25 ஜனவரி 2016

சுவிஸ்ஸர்லாந்துக்கு வாறியளா? பகுதி -3 மொழிகளும்,கல்வியும்!

இந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு  41285 கிமீ² (136th) -15940 சது. மைல் ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது!


நாட்டின் மொத்த மக்கள் தொகை  2014 ஆம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி 8,211,700 ஆக இருந்தது



மக்கள்தொகையின் 22% குடியேறிய வெளிநாட்டினரும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுமாக உள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் (60%) ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லது EFTAநாடுகளில் இருந்து வந்தவர்கள்.



மொத்த வெளிநாட்டு மக்கள்தொகையில் 17.3% உள்ள மிகப்பெரிய தனிப்பட்ட வெளிநாட்டவர்கள் குழுவாக இத்தாலியர்கள் உள்ளனர்.



அவர்களுக்கு அடுத்துஜெர்மானியர்கள் (13,2%), செர்பியா மற்றும் மாண்டெனீக்ரோ (11,5%) மற்றும் போர்ச்சுகல் (11,3%) ஆகியவற்றிலிருந்து குடிபெயர்ந்தவர்களும் உள்ளனர்.



இலங்கையில் இருந்து குடியேறியவர்கள், அவர்களில் பெரும்பாலானோர் முன்பு வந்த தமிழ் அகதிகள், இவர்கள் ஆசியாவைச் சார்ந்தவர்களில் மிகப்பெரிய குழுவாக உள்ளனர்.



2000களில், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பல பிரச்சாரங்களில் அந்நியர்கள் குறித்த பயம் அதிகரித்து வருவது பற்றி தெரிவித்து இருப்பினும், நாட்டில் வெளிநாட்டு குடிமக்களின் அதிக விகிதாசாரமும், அதேபோன்று வெளிநாட்டினர் சிக்கலின்றி ஒருங்கிணைக்கப்படுவதும் சுவிட்சர்லாந்தின் திறந்த மனமுள்ள தன்மையைக் காட்டுகின்றன.



சுவிஸ்லாந்து நாட்டின் ஆட்சி மொழிகளாய் நான்கு மொழிகள் இருக்கின்றன! நாட்டின்,வடக்கு, கிழக்கும்மற்றும்மத்திய  பகுதியில் ஜேர்மன் மொழி பேசப்படுகின்றது,  ஜேர்மன் மொழி பேசப்படும் பகுதிகளிலும் சில இடங்களில் எழுத்து மொழி, பேச்சு மொழியாக சுவிஸ் ஜேர்மன், ஜேர்மன் ஜேர்மன் என இருவகை  வேறுபட்ட மொழிகளை பேச்சுக்கும் எழுத்துக்கும் பயன் படுத்துகின்றார்கள்.



அதாவது நாம்   தமிழ் மொழியை ஒவ்வொரு இடத்துக்கு ஏற்பபேச்சுத்தமிழையும், எழுதுவதற்கு இலக்கணத்தமிழையும் பயன்

படுத்துவது போல பேச்சு மொழி எழுத்து மொழி என இரு வேறுபட்ட உச்சரிப்புகள் கொண்டதாக சுவிஸ் ஜேர்மன் மொழியும் இருக்கின்றது.,


குழந்தைகள் தங்கள் முதல் மொழியாய்  சுவிஸ் ஜேர்மன் மொழியில் பேசவும், பாடசாலையில்  ஜேர்மனி ஜேர்மன் மொழியில் எழுதவும் பயிற்றுவிக்கப்படு

கின்றார்கள், அன்றாட பேச்சில் சுவிஸ் ஜேர்மன் மொழியையே பயன்படுத்துவார்கள்.

படம் இணையம் 
மக்கள், மொழி வீதங்கள் உதவி விக்கிமீடியா 
  1. வடக்கு, கிழக்கும்மற்றும்மத்திய  பகுதியில் ஜேர்மன் மொழி பேசுவோர்  65.3% 
  2. மேற்குப்பகுதியில்  பிரெஞ்சு (22.4%; 23.1%)
  3. தெற்குப்பகுதியில் இத்தாலியன் (8.4%; 6.1%)
  4. க்ரௌபண்டென் மண்டலத்தின் தென்கிழக்கில் வசிக்கும் சிறுபான்மையினரால் அவர்களுக்குள் (0.5%; 0.6%) பேசப்படும் ரோமானிய மொழி, 
ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் மொழிகளுடன் பழமை வாய்ந்த மொழியான ரோமன்ஷ்,தேசிய மொழியாகவும்,ஆட்சி மொழியாகவும் இருக்கிறது.


அனைத்து சுவிஸ் மக்களும் மற்ற தேசிய மொழிகளில் ஒன்றை பள்ளிகளில் கற்பது கடமையாக்கப்பட்டுள்ளது என்பதனால் பெரும்பாலான சுவிஸ் மக்கள் குறைந்தபட்சம் இரட்டைமொழி அறிந்தவர்களாக உள்ளனர்.



ஆட்சி மொழிகள் நான்காய் இருப்பதனால் அந்தந்த மொழிகளுக்க்கு ஏற்ப சுவிஸ் நாட்டின் பெயரும் கீழே இருப்பது போல் சுருக்கமாக அழைக்கப்படுகின்றது!



English: Swiss,

German: Schweizer(in),
French: Suisse(sse),
Italian: svizzero/svizzera, or elvetico/elvetica,
Romansh: Svizzer/Svizra


சுவிஸ் நாட்டில் 26 மாநிலங்களாக பிரித்திருக்கின்றார்கள் . கல்வி, தொழில் நுட்ப விடயங்களில் மாநிலங்களுக்கு சுய அதிகாரம் உண்டு, ஒவ்வொரு மாநிலமும் தம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொழில்வளர்ச்சி,  பாடசாலை க்கல்வி விடயத்தில் தமக்கென அதிகாரங்களை கொண்டுள்ளதால் மாநில ரிதியாகவும் கல்வி முறை வேறுபடுகின்றது.



உதாரணமாக  பிள்ளைகளின் ஆரம்பபள்ளிக்கான அனுமதி  தேசிய அளவில் ஆறுவயதாக இருந்தாலும் ஜேர்மன் மொழி பேசும் பிரதேசங்களில்  ஐந்து வயதிலும், இத்தாலி, பிரெஞ்சு மொழி பேசும் பிரதேசங்களில்  நான்கு வயதிலும் கிண்டர் கார்டன்  செல்ல அனுமதிக்கின்றார்கள்.



புலம்பெயர்ந்தோராயிருப்பின் இரண்டு வருடகல்வியும் சுவிஸ் குழந்தைகளுக்கு ஒருவருடங்களாகவும்  கிண்டர்கார்டன் அனுமதி நிர்ணயிக்கப்படுவதால் புலம்பெயர்ந்தோர் பிள்ளைகள் ஒருவருடம் முன்னரே அனுமதிக்கப்படுகின்றார்கள். மொழிதெரியாத பெற்றோராயிருப்பினும் பிள்ளை  தானாய் தன் கல்வித்தேவையை சமாளிக்கும் படியான வசதி வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கின்றார்கள். பாடசாலைகளில் இன, நிற வேற்றுமைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு புகார்களுக்கு உடனடி நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றது,



ஆனாலும்  சுவிஸ் நாட்டு குழந்தைகளை விட எம்மைபோல் புலம்

பெயர்ந்தோரான போர்த்துக்கல், செக்கோஸ்லவியா, கோசோவா, செர்பியா போன்ற நாட்டு பிள்ளைகளால் தான் பெரும் பான்மை நிற  வேற்றுமை பிரச்சனை  எழுகின்றது எனலாம்,  எமது பிள்ளைகளை சாக்லேட் என கேலி செய்வதும்  அங்கிள் பன்ஸ் என கிண்டல் செய்வதும் அவர்களே! எனினும் கொடுக்கப்படும் புகார்கள் உடனடியாக கவனிக்கப்படுவதால்  ஆரமப் நிலையிலேயே இவைகளை களையெடுக்கப்பட்டு விடுகின்றது. அங்கொன்றுமிங்கொன்றுமாய் சில பிரச்சனைகள் இருக்கலாம், எனினும் அவைகள் பெரிது படுத்தப்படும் படியாகஇல்லை எனலாம்.

ஆரம்பப்பாடசாலை மாதிரி வகுப்பறை!


கிண்டர்கார்டன் முதல் ஆண்டு பத்து வரை பாடசாலைக்கல்விகட்டாயமாக்க

ப்பட்டுள்ளதுடன் இலவசமாகவும் வழங்கப்படுகின்றது .இலவசம் எனும்
போது பாடப்புத்தகங்களை கொடுத்து விட்டு நோட்டுப்புத்தகங்களை 
பெற்றோர் வாங்க வேண்டும் எனும் சுமைகள் கூட இல்லை, பாடசாலைக்கு
அத்தியாவசியமான பாடப்புத்தகங்கள் நோட்டுப்புத்தங்கள்  மாநகராச்சியே இலவசமாக வழங்கி விடுகின்றது .


சுவிஸ் நாட்டில் வதிவிட உரிமையுள்ள எல்லா குடிமகனும் வரி செலுத்தவேண்டுமென்பதனால் மக்கள் செலுத்தும் வரி மீண்டும்மக்களுக்கே பயன் தரும் வகையில் பயன்படுத்தப்படுகின்றது .வேலைக்கு செல்லும் பெற்றோராயிருந்தால் பிள்ளைகளுக்காக மதிய உணவு, வீட்டுப்பாட உதவிகள் கூட மதிய நேர உணவு இடைவேளையில்  கவனிக்கப்பட ஒழுங்குகள் செய்யப்பட்டு மிகக்குறைந்த தொகை அதற்காக பெற்றோரிடம் அறவிடப்படுகின்றது..



புலம்பெயர்ந்தோருடைய பிள்ளைகளுக்கு  தேசிய மொழிகளுக்கான் பயிற்சி விசேஷமாக கவனிக்கப்பட்டு அவர்களுக்கு என தனியேஆசிரியர்கள் அமர்த்தப்பட்டு   பாடங்களும் நடத்தப்படுகின்றது., ஒவ்வொரு மாநிலங்களிலும்  பேசப்படும் மொழி  முதலாம் வகுப்பிலிருந்து முதல் மொழியும் மூன்றாம் வகுப்பிலிருந்து  தேசிய மொழியிலிருந்து இரண்டாவது மொழியும் அதனுடன் ஆங்கிலக்கல்வியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் சுவிஸ் பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர்கள்  பத்தாம் வகுப்பு முடிக்கும் போது  மும் மொழியில்  எழுத வாசிக்கவும், ஓரளவு  பேசவும் கூடியவர்களாக இருக்கின்றார்கள்,


ஆரம்பப்பாடசாலை மாதிரி வகுப்பறை!


