30 டிசம்பர் 2015

இதயமே இதயமே!


தேவைகளின் ஆரம்பமும் தேடலின்
முடிவுமாய் ஆனவன் நீ
உன் இருப்பு என்னுள் சோகத்தின்
தொடக்கமாய் ஆனதேனோ?

என்னுள் நுழைந்து உணர்வாகி
உயிரோட்டமுமாயானவனே
ஆரம்பமும் முடிவுமாய் என்னை
ஓரிடத்தில் நிறுத்துவதேனோ?

நீயில்லா இடமெல்லாம்  நிம்மதியும்
நின்றுதானே போகின்றது
பேச்சும் மூச்சும் ஒரு நொடியில் நின்றிடலாம்
கடந்த நாட்கள் மறந்திடுமோ..?

உன் நினைவால் ஓட ஓட விரட்டுகின்றாய்...
தேய்ந்து விடும் நினைவும் இல்லை.
ஓய்ந்திருக்கும் மனதுமில்லை.
ஒழிந்து கொள்ள இடமுமில்லை

சடுதியில் வந்தாலும் குறுகிய நாட்களிலே
அனைத்திலும் நிறைந்தவன் நீ யென்பதை
என்னுள்ளிருக்கும் உன் நினைவால் தவிக்கும் போது
கடிந்து கொண்டேன் நீ யார் எனக்குள்?



இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்
பிரிவு எனும் துயரிலே என்னை தள்ளியதேன்
உன் பெயர் சொல்லி நான் பைத்தியம் ஆனேன்
நிழல் என தொடர்ந்தேன் அதை நீ அறிவாயோ?
நிழல் தர நீ இங்கு வருவாயோ?

பொன்னை போல் பூவை போல் 
உன்னை சூடி கொண்ட நான் இன்று வாடி கிடப்பதோ?
பிரிவிங்கே உண்மை தான் என்றால் 
உறவு என்னையா வாழ்வது கனவு பூமியா?
பாதைகள் இல்லை என்றால் பயணங்கள் போவதோ
நம் குற்றம் என்ன ஏதோ தெய்வத்தை நோவதோ
யாரிடம் என்ன சொல்வது இனி சேரும் இடம் இங்கு வேறேது

எங்கோ நீ இருக்கின்றாய் என்றே உள்ளம் சொல்லுதே 
அதில் என் உயிரும் உள்ளதே
கண்ணுக்குள் தூங்கிடும் கங்கை கன்னம் இறங்குதே 
அதுவும் உன்னை தேடுத்தே
நீ பார்த்த நிலவு இங்கே நீ எங்கே தெய்வமே
வாராமல் நீ இருந்தால் வாழ்வேது நெஞ்சமே
கூவிடும் குயில் வாடுது ஒரு கூண்டு எங்கே இது நியாயமோ?...!

27 டிசம்பர் 2015

நான் சின்னவளாய் இருந்தபோது - 3

இப்போது மூன்று வயதில் நர்சரிக்கு குழந்தையை அனுப்பும் பொழுதே இச்சிறுவயதில் நர்சரியா என அங்கலாய்க்கின்றோம். அக்காலத்தில் பாடம் என தெரியாமலே ஆறு மாதக்கைக்குழந்தையிலிருந்தே பாடல்களை பாடி அவர்களுக்காக் கல்வி ஆரம்பித்து விட்டது என்றால் நம்புவீர்களா? நினைவாற்றலைபெருக்கிட ஆறுமாதக்குழந்தைகளுக்கே அவர்கள் தானாய் அமர ஆரம்பித்ததுமே பாட்டிமார்கள் முதல் அம்மா மார்களின் தாலாட்டும் பாடலும் ஆரம்பித்து விடும்

ராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ... ஆரடிச்சு நீ அழுதாய் அடித்தாரை சொல்லி அழு ஆக்கினைகள் செய்திடுவோம்.
மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூ செண்டாலே தாத்தா அடிச்சாரோ தாமரைப்பூ செண்டாலே ஆராரோ ஆரிரரோ.

இப்படி பெரும்பாலான பாடல்கள் பேச்சுத்தமிழில் தான் பாடப்படும்.எனினும் ஒரிரு தடவை சொல்லிக்கொடுத்தாலே நினைவில் இருக்கும்படி அபி நயங்களோடு விரல்களைஅசைத்து உடலை வளைத்து பாடுவார்கள்.

சப்பாணியாம் பிள்ளை சப்பாணி சப்பாணிச்சண்டைக்கு போனாளாம் சண்டை செய்யுமாம் சப்பாணி முத்துப்பதித்தொரு கையாலே முழங்கிக்கொட்டுமாம் சப்பாணி 

என பாடி குழந்தையின் கரங்களை தட்டுவதற்கு பழக்குவார்கள்,
குழந்தையும் சப்பாணியாம் பிள்ளை சப்பாணி என ஆரம்பித்தாலே பொக்கைவாய்ச்சிரிப்போடு கைகளை தட்ட ஆரம்பித்து விடும். 
கை வீசம்மா கைவீசு கடைக்கு போகலாம் கைவீசு மிட்டாய் வாங்கலாம் கை வீசு பாடி உண்ணலாம் கை வீசு 
என சொல்லி அமர்ந்திருந்த படியே கைகளை முன்னும் பின்னுமாய் வீசி ஆட்ட சொல்லி தாமும் சேர்ந்து கைகளை வீசுவார்கள். சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயும் மயிலே சாய்ந்தாடு குத்து விளக்கே சாய்ந்தாடு கோயில் புறாவே சாய்ந்தாடு மானே மயிலே சாய்ந்தாடு மரகதக் கிளியே சாய்ந்தாடு கண்ணே மணியே சாய்ந்தாடு கட்டிக் கரும்பே சாய்ந்தாடு மயிலே குயிலே சாய்ந்தாடு மடியில் வந்து சாய்ந்தாடு
என சொல்லியும் அமர்ந்திருக்கும் குழந்தை தன்னை முன்னும் பின்னும் அசைக்கும் படியாய் ஆட பழக்குவார்கள். சப்பாணியாம் பிள்ளை சப்பாணி என கைகளை தட்டுவதும். கைகளை வீசி கை வீசம்மா என பாடுவதும் ,சாய்ந்தடம்மா சாய்ந்தாடு என சொல்லி சாய வைத்து ஆட வைப்பதுமாய் குட்டிகுழந்தையிலேயே குழந்தைக்காக உடற்பயிற்சியோடு,உளவியல் ரிதியான குட்டிகுட்டி ரைம்ஸ்களும் கூட கற்பிக்கப்பட்டது. அடுத்து ஒரிரு வயதாகி பேச ஆரம்ப்பித்ததும் ஒன்று இரண்டு மூன்று சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பார்கள். அந்நாட்களில் சின்னஞ்சிறு மழலைகளுக்கு கணக்கு சொல்லி கொடுக்கும் விதமே தனி. 
ஒண்ணு,ரெண்டு மூணு ஒணான் என்றே கூறு நாலு அஞ்சு ஆறு மரத்தின் மேலே பாரு ஏழு எட்டு ஒன்பது உந்தன் கையைத்தட்டு 

கையை தட்ட வேண்டும்..ஒண்டு, ரெண்டு மூண்டு என பாடினாலும் தட்டச்சிடும் போது அதை தவிர்க்க முயற்சிக்கிறேன்.

அதே வரிசையில் இன்னும் சில பாடல்கள்..

