பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேவைகள்
மட்டும்அல்ல!அவர்களின் தேடலின் போதான நமது கரம் கொடுத்தலும் இனிமேல் தான்
அதிகமாகின்றது.
உணர்ச்சி வேகத்தில் இப்போதைக்கு அனைவரும் அள்ளிக்கொடுக்கலாம்.
நிஜமான வாழ்வாதார போராட்டமும்தேவைகளும் இனிமேல் தான் அதிகமாகின்றது.தூரத்தில் இருந்தாலும் அறிந்த செய்திகளை
வைத்து பார்க்கும் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை பொருட்களை இழந்து
நிர்க்கதி ஆகி இருக்கின்றார்கள்.
இன்றையை வெள்ளச்சூழலில் திறந்து விடப்பட்ட மண்டபங்கள், வீடுகள்,
மசூதிகள், பாடசாலைகள் ஒரு
வாரமோ ஒரு மாதமோ தற்காலிக தங்குமிடம் தான் அதன் பின் வானமே கூரை எனும் கையறு
நிலையில் மக்கள்! மழை முடிந்து வெள்ளம்
வடிந்ததும் தான் தேவைகள் அதிகம் இருக்கும்
இலட்சக்கணக்கான மக்கள் முக்கியமாக குடிசை மக்கள் அனைத்தினையும்
இழந்து பூஜ்ஜியத்திலிருந்து தம் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியநிலையில்
இருப்பார்கள்.
காப்புறுதிக்காரர்களும் நிச்சயம்
திணறித்தான் போவார்கள். அரசு அனைவருக்கும் இழப்பிடு தரமுடியுமா என்பதே கேள்விக்குறிதான் எனும் போது அரசை நம்புவதும் முட்டுசுவரில் முட்டிக்கொள்வதும் ஒன்றுதான். நான்காயிரமோ
ஐந்தாயிரமோ தலைக்கு இவ்வளவு என இழப்பீடு கொடுத்து விட்டு ஒதுங்கினாலும்
ஆச்சரிய்ப்படுவதற்கில்லை.அதில் பாதியோ முழுவதுமோ டாஸ்மாஸ் மூலம் அவர்களுக்கே சென்று விடும்
எனும் நம்பிக்கையோடு தான் கொடுப்பார்கள் என்பது என்னவோ நிச்சயம் தான்.
இந்த இக்கட்டான நேரத்தில் வெளிநாட்டில் இருப்போர் பொறுத்திருந்து
எங்கே தேவை என ஆராய்ந்து தனியாகவோ குழுவாகவோ உதவலாம்.
வானமே எல்லை என நிற்கபோகும்
மக்களுக்கு தற்காலிக கூடாரம் அடிக்க கூட வசதி இருக்காதே! அப்போது தான் நம்
அனைவரின் பங்களிப்பும் அவசியமாகின்றது. உதவும் உள்ளங்கள் தம்மால் இயன்றபடி ஒரு கிராமத்தினையோ.தெருவினையோ,
குடும்பத்தினையோ
முழுமையாக பொறுப்பெடுத்து தற்காலிக குடிசை போட தகரம் பாய், ஒலைகள், போர்வை கூடவே
அரிசி பருப்பு போன்ற மளிகை மட்டுமல்ல பாத்திரம் பண்டங்கள்,பாடசாலை
உபகரணங்கள் என பல தேவைகளை நிறைவாக்கலாம்.
யாருக்கு தேவை அதிகமோ அவர்களை தேர்ந்தெடுத்து நேரடியாக உதவலாம்.
அதிலும் பணமாக கொடுக்காமல் பொருட்களாக கொடுத்தால் அவைகள் டாஸ்மாக் க்கு செல்லாமல் இருக்கும். இந்த மழையிலும், வெள்ளத்திலும் கூட டாஸ்மாக் திறந்திருந்ததே இதற்குசாட்சியாய்
இருக்கின்றதே!
எனவே உறவுகளே உங்கள் உதவிகளை உணர்வு பூர்வமாக அணுகாமல் அறிவு
பூர்வமாக அணுக வேண்டுகின்றேன்.
இனியும் அடுத்தடுத்த வாரங்களில் ....!
மழை ஓய்ந்தாலும்...... தேடல்களுடனானதேவைகள் ஓயாது!
உணவுப்பொருட்கள்
பாத்திரம்பண்டங்கள்.