கடந்த வருடம் வரை ஐந்தாம் வகுப்பிலிருந்து கற்பிக்கப்பட்ட ஆங்கில மொழிப்பாடம் இவ்வருடம் முதல் மூன்றாம் வகுப்பிலிருந்தே கற்பிகப்படுவதால்   ஜேர்மன்   மொழி பேசும்  மாநிலத்தில் வாழும் சிறுவர்கள் ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் என மூம்மொழிகளை மூன்றாம் வகுப்பிலிருந்தே கற்கின்றார்கள்..



இதற்கிடையில் புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள் எம் தமிழை மறக்காதிருக்க  தமிழ் மொழியையும் கற்பிப்பதனாலும்  தமிழ் மொழி கற்றலும்  தேர்ச்சி அறிக்கையும்  அனைத்து பாடசாலைகளிலும் அங்கீகரிக்கப்பட்டு பிள்ளையின்   திறன் மதிப்பிடப்படுவதனாலும் தாய் மொழியில் கற்பிப்பதை வரவேற்கின்றார்கள். சுவிஸ் மொழியில்  கற்க சிரமப்படும்  சிறுவர் தாய் மொழியில்  சிறப்பாய் தேற்றினால் அவைகளும் புள்ளிகளாக்கப்படுகின்றது. .



எனவே எமது பிள்ளைகள் நான்கு மொழித்திறன்கொண்டவர்களாய் வளர்வதும் அதற்கு அவர்கள் படும் சிரமங்களும்   நாமறிவோம்.



சுவிஸ் பாடசாலைகளில்  பாராட்டத்தக்க விடயம் என்ன தெரியுமா.? 

சிறுவர்கள் தினம் புத்தக மூட்டை சுமக்கும் சுமை கூலிகளாய் இல்லை என்பதே!


சுவிஸ் கல்வி தனிப்பாடப்புத்தகங்களையும் பரிட்சைகளையும் மட்டும் வைத்து மதிப்பீடப்படுவதிலை என்பது இதன் இன்னொரு சிறப்பம்சம்!



அது எப்படி என்பதை அடுத்த தொடரில் காணலாம்



தொடர்வோம். 

24 ஜனவரி 2016

இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்!


என் நிம்மதியின் பிறப்பிடமே! என் நம்பிக்கையே! என் நிறையே! நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே! நான் நிற்கும் போதும் நடக்கும் போதும் நிழலாய் வருபவரே! நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும், நித்தமும் என்னை நடத்திட வேண்டும். நின் மகளாய் என்றும் ஏற்றிட வேண்டும். மன்னித்து வழி நடத்திடவேண்டும். மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும், காக்கும் கரமாய் நீ வரவேண்டும், வழியில் தடைகள் பல வந்தாலும் வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும். சோர்வுகள் என்னை சோதிக்கும் போது சோலையாக மாற்றிட வேண்டும் . வேதனை என்னை அமிழ்த்திடும் போது நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும். வாடி நிற்கும் நிலை வரும் போது வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும். வறுமையிலே தவித்திடும் போது செழித்து வாழ வளம் தர வேண்டும். இளமை என்னை தாண்டிடும் போது இனிய நினைவாய் நீ வர வேண்டும். முதுமையிலே மூழ்கிடும் போது முடங்கி விடாது காத்திட வேண்டும். வார்த்தை தேள்கள் கொட்டிடும் போது ஆறுதல் மொழிகள் நீ தர வேண்டும் நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்!


 

நான் சோந்திருக்கும் நேரம் என்னை தாலாட்டும் பாடல். நீங்களும் கேட்டுப்பாருங்கள். 


நீயே நிரந்தரம். நீயே நிரந்தரம்.....இயேசுவே..... என் வாழ்வில்... நீயே நிரந்தரம்.. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்.... மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்... இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்....(2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்.... நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்..... நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்... ஆ...ஆ.. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்..... தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்.... தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்..... நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்.....(2) நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.... நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்......! செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்... பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்.... நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்.. அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்.....(2) நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.. நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்.....!

22 ஜனவரி 2016

வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்!


மனசு பேசுகிறது : தாயும் தாரமும்கில்லர் ஜி சாரின் அத் தாய்பதிவுகளில் தொடர்ச்சியாக.......!

வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்குள் தரமாய் இருக்கும்! தாயா தாரமா என்ற பேச்சே நல்ல குடும்பத்தில் வரக்கூடாது எனும் என் கருத்தினை நான் ஆரம்பத்திலேயே சொல்லி விடுகின்றேன் !.

குடும்பம் எனும் கோயிலில் யாரும் யாருக்கும் உசத்தியும் இல்லை, தாழ்ச்சியும் இல்லை, அனைவரும் சமமே! ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு உறவுக்கான பரிமாணம் மாறுமே தவிர எல்லாக்காலங்களிலும் எந்த உறவென்பதும் யாரும் யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டியதாய் இருப்பதில்லை,

 மரமானது நாம் ஊற்றும் நீரை உள் வாங்கி மண்ணில் வேரூன்றி காலத்துக்கும் கனியும் நிழலுமாய் பயன் தருவது போல் தான் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் என்பவர் வேராயிருக்கின்றான். அந்த வேர் எனும் அடித்தளம் உறுதியாய் இருந்தால் எத்தனை புயல், வெயில் அடித்தாலும் குடும்பம் எனும் மரம் நிமிர்ந்தே நிற்கும்! உறுதியில்லாத வேர்களை கொண்ட மரம் தான் சின்ன காற்றுக்கும் தன்னை நிலை நிறுத்த முடியாமல் தடுமாறும், ஒடிந்தும் விடும். அதே போல் தான் ஆணும் தன்னில் உறுதியாயும் திடமாயும் யாருக்கு என்ன இடம் என்பதை தான் தன்னில் நிரூபித்து விட்டால் அவனை சார்ந்த குடும்பமும் அசையாது. தலை நிமிர்ந்தே நிற்கும்.

நம் சமூகத்தில் ஆண்பிள்ளைகளை இப்படி வளர்ப்பது குறைவென்பதையும் நான் ஒப்புக்கொள்கின்றேன். குடும்பமெனும் பல் கலைகழகத்தில் ஆண் வேராயும் தாய், தாரம் மற்றும் பிள்ளைகள் கிளைகளாயும் இருக்கும் போது பல பறவைகள் அம்மரம் தேடி வந்து இளைப்பாறி கனி புசித்து செல்வது போல் தான் சித்தப்பா, சித்தி, பெரியப்பா, தாத்தா பாட்டி என ஏனைய உறவுகள் நம்மை தேடி வந்து இன்புறுவார்கள். குடும்பத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி கடமை உள்ளதே தவிர நீயா நானா எனும் ஏற்றத்தாழ்வுகள் என்றும் இருக்க கூடாது.

பொதுவாக பெண்கள் மனசு பூ மாதிரி. குழந்தையாயிருக்கும் போது அப்பா, அண்ணா, தம்பி எனும் உறவுக்குள் தன்னை அடக்கி, தனக்குள் அவர்களையும் அடக்கி ஆளும் வரம் பெற்றவளாயிருக்கின்றாள். பெண் இல்லாத வீடு பாழடைந்த கோயிலுக்கு சமமென்பர். தகப்பன், சகோதரன் எனும் பாசமான பாதுகாப்பு வட்டத்திலிருந்து திருமணம் எனும் பெயரில் வெளி வரும் பெண் .... திருமணத்தின் பின் நம் சமுதாய சட்டதிட்டங்கள் கடமைகள் என பிறப்பிலிருந்தே வளர்க்கப்படும் விதத்தால் கணவனுக்குள் அங்கமாகின்றாள்.

ஆதிதாய் தகப்பன் உருவாக்கத்தின் படி ஆணின் பாதி தான் மனைவி எனும் பெயரில் நிச்சயிக்கப்பட்டு ஒரு மனிதன் வாழ்க்கை முழுமையாக்கப்படு கின்றது ஆனாலும் அதே பெண் தனக்கென ஒரு குழந்தை பிறந்த பின் பத்து மாதம் தன் கருவில் தாங்கி பசி பட்டினி உணர்ந்து வலியோடு பெற்றெடுக்கும் பிள்ளைமேல் கொள்ளும் பாசத்தினை எந்த உறவோடும் ஒப்பிட முடியாது ,.

பெற்ற மனம் பித்தாகவும், பிள்ளை மனம் கல்லாகவும் இருப்பதாக சொல்லும் இந்த சமுகம் பெற்ற மனம் பல நேரம் சுய நலவாதியாய் கல்லைவிட இறுகிய மலையாய் இருப்பதை கண்டு கொள்வதில்லை எனினும் தாயின் பாசத்துக்கு முன் எவர் பாசமும் ஈடாகாது!

மனைவி என்பவளுக்கு தன் கணவனுக்கு காலையில் எழும்பி காப்பி போட்டு சாப்பாடு சமைத்து துணி துவைத்து என செய்ய வேண்டியது அவள் கடமை. அதிலும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் இது கட்டாயம்.மனைவி என்பவள் வேலைக்காரியல்ல, அவளுக்காகவும் சேர்த்து வெளியில் உழைக்கும் கணவனுக்கு செய்ய வேண்டியது தான். ஆனால் வேலைக்கு சென்று குடும்ப பொறுப்புக்களை இருவரும் தாங்கும் போது காலையில் வேலைக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை காப்பி போட்டு தரவில்லை என்பதை பெரிதாக எடுக்க முடியாது. ஏனெனில் முற்காலம் போல் வீட்டுக்குள் இருக்காமல் அவளும் வேலைக்கு போவதால் இங்கே கடமைகள் இருவருக்கும் பொதுவாகின்றது.