ஒன்றும் ஒன்றும் இரண்டு. இரண்டும் ஒன்றும் மூன்று மூன்றோடு ஒன்றைசேர்த்தால் நான்கு நான்கும் ஒன்றும் ஐந்து 
என் கையின் விரல்கள் ஐந்து

கையில் இருக்கும் விரல்களை விரித்து காட்டியபடியே என முதல் ஐந்து இலக்கங்களை கைவிரல்களைக் காட்டியே கற்பிப்பார்கள் 
எண்கணக்கு பத்து வரை நினைவுக்கு இருக்க அன்றாட பயன்பாட்டு பொருட்களை பயன் படுத்தும் வித்தையை என்ன வென்போம்.
ஒன்றும் ஒன்றும் இரண்டு பூவில் இருப்பது வண்டு இரண்டும் இரண்டும் நான்கு இனிப்பாய் இருக்கும் தேங்காய் மூன்றும் முன்றும் ஆறு வேலைசெய்தால் சோறு. நான்கும் நான்கும் எட்டு நன்றாய் பாடுவாள் பட்டு ஐந்தும் ஐந்தும் பத்து அன்பே நமக்கு சொத்து கீழே இருக்கும் பாடலின் வார்த்தையாடலைக்கவனித்தால் ஒவ்வொரு வார்த்தையையும் நம் மூதாதையர் எப்படி அறிவுபூர்வமாக இணைத்திருப்பார்கள் என புரியும். கொக்குச்சிக் கொக்கு ரெட்டை சிலாக்கு முக்குச் சிலந்தி நாக்குலா வரணம் ஐயப்பன் சோலை ஆறுமுக தாளம் ஏழுக்குக் கூழு எட்டுக்கு முட்டி ஒன்பது கம்பளம் பத்துப் பழம் சொட்டு கடந்த வாரம் என் தங்கை தன் ஆறு மாத பெண் குழந்தையோடு வந்து சில நாட்கள் என் வீட்டில் நின்றாள். அவள் குழந்தைக்கு நான் வைத்த செல்லப்பெயரே பார்பி டால் என்பது தான். அத்தனை அமைதி.அனைத்தினையும் கவனித்தாலும் இயல்பான வரக்குடிய சத்தம் கூட இல்லாமல் அமைதியாய் பொம்மை போல் இருக்கின்றாளே என கைகளை பிடித்து சப்பாணி யாம் பிள்ளை சப்பாணி என பாட்டை இரண்டு தடவை பாடினேன். மூன்றாம் தடவை நான் பாட ஆரம்பித்ததும் குழந்தை தானாக கல கலவெனும் பொக்கை வாய் சிரிப்பும்.சத்தமுமாய் கைகளை தட்ட ஆரம்பித்தாள். பிள்ளை அமைதியாய் இருந்ததுக்கு காரணம் தாயோ தகப்பனோ அக்குழந்தையுடன் பேசி, பாடி கலகலப்பாயிராதது தான் எனும் உண்மை புரிந்ததும் எனக்குள் கவலையாய் இருந்தது.

அது வரை நான்கைந்து நாள் அத்தனை அமைதி, சின்னகுழந்தை இருக்கும் வீடா என எனக்குள் ஆச்சரியம் தரும் படி அத்தனை அமைதியாயிருந்தாள்,
தங்கை குழந்தையை பார்த்ததும் தான் எனக்குள் இப்படி ஒரு பதிவு எழுதினால் என்ன என்று தோன்றியது. ஏற்கனவே தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலாவில் இப்பாடல்களை நான் தொகுத்திருந்தாலும் சின்ன வயதில் நான் கேட்டு இருந்தவைகளை என் நினைவாற்றலில் இருந்தபடியேயும் தட்டச்சிட்டு பகிர்வதால் இப்பாடல்களில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். இக்காலத்தில் அப்பா,அம்மாவும் வேலைக்கு போகும் சூழலில் பெரும்பாலான குழந்தைகள் இம்மாதிரியான வாய்ப்புக்களை இழப்பதனால் பல நேரங்களில் அந்தந்த வயதுக்குரிய அசைவுகள் இன்றி பிடித்து வைத்த பொம்மை போலிருக்கின்றார்கள். 

குழந்தைகளுக்கு இம்மாதிரி பாடல்கள், குட்டிக்கதைகளை சொல்லி கொடுக்கும் போது குழந்தையின் பார்த்தல், கேட்டல், கிரகித்தல் குறித்தும் கவனத்தில் கொள்ள முடியும். குழந்தைகள் அந்தந்த வயதுக்கே உரிய குறும்புகள் சத்தங்களோடு வளர்கின்றார்களா என்பதை அனுபவமிக்க தாய்மார்களால் கண்டு பிடிக்க முடியும்.ஆக்டிவிட்டி மற்றும் உடல், உளவியல் குறைபாடுகள் இருந்தால் சிறுவயதில் கண்டு பிடித்து தகுந்த சிகிச்சை செய்யவும் முடியும் என்பதை உணராமல் குழந்தை ஒன்று அது பொம்மை போலிருந்தாலும் போதும் எனும் நிலைமை மாற வேண்டும்.  

பெற்றவர்கள் வீட்டிலிருந்தாலும் வீட்டு வேலை, தொலைக்காட்சி, தொலைபேசி, கணணி என பொழுது போகும் சூழலில் குழந்தைகளை அக்டிவ்வாக வளர்ப்பது எப்படி என அறியாதவர்களாயிருப்பதனால் குழந்தைக்குள் ஒருவித மந்த சக்தியும், ஆர்வமின்மையும் உருவாகிட காரணமாகின்றது.சின்னக்குழந்தைகளோடு பேச வேண்டும், பாட்டு சொல்லி கொடுக்க வேண்டும் என்பதுவும் தெரிவதில்லை. சில தாய்மார்கள் பிள்ளைக்கு பாலூட்டும் போதும் கவனத்தினை வேறெங்கோ வைத்திருப்பார்கள். 

இதற்கு என் தங்கையும் விதி விலக்கல்ல என நான் புரிந்ததும் நான் சொன்னது ,, தங்கையையும் பிள்ளைகளையும் இரண்டு மாதங்களாவது எங்கள் வீட்டில் விடுங்கள். பிள்ளையை இப்படியே வளர விடாதீர்கள் என்பது தான். என் பிள்ளைகள் சுவிஸில் பிறந்திருந்தாலும் நான் என் நினைவில் இருந்த படி என் பசங்களுக்கு இவைகளை சொல்லி கொடுத்திருந்தேன். அதனால் தானோ என்னமோ என் மகனும் மகளும் எட்டு மாதங்களில் நடக்கவும், ஒரு வயதுக்குள் பேசவும் தொடங்கி இருந்தார்கள்..

விசேசமாக குழந்தைகளாயிருக்கும் போது இருவரையுமே இக்கால வோக்கர் எனப்படும் நடைவண்டியில் விட்டதே இல்லை.. 
படம் நன்றி இணையம் 
என்னவர் பிள்ளைகளுக்கு என ஸ்பெஷலாக செய்த நடை வண்டி
மகளுடைய ஒரு வயது பிறந்த நாள் போட்டோ

இப்பதிவை படிக்கும் ஒரு சில தாய்மார்களாவது தமக்கு தெரிந்த படியே தம் குழந்தையை ஐந்து மாதம் முடிந்ததுமே இப்பாடல்களை பாடி குழந்தைகளை உடல், உள ஆரோக்கியத்தோடு அந்தந்த வயதுக்குரிய துடிப்புக்களோடு வளர உதவிடுமானால் அதை விட மகிழ்ச்சி வேறில்லை தானே?
முழுமையாக்க வேண்டும் என முயன்றதில் கொஞ்சம் நீண்ட பதிவாகி விட்டது. மன்னித்து விட்டு உங்கள் கருத்தினை சொல்லுங்கள். ..
தொடர்வேன்!