பாடசாலை உபகரணங்கள்
குடிசைபோடதேவையான தகரங்கள், சீட்கள், ஓலைகள், போர்வைகள்,
பாய்கள், பிளாஸ்டிக் வாளிகள், துணிமணிகள் என ஒரு குடும்பம் தொடங்க நம்மால் என்ன செய்ய இயலுமோ அவைகளை குறித்து
சிந்தித்து எங்கே எவருக்கு நம் தேவை
அவசியமோ அங்கே நம் கவனம் செல்லட்டும்.
ஆயிரம் இலட்சங்களில் உதவ முடியாவிட்டாலும் ஐம்பது நூறு என நீங்கள் குழுவாக இணைந்து கூட செய்யலாம். தனித்தனியே
செயல் படாமல் குழுவாக இணைந்து ஒரு குடும்பத்தையேனும் தத்தெடுங்கள்.
அங்கொன்றும் இங்கென்றுமாய் எங்கணும் அலைந்து எதையும் முழுமையாக
செய்யாமல் ஏதோ செய்தோம் என பெயருக்கு உதவாமல் நம் செயல்பாடுகள் நிச்சயம் ஒருவருக்கேனும்
பயன் பட்டது என மனத்திருப்திஅடையும் படி செயல் படுங்கள். தேவையறிந்து உதவுங்கள்.நேரத்தினையும் பணத்தினையும் சேமியுங்கள்,! பணத்தையோ பொருளையோ, உணவையோ வீண் விரயம் செய்யாமலும் தகுதியற்றவர்களுக்கு நம் உதவி சேராமலும் இருக்கும்படி நிதானமாக செயல்படுங்கள். குழுக்களை இணைக்கும்
பொழுது கணக்கு வழக்குகள் அனைத்தையும் பொதுவாக பேசி வெளிப்படையாக கையாள்வது இனியொரு
பொழுதில் இக்கட்டு நேரம் உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்பட உதவும்.
டிப்ஸ்
எவர் உதவுவதானாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமாக கொடுக்காதீர்கள்
சிரமமாயிருந்தாலும் பொருளாக கொடுங்கள். அவை நீண்ட காலம் உங்கள் பெயர் சொல்லி
வாழ்த்தி வணங்கும்.
இலங்கையில்சுனாமி,புயல்,வெள்ளம், யுத்தம் என பாதிப்பு
தொடர்ந்த
போதெல்லாம் எம்மால் இயன்றதை செய்திருக்கும் அனுபவத்தில் எழுதிய பதிவு இது.
யுத்தம்..சுனாமி மீண்டும் வெள்ளம் என இலங்கையில் கடலோர மக்கள்
பாதிக்கப்பட்டபோது உணர்ச்சி வேகத்தில் உடனடி உதவிகள் பல கிடைத்தது. ஆனால் நாட்கள்
சென்றபோதோ.... தற்காலிகமாக தங்க அனுமதித்த பாடசாலைகள்,கோயில்களை விட்டு உடனடியாக இரு நாட்களில்மக்களை வெளியேற சொன்ன
போதுதான் தவித்து போனார்கள். எங்கே செல்வோம், என்ன செய்வோம்
என நடுத்தெருவில் நின்ற சூழலில் நாங்கள் செயல்பட்டோம். அதற்கு முன் சுவிஸிலிருந்து
ஆறு கண்டெய்னர்களில் துணிகள் அனுப்பி ஊருக்கே பகிர்ந்தளித்திருந்தாலும் பணமாக
கொடுப்பதை தவிர்த்து தேயிலை,சீனி, உலர் பால்மா, பிஸ்கட்,அரிசி பருப்பு, எண்ணெய்,ஷோப், தீப்பெட்டி, மெழுகுதிரி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்ட 100 பைகளுடன் பிளாஸ்டிக் பாஸ்கெட்,கூடாரம் போட
தேவையாக் சீட்கள், தகரங்கள், ஓலைகள், பாய்கள், போர்வைகள் என மிக முக்கியமாக வீடிழந்தோரை கவனத்தில் கொண்டோம். எங்களால்
ஆயிரம் பேருக்கு செய்ய முடியவில்லை தான். பத்து பேருக்கு தங்குமிட உதவி செய்தோம்
எனும் மன் திருப்தியும்100 குடும்பம் ஒருவாரமாவது
உயிர் வாழ உதவினோம் எனும் நிறைவும் இன்று வரை என்னுள் இருக்கின்றது. கூடவே மருத்துவ
முகாம்களை நடத்தி தன்னார்வ சேவையாளனான் என் தம்பி டாக்டர் புஷ்பகாந்தன் செயல்
பட்டான் என்பதை இந்த நேரத்தில் நான் நன்றியோடு நினைவு கூருகின்றேன். வயதில்
சிறியவனாயிருந்தாலும் அனைத்தினையும் என் கவனத்தில் கொண்டு வந்து என் சிந்தனைகளை
செயலாக்கியவன்! அவனும் அவனுடனிணைந்த நட்புக்களும்.என்னுடன் இணைந்து உதவியவர்கள் முத்தமிழ் மன்ற அன்புறவுகள்! அனைவருக்கும் நன்றி!