இதுவே தாய் என வரும் போது தாய் வேலைக்கு போனாலும் வீட்டிலிருந்தாலும் பிள்ளைக்கு சாப்பாடு முதல் அனைத்தும் பார்த்து பார்த்து கவனிக்க வேண்டியது அவள் பாசத்தில் மட்டுமே! பத்து மாதம் சுமந்து பாலூட்டி வலிதாங்கி இருபது, இருபத்தைந்து வயது வரை வளர்த்து விட்டு திருமணமான ஒரே நாளில் மனைவிக்கு மட்டும் தான் அவன் உரியவன் தாய் விட்டுக்கொடுத்து போக வேண்டும் என சொல்வதெல்லாம் ரெம்ப டூமச்.

தன் மகன் வாழ்க்கை நலமாயிருக்க நல்ல தாய் ஆறுதலாயிருப்பாளே தவிர அரக்கியாயிருக்க மாட்டாள். ஆனாலும் பல விதி மீறல்கள் உண்டு. பாகுபாடு பார்க்கும் தாய்மாரும் உண்டு. ஆனாலும் மனைவி தான் எல்லாம் எனும் உங்கள் கருத்தினை நான் ஏற்க மாட்டேன்.

எந்த வேலைக்கும் செல்லாமல் வருமானம் இன்றி நோயில் படுத்திருந்தாலும் தாய் அன்பு தன் பிள்ளை சாப்பிட்டானா என தான் யோசிக்கும். மனைவி எல்லா நேரமும் அப்படி இருக்க மாட்டாள். மனைவி எனும் பெண் தாயாகும் போது அங்கே அவள் மகனுக்கு தான் முதலிடம் கொடுக்கின்றாள் எனும் உண்மை புரிந்தால் இந்த மாதிரி விவாதங்களுக்கே இடம் இராது.

திருமணமாகும் வரை அண்ணனாய் தம்பியாய் மகனாய் இருப்பவன் திருமணமானபின் எப்படி மனைவிக்கு மட்டும் உரிமையானவனாக முடியும். எப்படி விட்டுக்கொடுக்க முடியும்.? ஆனாலும் ஒரு விடயம் யோசித்து பார்த்திருக்கின்றீர்களா? பெண்கள் திருமணமாகும் முன் நம் பிறந்த வீட்டாருடன் எப்படி இருப்பார்களோ அதே உறவும் பந்தமும் திருமணத்துக்கு பின்னும் அவளால் தொடரப்படுகின்றது. ஆனால் ஆணுக்கோ தி.மு- தி. பின் என இரு நிலைகள். ஏன் அப்படி?

உங்களுக்கு தெரியுமா சகோதரர்களே! பெண் என்பவள் திருமணமான புதிதில் உங்கள் கையில் கிடைத்த களி மண்ணாயிருக்கின்றாள், அவளை உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் ஏற்ற பாத்திரமாய் உருவாக்குவது உங்கள் கைகளில் தான், திருமணமான சில நாட்களில் நீங்கள் உங்கள் கையில் இருக்கும் களி மண்ணை பதப்படுத்தி நல்ல பாத்திரமாக உருவாக்கினால் அப்பாத்திரம் உங்களுக்கு குளிர்ச்சியான நீர் தந்து இளைப்பாறுதல் தரும், உங்கள் வீட்டாரை குறித்த உங்கள் செயல் பாடுகளால் இறுகிய செங்கலாய் உருவாக்கி கொண்டால் நீங்கள் உருவாக்கும் கல்லே உங்கள் தலை உடைக்கும். அன்புக்கு வளையாத பெண், காதலுக்கு கட்டுப்படாத பெண்  உண்டோ சொல்லுங்கள்?

ஆனால் நிஜம் என்ன தெரியுமா?

திருமணமானபின் ஏதோ காணாததை கண்டு காய்ந்த மாடு வைக்கோல் போரை கண்டால் விழுவது போல் ஒரே நாளில் மாறுவார்கள். என் அம்மா அப்படி! என் தம்பி இப்படி! நீ கவனமா நடந்துக்கோ! உனக்கு நான் மட்டும் தான் முக்கியம், எனக்கு நீ போதும் நீதான் என் தெய்வம், உயிர் , உடல் ஆவி எல்லாம் உனக்குத்தான் என சரணாகதி ஆம் சரணாகதி தான் அடைவார்கள் அதன் பின் அவர்கள் மீளப்போவதிலை எனும் உண்மை தெரியாமல்  அடையும் சரணாகதி அது! ஹாஹா!

தாய்  தாரப்பிரச்சனையில் சிக்கி தவிக்கும் எவரேனும் நான் சொல்வதை இல்லை என சொல்லுங்கள் பார்க்கலாம்!

ஏன் அப்படி நடக்க வேண்டும். பெண் அப்படி மாறுவதும் இல்லை தன் தாய் சகோதரர்களை குறித்து குற்றம்குறை பேசிட அனுமதிப்பதும் இல்லை விட்டுக்கொடுப்பதும் இல்லை. ஆனால் ஆண்கள் அப்படி அல்ல!  அதே போல் அம்மாவை பத்தி மனைவி சொல்லும் குறைகளையும் பெரிதாக்கி.... அம்மாவை செல்லாக்காசாக்கி விடுகின்றார்கள்.

நான் என் சொந்த அனுபவத்தில் கண்ட உண்மை என்னவெனில் இந்த விடயத்தில் ஆண்கள் தான் தவறிழைக்கின்றார்கள். திருமணமாகும் வரை அக்கா, அம்மா தங்கை என உருகி விட்டு அவர்களை விட்டால் யாருமில்லை அவர்களுக்கு தான் தன் உடல் பொருள் ஆவியெல்லாம் என ஓவர் ஆக்‌ஷன் எடுப்பார்கள். அதையே மனைவியானவளிடமும் சொல்லி இரட்டை வேடம் போடுவார்கள்.

அம்மா தாய் என வரும் போது  மனைவி எவ்வகையில் வேறு படுகின்றான் என சொல்லுங்கள்?

உடல்ரீதியான தொடுதல் தான் மனைவியை மற்றைய  உறவுகளிடமிருந்து வேறு படுத்து கின்றது.ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல் காலப்போக்கில் அருகி வரக்கூடிய உடல் உணர்வுகளுக்கு  தான் பல ஆண்கள் திருமண மான ஆரம்ப காலத்தில் முதலிடம் கொடுத்து  உள உணர்வை அசட்டை பண்ணுகின்றார்கள்.

இதிலும் பெரும்பாலான ஆண்கள் சொல்லும் ஒரு வார்த்தை.. அம்மா நீ சும்மா பேசாமல் இரு.. உனக்கு ஒன்றுமே தெரியாது..... ஆமாம் ஐம்பது வயது அம்மாவுக்கு ஒன்றும் தெரியாமல் தான் அவனைபெற்று வளர்த்து ஆளாக்கி விட்டார்.

நேற்று வந்த இருபது வயது மனைவிக்கு எல்லாம் தெரியும். அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது. அவள் அடி முட்டாள். அட போங்கப்பா... நீங்களும் உங்க காரணங்களும்.

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம்... மனைவி என்றால் ஏதோ அடிமை போல் அம்மாவை மட்டும் தூக்கி தலையில் வைத்து ஆடுவது. இது நிரம்பவே திரி, போர் மச்! ஏன்பா உங்களுக்கு அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் நடு நிலையில் முடிவெடுத்து வாழவே தெரியாதா?

என்னை பொறுத்த வரை ஒரு ஆணுக்கு அம்மா அம்மா தான்.
மனைவி மனைவி தான். இருவரில் எவர் உசத்தி எனும் பேச்சுக்கே இடம் இல்லை.

இரு கண்ணில் ஒரு கண் மட்டும் போதுமா என எதையும் உயர்த்தவும் வேண்டாம், தாழ்த்தவும் வேண்டாம். விட்டு கொடுக்கவும் வேண்டாம் வைத்து பிடுங்கவும் வேண்டாம்.

 வெளி நாட்டில் தொடர்ந்து பத்து வருடம் வேலை செய்து விட்டு ஊருக்கு போய் அங்கே செட்டிலாக நினைத்து  ஒரு வருடம் அங்கிருந்து எந்த தொழிலுமில்லாமல் அல்லல்படும் ஒரு ஆணிடம் கேட்டுப்பாருங்கள். கொடுத்தால் மனைவி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் தாய் என பசிக்கு சோறு போடுவது என் அம்மா தான் என்பான்.

 பல ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் அந்த நிமிடத்தினை வைத்து தாரத்திற்கு முதலிடம் என சொல்வதில் தப்பில்லை. ஆனால் வாழ்க்கையில் முடிவு மட்டும் இதே முடிவு நிலைக்குமா என்பதற்கு பதில் காலம் தான் சொல்லும்!

 நான் புதிதாக கல்யாணம் ஆகப்போகும் எனக்கு தெரிந்த ஆண்மக்கள் அனைவருக்கும் சொல்லும் ஒரு ஆலோசனை.

மனைவியை நேசி. உன்னில் பாதியாய் பார். அவளின் தேவைகளை நிறைவாக்கு, ஆனால் அனைத்துக்கும் தலையாட்டும் அடிமையாகாதே! உன் தாய் தந்தைக்குரிய கடமையை மறவாதே என்பது தான். அம்மா, அப்பா உனக்கு முக்கியம் விட்டுக்கொடுத்து விடாதேப்பா என சொல்வேன்

இவ்வகையில் என் வீட்டுக்காரரும் எனக்கு முன் மாதிரி தான். என்ன தான் சுவிஸில் இருந்தாலும் அவர் அம்மா அப்பா என வரும் போது நான் ஒதுங்கித்தான் போவேன். அதே போல் அவர் உடன் பிறந்தவர்கள் தப்பே செய்தாலும் அதை சொல்லி சுட்டிக்காட்டி பேச எனக்கு அனுமதியும் இல்லை. இதே நிலையில் நானும். என் சகோதரர்கள் அம்மா அப்பா எனக்கு எப்படி இருந்தாலும் அவர்களுக்காக கடமை என வரும் போது என்னவரா
யிருந்தாலும் கடமையை தான் நிறைவேற்றுவேன்.

இருவருமே ஆரம்பத்திலிருந்து அவரவர் குடும்பத்துக்கு என்னமுக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்கவும். மதிக்கவும் கற்றுக்கொண்டோம்.

அம்மா பேயாயிருக்கட்டும். அம்மா அம்மா தான், மனைவி மனைவி தான். அம்மா சின்ன தப்பு செய்தாலும் தூக்கிப்பிடிக்கும் ஆண், மனைவி பெரிய தப்பு செய்தாலும் கண்டு கொள்வதே இல்லை. அத்தனை கண்மூடித்தனமான நம்பிக்கையா என கேட்டால் ? இல்லை என சொல்வேன்.