25 டிசம்பர் 2015

குழந்தைத்தொழிலாளி!

படப்பகிர்வு நன்றி 
சேனைத்தமிழ் உலா  நண்பன். 

கூரிய பார்வையோடு, வெயிலில் உருகி
வயிற்றுப்பசிக்காய் இளமை விலை போக
வீதியோரத்தில் அமர்ந்து விடியலை தேடுமிவன்
கண்ணில் தெரிவதெல்லாம்...நாளைய எதிர்காலம்...!

திக்கெட்டும் திசையெங்கும்  யாரையும் காணலையே!
நாலு கூறு பழம் விற்றால்  நாலு உயிர்ப்பசி அடங்கும்
நாவல் பழம் விற்றிடுமோ வயிற்றுப்பசி தீர்ந்திடுமோ?
நாவரள நிற்கின்றான் நாளைய தலைவனாம் இவன்!

கல்வி கற்கும் வயதினிலே கடமையிவன் தலைமேலே
காத்திடுவான் இவனென்னும் நம்பிக்கையில் தாயங்கே!
இவன் சொல்லும் கதை கேட்டால் கண்ணீர் கூட இரத்தமாகும்!
இவன் தலையின் சுமை நாமறிந்தால் நம சுமையெல்லாம் பஞ்சாய்ப்போகும்!

தகப்பனில்லா பிள்ளையவன் சுமைதாங்கி யாகி விட்டான்
அரை வயிறும் கால் வயிறும் ஒன்றையொன்று தின்றிடுமே!
பசி என்ற சொல் தவிர இவன் உணர்ந்ததென்றுமில்லை
கருணைக்கிங்கே இடமில்லை. காலம் செய்யும் கோலம் இது!

குட்டிப்பையன் சுட்டியாய்  துள்ளிவிளையாடும் வயதில்
அமைதியாய் அடங்கியிங்கே உழைத்துப்பிழைக்கின்றான்
கால் போன போக்கில் வாழும் காளையரே கதை கேளீர்
காலமிவன் வாழ்வில் இட்ட சோகம் தனை  பாரீர்.

கருமை நிறக்கண்ணனாயிருந்து  காண்போரை கலங்க வைக்கும்
கடமை கண்ணனிவன் காலமதை எதிர்த்து  நின்று
கல்வியிலும் இவன் சிறந்து... கடமைகளை முடிப்பான்
விளையும் பயிரிவனாம், விதியை வென்றிடுவான்.

பரிதாபம் காட்ட வேண்டாம். பரிவாய் நல் வார்த்தை வேண்டாம்
பசிதாகம் தீர்த்துவிட்டால் பண்பாய் அவன் பிழைத்திடுவான்.
விடியல் அவன் வாழ்வில் உண்டு, விடைகள் நம் கரத்திலுண்டு!
கருணை கொண்ட உள்ளங்களே... கரங்களை நீர் நீட்டுங்களேன்!

24 டிசம்பர் 2015

நான் சின்னவளாய் இருந்தபோது.- 2

இது ஒரு தொடர் பதிவு! முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன்!

பள்ளிக்கால வகுப்பு இடைவேளையில் அல்லது மாலை நேரத்தில் தோழிகளோடு ஒன்று சேரும் போது மணலில் வீடு கட்டி,அங்கேயே மணல் சோறுகறி சமைத்து விளையாடிய காலங்கள் இனிப்பானவையே!

நான் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த ஆரம்ப பாடசாலை முன்பாக ஒரு பெரிய வம்மி மரம் அகன்று விரிந்து வளர்ந்து நிழல் கொடுத்து கொண்டிருக்கும்.அந்த நிழல் தான் எமது விளையாட்டு திடல்!



வம்மி மர நிழலில் தான் விளையாடுவோம்.வம்மி மரம் பூக்கும் காலங்களும் அந்த பூக்கள் குண்டு குண்டாக பூத்து குலுங்கும் போதுஅதை எட்டிப்பறித்து கைக்குள் பிடித்தால் மெதுமையாக இருப்பதனால அதை பந்து போல் உருட்டி விளையாடியதும். பூக்களை ஒவ்வொரு உதிரியாக உதிர்த்தியும் தானாய் உதிரும் போதும் தரையெல்லாம் ஆரஞ்சு, மஞ்சள் வர்ணக்கோலமிட்டது போல் அழகும் அதே வம்மி மர இலை ஆலிலை போல் அகன்று விரிந்திருப்பதால் முன்னாலிருக்கும் பிள்ளையார் கோயில் பிரசாதம் வாங்கவும்,யாராவது நேர்த்தி கடனுக்காய் பொங்கலிட்டால் பொங்கல் வாங்கிச்சாப்பிட தட்டாவதுமான இனி நினைவலைகள் இன்னும் மனதுக்கு இனிமை தருவதாய் இருக்கும். 

படம் நன்றி இணையம். 

நம் பால்யகால நினைவுகளை கிளரும் இன்னொரு பாடல்...வார்த்தையாடல் எவ்வளவு அழகாக வந்து விழுகின்றது.

நீ எங்கே போனாய்?
ஊருக்குப் போனேன்.
என்ன ஊர்? மயிலாப்பூர்
என்ன மயில்? காட்டுமயில்
என்ன காடு? ஆறுகாடு
என்ன ஆறு? பாலாறு
என்ன பால்? கள்ளீப்பால்
என்ன கள்ளி? இலைக்கள்ளி
என்ன இலை? வாழைஇலை
என்ன வாழை? கற்பூர வாழை
என்ன கற்பூரம்? ரசக்கற்பூரம்
என்ன ரசம்? மிளகு ரசம்
என்ன மிளகு? வால்மிளகு
என்ன வால்? நாய்வால்
என்ன நாய்? மரநாய்
என்ன மரம்? பலாமரம்
என்ன பலா? வேர்ப்பலா
என்ன வேர்? வெட்டிவேர்
என்ன வெட்டி? பனைவெட்டி
என்ன பனை? தாள்பனை
என்ன தாளி? விருந்தாளிi
என்ன விருந்து? நிலாவிருந்து
என்ன நிலா? பிறைநிலா
என்ன பிறை? நெற்றிப்பிறை
என்ன நெற்றி? பெண்நெற்றி 
என்ன பெண்? மணப்பெண்
என்ன மணம்? பூமணம்
என்ன பூ? மாம்பூ
என்ன மா? அம்மா.

பொதுவாகவே ஏட்டிக்குப்போட்டியாக பேசும் போது வாயாடி எனும் பட்டம் தானாகவே ஒட்டிகொள்ளும்.ஆனால் அன்றைய காலகட்டத்தில் வழிவழியாக வந்த பாடல்கள் ஏட்டிக்குபோட்டியாக கேள்விக்கு எதிர்கேள்வியொடு வருவதையும் அவைகள் அறிவை வள்ர்ப்பதாக இருப்பதையும் கவனித்தால் நம் முன்னோர்கள் நமக்கென விட்டு சென்ற பல அரிய பொக்கிஷங்களை நாம் என்ன செய்ய போகிறோம் எனும் கேள்வி ஏழாமல் இல்லை.

