08 ஜனவரி 2017

நீர் நாடி துடிக்கும் நிலமகள்!



நிலமதை சூழ நீரிருந்தாலும்  - பூ மகள்
தூய்மையை  அழித்திடும் போதினில் 
வான்மகள் பொய்த்து  மண்வளம் குன்றி
நீர்நாடி தவிர்க்கும்  உயிர் வதை உணர்வீர்

பாளம் பாளமாய் பாறைகள்  தோன்றி 
நிலமகள் நித்தம் துடித்திடு முன்னே
சீர்மை கொண்டு சிறப்பாய் நின்று 
பாரின் தேவையை  சட்டென உணர்வீர்

சேற்றில் உழன்றாலும் செம்மணிக்  கதிர்கள்
சிலிர்த்து நிற்பதே சொர்க்கம் என்றுணர்ந்தே 
நாட்டின் தேவையை  சிந்தையில் விதைத்து 
ஆலம் விதையாகி  விருட்சமாய் உயர்வீர்.   

ஆழிக் கரையினில்  ஆழியாய் சுழன்று   

நதிகளை இணைத்து  நாற்றுக்கள் நட்டு 
துளித்துளியாக துடித்திடும் உயிரை
பனித்துளி கொண்டு உயிர்த்திட வாரீர் 

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிடும் தஞ்சை 
மஞ்சம் கொண்ட பஞ்சத்தில் தஞ்சம் 
நஞ்சுண்ட மாந்தர் வெஞ்சினம் கொண்டே 
வெறுமையை உணருமுன் விரைவாக வாரீர் 

காடும் களனியும் கதிரவன் வீச்சால் 
கருகிடல் கண்டு துடித்திடும் நெஞ்சம்
ஊருக்கு சோறிட்ட உத்தமர் கரங்கள்
உயிர்ப்பிச்சை கேட்கும் நிலைதனை கேளீர்

நாளை வருவதை இன்றே உணர்ந்து 
நானிலம் செழிக்க நன்மைகள் நாடி
மடிந்திடும் மனிதனின் மகத்துவம் புரிந்தே 
மண்காக்க இன்றே  புறப்படுவீரே.

நாளை என்பது நிச்சயம் இல்லை  

நாட்டின் வளமும் நம்மிடம் இல்லை 
நானெனும் சுயமும் நம்முள்ளே இல்லை 
நாமென இணைந்தே நன்னிலம் காப்போம். 


படங்கள் நன்றி  இணையம்

5 கருத்துகள்:

  1. சுய விழிப்புணர்வு ஒவ்வொருவரிடமும் தேவை.

    பதிலளிநீக்கு
  2. அருமை சகோதரியாரே
    நன்னிலம் காப்போம்

    பதிலளிநீக்கு
  3. No Water No Life....

    நல்லதொரு கவிதை. பாராட்டுகள்.

    நீரின் அவசியத்தை அரசு, மக்கள் என அனைவருமே புரிந்து கொண்டால் நல்லது இல்லை என்றால் திண்டாட்டம் தான்.

    பதிலளிநீக்கு
  4. //நானெனும் சுயமும் நம்முள்ளே இல்லை
    நாமென இணைந்தே நன்னிலம் காப்போம். //
    அருமை நிஷா. நாம்தான் பூமிகாக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  5. இதை அன்றே வாசித்தேன்...

    அருமை அக்கா...

    நாம்தான் பூமியை வளத்தை நம் நலத்தைக் காக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!