தாய்க்கு பின் தாரம் என சொல்வார்கள். நன்கு ஆராய்ந்தால் இந்த வார்த்தை தரும் அர்த்தம் நம் முன்னோர்கள் சொன்னது தெளிவாக புரியும்.

தாய்க்குப்பின் தான் தாரம்.. அதாவது தாய் இல்லையென ஆனபின் தான் தாரத்தால் அந்த இடத்தினை நிரப்ப முடியும். தாய் இருக்கும் வரை தாய் அன்புக்கு நிகர் அது மட்டும் தான்.

அம்மாவுக்கு பத்து வருடம்  நீரழிவு நோய் இருப்பதை கண்டுகொள்ளாத மகன்கள் திருமணமாகி ஒரே மாதத்தில் மாமியாருக்கு சுகர் செக் செய்யும் கருவி வாங்கி பரிசளிக்கும் காலம் இது!தங்கள் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல்  பெண்கள் மேல் பழி போட்டு தாங்கள் தப்பிக்கொள்ள நினைக்கும் ஆண்கள் திருமணமான ஆரம்பத்தில் ஏன் தங்கள் தரத்தினை உறுதியாய் நிலை நாட்டுவதில்லை?

இந்த மாதிரி அம்மா,மனைவி என வரும் போது எவருக்கு எந்த இடம் என முடிவெடுப்பதை பல்கலை சென்று பட்டம் படிக்காத பல ஆண்களிடம் இருக்கும் நியாயத்தன்மை படித்து பட்டம் பெற்று பதவியில் இருப்போரிடம் இருப்பதில்லை. படிப்பு அவர்களுக்குள் தெளிவான சிந்தனையை குடும்ப உறவுகள் விடயத்தில் தருவதில்லை. குழப்பவாதிகளாய் மாமியார் மருமகள் பிரச்சனைக்கு அச்சாணியாய்  பல ஆண்கள் தான் இருப்பார்கள்..

நியாயமும் நீதியும் அங்கே மரத்து போகும். படிப்பு கௌரவத்தை தான் கற்று தரும் போலும்!

வீட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் அது வீட்டுப்பெண்களால் மட்டும் தான் என தப்பித்து கொள்ளும்  ஆண்களை   அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவே இப்பதிவு,






21 ஜனவரி 2016

நான் சின்னவளாய் இருந்தபோது.-5

சின்னவளாய் இருந்த போதான என் நினைவுபெட்டகத்தில்  நான் கற்றவைகள், பெற்றவைகளில்  என் நான்காவது வயதிலிருந்து  நடந்த சம்பவங்கள் இன்றும் நினைவுக்கு வருவது ஆச்சரியமானது தான்.

எங்கள் வீட்டில் நான் மூத்த பெண் என சொல்லி இருக்கின்றேன், எனக்கு அடுத்து  மூன்று தங்கைகள், அதைத்தொடர்ந்து தம்பி, கடைசியாய் ஒரு தங்கை, ஐந்து பெண்கள், ஒரு ஆண் என மிகப்பெரிய குடும்பம் எங்களுடையது,

எனக்கும் என் தங்கைகளுக்கும் ஒன்றரை வயது தான் வித்தியாசப்படும் என்பதோடு நான் பிறந்த பொழுதினில்  மட்டக்களப்பு அமிர்தகளியில் மாமாங்க கோயில எனும் பிரசித்தி பெற்ற கோயிலை ஒட்டி சொந்தமாய் வீடு மற்றும்  வசதியாக இருந்திருக்கின்றோம். அந்த வீட்டை விட்டு என்  ஆறாவது வயதுக்கு முன்பு புறப்பட்டு விட்டாலும் அதன் பின் அந்த வீட்டுக்கு திரும்பி போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் எனக்குள் அந்த வீடும், நினைவுகளும் இன்றைக்கும் ஏக்கம் தரும் ஒன்றுதான் ,சந்தர்ப்பம் கிடைத்தால் என் வாழ்க்கையில் ஒரு தடவையாகிலும் அந்த இடத்தை சென்று பார்க்க வேண்டும் எனும் ஏக்கம் என்னுள் உண்டு.

அந்த வீட்டை அம்மாவுக்கு சீதனமாக கொடுத்த தாத்தா சொந்த தாத்தா இல்லை. அம்மா மேல் பாசம் வைத்ததால் தன் சொந்த பிள்ளைகளுக்கு கொடுக்காமல் அம்மாவுக்கு கொடுத்தாராம். என்னிடமும் பாசமாக இருந்திருகின்றார்.

நடுவில் இரு அறைகளுடன்,இருபக்கங்களும் தாழ்வாரம் போன்ற நீண்ட பகுதியும், பெரிய கடையுமாய் திருவிழாக்காலங்களில் சர்பத் போன்ற இனிப்பு பதார்த்தங்கள் விற்கும் கடையாய் அவை பயன் பட்டதும், சர்பத்தின் சுவையும்,அதில் மிதக்கும் கசகசா,சேமியா போன்றவைகளின் சுவையும் தென்னை மரங்களும் கூட எனக்குள்  நினைவு இருப்பது ஆச்சரியமே!

விட்டுக்கு முன்னே  கோயிலுக்கும் சற்று முற்பகுதியில் மைதானம் போன்ற வெள்ளை மணல் பரப்பு இருந்ததில் அதில் பெரியவர்கள்  நிலவு ஒளியில் அமர்ந்து பேசுவதும்   நான் குமார், தேவி என எனை ஒத்த நண்பர்களுடன்
விளையாடிய நினைவும்
குமார் குமார் லைட் அடி 
கோழிக்கூட்டுக்கு லைட் அடி, 
எத்தனை மாதம் சம்பளம், 
மூன்று மாதம் சம்பளம். . 
மாமா எங்கே படுக்கின்றார், 
மாடி வீட்டில் படுக்கின்றார்
அத்தை எங்கே இருக்கின்றாள்
அடுத்த வீட்டில் இருக்கின்றாள்
நம்ம வீட்டில் கல்யாணம்  
தெருவிலெல்லாம் ஊர்க்கோலம் 
டொம் டொம் டொம்

என குமாரை கேலி செய்து  பாட்டு சொல்லி தந்ததும்  நினைவில் இருக்கின்றது.

1978 ல் இலங்கையில் கிழக்கு மாகாணத்தை  தாக்கிய சூறாவளியில்,வீட்டின் ஓடுகள் உடைந்து விழுந்ததும் , மேசைக்கு கீழாய் என்னை பாதுகாத்ததும், ஓடு விழுந்ததனால்  ஓடு வேய்ந்த வீடு  பாதுகாப்பானது    எனும் நம்பிக்கையில் எங்கள் வீட்டில் வந்து பாதுகாப்பாக இருக்க நினைத்த   பக்கத்து வீட்டு ஆண்டியின் முழங்காலில் ஓடு விழுந்ததும்,பக்கத்து குடிசைகள் மேல் வேய்ந்த ஓலைகளை காற்றள்ளி சென்றதுடன், ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்களும் வீடுகள் மேல் சரசரவென சாய ஆரம்பித்து விட்டன. இதனால் வீடுகளின் குடியிருப்பது பாதுகாப்பில்லை என கொட்டும் மழையிலும், சுழன்றடிகும் காற்றிலும் அனைவரும் ஒருவரையொடுவர் பிடித்து கொண்டு மாமாங்க கோயிலுக்கு செல்ல  இடுப்பளவு நீரில் நடந்ததும் நடக்கும் போது என்னை தாத்தாவும், தங்கையை சித்தப்பாவும் தூக்கி தோளில் வைத்து பாதுகாப்பாய்  அணைத்து சென்றதும், அம்மா என் மூன்றாவது தங்கையை வயிற்றில் சுமந்ததுமாய்  என் நினைவுகள் கூடவே வருகின்றது.

அன்றைய தினம் என் அப்பா வேலை நிமித்தம் சென்று விட்ட சூழலில் அப்பாவின் தம்பி சித்தப்பா, தாத்தா என எங்களுடன் இருந்தது, என் இரண்டாவது தங்கை ஹேமா சித்தப்பாவின் செல்லப்பெண் என்பதால் அவர் அவளை தூக்கிக்கொண்டு அலைந்ததும்   மறக்க முடியவில்லை. புயலுக்கு மறு நாள் பதறி அடித்து ஓடி வந்த அப்பா  புயலாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்கின்றார்களாம் என அறிந்து என்னை தூக்கி கொண்டும் சித்தப்பா தங்கையை தூக்கிக்கொண்டும் போய் கோதுமை மா, பேரிச்சம் பழம் வாங்கி வந்ததும் புயலாய் விழுந்த தென்னை மரங்களின் குருத்துக்கள் இளநீ ர்களை சாப்பிட ஓடித்திரிந்ததும் . சின்னக்குழந்தைகளுக்கு முதலிடம் என்பதால் பக்கத்து வீட்டு மாமாக்களும் மாறி மாறி எங்களை தூக்கிட்டு போய் நிவாரணப்பொருட்களை வாங்கியதும் நீங்காத நினைவில்.!

சின்ன வயதில் என்னை தரையில் நடக்கவே விடாத படி அப்பாவுக்கு தெரிந்த நண்பர்கள்  முன்று மாமாக்கள் என்னை தூக்கியே வைத்திருந்ததும், அவர்கள் என் பத்தாவது வயது வரை அதை சொல்லி என்னை தம் மடியில் இருத்தி கொள்வதும், அம்மாவின் ஒன்று விட்ட அக்கா பூமணி பெரியம்மா, கிட்டப்பா பெரியப்பாவையே நான் முதன் முதலில் அம்மா, அப்பா என அழைத்ததும், அவர்கள் என்னை வளர்த்ததும் திருகோணமலையில் பெரியப்பாவின் கடையில்  நான் செல்லப்பெண்ணாக அவர் மடியில் அமர்ந்து  தேன் குழல்களை சாப்பிட்டதும் என் அம்மா என் சின்ன தங்கையை  பெரியம்மா வீட்டுக்கு கூட்டி வந்த போது நான் பெரியம்மாவிடம்   அம்மா அம்மா சித்தி குட்டிப்பாப்பா வாங்கி வந்திருக்கிறா, அவள் வேண்டாம் என  சொல்லி அழுததாக சொல்வதும்  எனக்குள்  மறக்கவே இல்லை.