அப்படியே மீட்டிப்பாருங்கள். சில நேரம் இந்தப்பாடல் கூட உங்கள் எல்லோருக்கும் நினைவில் வரும்

ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கேமுட்டை வைத்தாய்..
கல்லைபிளந்து கடலருகேமுட்டைவைத்தேன்
வைத்ததுமோ மூண்டுமுட்டை பொரித்ததுமோ ரெண்டுகுஞ்சு
மூத்தகுஞ்சுக்கிரைதேடி மூனுமலைசுற்றிவந்தேன்.
இளையகுஞ்சுக்கு இரைதேடி ஏழுமலைசுற்றிவந்தேன்

நினைவை மீட்ட முடிந்தவர்கள் தங்கள் பின்னூட்டத்தில் தஙகளுக்கு நினைவு வரும் பாடல்களையும் பகிரலாமே!

என்ன தான் தொழில் நுட்பத்தில் நான் வளர்ந்திருந்தாலும் 
நம் நிகழ்கால சந்ததி இழந்திருப்பவை என்ன?
எதிர்கால சந்ததி இழக்கபோவது என்ன?

இன்னும் தொடர்வேன்!

22 டிசம்பர் 2015

நான் சின்னவளாய் இருந்தபோது...


எத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா?

அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்! 

தமிழ் மொழியுடனான பள்ளி வாழ்வென்பது என் 12- 13 வயதி்ன் பின் தட்டு தடுமாறித்தான் சென்றது.ஆனால அந்த 12. 13 வயதிலேயே நான் முழு வாழ்க்கைகுமாக பெறவேண்டிய மகிழ்ச்சியை அடைந்திருப்பேன்! அத்தோடுஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் எனக்கான முத்திரையை பதிந்திருக்கின்றேன் என்பதை ஊரை விட்டு வந்து 25 வருடங்களாகியும் எனக்கு கற்பித்த நினைவுகளை ஆசிரியர்கள் என்னுடன் பகிரும் போது உணர்கின்றேன். 

கடந்த வாரம் விடுமுறைக்கு வந்திருந்த என் தங்கை என் நினைவுகளை
மீட்டி விட்டுச் சென்றார்! அனைத்திலும் திறமையாய் அனைவரிலும் முதலாய்... டாக்டராய் இருக்கும் தம்பியை விடவும் என் அக்கா  பள்ளியில் சிறந்து விளங்கினாள் என என்னை குறித்து தன் கணவரிடம் அறிமுகம் செய்த போது என் கண்களில் நீர்..!  

நாடு விட்டு நாடு புலம் பெயர்தலால் நான் இழந்தைவைகள் எத்தனை? அந்நிய மொழியும், நாட்டிலும் நான்  பெற்றவைகளும் அனேகமாயிருப்பினும் தாய் மொழியில் தாய் நாட்டில்  நாம் பெறக்கூடியவை அனைத்து இழப்புக்கள் தானே?

16 வயதில் சுவிஸ்ஸர்லாந்து நாட்டுக்கு வந்து முதல் ஆறுவருடங்கள் தமிழ் மொழிக்கும் எனக்குமான உறவு வார இறுதிகளில் மட்டும் அதுவும் பேச்சளவில் என்றாகியும் இருந்தது. ஆங்கில எழுத்துக்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பில்லாத ஜேர்மன் மொழி அதாவது டொச் மொழியை கற்க தமிழ் மொழியை  மட்டுமல்ல அதுவரை உறவாயிருந்த ஆங்கிலமும் கூட விலகித்தான் வைக்க வேண்டி வந்தது!எனினும் தமிழ் மொழி மீதான என் பற்று வளர்ந்ததே தவிர குறையவே இல்லை. கண்டதும் கற்க பண்டிதன் ஆகலாம் என்பதை இன்று வரை என்னில் ஆராய்ந்து கொண்டுள்ளேன்

பதிவில் எதையோ ஆரம்பித்து எங்கோ சென்று கொண்டிருக்கின்றேன். நான் இங்கே பகிர வந்த விடயமே வேறு.. என் சொந்த அனுபவங்களை  வேறொரு பதிவில் பகிர்கின்றேன். 

எனக்குள் என்றுமே பாடசாலை நாள் என்பது எனக்கு இனிக்கும் நினைவலைகள் தான். மீண்டும் வராத இனிய நினைவலைகள்! 

நம் பாடசாலை நாட்களில் நாம் பேச்சு வழக்கிலான பல பாடல்களை  பாடி விளையாடி  இருப்போம். அம்மாதிரியான விளையாட்டு பாடல்களை தொடராக இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன். 

நான்காம்,ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலே நானும் என் தோழிகளும் பாடசாலை இடைவேளைக்காகவே காத்திருப்போம். என் வகுப்பில் ஆண்பெண் இணைந்து படித்தாலும் பெண்கள் மட்டுமே சேர்ந்து விளையாடகூடிய விளையாட்டில் ஆண்களும்கல்ந்து கொள்வார்கள். அப்படிபட்ட ஒரு விளையாட்டு தான் பெண்களுக்கான பூப்பறிக்க போகிறோம் எனும் பாடலுடன் கூடிய விளையாட்டு.

படம் நன்றி இணையம் 
படத்தில் பையன் துணியை கையில் வைத்திருக்கின்றான் 
ஆனால் நாங்கள் பூக்கொத்து அல்லது இலைக்கொத்தை  வைத்து தான்  விளையாடினோம் 

குறைந்தது 20- 26 பேர் சுற்றி வர பெரிய வட்டமாக நெருங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். யாரும் பின்பக்கம் திரும்பி பார்க்க கூடாது.. விளையாட்டின் ஆரம்பத்தில் ஒருவர் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் கையில் ஒரு மலர் கொத்து கொடுக்கப்படும். அது மலரோ ஆலமர இலையோ வம்மி மர காயோ பூவரசம் தடியோ எதுவானாலும் அது தான் அந்த வயதில் பூ...

பூவை கையில் வைத்திருப்பவர் பாட வேண்டும். பாடிக்கொண்டே வட்டமாக அமர்ந்திருப்பவர்களை சுத்தி ஓடவும் வேண்டும்.. 

பூப்பறிக்க போகிறோம்..போகிறோம்.. போகிறோம்.. என சுத்தி சுத்தி ஓடிக்கொண்டே பாட அமர்ந்திருப்போர்  யாரைபறிக்க போகிறீர் போகிறீர் 
என எதிர்க்கேள்வி கேட்க வேண்டும்.. 

ஓடுபவர் சிறிது நேரம் அமைதியாக சுத்தி சுத்தி ஓடிய படியே தம் கையில் இருக்கும் மலர்கொத்தை யாராவது ஒருத்தர் பின்னால் மொதுவாக வைத்து விட்டு  ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அவர் விரும்பினால் யார் பின்னால் தான் மலர்கொத்தை வைத்தாரோ அவர் தன்னை எந்த பக்கத்தாலும் துரததிப் பிடிக்க முடியாத இடத்தில் ஓடிய படியே..அவர் பெயரைச்சொல்லி 

உதாரணமாக நிஷாவை  பிடிக்க போகிறோம் போகிறோம் 

என சொல்லி ஓடினால் அந்த நபர் உடனே திரும்பி பார்த்து மலர்கொத்தி்னை எடுத்து கொண்டு முன்னால் ஓடுபவரை அந்த  மலர்க்கொத்தால் தொட முயற்சிக்க வேண்டும். ஆனால் முன்னால் ஓடுபவர் பின்னால் வருபவர் இடத்தில் போய் உட்கார்ந்து வட்டத்தை நிரப்பி விட்டால் மீண்டும் விளையாட்டு ஆரம்பமாகும். 

