் தனையே விசமாய் ஊற்றி
வேசம் கட்டி பாசம் காட்டி
தேவைகள் நேரம் தேடுவாரிங்கே!

இப்படியும் சிலர் அல்ல,இப்படித்தான் பலர்!




07 நவம்பர் 2016

சோதனைகளை சாதனைகளாக்குவோம்! இனிய நந்தவனம் நேர்காணல்!

இனிய நந்தவனம் 
செப்டம்பர் மாதம் 2016 சுவிஸ் சிறப்பிதழுக்காக வெளியிட்ட எனது நேர்காணலுடன் புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன்!

பதிவின் மேல் கிளிக் செய்தால் படம் பெரிதாகும் .
 வாசிக்க இலகுவாயும் இருக்கும்,
பதிவு நான்கு பக்கத்தில் இருக்கின்றது! 

முன் அட்டைப்படம் 

பக்கம் 1

பக்கம் 2

பக்கம் 3

பக்கம் 4


மேலே இருப்பது என்னவரின் யூன் மாதம் ஐம்பதாவது பிறந்த நாள் சிறப்பிதழில் வெளி வந்த முழுமையான நேர்காணல்!

புதிதாய் நேர்காணல் கேள்விகள் அனுப்பி இருந்தாலும் என்னால் அதற்கு பதில் தர முடியாத வேலைச்சூழல் இருந்ததனாலும் பிறந்த நாள் சிறப்பிதழில்வெளி வந்த  நேர்காணலை நான் பப்ளிஸ் செய்யாததனாலும் 
அதையே சிறு எடிட்டிங்க செய்து புகைப்படங்களையும் மாற்றி  செப்டம்பர் மாத சுவிஸ் சிறப்பிதழில் வெளியிட்டிருந்தார்கள். 
அதையும்  பகிர்ந்துள்ளேன்!

 நான் கடந்து வந்தவைகளையும்  என் சோதனைகளையும் அறிய முழுமையாக படியுங்கள்! 




இனிய நந்தவனம் குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றி!

முழுமையாக படித்து உங்கள் கருத்துக்களை இட்டால் மகிழ்வேன்!

04 நவம்பர் 2016

ஓரெழுத்தில் ஓராயிரம் அர்த்தமிருக்கும்!.. தமிழின் சிறப்பு!

ஓரெழுத்தில் ஓராயிரம் அர்த்தமிருக்கும்!
நாட்டை ஆளும் அரசன் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஓரெழுத்தில் காளமேகப்புலவர் எழுதிய பாடல்...! பாடல் முழுவதும் க வரிசையில் அமைந்திருப்பது இதன் சிறப்பு!




காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்காகா.





காக்கைக்காகா - காக்கைக்குஆகாது
கூகை - ஆந்தை
கூகைக்காகா - ஆந்தைக்கு ஆகாது
காக்கை - காக்கை
கோக்கு - கோவாகிய மன்னனுக்கு
கூ - கூவை அதாவது நாட்டை
காக்கைக்கு - காப்பதற்கு
கொக்கொக்க - கொக்கைப் போல இருக்க வேண்டும்.
கைக்கைக்கு - கைக்கு கை சண்டை போடும் பகையிடமிருந்து
காக்கைக்கு - தன் மக்களை காப்பதற்கு
கைக்கைக்கா கா = கைக்கு + ஐக்கு + ஆகா
ஐ - தலைவன்
கைக்கு ஆகா - தன் கையால் செய்ய இயலாமல் போய்விடும்.
விளக்கவுரை
******************

காக்கைக்கும் ஆந்தைக்கும் எப்போதும் பகை தான்.
ஆந்தைக்கு இரவில் தான் பார்வை தெரியும் என்பதனால் இரவில் மட்டும் விழித்திருந்து தன் எதிரியான காக்கையை வெல்லும், பகலில் ஆந்தைக்கு பார்வை தெரியாது என்பதனால் காக்கை ஆந்தையை வெல்லும்.
நாட்டை ஆளும் அரசன் காக்கையைப்போலவும் ஆந்தையை போலவும் இருக்காமல் சரியான இரை வரும் வரை தவமிருக்கும் கொக்கைப்போல் என்னேரமும் விழிப்புடனிருந்து தம் மக்களைக்காக்க வேண்டும்! அப்படி ஆளாத அரசனால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய் விடுமாம்.
என்றோ படித்ததை இன்று நினைவு கூர்ந்தேன்!
நாடாளும் மன்னன் மட்டுமல்ல நம அனைவருமே பின்பற்ற வேண்டிய அருமையாக ஆலோசனை இது!
ஆனால் இன்றைக்கு நடப்பதென்ன? வருமுன் காப்பதை விட்டு வந்தபின் திக்குத்திசை தெரியாமல் தவிக்கின்றோம். நாளைக்கு என்னாகும் என்பதை அறியாமல் இன்றைய நிலையை மட்டும் நினைத்து பெருமிதப்பட்டுக்கொள்கின்றோம்!வரமுன் காப்பதும் ஆயத்தமாய் இருப்பதும் நம் கடமை என்பதை மறந்தே போகின்றோம்!
சிந்திப்போம்!
படம் இணையத்திலிருந்து!