இந்த நினைவுகள் அனைத்துமே என் ஐந்து வயதுக்குள் என சொன்னால் நம்புவீர்களா?

பிள்ளைகள் இல்லாததால் பெரியப்பா பெரியம்மா என்னை   வளர்த்ததனால் தானோ என்னமோ எனக்கு இன்று வரை என்னை பெற்ற அம்மாவுடன் ஒட்டுதலில்லாமலேயே இருக்கின்றேன்.

எனக்கு என் தங்கை தம்பி ,அவர்களை தூக்கியது, விளையாடியதான நினைவுகள்   தம்பி  பிறக்க வேண்டும் என்பதற்காக அம்மா  இலங்கையில் கதிர்காம கோயிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து கந்த சஷ்டி விரதம் இருந்ததில்ருந்து தான் ஆரம்பமாகின்றது.

அது வரை அல்லது நான் பள்ளி செல்லும் வயது வரை என் தங்கைகளுடன் இருக்க வில்லை. என்னுடைய ஆறு வயது முதல் பத்து வயது வரை தான் நாங்கள் இணைந்திருந்தோம்.   மீண்டும் 10 வயதின் பின் நான் என் சகோதரிகளுடன் இல்லை என்பதனால்  என் மொத்த வாழ்க்கையில் நாங்கள் வெறும்  ஐந்து வருடங்கள் மட்டுமே  ஒன்றாய் இருந்தோம். அதன் பின் என் அப்பா நாட்டின் சூழ் நிலை கருதி நாட்டை விட்டு புறப்பட அம்மா என் இரு தங்கைகளின் படிப்புக்காக அவர்களை ஹாஸ்டலில் விட்டு விட்டார். பின் 15 வயது வரை என் தம்பியும் நான்காவதும், கடைசித்தங்கையும் இணைந்திருந்தோம். அதன் பின் என் 16 வயதில் அவர்களை விட்டு புறப்பட்டேன்.  

நான் என் குடும்பத்தினை விட்டு அதிக நாட்கள் பிரிந்தே இருந்திருக்கின்றேன் அதனால் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகளுக்குள் இயல்பாய் வரவேண்டிய ஒட்டுதல் பாசம் எனக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பதும்,  மற்ற அனைவரும் தமக்குள் ஒன்று பட்டு இருக்க நான் என்றும் வேற்று ஆளாய் தோன்றுவதும் என் சின்ன வயது சூழலால் தான் என  நான் நினைக்கின்றேன். என் உடல் மட்டும் அல்ல   உள்ளமும்,  தொலை தூரமாக இருப்பதாகவே உணர்கின்றேன். 

மட்டக்களப்பு அமிர்தகளி மாமாங்க கோயில் முன்பாக என்னுடைய அம்மாவும் நானும்   தங்கைகளுடன் இணைந்து  எடுத்த போட்டோ,



நான் குட்டிப்பெண்ணாய் இருக்கும் போது  கன்னம் வைத்து புஷ்ஷுனு குண்டாய் தான் இருப்பேனாம்,  எப்பவும், இப்பவும்  குண்டு குண்டு பூசணிக்காய்தான்!

இன்றைக்கு இந்த படத்தில்  இருக்கும் நால்வரும் ஆளுக்கொரு திசையில் சிதறடிக்கப்பட்டு விட்டோம்.  ஒரே வெள்ளைவர்|ண துணி சட்டை போட்டிருக்கும் நானும் தங்கையும் சுவிஸர் லாந்திலும்  ஆரஞ்சு சட்டை அவுஸ்ரேலியா சிட்னியிலும், அம்மா கையில் இருக்கும் குட்டிப்பாப்பா ஜேர்மனியிலுமாய்  புலம் பெயர்ந்தும் விட்டோம். என்னுடைய பத்தாவது வயதில் அப்பா எங்களை விட்டு  சுவிஸ் வர  புறப்பட்டதிலிருந்து இன்று வரை நாங்கள் மொத்தக்குடும்பமும்  ஒன்று சேரவும் இல்லை. கடைசித்தங்கை, தம்பி திருமணம் என நடந்த போதும் யாரோ ஒரு தங்கை கலந்து கொள்ள முடியாமல் போகும் சூழல் தான் இருக்கிறது.

படிப்பு நிமித்தமோ.குடும்பம் பெரிதானதாலோ மட்டக்களப்பை விட்டு பெரிய கல்லாறுக்கு  வாடகை வீடு மாறி என் ஆறாவது வயதில்  முதல் முதலாக பாடசாலை  பெரியகல்லாறு வினாயகர் வித்தியாலயம் போன நினைவு கூட என் நினைவில் இருக்கின்றது. அக்காலங்கள் தான் என் வாழில் பொற்காலங்கள் என்பேன்.

அந்த வீட்டில் பதினொரு வயது வரை இருந்த போதான நினைவுகளை   நான் சின்னவளாய் இருந்தபோது.-4 காணலாம்எ
ன் பாடசாலை அனுபவங்களை. நான் சின்னவளாய் இருந்தபோது.- 2 சென்றும் காணலாம்.

முதலாம் வ்குப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை கற்ற பாடசாலை.
பட உதவி நன்றி பேஸ்புக் தமிழ் பிரியன் 


சின்ன வயதில் நாங்கள் விளையாடிய வினா விடை பாடல்கள் பல புதிய சொற்களை கற்றிடவும்  நினைவாற்றல் பெருக்கிடவும் உதவியது எனலாம்.
அப்படிப்பட்ட சில பாடல்ளை இந்த தொடரிலும் பார்க்கலாமா?

நிலாநிலா
எங்கே போறாய்?
மண் எடுக்கப் போறேன்.
மண் என்னத்துக்கு?
சட்டிபானை செய்ய.
சட்டிபானை என்னத்துக்கு?
சோறாக்கித் தின்ன.

இந்த மாதிரி பாடல்களை கேட்டு விளையாடிய நினைவு இருக்கின்றதா உறவுகளே!

நிலாநிலா
எங்கெங்கேபோனாய் ?
களிமண்ணுக்குப் போனேன்.
களிமண் என்னத்துக்கு? வீடு கட்ட.
வீடு என்னத்துக்கு? மாடு கட்ட.
மாடு என்னத்துக்கு? சாணி போட.
சாணி என்னத்துக்கு? வீடுமெழுக.
வீடு என்னத்துக்கு? பிள்ளைபெற.
பிள்ளை என்னத்துக்கு?
எண்ணெய்க் குடத்திலே போட்டுப்
பிள்ளை துள்ளித் துள்ளி விளையாட

இதையும் படித்து பாருங்கள். உங்கள் நினைவுகளில் மீட்ட முடிந்தால் அதையும் பகிழுங்கள்.

ஒரு கொத்து ஈச்சங்கொட்டை வறுத்துகொட்டி
ஒன்பதுபேராகக் கூடிகுத்தி
கல்லடிநாச்சிக்குக் கல்யாணமாம்
கருகப்பிலையால் தாலிகட்டி.


என்னதாலி... பொன்தாலி-

என்னபொன்.... காக்காப்பொன்
என்னகாக்கா....அண்டங்காக்கா
என்னஅண்டம...பனையண்டம்
என்னபனை....ஓட்டுப்பனை
என்னஓடு....ஆமைஓடு
என்னஆமை.....பாலாமை
என்னபால்...கள்ளிப்பால்
என்னகள்ளி....சதுரக்கள்ளி
என்னசதுரம.....நாய்ச்சதுரம்
என்னநாய.....வேட்டைநாய்
என்ன வேட்டை....பன்றிவேட்டை
என்னபன்றி....ஊர்பன்றி
என்னஊர்.....கீரையூர்
என்னகீரை....மண்டூர்க்கீரை
என்னமண்டூர்....தில்லைமண்டூர்
தில்லைமண்டூருக்குப் போவோமடி

ஆச்சரியம் தரும் விடயம் என்ன தெரியுமா? இப்பாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் கல்லடி நாச்சி, மண்டூர், கிரான் குளம் எல்லாமே இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமைந்திருக்கும் ஊர்களில் பெயர்கள்.கல்லடி நாச்சி என்பது கல்லடி எனும் ஊரில் இருக்கும் அம்மன் கோயிலையும்,  தில்லை மண்டூர் என்பது சின்னக்கதிர் காமமென அழைகப்படும்  முருகன் கோயிலை கொண்ட பிரசித்தி பெற்ற இடமாகவும்.
கிரான் குளம் எனும் ஊரும்  முந்திரியம் பழக்களுக்கு பெயர் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பாடல்களை இயற்றியவர்கள் யார் என தெரியாவிட்டாலும் செவி வழியாக தொடர்ந்துகேட்டுப்பாடியே வருவது தான் இங்கே கவனிக்கத்தக்கது

ஒருவர் கேள்வியாய் கேட்க.. அடுத்தவர் சட்டென பதில் சொல்ல சிறுவர்கள் இருக்கும் இடத்தில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் குதுகலம் தரும் விளையாட்டும் இது!

கடலை கடலை 
என்ன கடலை...... உருண்டைக் கடலை
என்னவுருன்டை...... மாவுருண்டை
என்ன மா.....என்னம்மா



வாழைப்பழம்:...... 

என்னவாழை:.....கப்பல்வாழை
என்னகப்பல்: .......பாய்க்கப்பல்
என்னபாய்: பன்பாய்
என்னபன்:.....குளத்துபன்: 
என்னகுளம்: கிரான்குளம்

i

இது என்ன விளையாட்டு என நினைவிருக்கின்றதா உறவுகளே! இவ்விளையாட்டு குறித்த என் நினைவுகள் அடுத்த பதிவில் பார்க்கலாம்!

தொடர்வோம்>>>>>>>>>

18 ஜனவரி 2016

என்னகம் கொன்று உன்னை யார் வெல்வது?

நட்பா? காதலா? என பல முறை பல இடங்களில் விவாதித்தாகி விட்டது.. என் ஒட்டு காதலை விட நட்புக்கே  இருப்பதும் ஆண் பெண் நட்பை நல்ல மெல்லிய நூலால் கட்டும் போது இயல்பாய் இருவருக்குமிடையிலான ஏதோ ஒன்று அங்கே இழையோடுவதும்அந்த இழையே  நட்பின் வெற்றிக்கு பின் இருபப்தும் நிஜம் என்பதை  உணர்ந்தவர்  புரிந்து இருப்பார்கள்..