அதே நேரம் முன்னால் ஓடுபவரை பின்னால் வருபவர் மலரால் தொட்டு விட்டால் மீண்டும் முன்னவரே ஆரம்பிக்க வேண்டும். 

இப்படி நாள் முழுதும் சுவாரஷ்யமாக ஒவ்வொரு பூவின் பெயரோடும் நண்பர்கள் பெயரோடும் விளையாடுவோம். பூக்களும் நண்பர்கள் பெயரும் மனப்பாடமாகியே விடும். 

அது ஒரு பொற்காலம்தான்...!

இப்படியாக நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.அப்படி ஒருசில பாடலகளை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..

ஓடு

ஓடு ஓடு
என்ன ஓடு ? நண்டோடு
என்ன நண்டு ? பால்நண்டு
என்ன பால்? கள்ளிப்பால்.
என்ன கள்ளி? சதுரக்கள்ளி
என்ன சதுரம் ? நாய்ச்சதுரம்
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி,
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளத்துநத்தை
என்ன குளம்? பெரியகுளம்.


 நட்புக்கள் தங்கள் நினைவலைகளில் தோன்றுவதை பின்னூட்டங்களில் பகிர்ந்தால் மகிழ்வேன். 

இப்பதிவு  தொடராக வரும்.!

20 டிசம்பர் 2015

நண்பனே! நண்பனே!





என் அன்புள்ள சினேகிதனே
ஆசையில் ஓர் கவிதை
நான் எழுதுவதென்னவென்று
நீ அறிவதினாலாவதென்ன?

பண்புள்ள மானிடனாம்
உன்னிடம் கண்டதென்ன?
அன்புள்ள உன்வார்த்தைகளில்
உரிமையின் ஜாலமென்ன?

நட்புக்கு இலக்கணமாய்
நல் வார்த்தை சொல்வதென்ன?
தப்பென்று தெரியும்போது
தட்டிடும் மாயமென்ன?

தொல்லைகள் தொடர்ந்தாலும்
தோழனாய் தொடர்வதென்ன?
அதிர்ந்திடும் அல்லல்களிலே
அன்னையாய் காப்பதென்ன?

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதென்ன? 
ஒரு  நொடி நான் துவண்டால்
மறு நொடி  உன் கலக்கமென்ன?

அன்புக்கு நீ வேண்டும்.
பண்புக்கு நீ போதும்.
நட்புக்கு இலக்கணமாய்
நட்போடு தொடர்ந்திடுவாய்!



மலைகள் இல்லையென்றால் மலையேற முடியுமா? 
அட ஒரு நாளில் உதிர்ந்தாலும் பூக்கள் சிரிக்குமே? 
இறக்கைகள் ஏதுமின்றி அந்தப் பட்டம் பறக்கலையா? 
அட விழுந்தாலும் வருந்தாமல் அருவி சிரிக்குமே 
இரப்பர் மரம் மீது பல காயம் உண்டு தோழா 
காயம் இருந்தாலும் அது பாலைத் தரும் தோழா 
மேற்கில் மறைவதெல்லாம் மரணமாவதில்லை 
கிழக்கு வெளிச்சம் தர மறந்து போனதில்லை 

 தையல் ஊசிக்கெல்லாம் அட காது ஒன்றுதான் 
தன் ஊனத்தால் உடையாமல் உடைகள் தைக்குமே 
துன்பங்கள் ஆணியில்லை வரும் வெற்றியின் ஏணியது 
தீ தலைகீழாப் பிடித்தாலும் நிமிர்ந்து எரியுமே 
துயரம் கடக்காமல் ஒரு உயரம் கிடையாது 
தலையே நீ குனிந்தால் அந்த வானம் தெரியாது 
முற்றுப்புள்ளி முடிவினிலே கோலம் ஒன்று போடு 
ஜெயிக்கும் வரை நீயும் ஒரு கண்ணால் தூங்கு 

19 டிசம்பர் 2015

புரியாத புதிர்!

நீ என்ன இறையென்றெனக்கு
இன்றுவரை புரியவில்ல்லை. 

இருப்போருக்கு இன்னும் கொடுக்கிறாய்,

இரப்போரிடம் இருப்பதை எடுக்கிறாய் 
இரப்போரைபார்த்து இரங்காது
இருப்போருக்கு இன்னும் இரங்குவதால் 
நீ என்ன இறை யென்றெனக்கு புரியவில்லை

நோயினால் நோகடிப்பதும் வாதையால் வதைப்பதும். 

செல்லும் பாதையில் தடைகல்லென அறிவாயோ?
நல்லது செய்வோர் அல்லல்களாலே 
துன்புறுவதும்.. தீயவரெல்லாம் தித்திக்கும் வாழ்வில் 
இன்புறுவதுவதும் உன் வஞ்சனைகள் 
ஏனென்றெனக்கென்றுமே புரிவதில்லை !

ஏன் என்ற கேள்விகள்  என்னுள் எழும் போதெல்லாம் 

நானுந்தன் தெய்வம் என்றே நீ சொன்னாலும் 
உன் சேயுறும் துயருன்னை  சேரவே இல்லையோ?
சொரிந்திடும் கண்ணீரை உண்ர்ந்திடாமலே
தூரமாய் நிறுத்தியே துயறுற செய்வதேனென 
எனக்கு புரியவே இல்லையே!

துயறுரும் மானிடன் துயர் துடைக்க 

துடிக்கும் கரங்களை  துயரிலாழ்த்துவதும் 
துஷ்டராய்  துணிகர துன்பம் தருவோரை 
தூணில் உயர்த்துவதுமாய் -உன் 
நியாயங்களும், நீதிகளும், நியாயத்தீர்ப்புக்களும் 
எனக்கு புரியவே இல்லை. 

உள்ளத்தில் உனை இருத்தி . 

உணர்விலே உன்னுடன் இயைந்து 
உச்சி வானை தொட்டிட வேண்டாம். 
உள்ளம்துடிக்க கலங்கிடாமல் 
காத்திடாமல் கலங்கடிப்பதேன் 
என்றெனக்கு புரியவே இல்லையே! 

புரியாமல் புரிந்திட, புரிந்ததை புரியாமல் 

புரிந்ததாய்  புகழ் பாடி உனை நம்பிடும் 
வித்தையே உன் சொத்தும் பத்துமாய் 
நித்தமும் பித்தனாய் உனை தேடிட செய்திடும்  
பகதனை பைத்தியம் என்பதேன் 
என்றெனக்கும் புரியவும் இல்லைத்தான்! 

புரியாதவை புரியாதைவையாகவே இருக்கட்டும். 

புரிந்தவை புரியாதவைகளாகட்டும். 
புரிதலும் பிரிதலும் உனை சேர்த்லாய் மாறட்டும் 
பிறப்பும் இறப்புமே பக்குவப்படுத்தட்டும்

10 டிசம்பர் 2015

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

சென்னை சீரழிவுக்குக் காரணம் யார் தெரியுமா? - அதிர வைக்கும் உண்மைகள்!எனும் தலைப்பிலான கவர் ஸ்டோரி படித்த பின் தோன்றியது 


என்ன செய்யப்போகின்றோம்? 