என்னுடன் கடந்த பல வருடங்களாக இணைந்து நான் உதவுகள் என கேட்கும் போதெல்லாம் இல்லையே என சொல்லாது
எவ்வளவு எதிர்பார்க்கின்றீர்கள் நிஷா என கேட்டு சொன்னபடியே செயலிலும் காட்டும் நைஜிரியாவிலிருக்கும்
அன்பு ஜெய்சங்கர்
அண்ணா, எங்கே எது
நடந்தாலும் தங்கச்சி நாமும் ஏதேனும் செய்யணுமே என துடிக்கும் பரஞ்சோதிஎனப்படும்
என்பாசமான சுரேஷ் அண்ணா,இவர்களுடன் தான் பட்ட கஷ்டம் தன் சந்ததி படக்கூடாது என வருடா
வருடம் நூற்றுக்கணக்காக பள்ளிக்குழந்தைகளுக்கு
அவ்வாண்டுத்தேவைக்கான பாடசாலை உபகரணங்கள் வாங்கி கொடுப்பதோடு ஏழைப்பெண்களுக்கு
திருமண உதவிகள் செய்யும் என் அன்பின் தம்பி அட்டாளைச்சேனையை சேர்ந்த கட்டாரில்
வசிக்கும் முஸம்மில் எனும் நண்பன்,அபுதாபியில் இருக்கும் முஹைதீன் விஞ்ஞானி இலமூரியன் ஐயா, குவைத்திலிருக்கும் மஞ்சுசுபாஷினிஅக்கா,சிவஹரி, பிரான்சிலிருக்கும் றெனிநிமல் இவர்களுடன் என்
உயிர் நட்புக்கள், அப்போது நான் வேலை பார்த்த
நிறுவனத்தின் டைரக்டரும்,உடன்பணி செய்வோரும், என்அயலில் இருக்கும் சுவிஸ் நட்புக்கள் என அனைவரையும் நன்றியோடு
நினைவு கூருகின்றேன்.அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும்
செலுத்துகின்றேன்.
பாதிப்பு என அறிந்திட்ட அந்த நொடியிலிருந்து பணம் மட்டுமல்ல
துணீகளாக, பொருட்களாக, மருந்துகளாக கொண்டு வந்து குவித்தார்கள்.அத்தனையையும்
ஒருங்கிணைத்து கார்கோவில் போட்டது என் சொந்த பணத்தில் நிவாரணத்துக்கு என வந்த
தொகையில் எதையும்போக்குவரத்து மற்றும் தொலைபேசிதொடர்புகள் சம்பநதமான செலவுக்கு என
கணக்கில் காட்டாமல் யாருக்கெல்லாம் உதவினோமோ அவர்களிடம் கடிதங்கள் பெற்று
போட்டோவும் எடுத்து உங்கள் பணம் இந்த நபருக்கு கொண்டு சேர்க்கப்ட்டது நன்றி என என்
தம்பியும் பெற்றுகொண்டவர்களும் ஒரு நன்றியுரை
காட் அனுப்பி அதையும் உதவியவர்களிடமே சேர்ப்பித்தேன்.
மிகக்கடினமான பணி தான். அனைவருக்கும் அனைத்தினையும் என்னால்
தனித்து செய்ய இயலாததால் எங்கே தேவைகள் உண்டோ அத்தேவை குறித்து யாரால் உதவ
முடியும் என விசாரித்து உதவி செய்பவருக்கும் உதவியை பெறுபவருக்கும் பாலமாக
இருப்பதில் மனம் நிறைகின்றது.