ஆங்கிலத்தில்  LOVE என்பதை அன்பினை தாண்டிய எதிர்பார்ப்பில்லாத பிரியத்தை சொல்ல பயன்படுத்து வார்கள்.  ஐ லவ் அம்மா, ஐ லவ்அப்பா என அனைவரையும் LOVE எனும் அன்பால் கட்டுவார்கள். ஆம  நேசிப்பு...... அனைவருக்கும் பொதுவானது.அனைவரையும் லவ் செய்யலாம்.அனைத்தையுமே நேசிக்கலாம்!

ஆனால்  நம் சினிமாக்கள் LOVE  என்பதை ஆணுக்கும் பெண்ணுக்குமே உரியதான காதல் எனும் வட்டத்தினுள் நிறுத்துவதால் LOVE சொன்னாலே ஏதோ பெரிய தப்பு எனும் உணர்வு இன்னும் நம்மவர்களிடம் உண்டு.

காதல் ஒரு காலத்தில் பூத்து சிலகாலத்தில் மறையும், நேசிப்பு மரணம் வரை கூட தொடரும்.

நீ என்னை நேசிக்கிறாயா? நீ என்னை LOVE  பண்ணுகின்றாயா என கேட்டால் ஆமாம்  I LOVE YOU என  சட்டென சொல்லிட முடிவது போல் காதலை சொல்ல முடியதில்லை. காதலில் காமம் சேரும் போது அதிலிருக்கும்  LOVE  சில நாட்களில் சாதலை அடைவதும் உண்டு.

அதிலும் இந்த நட்பெனும் ஆண்பெண் நூலிழை இழைவில்.... நேசிப்புக்கும் காதலுக்கும்  மெல்லிய கோடு தான்.அந்த கோட்டை நிர்ணயிப்பது நம் உணர்வுகள் தான்!. தமக்குள் இருப்பதை நேசிப்பாக்குவதும் காதலாக்குவதும் அவரவர்  கைகளில் தான் என்பேன்!  காதலுக்கு எல்லை உண்டு,  ஆனால் நட்புக்கு எல்லை இல்லை!

 காந்தந்தின் இரு துருவங்களை   நாம் அருகருகே வைத்து விட்டு  ஈர்ப்பே இல்லை என சொன்னால் அது எப்படி தவறாகுமோ அப்படித்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பும் , பெண்ணுக்கு பெண்ணும் , ஆணுக்கு ஆணும் பழகும் போது இல்லாத ஏதோ ஒன்று  ஆண் பெண் நட்பில் இருந்தாலும் அதையும் அவர்களில்  புரிதலுடனான நேசிப்பாய்  இறுதி வரை தொடர முடியும். என நான் நினைக்கின்றேன்?

பெரும் பாலான பெண்கள்  சட்டென அறிமுகமாகும் வேற்று ஆண்களை அண்ணனாய், தம்பியாய் அழைப்பதும் தமக்கான பாதுகாப்பு வளையம் இறுகவே.. ஆண்களை நம்ப இயலாமை அல்லது தன்னில் நம்பிக்கை இல்லாமை  ஆண்களை பெண்களை சகோதர உறவில் தூரமாய் வைத்து விடச்செய்கின்றது.

இதையெல்லாம் தாண்டி  ஜெயிக்கும் ஆண் பெண் நட்பூ.... பல ஆண்டுகளானாலும் தொடர செய்யும்  நட்பூவாய்  மரணம் வரை கூட வரும் என்பது என் கருத்து!

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

நட்பா? காதலா? எது  சிறந்தது?



படம் நன்றி இணையம் 

உன்னகம் கொன்று என்னகம் ஜெயிப்பதும்
என்னகம் கொன்று உன்னகம்  வெல்வதும்
விண்ணகம் சென்றிட தூண்டிடும் வலியடா?
துன்பமா இன்பமா,,, சகலமும் நம்முள்ளே
தாயிவள்  சேயாவதும்  சகலமும் சரணென
சொல்லிடும் உணர்வினில் ...
சவாலென விலகியே சடுதியாய் செல்கின்றாய்?
எப்படி உனைக்கொன்று  உன்னை நான் வெல்வது?!

தரணியில் தோல்விகள் துவண்டேனே  தோழியே என்றதும்

தொட்டதும் தொல்லை தான் என்று நீ உரைத்ததும்
தாங்கிடும் மனமின்றி தவிப்பவள் தாயடா!
தோல்வியில் துவண்டிட்டால்  தோள் தந்து
தாங்கிடும உன்னவள் உனக்கென்றும் சேயடா!
தோள் தர துணை நிற்கும் தோழியும் அவளடா!
காதலை மிஞ்சிய பாசமும்  நேசமும்
யுகத்திலே உண்டென   புரிந்தவள்  பெண்ணடா!

அனைத்தையும் வெல்லுவேன் அன்று நான் சொல்லுவேன்

அனைத்திலும் இருந்தவள் அன்பான தோழி நீ என்றவன்
என் மனமுணராமல்  போனதேன் தோழா?
விழித்தெழு, ஜெயித்திடு  சொல்லிடும் உன் தோழி
தன்னிலே உன்னை நீ  தோற்கணும் என்பாளோ?
நீயா நானா   சவால்கள் வந்திட்டால் - உன்
அன்பினுள் அடங்கியே ஜெயித்திடும்
சேயுந்தன் தாயுமானானவள் தோழியாம்!

வரமென சொன்னவன் தூரமாய் செல்கின்றான்

வீம்புடன் வார்த்தையை வீசித்தான் கொல்கின்றான்
பெண்மையோ மௌனமாய் கண்ணீரை வடிக்குதே!
மென்மையாம் மனதினில்  உருகிடும் உணர்விலே
ஜெயிப்பவன் என்றுமே நீயாய்த்தானிருக்கணும்
வானமே எல்லையாய்   அனைத்தையும்  ஜெயிக்கணும்!
வஞ்சியின் வாஞ்சையில் வஞ்சனையில்லையே!
நெஞ்சத்தின் வேதனை புரிந்திடும் நாளேது?

காதலும், காமமும் கலந்திடும் இகத்திலே

காதலை தாவென கசிந்து நீ வேண்டினால்
கறைகளும்  வாழ்க்கையை  கலைத்து வைக்குமே!
காதலே வேண்டாமே  கசக்குமே என்றிட்டால்
காதலித்துப்பார் உனக்கது புரியும்   என்கிறாய் !
நட்புக்கோர் இலக்கணம்  பிசிராந்தையார் நட்பாம் 
பாராமல் மனமுணர்ந்தவர வருயிரையும் விட்டாராம் 
என்றோ உரைத்ததை இன்று நீ மறந்ததேன்?


பின் குறிப்பு
அனவருக்கும் அன்பு வணக்கம்,!
வலையுலகிற்கு புதியவளாய்  தமிழுக்கு சிறு மழலையாய் உங்கள் முன் தவழ்ந்திடும் என்னை தட்டிக்கொடுத்து தாலாட்டி, சீராட்டி  நான் நடைபயில உதவிடும் அனைத்து வலைத்தமிழ் நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

ஆல்ப்ஸ் தென்றலில் பதிவாகும் என் எழுத்துக்கள் புதியவைகள் அல்ல என்பதையும், அதில்  இருக்கும் சோகங்கள் சோர்வுகள் இன்றைய என் நிலையை சொல்லும் சொந்தக்கதையல்ல என்பதையும்   நான் பகிரும் பல கவிதைகள் 2009ம் ஆண்டிலேயே எழுதப்பட்டு  முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலாக்களில்பதிவாக்கப்பட்டிருக்கின்றது என்பதோடு...அங்கொன்று இங்கொன்றுமாய் பரவி இருப்பதை ஒரே தொகுப்பாக்கிட  ஆலோசனை சொல்லி என் வலைப்பூ வழி காட்டியாம் மனசு குமாரின் ஆலோசனையில் ஒவ்வொன்றாக இங்கே பதிவாக்குகின்றேன்.

புரிதலுக்கு நன்றி!

17 ஜனவரி 2016

இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா?



இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா 



ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய்த் திரிந்த‌
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னைத் துரத்தியதே
உன்னைக் காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய்க் கிடக்கிறதே
இதயம் நொறுங்குகிறேன் இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே
ஓ ஆயிரம் காலம் வாழ்கிற‌ வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ








 கிழ‌க்கும் மேற்கும் வ‌ட‌க்கும் தெற்கும்
ம‌னித‌ன் வ‌குத்த‌ திசையாகும்
உன்முக‌ம் இருக்கும் திசையே எந்த‌ன்
க‌ண்க‌ள் பார்க்கும் திசையாகும்
 கோடையும் வாடையும் இலையுதிர் கால‌மும்
இய‌ற்கை வ‌குத்த‌ நெறியாகும்
உன்னுட‌ன் இருக்கும் கால‌த்தில் தானே
எந்த‌ன் நாட்க‌ள் உருவாகும்
உந்த‌ன் நிழ‌ல‌ருகே ஓய்வுக‌ள் எடுத்திடுவேன்
இது காத‌ல் இல்லை இது காம‌ம் இல்லை
ஓ தேக‌த்தைத் தாண்டிய‌ மோக‌த்தைத் தாண்டிய‌
உற‌வும் இதுதானோ
 


எங்க வீட்டை சுற்றி பனிமழையும், என் மனதில் கொட்டிக்கொண்டிருக்கும் பனிச்சாரலுக்காமாய் 
இந்த பாடல் வரிகள் தான்  ஒத்து வந்தது 
ஆனால் வீடியோ காட்சி? 

பாடல் வரிக்கும் காட்சிக்கும் சம்பந்தமே இல்லையேப்பா! 
அதனால்  இங்கே இணைக்கவில்லை. 
வரிகளை மட்டும் படித்தால் 

இது காத‌ல் இல்லை இது காம‌ம் இல்லை
ஓ தேக‌த்தைத் தாண்டிய‌ மோக‌த்தைத் தாண்டிய‌
உற‌வும் இதுதானோ

நல்ல நட்புக்கும்  பொருந்துவதாய் இருக்கும்  வரிகளை அதீத நெருக்கம் காட்டி  வரிகளில் இருக்கும் நோக்கத்தினை  திசை திருப்பி விட்டார்கள். 