அரசு தரும் நிவாரணத்தினை வாங்கி டாஸ்மார்க்கில் கொண்டு போய் மீள கொடுத்து நன்றாக வயிறு முட்ட குடித்து விட்டு மதி கெட்டு மறுபடியும் என்ன இலவசங்கள் தருவார்கள் என அரசியல் கட்சிகள் தரப்போகும் எலும்புத்துண்டுகளுக்காக எச்சில் வடிய நன்றியுள்ள நாய்களாய் மாறி காத்திருக்க போகின்றோம். 

நாய்க்கு ஐந்தறிவு தான்! மனிதருக்கோ? ஒரு அறிவும் கிடையாது! அதிலும் தமிழனுக்கு கிடையவே கிடையாது!தமிழன் என்றாலே ஏமாளி என அவன் மூஞ்சியில் ஒட்டி இருக்குமோ என்னமோ!? 

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? 

குப்பை கூழம் பிளாஸ்டிக் என ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் இந்த பேரிட இழப்புக்கு முழுக்க முழுக்க காரணம் அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை! பிளாஸ்டிக் போட்டார்கள் குப்பை போட்டார்கள் வடிகான்களை அடைத்தார்கள் என ஆயிரம் சாக்குப்போக்கு சொன்னாலும் அவையெல்லாம் ஒரே நாளில் நடந்ததில்லை பல வருடங்களாக நடக்கும் ஒரு விடயத்தை வைத்து இதனால் அதனால் என சொல்லி விலகுதல் ஏற்புடையதல்ல. 

முதலில் டிசம்பர் முதல் வாரம் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி அறிவிப்பு செய்த பின்னும் நவம்பரிலிருந்து மழை பெய்து அந்த நீரே ஓடுவதற்கு சரியான வடிகான்கள் இல்லாத நிலையில்... தொடர்ந்தும் மழை பெய்தால் என்னாகும் என அறியவும் உணரவும் இதற்கென ஆராய்ச்சிப்படிப்பா படித்து வரவேண்டும்?

முதலாம் கிளாஸ் படிக்கும் பிள்ளையே சொல்லும்... இத்தனை நடந்தும் அணைகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததை கடைசி நிமிடம் வரை வேடிக்கை பார்த்து விட்டு.... கடைசி நிமிடத்தில் தான் உணர்ந்தார்கள் அல்லவா? 

இந்த நேரடி அனுபவத்தினை படித்து பாருங்கள். 

இராணுவம், காவல்துறை சேர்ந்து வாகனத்தில் வந்து அறிவிப்பு செய்த நேரம் நள்ளிரவு 11 மணிக்கும் மேலாம். எந்த ஊரில் இரவு ஒன்பது மணிக்கு பின் தெருவில் நடமாட்டம் இருக்கும். ஏற்கனவே பேரிடர் அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு கூட இந்த மாதிரி அறிவிப்பால் பயன் இராது. அப்படி இருக்கும் போது சாக்குப்போக்காய் ஒரு அறிவிப்பு... 

தன் கட்சிக்கு ஒரு பாதிப்பு எனில் தெருவில் செல்லும் பேருந்தை நிறுத்தி தீவைத்து கொழுத்த ஆயிரம் பேரை கூட்ட முடிந்தவர்களால் தன் மக்களுக்கு ஆபத்து எனும் போது செயல்பட முடியாமல் போனதேன்? ரயிலை நிறுத்தி, பேருந்தை எரித்து மரங்களை வெட்டி நாட்டை சுடுகாடாக்க ஒரே நொடியில் விரலசைவில் பல்லாயிரம் பேரை கூட்டி செயல் படுத்த முடிந்தவர்களால் அப்பாவிமக்களை வற்புறுத்தி அவசரகால பிரகடனம் செய்தாவது குறித்த நேரத்தில் மேடான பகுதிக்கு வர வேண்டும் என கட்டளை பிறப்பித்திருக்க முடியாதா? 

முடியாது என எவரேனும் சொன்னால் சொல்பவர்களுக்கு அறிவே இல்லை எனத்தான் நான் சொல்வேன்! ஒரு மணி நேரம் போதுமே! உடைமை போனாலும் உயிரிழப்புகள் குறைந்திருக்குமே! 

மழையால் மட்டும் வெள்ளப்பாதிப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்... அணைகள் திறக்கப்ட்டதால் தான் இத்தனை அழிவும் என்பதும் நிஜமே!அணையை திறந்து தான் விட்டீர்கள்.. கன மழை பெய்து அணை நிரம்பும் போது அடையாறு நதி கடலில் சேரும்மிடத்தில் ஆழமாக்கப்பட்டு விரிவாக்கபட்டு முகத்துவாரம் வெட்டப்படணுமாம். இம்முறை முகத்துவாரம் வெட்டப்படவில்லையாம். ஏன் முகத்துவாரம் வெட்டவில்லை. இதை செயல் படுத்த வேண்டியவர் யார்? 

அரசு தான் செய்யவில்ல எனில் வெள்ளம் வரும் போது நடைமுறை இதுவென பொதுமக்களேனும் கூடி பேசி முகத்துவாரம் வெட்டி நதி நீர் கடலில் போய் கலக்க வழி செய்திருக்கலாமே! 

அரசு செய்யட்டும் என மக்களும் பதவி மட்டும் தான் முக்கியம் என அந்த நேரத்துக்கு குழைக் கும்புடு போட்டு வரும் அரசியல் வாதிகளும், லஞ்ச லாவண்யங்களில் புரையோடிய அதிகாரிகளும்.... அத்தனை பேரும் தான் இத்தனை இழப்புக்கும் காரணம். 

அணை நீர் பெருக்கெடுத்து வரும் போது பாலங்கள் உடைகின்றது. அந்த நொடியிலாவது வரும் ஆபத்தினை உணர்ந்து கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு ஓடி இருக்கலாமே! விடியோ எடுப்பதும் அதை பகிர்வதுமா முக்கியம். வேடிக்கை பார்ப்பதும் அனைத்திலும் அசட்டையாய் இருப்பதும் தான் அனைத்து இழப்புகளுக்கும் காரணம்! 

இனிமேல் அம்மா என்றால் ஆகுமா? ஐயா என்றால் ஆகுமா? இந்த இழப்பிலிருந்து மீண்டு வரவேனும் அரசு ஓடோடி வந்ததா என்றால் அது தானும் இல்லை.ஆற அமர போட்டி கொடுக்கின்றார்களாம். 

சென்னை மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்கள். எஙகள் தங்கத்தலைவி இராணுவ வேகத்தில் செயல்பட்டு மக்களை தாலாட்டினார் என போட்டி கொடுக்க முன் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களோ? 

அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் உதவிக்கு செல்லும் போதும் போருக்கு செல்வது போல் முன்னும் பின்னும் படையணி சூழ போட்டோக்கிராபரும் வீடியோகிராபருமாய் முழங்கால அளவு நீரில் நின்று மாடல் செய்த விதம் கண்டு சத்தியமாய் சிரித்தேன். இது தானா மீட்புப்பணி செய்யும் அழகென எனக்குள் கேள்வி எழுந்ததென்னமே நிஜம். 

அப்படியும் செய்து விட்டு... எம் தலைவன் உங்களுக்காக அதை செய்தான், இதை செய்தான் இனியும் உங்களுக்கு பாதுகாவலன் யார், என பெண்கள் புடை சூழ போட்டோஷாப் திருவிளையாடல்கள் வேறு...!

மோடி வெள்ளத்தினை பார்க்க போனேன் என போட்டோ ஷாப் செய்தார் என பி.பிசி ஒரு அசைபடம் வெளியிட்டு கிண்டல் செய்யும் படியும் அரசு மெத்தனம், வேகம் காட்டவில்லை, நூறு வருடங்களில் இல்லாத வரலாறு காணாத அழிவு. சென்னை வெள்ளம் என வெளி நாடுகளே தலைப்பிட்டு செய்தி இடும் படித்தானே அரசின் செயல் இருந்தது. 

ஆனாலும் நான் பெருமைப்படுகின்றேன். எம் எதிர்கால சந்ததியை நினைத்து....ஹாட்ஸ் அப் என் சந்ததியே! கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் சுய நலவாதிகளாக இருக்கின்றார்களே என எம் இளைய தலைமுறையை திட்டிய ஒவ்வொருவரும் வெட்கித்தலை குனியுங்கள். சுய நலமாய் சிந்தித்ததான சொன்ன இளைஞர் படையணிதான் பொங்கி பெருகி பதறித்துடித்து புறப்பட்டது.

மதம்,ஜாதி,இனம், மொழி மறந்து பேதமை மறந்து எம் மக்கள் எனும் தேசிய உணர்வோடு பசி தூக்கம் மறந்து செயலாற்றினார்கள். என் எதிர்கால சந்ததி சுயநலமானதென இனியும் சொல்வோமா...? 

இனியும் என்ன செய்ய போகின்றீர்கள்? 

மதவாதம் பூசி வரும் அரசியல் வியாதிகளை ஓடோட விரட்டுங்கள். முகப்பூச்சு போட்டு வேடிக்கை காட்டுவோரை உணருங்கள்! 

நிச்சயம் இனி செயல் படும் நேரம் தான் தமிழ் மக்களே! 
தூங்கியது போதும் விழித்தெழுங்கள்! 
ஏமாந்ததும் போதும் எழுச்சி பெறுங்கள்!

06 டிசம்பர் 2015

தேவைகள் இனிமேல் தான் அதிகமாகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேவைகள் மட்டும்அல்ல!அவர்களின் தேடலின் போதான நமது கரம் கொடுத்தலும் இனிமேல் தான் அதிகமாகின்றது.

உணர்ச்சி வேகத்தில் இப்போதைக்கு அனைவரும் அள்ளிக்கொடுக்கலாம்.
நிஜமான வாழ்வாதார போராட்டமும்தேவைகளும் இனிமேல் தான் அதிகமாகின்றது.தூரத்தில் இருந்தாலும் அறிந்த செய்திகளை வைத்து பார்க்கும் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை பொருட்களை இழந்து நிர்க்கதி ஆகி இருக்கின்றார்கள்.

இன்றையை வெள்ளச்சூழலில் திறந்து விடப்பட்ட மண்டபங்கள், வீடுகள், 
மசூதிகள், பாடசாலைகள் ஒரு வாரமோ ஒரு மாதமோ தற்காலிக தங்குமிடம் தான் அதன் பின் வானமே கூரை எனும் கையறு நிலையில் மக்கள்! மழை முடிந்து வெள்ளம் வடிந்ததும் தான் தேவைகள் அதிகம் இருக்கும் 

இலட்சக்கணக்கான மக்கள் முக்கியமாக குடிசை மக்கள் அனைத்தினையும் இழந்து பூஜ்ஜியத்திலிருந்து தம் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியநிலையில் இருப்பார்கள்.

காப்புறுதிக்காரர்களும் நிச்சயம் திணறித்தான் போவார்கள். அரசு அனைவருக்கும் இழப்பிடு தரமுடியுமா என்பதே கேள்விக்குறிதான் எனும் போது அரசை நம்புவதும் முட்டுசுவரில் முட்டிக்கொள்வதும் ஒன்றுதான். நான்காயிரமோ ஐந்தாயிரமோ தலைக்கு இவ்வளவு என இழப்பீடு கொடுத்து விட்டு ஒதுங்கினாலும் ஆச்சரிய்ப்படுவதற்கில்லை.அதில் பாதியோ முழுவதுமோ டாஸ்மாஸ் மூலம் அவர்களுக்கே சென்று விடும் எனும் நம்பிக்கையோடு தான் கொடுப்பார்கள் என்பது என்னவோ நிச்சயம் தான்.

இந்த இக்கட்டான நேரத்தில் வெளிநாட்டில் இருப்போர் பொறுத்திருந்து எங்கே தேவை என ஆராய்ந்து தனியாகவோ குழுவாகவோ உதவலாம்.
வானமே எல்லை என நிற்கபோகும் மக்களுக்கு தற்காலிக கூடாரம் அடிக்க கூட வசதி இருக்காதே! அப்போது தான் நம் அனைவரின் பங்களிப்பும் அவசியமாகின்றது. உதவும் உள்ளங்கள் தம்மால் இயன்றபடி ஒரு கிராமத்தினையோ.தெருவினையோ,
குடும்பத்தினையோ முழுமையாக பொறுப்பெடுத்து தற்காலிக குடிசை போட தகரம் பாய், ஒலைகள், போர்வை கூடவே அரிசி பருப்பு போன்ற மளிகை மட்டுமல்ல பாத்திரம் பண்டங்கள்,பாடசாலை உபகரணங்கள் என பல தேவைகளை நிறைவாக்கலாம்.

யாருக்கு தேவை அதிகமோ அவர்களை தேர்ந்தெடுத்து நேரடியாக உதவலாம். அதிலும் பணமாக கொடுக்காமல் பொருட்களாக கொடுத்தால் அவைகள்  டாஸ்மாக் க்கு செல்லாமல் இருக்கும். இந்த மழையிலும், வெள்ளத்திலும் கூட டாஸ்மாக் திறந்திருந்ததே இதற்குசாட்சியாய் இருக்கின்றதே!

எனவே உறவுகளே உங்கள் உதவிகளை உணர்வு பூர்வமாக அணுகாமல் அறிவு பூர்வமாக அணுக வேண்டுகின்றேன்.

இனியும் அடுத்தடுத்த வாரங்களில் ....!
மழை ஓய்ந்தாலும்...... தேடல்களுடனானதேவைகள் ஓயாது!
உணவுப்பொருட்கள்
பாத்திரம்பண்டங்கள். 
பாடசாலை உபகரணங்கள்
குடிசைபோடதேவையான தகரங்கள், சீட்கள், ஓலைகள், போர்வைகள், 
பாய்கள், பிளாஸ்டிக் வாளிகள், துணிமணிகள் என ஒரு குடும்பம் தொடங்க நம்மால் என்ன செய்ய இயலுமோ அவைகளை குறித்து சிந்தித்து எங்கே எவருக்கு நம் தேவை அவசியமோ அங்கே நம் கவனம் செல்லட்டும்.  

ஆயிரம் இலட்சங்களில் உதவ முடியாவிட்டாலும்  ஐம்பது நூறு என நீங்கள் குழுவாக இணைந்து கூட செய்யலாம். தனித்தனியே செயல் படாமல் குழுவாக இணைந்து ஒரு குடும்பத்தையேனும் தத்தெடுங்கள்.