16 ஜனவரி 2016

நாள் தோறும் தேடுகின்றேன்

                                        

தேவதைகள் வாழ்க்கையென்றும் 
தேனாக இனிப்பதில்லை. 
தினம் தோறும் தொடர்‍ந்து வரும் 
கவலைகளும் அழிவதில்லை 

விடையறியா தேடுதல்கள் 
வலிபோக்கும் மருந்தானதில்லை 
சோர்ந்து போன உள்ளமதில் 
சுமையென்றும் அகல்வதில்லை.

அனைத்தையும் நேசிக்கிறேன்
அன்பை மட்டும் யாசிக்கிறேன்
வலியில்லாத வாழ்வு ஒன்றை 
நாள் தோறும் தேடுகின்றேன் 


15 ஜனவரி 2016

தமிழ்க்'கனம்' வேண்டாமே!

மீபத்தில் புற்றீசல்கள் போல் புத்தக வெளியீடுகள் வெளிவருவதால் எழுத்தாளர்களுக்கும் புத்தகவெளியீடுகளுக்கும் மதிப்பில்லாது போய் விட்டது எனும் செய்தியொன்றை இலங்கையில் புத்தக வெளியீடொன்றில்  பேசப்பட்டதாக  தம்பி ஒருவர் தனது பேஸ்புக் பக்கம் இணைப்புடன் பகிர்ந்திருந்தார்!

அவரின் பதிவுக்கு கவிதை எனும் பெயரில் நான்கு வரி எழுதுவதோடு பத்து வரியில் பத்து கவிதை எழுதி விட்டால் தாமும் கவிஞர் என சொல்லி அதை புத்தகமாக வெளியிட வேண்டும் என ஆர்வப்படுவோர் குறித்தும் அவர்கள் எழுதும் போது எழுத்துப்பிழை, கருத்துப்பிழைகளையும் அர்த்தமே இல்லாத எதுகை மோனை வரிகளையும்  தவிர்க்க வேண்டும் என்பதையும் எனது கருத்தாக  அவர் பக்கத்தில்  நேரடியாக தட்டச்சிட்டு எழுத்துப்பிழை சரி பார்க்காமல் பதிந்தும் விட்டேன்.

தட்டச்சின் வேகத்தில்   நிறை குடம் தளும்பாது, குறை குடம் தளும்பும் எனும் வாக்கியத்தில் குறை என்பது குடை என தட்டச்சானதையும் தளும்பும் எனும் இடத்தில் தமுங்கும் எனவும் கவிஞ்ர்  என தட்டச்சிடும் போது மேலே புள்ளியும் விடுபட்டிருந்ததை மீள் பார்வை பார்த்து சரி செய்யவில்லை என்பதை விட விடிகாலை  தூக்கக்கலக்கத்தில் எப்படியோ   விடுபட்டு விட்டது. எனது பெரிய கருத்துப் பந்தியில் இருந்து இந்த கவனக்குறைவான தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி நீயே பிழையாய் தானே தட்டச்சிட்டிருக்கின்றாய், நீ எப்படி மற்றவர்களை சொல்லலாம் என்பது போல் ஒருவர் எதிர்க்கேள்வி கேட்டிருந்தார்.

பதிவை இட்ட தம்பி என்னைக் குறித்து நன்கு அறிந்தவர் என்பதால்  நான் 16 வயதில் சுவிஸ் வந்ததையும்...  நான் ஒரு எழுத்தாளர் இல்லை என்ப தையும் சொல்லி விளக்கம் கொடுக்க போக.... இன்னொருவர் வந்து  16 வயதில் பத்தாம் கிளாஸ் தமிழ் படித்து விட்டு சுவிஸ் வந்து விட்டேன் எனும் அந்த தம்பியின் கூற்றை வைத்துக்கொண்டு நான் வெறும் கை நாட்டு போலவும் அவர்களை கேட்க எனக்கு தகுதி இல்லை என்பது போலவும்  விவாதித்தார்.

அதாவது தமிழ் மொழிகுறித்தும் புத்தக வெளியீடு குறித்தும் அதில் வரும் எழுத்துப்பிழைகள் குறித்தும்  விமர்சிக்க எனக்கு தகுதி இல்லை எனவும் சொல்லி விவாதத்தின் வேகத்தில் பூசணியை மரம் என தட்டச்சிட்டதை சுட்டிக்காட்டி.... பூசணியை கொடி என தெரியாத நீயெல்லாம் எப்படி  எங்களை தப்பு சொல்லலாம் என்பது போல் பதிவிட்டிருந்தார்.

இதில் கவனிக்கதக்க விடயம் நான்  இருபது தொடக்கம் ஐம்பது வரிகளில் எனக்கான விளக்கங்களோடு வேகமாக வினாடிக்கணக்கில் தமிழில் நேரடியாக  தட்டச்சிட.... அவர்   சில நிமிடங்கள் எடுத்து வேறெதிலோ எழுதி  எழுத்து சரிபிழை பார்த்து இரண்டு தொடக்கம் நான்கு வார்த்தைகளை மட்டும் திரும்ப திரும்ப காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தார்.

இறுதியில் எனக்கு அடிப்படை தமிழறிவே இல்லாமல் கருத்திட தகுதி இல்லை எனவும்  இம்மாதிரி கருத்துக்களை வெளியிடவும் தகுதி வேண்டும் எனவும்  கூறியிருந்தார்.

தமிழ் மொழித்தகுதி குறித்த அவரின் பதிவுக்கு நான் எழுதிய கருத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.

முதலில் தகுதியை நிர்ணயிப்பது எது என தெளிவாக்கிக்கொள்ளுங்கள். என் கேள்விகளுக்கு முழுமையாக பதில் தர முடியாமல் சமாளிப்பாய் என் கருத்தும் பொதுவானது என சொல்லும் நீங்கள் .....

நான் சொன்ன ஒரு கருத்திலிருந்த மூன்று எழுத்துப்பிழைகளை வைத்து எனக்கு அடிப்படை தமிழ் அறிவும் தகுதியும் இல்லை என சொல்வது தான் மெத்தப்படித்த அறிவுடையோர் என தங்களை சொல்லிக்கொள்வேர் செய்வது எனில் எனக்கு அப்படிப்பட்ட தமிழறிவு வேண்டாம். 

மேதைகள் எழுத்தில் பிழை விட்டதில்லை என எங்கே சொல்லி இருக்கின்றார்கள்?தவறொன்றினை சொன்னாலதை உணர்ந்து திருத்திக்கொள்ளாமல் நீ என்ன பெரிய மேதையோ என திரும்பிக்கேட்பது தான் மேதாவித்தனம் என இன்றைக்குத்தான் புரிந்திட்டேன்!

என் கருத்து பொதுவானது எனில் உங்கள் கருத்து என்னை நேரடியாக குற்றம் சுமத்தியதாய் உள்ளதே! இடை ச்செருகலாய் பூசணிச்செடியா கொடியா என தெரியாத நீயெல்லாம் தமிழ் பற்றி பேச வந்திட்டியா எனும் கிண்டல் வேறு!தமிழ் தெரியாமல்தான் தமிழில் பதில் தட்டச்சிட்டுக்கொண்டிருக்கின்றோமா? 

பூசணியை கொடி என சொல்லாமல் விட்டதனால் தகுதி இல்லாமல் போன என் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் தமிழில் தகமை பெற்ற தாங்கள், ஒரே வரி பதிலையும் திரும்பத்திரும்ப ஒரே பதிவையும் காப்பி பேஸ்ட் செய்து போடுவதும் பதிலின்றி திண்டாடுவதும் தாங்கள் கூறும் தகுதி எனில் எனக்கு அதுவும் வேண்டாம்.

நாங்களெல்லாம் கற்றதும் கைமண் அளவு தான், கல்லாதது உலகளவு தான் அப்படியே இருக்கட்டும் எங்கள் தகுதி குறித்து நீங்கள் விமர்சிக்க தேவையில்லை. உங்களிடம் வந்து உங்களை நேரடியாக குற்றம் சுமத்தினால் என் தகுதி குறித்து பேசுங்கள்.எங்கேயும் நியாயம் எடுத்து சொல்ல சர்வகலாசாலை போய் படிக்க தேவையில்லை. நாலாம் கிளாஸ் படித்தவனும் கேட்கலாம். தமிழன் எனும் உணர்விருப்பவன் எவனும் கேட்கலாம்.

மேலே சொன்ன கருத்தை நான் பகிர்ந்த பின் அதற்கான பதில் அந்த தமிழ் அறிந்த மனிதரிடமிருந்து இதுவரை வரவில்லை.

எனினும் பத்தாம் வகுப்பு படித்து  புலம் பெயர்ந்தேன் என்பதனால் என் தமிழறிவு மட்டுப்பட்டதெனச் சொல்லும் அவர்களுக்காக என் தமிழறிவு குறித்த விளக்கம் கீழே...!

பத்தாம் வகுப்போடு புலம் பெயர்ந்தாலும் நீங்கள் நினைக்கும் ஏனையோர் போல் பத்தாம் வகுப்போடு என் கல்வி நிறுத்தப்பட்டதில்லை.  புலம் பெயர்ந்த நாட்டிற்கு என் வாழ்வாதாரத்துக்கு எது தேவையோ அதில் கற்று தேர்ச்சி பெற்றுத்தான் இருக்கின்றேன். இன்னும் கற்றுக்கொண்டும் தான் இருக்கின்றேன். புலம் பெயர்ந்த நாட்டிலும் நான் எனக்கான திறமையை வெளிக்காட்டி  அன்னிய மொழியில் தேர்ச்சி பெற்றும் படிப்பிலும் பணியிலும் சிறந்த இடத்தினை தான் பெற்றிருக்கின்றேன் என்பதை இந்த இணைப்பில்  சென்றால் அறிந்திடலாம்!
அத்தோடு சுவிஸுலும் இலங்கையிலும் நடைபெறும் பல இலக்கியக்கூட்டங்கள், நூல் வெளியீடுகளுக்கும் நான் சுவிஸ் வந்த காலம் முதல்  அழைப்பு வருவதும்  அம்மாதிரி கூட்டங்களை  தவிர்ப்பதுமாய் பொது இடங்களில் என்னை நான் வெளிப்படுத்தாமல் எனக்கும் என் குடும்பத்துக்கும் எது அவசியம் என உணர்ந்து அவைகளுக்கேற்ப  என் வாழ்க்கையை திட்டமிட்டு கொண்டிருக்கின்றேனே தவிர நீங்கள் நினைப்பது போல் தகுதியின்மையினால் அல்ல!