அங்கொன்றும் இங்கென்றுமாய் எங்கணும் அலைந்து எதையும் முழுமையாக செய்யாமல் ஏதோ செய்தோம் என பெயருக்கு உதவாமல் நம் செயல்பாடுகள் நிச்சயம் ஒருவருக்கேனும் பயன் பட்டது என மனத்திருப்திஅடையும் படி செயல் படுங்கள். தேவையறிந்து உதவுங்கள்.நேரத்தினையும் பணத்தினையும் சேமியுங்கள்,! பணத்தையோ பொருளையோ, உணவையோ வீண் விரயம் செய்யாமலும் தகுதியற்றவர்களுக்கு நம் உதவி சேராமலும் இருக்கும்படி நிதானமாக செயல்படுங்கள். குழுக்களை இணைக்கும் பொழுது கணக்கு வழக்குகள் அனைத்தையும் பொதுவாக பேசி வெளிப்படையாக கையாள்வது இனியொரு பொழுதில் இக்கட்டு நேரம் உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்பட உதவும். 

டிப்ஸ்
எவர் உதவுவதானாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமாக கொடுக்காதீர்கள் சிரமமாயிருந்தாலும் பொருளாக கொடுங்கள். அவை நீண்ட காலம் உங்கள் பெயர் சொல்லி வாழ்த்தி வணங்கும்.

இலங்கையில்சுனாமி,புயல்,வெள்ளம், யுத்தம் என பாதிப்பு தொடர்ந்த 
போதெல்லாம் எம்மால் இயன்றதை செய்திருக்கும் அனுபவத்தில் எழுதிய பதிவு இது. 

யுத்தம்..சுனாமி மீண்டும் வெள்ளம் என இலங்கையில் கடலோர மக்கள் பாதிக்கப்பட்டபோது உணர்ச்சி வேகத்தில் உடனடி உதவிகள் பல கிடைத்தது. ஆனால் நாட்கள் சென்றபோதோ.... தற்காலிகமாக தங்க அனுமதித்த பாடசாலைகள்,கோயில்களை விட்டு உடனடியாக இரு நாட்களில்மக்களை வெளியேற சொன்ன போதுதான் தவித்து போனார்கள். எங்கே செல்வோம், என்ன செய்வோம் என நடுத்தெருவில் நின்ற சூழலில் நாங்கள் செயல்பட்டோம். அதற்கு முன் சுவிஸிலிருந்து ஆறு கண்டெய்னர்களில் துணிகள் அனுப்பி ஊருக்கே பகிர்ந்தளித்திருந்தாலும் பணமாக கொடுப்பதை தவிர்த்து தேயிலை,சீனி, உலர் பால்மா, பிஸ்கட்,அரிசி பருப்பு, எண்ணெய்,ஷோப், தீப்பெட்டி, மெழுகுதிரி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்ட 100 பைகளுடன் பிளாஸ்டிக் பாஸ்கெட்,கூடாரம் போட தேவையாக் சீட்கள், தகரங்கள், ஓலைகள், பாய்கள், போர்வைகள் என மிக முக்கியமாக வீடிழந்தோரை கவனத்தில் கொண்டோம். எங்களால் ஆயிரம் பேருக்கு செய்ய முடியவில்லை தான். பத்து பேருக்கு தங்குமிட உதவி செய்தோம் எனும் மன் திருப்தியும்100 குடும்பம் ஒருவாரமாவது உயிர் வாழ உதவினோம் எனும் நிறைவும் இன்று வரை என்னுள் இருக்கின்றது. கூடவே மருத்துவ முகாம்களை நடத்தி தன்னார்வ சேவையாளனான் என் தம்பி டாக்டர் புஷ்பகாந்தன் செயல் பட்டான் என்பதை இந்த நேரத்தில் நான் நன்றியோடு நினைவு கூருகின்றேன். வயதில் சிறியவனாயிருந்தாலும் அனைத்தினையும் என் கவனத்தில் கொண்டு வந்து என் சிந்தனைகளை செயலாக்கியவன்! அவனும் அவனுடனிணைந்த நட்புக்களும்.என்னுடன் இணைந்து  உதவியவர்கள் முத்தமிழ் மன்ற அன்புறவுகள்! அனைவருக்கும் நன்றி!

என்னுடன் கடந்த பல வருடங்களாக இணைந்து  நான் உதவுகள் என கேட்கும் போதெல்லாம் இல்லையே என சொல்லாது எவ்வளவு எதிர்பார்க்கின்றீர்கள் நிஷா என கேட்டு சொன்னபடியே செயலிலும் காட்டும் நைஜிரியாவிலிருக்கும் அன்பு ஜெய்சங்கர் அண்ணா, எங்கே எது நடந்தாலும் தங்கச்சி நாமும் ஏதேனும் செய்யணுமே என துடிக்கும் பரஞ்சோதிஎனப்படும் என்பாசமான சுரேஷ் அண்ணா,இவர்களுடன் தான் பட்ட கஷ்டம் தன் சந்ததி படக்கூடாது என வருடா வருடம் நூற்றுக்கணக்காக பள்ளிக்குழந்தைகளுக்கு 
அவ்வாண்டுத்தேவைக்கான பாடசாலை உபகரணங்கள் வாங்கி கொடுப்பதோடு ஏழைப்பெண்களுக்கு திருமண உதவிகள் செய்யும் என் அன்பின் தம்பி அட்டாளைச்சேனையை சேர்ந்த கட்டாரில் வசிக்கும் முஸம்மில் எனும் நண்பன்,அபுதாபியில் இருக்கும் முஹைதீன் விஞ்ஞானி இலமூரியன் ஐயா, குவைத்திலிருக்கும் மஞ்சுசுபாஷினிஅக்கா,சிவஹரி, பிரான்சிலிருக்கும் றெனிநிமல் இவர்களுடன் என் உயிர் நட்புக்கள், அப்போது நான் வேலை பார்த்த நிறுவனத்தின் டைரக்டரும்,உடன்பணி செய்வோரும், என்அயலில் இருக்கும் சுவிஸ் நட்புக்கள் என அனைவரையும் நன்றியோடு நினைவு கூருகின்றேன்.அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் செலுத்துகின்றேன்.

பாதிப்பு என அறிந்திட்ட அந்த நொடியிலிருந்து பணம் மட்டுமல்ல துணீகளாக, பொருட்களாக, மருந்துகளாக கொண்டு வந்து குவித்தார்கள்.அத்தனையையும் ஒருங்கிணைத்து கார்கோவில் போட்டது என் சொந்த பணத்தில் நிவாரணத்துக்கு என வந்த தொகையில் எதையும்போக்குவரத்து மற்றும் தொலைபேசிதொடர்புகள் சம்பநதமான செலவுக்கு என கணக்கில் காட்டாமல் யாருக்கெல்லாம் உதவினோமோ அவர்களிடம் கடிதங்கள் பெற்று போட்டோவும் எடுத்து உங்கள் பணம் இந்த நபருக்கு கொண்டு சேர்க்கப்ட்டது நன்றி என என் தம்பியும் பெற்றுகொண்டவர்களும்  ஒரு நன்றியுரை காட் அனுப்பி அதையும் உதவியவர்களிடமே சேர்ப்பித்தேன்.

மிகக்கடினமான பணி தான். அனைவருக்கும் அனைத்தினையும் என்னால் தனித்து செய்ய இயலாததால் எங்கே தேவைகள் உண்டோ அத்தேவை குறித்து யாரால் உதவ முடியும் என விசாரித்து உதவி செய்பவருக்கும் உதவியை பெறுபவருக்கும் பாலமாக இருப்பதில் மனம் நிறைகின்றது.