என்னுடைய முதல் ஆக்கம்  நான் வளர்ந்த ஊரான பெரிய கல்லாறு வை,எம்.சீ.ஏ யின் கையெழுத்துபிரதியாய் வெளிவந்த மாத இதழில் வெளி வரும் போது என் வயது 13! 

இலங்கையில் பிரபல்யமான வீரகேசரி வார வெளியீடு ஞாயிறு பிரதியில் உலகமகாயுத்தம் குறித்து நான் எழுதிய கட்டுரை சிறுவர்களுக்கான பகுதியில் என் பெயர், பாடசாலை பெயரோடு தாங்கி வந்த போது என் வயது 13!

சிந்தாமணி என்னும் ஞாயிறு சிறப்பிதழிலும், தினகரன் ஞாயிறு பதிப்புக்களிலும் பல  பொதுஅறிவு சம்பந்தமான செய்திகள், குட்டிக்கட்டுரைகள் எழுத, எனது எழுத்துக்கள் நான் படித்த  பாடசாலையை அகில இலங்கை முழுவதும் அறியச் செய்ததும்  அக்காலத்தில் எனக்கு தினம் பாராட்டுக் கடிதங்களைத்   தாங்கி வரும் தபால்காரருமாய் என் பள்ளிக்கால திறமைகள் என்னை சிகரத்தில் ஏற்றின. இது இப்போதும் என் பள்ளியில் அன்று எனக்கு சமூகக்கல்வி ஆசியராக இருந்து இன்று அதிபராய் இருக்கும் கந்தசாமி சாரால் நினைவு கூறப்படுகிறது என்பதை இங்கு பெருமையாக என்னால் சொல்லிக் கொள்ள முடியும்.

1991ல் என் 17-18 வயதில் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் அவர்களின் பூவரசு இதழ் ஜேர்மனிலிருந்து வெளி வந்த போது தொடர்ந்து வந்த சில இதழ்களில் என் கவிதைகள் பிரசுரமானதும், 19 வயதில் ராஜிவ் காந்தி கொலை நடந்த போது  அது குறித்ததான என் கட்டுரைகள் சுவிஸில் வெளி வந்த பல சிற்றிதழ்களில் வெளியாகியதும். சுவிஸில் வெளிவந்த தமிழ் ஏடு பத்திரிகையில் செய்திகளை திருத்தும் பணியில் இருந்ததும், அங்கே கல்லாறு சதீஷின் அறிமுகமும், அதே பத்திரிகையில் ராஜிவ் காந்தி கொலை குறித்த என் கட்டுரையும் இன்னும் பல பதிவுகளும் அக்கால இலக்கிய கூட்டங்களும், நான் எனக்கு தேவையில்லை என விட்டு ஒதுங்கி வந்தவை!  நானே என்னை பொதுமன்றங்களிலிருந்து மறைத்து க்கொண்டேனே தவிர என் திறமையின்மையால் யாரும் என்னை  துரத்தவில்லை. இன்று வரை அழைப்புகள் வந்தபடி தான் உள்ளது. எனினும் நான் தவிர்க்கின்றேன் என்பதை சுவிஸில் நடந்த படைப்பாளிகள் இலக்கிய கூட்டத்தினை ஒழுங்கு செய்தவர்களும் அறிவார்கள். 

இணைய தளங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளும் கட்டுரைப்பதிவுகளும், விவாதத்திரிகளில் பங்கெடுத்தலுமாய் எழுதி உலகெங்கும் இருக்கும் பல தமிழ் உறவுகளோடு நட்பாயிருப்பதும் இன்றும் தமிழ் மன்றம், முத்தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலா போன்ற தளங்களிலும் ஆல்ப்ஸ் தென்றல் எனும் வலைப்பூவிலும் எழுதி வருவதும் இது வரை என்னைக்குறித்து நான் வெளியிடாத தகவல்கள். புத்தகங்களை வெளியிட்டால் தான் என் தகுதி மேம்படும் எனில் என்னால் பத்து புத்தகங்கள் கூட வெளியிட முடியும் என்பதையும் புரிந்திடுங்கள். 

பத்தாம் வகுப்புடன் விட்டு வந்ததால் என் தகுதி குறித்த கேட்ட மேதையே.... நீர் கற்ற கல்வி தமிழில்  தட்டச்சு வேகத்தில் விடப்பட்ட சிறு பிழையை பூதாகாரமாக்கியும், அதே பதிலிடும் வேகத்தில் நான் இட்ட பூசணிக்கொடிக்கான  சிறுபிழையையும் சுட்டிக்காட்டி  நீர் யார் என் தகுதியை கேள்வி கேட்க வைத்ததெனில்  நான் கற்ற தமிழ்   உங்களுக்கு முன் பல வழிகளிலும் என்னை உயர்த்தி தான் இருக்கின்றது.

எனக்கு எல்லாம் தெரியும்... தமிழே என்னிடம்தான் என்ற உங்கள் மேதாவித்தனத்தைவிட நான் தமிழில் இன்னும் குழந்தைதான்... எனக்குத் தெரிந்த தமிழ் இதுதான் என்னும் அவையடக்கம் தரும் எனது தமிழறிவு எந்த விதத்திலும் குறைவில்லை... சொல்லப்போனால் எல்லாம் தெரியும் என்பதைவிட எனக்குத் தமிழ் எழுதத்தெரியும் என்ற என் எண்ணமே இங்கு உயர்ந்தது.

அத்துடன் தமிங்கிலிஸில் தட்டச்சிட்டு தமிழை கொலை செய்யும் இக்காலத்தில் தப்புத்தப்பாகவேனும் தமிழில் தட்டச்சிடுவோரை நான் ஊக்கப்படுத்தி அவர்களை எழுத வைப்பதும்... எனக்கு பின்னால் நட்பெனும் தமிழ் இளையோர் கூட்டம் இருப்பதையும் இனிமேலாவது அறிந்து புரிந்து கொள்ளுங்கள்.

புகழ், பாராட்டு, மலர்மாலை, சால்வை இவற்றை மட்டுமே கணக்கில் கொண்டு இவற்றிற்காக எழுதும் ஆள் நானில்லை... இவற்றில் எனக்கு துளியும் விருப்பமும் இல்லை. தமிழ் மேல் எனக்கு இருக்கும் காதலால் அதன் கரங்களை நான் பிடிக்க... என் எழுத்தின் வீச்சில் மகிழ்ந்த தமிழ் என்னைப் இறுகப் பற்றிக் கொள்ள... இதோ இப்போது என் எழுத்தின் பலனாக நிறைய உள்ளார்ந்த தமிழ் நட்புக்களைப் பெற்றிருக்கிறேன். உங்களைப் போல் தமிழே எனக்கு அடிமை என்று சொல்லும் கூட்டத்தை தள்ளியே வைத்திருக்கிறேன்.  இன்னும் சொல்லப்போனால் என் தமிழறிவுத் தகுதி எந்தவிதத்திலும் குறையவில்லை என்பதை நானும் அறிவேன், என் நட்புக்களும் அறிவார்கள்.

பணத்தினை வீசி  பிரபல்யமானவர்கள் அருகில் நின்று நிழற்படம் எடுத்து போடுவதும், நடிகை நடிகர்களுடன் நின்று போட்டோ எடுத்து போட்டால் பிரபல்யமானவர் என கணிப்பிடுவதும் தான் உங்கள் தமிழ் அறிவுக்கான் தகுதி எனில் எனக்கது வேண்டவே வேண்டாம்.

ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் படித்தோர் பெரும்பாலானோர் தமிழில் தட்டச்சிட ததிங்கினதோம் போடுவதை நானறிவேன். அவர்கள் எல்லாருமே வல்லின, மெல்லிய, இடையினம் புரியாது  தவறாய் எழுதி அர்த்தங்களையே மாற்றிவிடுகிறார்கள். மேலும் அவர்களுக்கு  குறிலெது நெடிலெது என்று தெரியாமல் கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதையும் பார்த்து வருந்தித்தான்என் கருத்தினை இட்டேன்.  நான் இப்போது இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ இல்லை எனது 16 வயதில் சுவிஸ் வந்தேன்... ஆனால் இன்றளவும் என் தமிழில் தடுமாற்றம் இல்லை என்று சொல்லி அவர்களின் தமிழ் திருத்தமாக வேண்டும் என்பதற்காகவே என்னை வெளிப்படுத்துகிறேனே ஒழிய என்னை பிரபலப்படுத்திக் கொள்ள அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் என்னை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்வதை கேலி கிண்டல் செய்து என் திறமை குறித்துப் பேசி, மட்டம் தட்ட  உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

சேற்றில் முளைத்த காளான்கள் போல் புத்தக வெளியீடுகள் இருப்பதும்.பணம் இருக்கின்றது என்பதற்காக அர்த்தமே இல்லாத நான்கு வரிக்கவிதைகளையெல்லாம் புத்தகமாக வெளியிட்டு கவிஞரென புகழ் பாடுவதும் என்னைப்போன்ற நிஜமான தமிழ் ஆர்வலர்களுக்கு ஆதங்கம் தரக்கூடியது எனும் போது நாங்கள் அதை தவறென சொல்லத்தான் செய்வோம்.இனிமேலும் சொல்லுவோம்.

இலங்கையில் தமிழ்  வளர்க்கும் பொறுப்பில் இருப்பதாக சொல்லிக்கொண்டு சகிப்புத்தன்மையையும், தவறென சுட்டினால் அதை உணர்ந்து புரிந்து கொள்ளும் தகுதியும் நிதானமும் இல்லாது என் தகுதி குறித்து கேள்வி கேட்டவர்களுக்கு இப்போது புரியும் என்று நினைக்கிறேன். என் தகுதி என்ன..? தமிழ் மீது நான் கொண்ட ஆர்வம் எப்படி...? என்பதையெல்லாம் ஜிகினா மின்னும் உலகிற்குள் வலம் வரத்துடிக்கும் உங்களைப் போன்றோர் அறிந்து கொள்ள வேண்டியதில்லை என்றாலும் இதைப் படித்தால் கண்டிப்பாக என் தகுதி என்ன... என்பதை புரிந்து கொள்வீர்கள். இதற்கு மேலும் தமிழே நாங்கள்தான் என்று என் முன்னே குதிராட்டம் போட வரமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

நன்றி.